திருநின்ற சருக்கம்
திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெருநாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒரு நாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
–பெரிய புராணம்
பெண்ணை ஆற்றினால் வளம் கொழிக்கும் திருமுனைப்பாடி நாடு சைவ நெறியை நிலை நிறுத்திய திருநாவுக்கரசு நாயனாரும் சுந்தர மூர்த்தி நாயனாரும் திரு அவதாரம் செய்த சிறப்பினை உடையது. அந்நாட்டிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் விருந்தோம்பும் பண்பு மிக்க புகழனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் மாதினியார் என்ற அம்மையார். இவ்விருவருக்கும் பெண்மகவாகத் திருமகள் போல் தோன்றியவர் திலகவதியார் என்பவர். இவர் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, சைவம் தழைக்கவும், கலைகள் தழைக்கவும், உலகிருள் நீக்கும் கதிரவன் போல மருள் நீக்கியார் என்ற மகனார் அவதாரம் செய்தார். சுற்றத்தார்கள் அனைவரும் மகிழ்வுற்று அக்குழந்தைக்காக மங்கல வினைகள் பலவும் செய்தனர். மருள்நீக்கியார் குழந்தைப்பருவத்தைக் கடந்தவுடன் புகழனார் அவருக்கு உரிய சடங்குகளைச் செய்வித்துக் கல்வி கற்கத் தக்க ஏற்பாடுகள் செய்தார். முன்னைத் தொடர்பினால் மருள்நீக்கியார் பல கலைகளை எளிதில் கற்றார்.
திலகவதியாருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆன தறுவாயில் அவரை மணம் புரிய விரும்பிக் கலிப்பகையார் என்பவர் பெரியோர்களைப் புகழனாரிடம் அனுப்பி வைத்தார். தமது குலத்துக்கு ஒத்து இருந்தபடியாலும், சிவபக்தி உள்ளவராக இருந்ததாலும், அரசனுக்காகப் போர்க் களத்தில் வீரத்துடன் போர் புரிபவராக இருந்ததாலும் குணநலன்கள் மிக்கவராகவும் இருந்ததாலும், அவரே தமது மகளுக்கு ஏற்றவர் என்று எண்ணிய புகழனார், கலிப்பகையாருக்குத் திலகவதியாரை மணம் செய்து கொடுக்க இசைந்தார்.
அந்த சமயம் வடநாட்டு அரசன் ஒருவன் தென்னாட்டின்மீது படை எடுத்து வரவே,அரசனது ஆணைப்படிப் போர்க் களம் சென்ற கலிப்பகையார், நீண்ட நாட்கள் கடும்போரிட்டார். அதே நேரத்தில்,புகழனார் கொடிய நோயால் உயிர் நீத்தார். கற்புக்கரசியாகிய அவரது மனைவியார் தமது கணவருடன் உடன் கட்டை ஏறினார். பெற்றோரை இழந்த திலகவதியாரும்,மருள் நீக்கியாரும் துயரக்கடலில் மூழ்கியவராய் அவர்களுக்கு இறுதிக் கடன்களைச் செய்தனர்.
போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் சேரவே, திலகவதியார் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தார். கலிப்பகையாருக்கென்று தம்மை மணம் பேசியிருந்தபடியால், “அவருக்கே உரியவள் ஆயினேன். ஆகவே எனது உடலை அவரது உயிருடன் சேர்ப்பேன்” எனத் துணிந்தார். ,
இதைக் கேட்டுக் கலங்கிய மருள் நீக்கியார் தமது தமக்கையாரின் திருவடிகளில் வீழ்ந்து கண்ணீர் மல்கக் கதறினார். “ தாய் தந்தையரை இழந்த பிறகு உம்மையே அவர்கள் வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தாங்களும் என்னைத் தனியாக விட்டு விட்டுச் சென்றால் நான் உயிர் வாழ மாட்டேன்” என்றார். தம்பி உயிர் வாழ வேண்டும் என்ற தயாவினால், பொன்னும் மணியும் கொண்ட நாணை நீக்கி, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துபவராகத் தவ வாழ்க்கை வாழ்வதை மேற்கொண்டார் திலகவதியார்.
சில காலங்கள் சென்ற பின் சமண மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மருள் நீக்கியார் சமண சமயத்தைச் சார்ந்தார். அருகிலுள்ள பாடலிபுத்திர நகரிலிருந்த சமண குருமார்களிடம் சமண சமய நூல்களைக் கற்று , அதில் தேர்ச்சி பெற்றுத் தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்.
சிவபெருமானிடம் அன்பு கொண்ட திலகவதியார் கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகைக்குச் சென்று திருவீரட்டானேசுவரர் கழல் பணிந்து வைகறையில் கோயில் முன்பு அலகிட்டும், மெழுக்கியும், பூமாலைகள் தொடுத்துத் தந்தும், பலவாறு திருப்பணிகள் செய்து வந்தார். அந்நிலையில்,தமது தம்பியார் பாதை மாறிச் சமண சமயம் சென்றது அவருக்கு மாளாத்துயரைத் தந்தது. அதிலிருந்து தம்பியை மீட்டு நன்னெறி அருளவேண்டும் என்று நாள்தோறும் வீரட்டேசப் பெருமானிடம் விண்ணப்பித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, “ நீ கவலை நீங்குவாயாக. முற் பிறவியில் உனது தம்பி ஒரு முனிவனாக நம்மை அடையத் தவம் செய்தபடியால் இப்போது அவனுக்குச் சூலை நோயைத் தந்து அவனை ஆட்கொள்வோம்” என்று அருளிச் செய்தார். அதன்படி வடவைத் தீ போன்ற கொடிய சூலை நோய் மருள்நீக்கியாரின் வயிற்றைப் பற்றியது.
சமணர் பள்ளியில் இருந்த தருமசேனரைச் சூலை நோய் மிகவும் வாட்டி வருத்தியது.சமண சமயத்தில் கற்ற மந்திரங்களால் அதனைத் தீர்க்க முடியாது போகவே, மயங்கி மூர்ச்சித்தார். சமண குருமார்கள் மந்திரித்த நீரை அவர் குடிக்குமாறு செய்தும் பயனில்லாது போயிற்று. மயிற்பீலியால் உடல் முழுதும் தடவியும்,நோய் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாட்டி வதைத்தது.இனி எதுவும் செய்ய இயலாது எனக் கூறிக் கைவிட்டனர்.
அப்போது தருமசேனருக்குத் தமக்கையின் நினைவு வந்தது. தமது நிலையை சமையல் செய்பவன் மூலம் தமக்கையாருக்குத் தெரிவித்தார். அவனைக் கண்ட திலகவதியார், “ தீங்கு ஏதேனும் நேர்ந்ததோ?” எனக் கலந்கியவராகக் கேட்டார். அதற்கு விடையாக, தருமசேனரைச் சூலை நோய் பற்றியதையும், சமணர்கள் எதுவும் செய்ய இயலாது கை விட்டதையும், தமக்கையார் உடனே வந்து பார்க்க வேண்டும் என்ற விருப்புடன் தருமசேனர் தன்னைத் தூது அனுப்பியதையும் வந்தவன் கூறினான். அதனைக் கேட்ட திலகவதியார், “ நன்னெறியில் நில்லாத சமணர் பாழிக்கு யான் வர மாட்டேன். இதனை எனது தம்பியிடம் தெரிவிப்பாயாக” என்று கூறினார். அவனும் திரும்பிச் சென்று த ருமசேனரிடம் அப்படியே எடுத்துரைத்தான். தமக்கையின் பதிலை அறிந்த தருமசேனருக்கு சிவபெருமானின் திருவருள் கிட்டும் காலம் வந்தபடியால், “ இப்போதே சென்று தமக்கையாரின் திருவடிகளைச் சேர்வேன்.” என எண்ணி த் தான் உடுத்த பாய், குண்டிகை, மயில்பீலி ஆகியவற்றைத் துறந்து விட்டு அவ்விரவே புறப்பட்டுத் திலகவதியார் வசிக்குமிடத்தை அடைந்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். “ சூலை நோயிலிருந்து விடுபடும் வழியைத் தாங்களே காட்டி அருள வேண்டும்” என்று வேண்டினார். தம்பியாரின் நிலைக்கு இரங்கிய திலகவதியார், அவருக்குப் பஞ்சாட்சரத்தை ஓதித் திருநீறளித்தார். பிறகு அவரைத் திருவதிகை வீரட்டானத்து இறைவருக்குப் பணி செய்யுமாறு அருளிச் செய்தார்.
தமக்கையின் சொற்படியே மருள்நீக்கியாரும் திருக்கோயிலுக்குள் சென்று கோயிலை வலம் வந்து, பெருமானது திருச் சன்னதியை அடைந்து வீழ்ந்து வணங்கினார். சிவபெருமானது திருவருளால் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு அவருக்கு எழுந்தது. சூலை நோய் நீக்கி அருளுமாறு பெருமானிடம் விண்ணப்பித்த பாமாலையே அது.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.
என்று அத்திருப்பதிகத்தின் முதல் பாடல் அவரது திருவாயிலிருந்து திருவருளால் தோன்றியது. அதன் பயனாக சூலை நோய் அவரை விட்டு அகன்றது.
கருணைக்கடலான இறைவனது திருவருளைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கி நிலமுற வீழ்ந்து வணங்கினார். அப்போது இறைவனது வாக்கு “ இனி உனக்குத் திருநாவுக்கரசு என்னும் நாமம் எழுலகிலும் விளங்குவதாக” என்று வானிலிருந்து அசரீரியாக எழுந்தது. இராவணனுக்கும் அருள் செய்த பெருங்கருணை அடியேனுக்கும் அருளியதோ என்று எண்ணி எண்ணி வியந்தார் நாவுக்கரசர். இவ்வாறு உலகம் உய்யவும் சைவம் தழைத்தோங்கவும் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற நாவரசர், தனது திருமேனியில் திருநீறு, உருத்திராக்கம் ஆகியன பூண்டு, கையில் உழவாரம் என்னும் படையை ஏந்தி பெருமானிடம் மாறாத அன்புடன் கைத்தொண்டு செய்து வந்தார். இக்கருணையைக் கண்ட திலகவதியாரும் மனமகிழ்ந்து, திருவருளைத் துதித்திருந்தார்.
திருநாவுக்கரசர் சமணத்தை நீங்கிச் சைவரானதைக் கேள்விப்பட்ட சமண குருமார்கள் மனம் புழுங்கினர். தமது சமயத்திற்கு ஆபத்து வந்துவிட்டதோ என்று அஞ்சினர். இதனை அரசன் அறிந்தால் அவனும் சைவனாகி விடுவானே எனக் கவலையுற்றனர். பல்லவ அரசனை அடைந்து,” தருமசேனர் பிணி வந்ததாகக் கூறிக் கொண்டு சைவராகி விட்டார்” என்று திரித்துக் கூறினர். இதைக் கேட்டுக் கோபம் கொண்ட மன்னனிடம் சமணகுருமார்கள், அவரைத் தண்டிக்க வேண்டும் என்று சொல்லியதும், அரசனும் தருமசேனரைத் தனது சபைக்கு அழைத்து வர அமைச்சர்களை அனுப்பினான்.அரசனது கட்டளையை அமைச்சர்கள் திருநாவுக்கரசரிடம் தெரிவித்தபோது அதற்கு அவர், “ சிவபெருமான் ஒருவனுக்கே மீளா அடிமைத்திறம் பூண்டமையால் நீர் அழைக்கும் வகையில் யாம் இல்லை” என்று பொருள் படுமாறு,” யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் “ எனத் துவங்கும் திருத்தாண்டகத்தைப் பாடி, அவர்களுடன் வருவதற்கு மறுத்துக் கூறினார். இதனை அறிந்த சமணர்கள் பல்லவ மன்னனிடம் சென்று, சிறிதும் இரக்கமின்றி நாவரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இடுமாறு கூறினர். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு கட்டளை இட்டான். அரசனது ஏவலாளர்கள் வெந்தழலைக் கக்கும் நீற்றறையில் அவரை இட்டு மூடித் தாளிட்டு அதனைக் காவல் புரிந்தனர். ஆனால் நாவுக்கரசரோ சிவபெருமானது திருவடிகளைச் சிந்தித்த வண்ணம் நீற்றையினுள் வீற்றிருந்தார். பெருமானது கருணையால் அந்த நீற்றறை இளவேனில் காலத்தில் வீசும் தென்றல் காற்றுப் போலவும், குளிர்ந்த தடாகம் போலவும் மாலை நேரத்துச் சந்திரனைப் போலவும், குற்றமற்ற இனிய வீணையின் ஒலியைப் போலவும் இன்பம் தந்தது.இவ்வாறு பெருமானது கருணையில் திளைத்த திருநாவுக்கரசர்,
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
எனத் துவங்கும் திருப்பதிகம் பாடி தீங்கு எதுவும் இன்றி இனிது வீற்றிருந்தார். நீற்றறையைத் திறந்து பார்த்த சமணர்கள் அதிசயித்து நின்றனர்.பின்னர் சமண குருமார்கள் அரசனிடம் சென்று,” இவ்விதம் தரும சேனர் பிழைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அத்தகைய சக்தியை அவர் சமண சமயத்தில் இருந்தபோது கற்றுக்கொண்டுவிட்டார். ஆகவே அவரை நஞ்சூட்டிக் கொல்ல வேண்டும் “ என்றனர். அரசனும் அதற்கு உடன் பட்டான்.
கொடிய விஷம் கலந்த பால் சோற்றைத் திருநாவுக்கரசர் உண்ணும்படி செய்தார்கள். ஆலால விஷம் எம்பெருமானுக்கு அமுதமானதால் அவனடியார்களுக்கும் அமுதமாகவே ஆகும் என்று சொல்லி அதனை உண்டார் வாகீசர். அதனால் அவருக்கு எந்த விதமான தீங்கும் நேரவில்லை.
( “ பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவதுதான் அற்புதமோ?” என்பார் சேக்கிழார் பெருமான்).
நஞ்சுண்டும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்ட சமணர்கள், அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி ,நாவுக்கரசர் மீது மதம் பிடித்த யானையை ஏவி இடறச் செய்ய வேண்டும் என்றார்கள். அரசனின் கட்டளைப்படி மத யானை நாவரசர் மீது ஏவப்பட்டது. எதற்கும் அஞ்சாதவராகப் பெருமான் திருவடிகளைச் சிந்தித்து, “ சுண்ண வெண் சந்தனச் சாந்தும் “ எனத் துவங்கும் பதிகம் பாடி “ அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை “ என்றருளினார். ஏவி விடப்பட்ட யானையானது நாவுக்கரசரை வலம் வந்து வணங்கிஎதைக் கண்ட பாகர்கள் அதை அங்குசத்தால் குத்தி மீண்டும் நாவரசர் பால் ஏவினார்கள். ஆனால் யானையோ பாகர்களைத் துதிக்கையால் வீசி எரிந்து விட்டு, சமண குருமார்களைத் தாக்கி அவர்களைத் தாக்கியது.
யானையினின்று தப்பி ஓடிப் பிழைத்த சமணர்கள் மேலும் ஓர் உபாயம் செய்தனர். திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் தள்ள வேண்டும் என்று அரசனிடம் கூறி அதற்கு அனுமதியும் பெற்றனர். அதன்படி நாவுக்கரசரை ஓர் கல்லோடு கட்டிப் படகில் ஏற்றி கடலுக்கு அழைத்துச் சென்று தாங்கள் எண்ணிய செயலை நிறைவேற்றி விட்டுத் திரும்பினார்கள். அந்நிலையிலும் அஞ்சாத திருநாவுக்கரசர் அஞ்செழுத்தைப் போற்றித் துதி செய்து “ சொற்றுணை வேதியன் “ எனத் துவங்கும் பதிகம் பாடினார். அவ்வாறு அவர் பதிகம் பாடியதும், அவரைக்கட்டியிருந்த கல்லானது தெப்பம் போல் மிதந்தது. பிறவிக்கடலில் இருந்து கரை ஏற்ற வல்ல அஞ்செழுத்தானது இக்கடலில் ஒரு கல்லைத் தெப்பமாக்கி அடியவரைக் கரை ஏற்றியதில் வியப்பு ஏதும் இல்லை.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே
கடல் அரசனான வருணன் தனது அலைகளாகிய கைகளால் தாங்கியபடியே திருப்பாதிரிப்புலியூர் என்ற தலத்தின் அருகாமையில் கொண்டு வந்து சேர்த்தான். அவ்வாறு செய்வதற்கு வருணன் என்ன தவம் செய்தானோ?
கரையேறிய நாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்துளியிருக்கும் சிவபெருமானது திருக்கோயிலை வணங்கி, “ ஈன்றாளுமாய் “ எனத் துவங்கும் திருப்பதிகத்தைத் தோன்றாத்துணையாய் அடியவர்களுக்கு விளங்கும் பெருமான் மீது பாடினார். அங்கிருந்து புறப்பட்டுத் திருமாணிகுழி, திருத்தினை நகர் ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, கெடில நதியைக் கடந்து திருவதிகையை அடைந்தார்.அவரது வருகையை அறிந்த திருவதிகை நகர மக்கள் அந்நகரை அலங்கரித்துத் திருநாவுக்கரசரை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டுவரவேற்றனர்.
தூய வெண்ணீறு அணிந்த மேனியராக உருத்திராக்கம் அணிந்த கோலத்துடன் இடைவிடாது சிவபெருமானையே துதிக்கும் மனத்துடன் ஆனந்த நீர் பொழியும் கண்களும், திருப்பதிகம் பாடும் செவ்வாயும் கொண்ட திருநாவுக்கரசர் திருவதிகையின் திருவீதிகளில் புகுந்தார். அடியார்கள் எல்லோரும் வாகீசப் பெருந்தகையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அடியார்கள் தொடர, நாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்து உறையும் பெருமானது திருக்கோயிலை அடைந்தார். தான் முன்பு சமண் வலைப்பட்டு ஈசனை இகழ்ந்துவிட்டேனே என்று உள்ளம் வருந்தி, ஏழைத் திருத்தாண்டகம் பாடிப் பெருமானைப் பணிந்தார். அங்கு தங்கிய நாட்களில் உழவாரத் தொண்டு செய்தும் தமிழ் மாலைகளால் இறைவனை வழிபட்டும் பணி செய்து வந்தார்.
சமணர்களது மொழிகள் பொய் என உணர்ந்த பல்லவ மன்னன் சமணர் பள்ளிகளை நீக்கி விட்டுத் திருவதிகையில் குணபரவீச்சரம் என்ற திருக்கோயிலைக் கட்டுவித்துச் சைவன் ஆனான்.
திருவதிகைக்கு அண்மையிலுள்ள திருவெண்ணை நல்லூர் , திருக் கோவலூர், திருவாமாத்தூர் ஆகிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகங்களால் துதித்துப் பெண்ணாகடத்துத் தூங்கானை மாடத்தே எழுந்தருளியிருக்கும் சுடர்க் கொழுந்தீசரைத் துதிக்கச் சென்றார் தாண்டக வேந்தர். “சமண மதத்தில் சார்ந்திருந்த அடியேனது பழி நீங்குமாறு உமது முத்திரையை இட்டருள வேண்டும்” என்று பெருமானிடம் வேண்டினார் வாகீசர்.
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
மின்னாரு மூவிலைச் சூலம் என்மேல் பொறி; மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே
எனத் துவங்கித் திருப்பதிகம் பாடியவுடன், இறைவர் அருளால் எவரும் அறியாதபடி ஒரு சிவ பூத கணம் வந்து அவரது தோள்களில் சூலக் குறியையும் ரிஷபக் குறியையும் பொறித்தது. சிவபெருமானது திருவருளால் நெகிழ்ந்த வாகீசர் பலநாட்கள் அங்கு தங்கிப் பணி செய்து வந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருநெல்வாயில் அரத்துறை, திருமுதுகுன்றம் ஆகிய சிவத் தலங்களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடித் தில்லை நகரைச் சென்றடைந்தார்.
மறைகளையும் பிற கலைகளையும் ஓதும் அந்தணர்கள் நிறைந்த தில்லைப்பதியை அடைந்த திருநாவுக்கரசர் சிவமே நிலவிய திருவீதிகளை வலம் வந்து ஏழ் நிலைகளைக் கொண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்தார். திருக்கோயிலை வலம் வந்த பின், பேரன்பு பொங்கக் கனக சபையில் ஆனந்த தாண்டவம் புரியும் பெருமானைத் தரிசித்துப் ஆனந்த வெள்ளம் மேலிட உவகைக் கண்ணீர் பெருக்கிப் பலமுறை வீழ்ந்து வணங்கினார். தன்னை நோக்கி, “ என்று வந்தாய்” என்று பொன்னம்பலவன் கேட்பது போன்ற திருக்குறிப்புத் தோன்றவே, “ ஒன்றி இருந்து நினைமின்” எனத் துவங்கும் திருப்பதிகத்தையும், “கருநட்ட கண்டனை” என்ற திருவிருத்தத்தையும், “ பத்தனாய்ப் பாட மாட்டேன் “ என்ற திருநேரிசையையும் பாடிப் பரவினர். நடராஜப்பெருமானின் தாண்டவத்தைத் தரிசிப்பதானால் பிறவியும் வேண்டுவது என்னும் பாடல் நாவுக்கரசரது எல்லையற்ற அன்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
தில்லையில் தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்த நாட்களில், “ அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்ற பதிகம் பாடினார். அருகாமையிலுள்ள திருவேட்களம்,திருக் கழிப்பாலை ஆகிய தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி, மீதும் தில்லையை வந்தடைந்து, “ பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்” எனத் துவங்கும் பதிகத்தையும், “அரியானை அந்தணர் தம சிந்தையானை” என்ற பெரிய திருத்தாண்டகத்தையும், ” செஞ்சடைக் கற்றை” என்னும் திருநேரிசைப் பதிகத்தையும் பாடிப் பரவினார்.
இவ்வாறு பணி செய்து வரும்போது சீர்காழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமாதேவியார் தனது திருமுலைப்பாலோடு சிவஞானத்து இன்னமுதத்தையும் கலந்து திருக்குளக்கரையில் தோணிச் சிகரத்தை நோக்கி அம்மே அப்பா என்று அழுத குழந்தையின் பசி தீருமாறு புகட்டியதும் அக்குழந்தை தனக்குப் பாலூட்டியது தோடுடைய செவியன் என்று தந்தைக்கு அடையாளங்களுடன் சுட்டிக் காட்டியதும் அதனால் சிவஞான சம்பந்தர் ஆகியதும் ஆகிய சிறப்புக்களை அடியார்கள் மூலம் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் ஞானம் பெற்ற அக்குழந்தையைத் தரிசித்து வணங்குவதற்காக சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். வழியில் திருநாரையூர் என்ற பதியை வணங்கிப் பதிகங்கள் பாடிவிட்டுச் சீர்காழியை வந்தடைந்தார்.
இறைவனால் சூலை நோய் கொடுத்து ஆட்கொள்ளப்பெற்ற நாவுக்கரசரின் வருகையை அறிந்த ஞானசம்பந்தர், அடியார்கள் உடன்வர நாவரசரை எதிர்கொண்டு வரவேற்றுப் பணிய, வாகீசரும் அவர் வணங்காமுன் தாம் அவரது திருவடிகளில் பணிந்தார். அவ்வாறு வணங்குதலும்,சம்பந்தர் அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, ” அப்பர்” என, அவரும் “ அடியேன் “ என்றார். இதனைக் கண்ட சிவனடியார்கள் மகிழ்ச்சிக் கடலிலாழ்ந்தனர். சைவத்தின் இரு புண்ணியக் கண்கள் என்று அவர்களை உலகோர் புகழ்ந்தனர். இருவருமாகத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி இறைவரைத் தரிசித்தபோது, நாவுக்கரசரை நோக்கித் திருஞானசம்பந்தர் , ” அப்பரே, உங்கள் பெருமானைப் பாடுவீராக” என்றவுடன், அப்பரும்,” பார் கொண்டு மூடி” என்ற திருவிருத்தம் பாடியருளினார். பல நாட்கள் இருவருமாகச் சீர்காழியில் அளவளாவிக் கொண்டும்,பெருமானைத் தரிசித்துக் கொண்டும் இருந்தபோது, நாவரசர் தாம் சோழ நாட்டுத் திருப்பதிகளைத் தரிசிக்க விரும்புவதாகக் கூற, சம்பந்தரும் அவரைத் திருக்கோலக்கா என்ற பதி வரையில் உடன் வந்து விடை கொடுத்து அனுப்பினார்.
சீர்காழியிலிருந்து புறப்பட்ட அப்பர் பெருமான், சிவபெருமான் விரும்பி உறையும் பதிகளான திருக் கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர்,திருநனிபள்ளி திருச் செம்பொன்பள்ளி, மயிலாடுதுறை,திருத்துருத்தி, திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருக்கோடிகா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர் , திருநாகேச்சரம், திருப்பழையாறை ஆகிய ஊர்க் கோயில்களை வணங்கித் திருப்பதிகங்கள் பாடித் திருச்சத்தி முற்றத்தை அடைந்தார். இயமன் வந்து உயிரைக் கவரும் முன்பு உனது மலர்ச் சேவடிகளை என் சிரத்தின் மீது பொறித்து வைப்பாயாக என்று சிவக்கொழுந்தீசரிடம் பதிகம் பாடியவுடன், பெருமான் அவரை நல்லூருக்கு வருமாறு பணித்தான். அதைக் கேட்ட அப்பர் பெருமான் இறையருளைச் சிரத்தின் மேல் கொண்டு திருநல்லூரைச் சென்றடைந்தார். தென்பால் கயிலை போல விளங்கும் நல்லூர்த் திருக்கோயிலை வலம் வந்து இறைவரை வணங்கியதும், “ உன்னுடைய விருப்பத்தை முடித்து வைக்கின்றோம்” என்று கூறி அவரது சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான். எல்லையற்ற கருணையைக் கண்டு உருகிய அப்பர் பெருமான் “ நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்” எனத் துவங்கும் திருத்தாண்டகத்தால் பெருமானைத் துதித்தார். “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் ” என்று ஒவ்வொரு பாடலிலும் அக்கருணையைக் குறிப்பிட்டுப் பலமுறை பணிந்தெழுந்தார்
நல்லூரில் திருவடி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர், அருகிலுள்ள திருக்கருகாவூர்,திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்,திருப்பாலைத்துறை ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டுப் பதிகங்கள் பாடிப் பணி செய்தபின் மீண்டும் நல்லூரை அடைம்து அங்குப் பல நாட்கள் தங்கி உழவாரப்பணி ஆற்றி வந்தார். பிறகுஅங்கிருந்து புறப்பட்டுத் திருப்பழனத்து இறைவரை வணங்கியபின், திங்களூர் சென்றடைந்தார் வாகீசர்.அங்கு வசித்து வந்த அப்பூதியார் என்ற அந்தணர், திருநாவுக்கரசரது திருநாமத்தைத் தமது புதல்வர்களுக்கு இட்டதோடு தாம் அமைத்த குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல் ஆகிய தருமங்களுக்கும் நாவுக்கரசரது பெயரையே அமைத்திருப்பதைக கண்டும் கேட்டும் அறிந்த நாவரசர் அப்பூதியாரைக் காண்பதற்காக அவரது மனையைச் சென்றடைந்தார்.
திருநாவுக்கரசரைக் காணாமலேயே அவரது பெருமையை அறிந்து அவரிடம் பக்தி பூண்ட அப்பூதியார், இப்போது நேரிலேயே அப்பெருந்தகை தமது ,மனைக்கு எழுந்தருளியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவரைத் தம் சுற்றத்தோடு வரவேற்று உபசரித்தார். தமது மனையில் அமுது செய்யுமாறு அப்பூதியார் வேண்டவே, அப்பரும் அதற்கு இசைந்தார். உணவு வகைகள் பலப்பல செய்தபின் அப்பூதியாரின் மனைவியார் தமது மூத்த புதல்வனாகிய மூத்த திருநாவுக்கரசை வீட்டுத் தோட்டத்திலுள்ள வாழை மரத்திலிருந்து இலை பறித்து வருமாறு பணித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்ற மூத்த திருநாவுக்கரசு தோட்டத்து வாழைக் குருத்தை அரியும்போது அங்கிருந்த பாம்பு அவனைத் தீண்டியது. மூத்த திருநாவுக்கரசை விஷம் வேகமாகப் பாதித்து அவனது உச்சந்தலைக்கு ஏறத் தொடங்கியும் அதனைப் பொருட்படுத்தாது வேகமாகச் சென்று அவ்விலையைத் தாயாரிடம் சேர்த்து விட்டு உயிர் நீத்தான். மகன் மாண்டது கண்ட அப்பூதியாரும் அவரது மனைவியாரும் , “ இதனை அப்பர் பெருமான் அறிந்தால் அமுது செய்ய மாட்டாரே “ எனக் கலங்கி, அச்செய்தியை வெளியிடாமல் மகனின் சவத்தை வீட்டின் ஒருபுறம் மறைத்து வைத்தனர்.
பின்னர் இருவரும் அப்பரடிகளை அடைந்து அமுது உண்ணுமாறு அழைத்தனர். அமுது உண்ணும முன்பு வீட்டில உள்ளோருக்குத் திருநீறு வழங்கிய அப்பர் பெருமான், “ மூத்த திருநாவுக்கரசு எங்கே ?” எனக் கேட்க அதற்கு அப்பூதியார் “ அவன் இப்போது இங்கு உதவான் “ என்றார். இறையருளால் அப்பூதியாரின் தடுமாற்றத்தை அறிந்த நாவுக்கரசர் நடந்ததைக் கூறுமாறு கேட்க அப்பூதியாரும் தமது மகனை அரவம் தீண்டியதால் மாண்டு விட்டதைக் கூறினார். அதனைக் கேட்ட அப்பர் பெருமான் அச்சவத்தினைத் திருக்கோயிலுக்கு முன் கொண்டு வரச் செய்து இறைவன் மீது, “ ஒன்று கொலாம்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.
இறைவர் இன்னருளால் சவமாய்க் கிடந்த மூத்த திருநாவுக்கரசு உயிர்பெற்று எழுந்தான். அப்படியும், அடியார் அமுதுண்ணக் காலம் தாழ்ந்ததே என வருந்திய அப்பூதியாரையும் அவரது மனைவியாரையும் ஆறுதலளித்து ஆசி வழங்கினார் நாவுக்கரசர். சில நாட்கள் அங்கு தங்கியபின், அப்பூதியார் உடன் வரத் திருப்பழனம் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனைச் “ சொல்மாலை “ எனத் துவங்கும் பதிகத்தால் போற்றி, அதில் அப்பூதியாரின் தொண்டையும் சிறப்பித்தருளினார். அங்கு தங்கியிருந்த நாட்களில் அருகிலுள்ள திருச்சோற்றுத்துறைக்குச் சென்று பணி செய்து பதிகங்கள் பாடிவிட்டு மீண்டும் திருப்பழனத்தை அடைந்து திருத்தொண்டுகள் ஆற்றி வந்தார். திருப்பழனத்தில் பல நாட்கள் தங்கிப் பணி செய்துகொண்டிருந்த திருநாவுக்கரசர், மீண்டும் திருநல்லூர் சென்று வழிபட்டார். பிறகு, பழையாறை, திருவலஞ்சுழி, திருக்குடமூக்கு, திருச்சேறை, திருநறையூர், திருவாஞ்சியம், திருப்பெருவேளூர்,திருவிளமர் ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் படி,உழவாரத் தொண்டு செய்தபின்னர் திருவாரூரை வந்தடைந்தார்.
திருநாவுக்கரசரின் வருகையால் மகிழ்ந்த திருவாரூர் வாழ் அடியார்கள் வீதிகளை அலங்கரித்து அவரை எதிகொண்டு அழைத்து வணங்கி வரவேற்றனர். அவர்களை நோக்கி, “ புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” என்று பாடி, சமணர் வாய்ப்பட்ட அடியேனுக்கும் ஆரூரன் அருள் கிட்டுமோ எனப்புகன்று, அடியார்கள் சூழத் திருக்கோயிலை அடைந்தார் அப்பர் பெருமான். தேவாசிரியன் மண்டபத்தை வணங்கித திருமூலட்டான நாதரின் திருச்சன்னதியை அடைந்து, கண்கள் ஆனந்த நீர் பெருகக் காண்டாலே கருத்தாய் நினைந்திருந்தேன்” எனும் பதிகத்தையும், பழமொழித் திருப்பதிகத்தையும் “பாடிளம் பூதத்தினானும்” எனும் பதிகத்தையும் பாடியருளி, உழவாரப்பணி செய்து கொண்டு காலம் தோறும் பெருமானைத் தரிசித்து வந்தார்.
திருவாரூர் ஆலயத்துள் விளங்கும் மற்றொரு ஆலயமான ஆரூர் அரநெறியில் நமிநந்தி அடிகள்(நாயனார்) நீரால் விளக்கு எரித்ததைத் தமது பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துப் பாடினார். அதில் ஆரூரில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவைப் பற்றியும் சிறப்பித்தார் தாண்டக வேந்தர். மேலும் ,திருவாரூருக்கு அண்மையில் உள்ள ருவலிவலம்,திருக்கன்றாப்பூர், திருக் கீழ் வேளூர் ஆகிய தலங்களையும் தரிசித்து விட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருக நாயனாரது மடத்தில் தங்கியிருந்த காலத்தில் சீர்காழியிலிருந்து யாத்திரையாக வந்த திருஞானசம்பந்தர் அடியார்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்து அளவளாவும்போது சம்பந்தர் அப்பர் பெருமானை வணகி,” அப்பரே, தாங்கள் திருவாரூரில் தங்கியிருந்த நாட்களில் கண்ட சிறப்புக்களைக் கூறி அருளுவீராக” என்றார். உடனே, அப்பரும், “ முத்து விதானம் “ எனத் துவங்கும் பதிகத்தின் மூலம் திருவாரூரில் நடைபெறும் திருவாதிரை நாள் சிறப்பை எடுத்துரைத்தார் . அதனைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், திருவாரூரைத் தரிசிக்கும் பெரு வேட்கையுடன் அங்கிருந்து ஆரூருக்குப் புறப்பட்டார். அப்பரும் திருப்புகலூர்ப் பெருமான் மீது பாமாலைகள் பாடிப் பணி செய்து வந்த பொது, அருகிலுள்ள திருச் செங்காட்டங்குடி, திருமருகல், திருச் சாத்தமங்கை, திருநள்ளாறு ஆகிய தலங்களுக்குச் சென்று தமிழ் மாலைகளால் பெருமானைத் துதித்து மீண்டும் திருப்புகலூரை அடைந்தார்.
திருவாரூரை வணங்கிய திருஞானசம்பந்தப்பெருமான், மீண்டும் திருப்புகலூருக்குத் திரும்பியதும் அவரைத் திருநாவுக்கரசர் எதிர் கொண்டு வரவேற்றார். புகலூரில் தங்கியிருந்த நாட்களில், சிறுத்தொண்ட நாயனாரும், திருநீல நக்க நாயனாரும்,அங்கு வந்து சேர்ந்தனர், அனைவரும் முருக நாயனாரின் திருமடத்தில் தங்கி ஈசனது பெருமைகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்தனர். இவ்வாறு பலநாட்கள் தங்கியிருந்தபின்னர், திருநீல நக்கரும், சிறுத்தொண்டரும் விடை பெற்றுக் கொண்டு தமது இடங்களுக்குத் திரும்பினர். சம்பந்தரும் அப்பரும் அம்பர் என்ற தலத்தை வணங்கி விட்டுத் திருக்கடவூர் சென்று கால காலனாகக் காட்சி தரும் பெருமானை வணங்கிக் குங்கிலியக் கலய நாயனாரது மனையில் தங்கினர். குங்கிலியக்கலயரும் அவர்களை உபசரித்துத் திருவமுது செய்தார். அதன் பின்னர் அப்பரும் ஞானசம்பந்தரும் அருகாமையிலுள்ள திருக்கடவூர் மயானத்தைச் சென்று தரிசித்துப் பதிகம் பாடி, திரு ஆக்கூர் தான்தோன்றி மாடத்துப் பெருமானை வணங்கித் துதித்தபின், திருவீழி மிழலை என்ற திருத்தலத்தை அடைந்தனர்.
திருவீழிமிழலை எல்லையில் இருவரையும் அந்தணர்களும் அடியார்களும் எதிர் கொண்டு வரவேற்றனர். நகர் முழுதையும் அலங்கரித்தனர். தொண்டர்கள் புடை சூழ இருவருமாகத திருக்கோயிலை அடைந்து விண்ணிழி விமானத்தின் கீழ் அருள் பாலிக்கும் வீழிநாதப் பெருமானை வணங்கித் துதித்தனர். கைகள் உச்சி மேல் குவித்துக் கண்கள் அருவி பொழியத் “ திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே செல்கின்றாரே” என்னும் திருப்பதிகம் பாடிப் பரவினார் அப்பர் பெருமான். அதுபோலவே சம்பந்தரும் இறைவன் மீது செந்தமிழ்ப் பதிகங்கள் பாடினார். இருவருமாக அங்குப பல காலம் தங்கிப் பணி செய்து கொண்டிருக்கும் வேளையில் பருவமழை தவறியதால் கடும் பஞ்சம் நிலவியது.
பஞ்சத்தால் பல்லுயிர்களும் துன்பப்படும் போது மிழலைப் பெருமான் இருவரது கனவிலும் எழுந்தருளி, “ இப்பஞ்சத்தால் நீங்கள் இருவரும் மன வாட்டம் அடைய மாட்டர்கள் என்றாலும் உங்களை வழிபடும் அடியார்களுக்கு அளிப்பதற்காக நாம் உங்களுக்குப் படிக்காசு அளிக்கின்றோம்” என்று அருளினான். அதன்படி நாள் தோறும் கிழக்கே உள்ள பீடத்தில் சம்பந்தருக்கும் மேற்கிலுள்ள பீடத்தில் அப்பருக்கும் பெருமான் ஒவ்வொரு நாளும் படிக்காசு வைத்தருளினான். அக்காசுகளைக் கொண்டு இருவரும் பண்டங்கள் வாங்குவித்து அமுது சமைப்பித்து, சிவனடியார்கள் அனைவருக்கும் நாள் தோறும் இரண்டு காலங்களிலும் பறை அறிவித்து அமுது உண்பித்தார்கள் . அதனால் துன்பம் தரும் வறுமையைப் போக்கி அருளினார்கள்.
உமையம்மையிடம் ஞானப்பாலுண்ட மகனார் ஆதலால் சம்பந்தப் பெருமானுக்கு வாசியுடன் காசு கிடைத்தது. பின்னர் வாசி தீரக் காசு தந்தருளுமாறு அவர் பதிகம் பாடியவுடன் வாசியில்லாக் காசினைப் பெருமான் அருளால் பெற்றார். கைத்தொண்டு செய்தபடியால் திருநாவுக்கரசர் வாசியில்லாக் காசினைப் பெற்றார். இவ்வருட் செயலால் நாடு பஞ்சம் நீங்கி வளம் பெற்றது. வீழிப்பெருமானிடத்து விடைபெற்றுக் கொண்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கியபின் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தை அடைந்தனர்.
முன்பொரு காலத்தில் வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டுத் திருவாயிலைத் திருக்காப்பிட்டுச் சென்றபடியால் அவ்வாயிலை ஒருவரும் திறக்க முன்வராமல் அருகாமையில் வேறொரு வாயில் அமைத்துப் பூசித்து வந்தனர். இதனை அறிந்த சம்பந்தர் அப்பரை நோக்கி,” நாம் இருவரும் நேர் வாயில் வழியே சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும். எனவே, அக்கதவம் திறக்குமாறுத் தாங்கள் திருப்பதிகம் பாடி அருளிவீராக” என்றார்.
திருநாவுக்கரசரும்,” பண்ணினேர் மொழியாள் ” எனத் துவங்கும் பதிகத்தைப் பாடலானார். ஆனால் திருக்கதவின் திருக்காப்பு நீங்கத் தாமதமாவதைக் கண்டு அப்பதிகத்தின் கடைசிப் பாடலில் “ இரக்கம் ஒன்றிலீர்” எனப்பாடி வணங்கினார். இறையருளால் திருக்காப்பு நீங்கித் திருக்கதவம் திறந்தது. வேத ஒலியும் ஆரவாரமும் எழுந்தன. அடியார் புடை சூழ அப்பரும் ஞானசம்பந்தப்பிள்ளையாரும் உள்ளே சென்று இறைவனைத் தரிசித்து மகிழ்ந்தார்கள். அப்போது நாவரசர் சம்பந்தரை நோக்கி, “ இக்கதவம் அடைக்குமாறுத் தாங்கள் பாடியருள வேண்டும்” என விண்ணப்பித்தார். சம்பந்தர் பாட ஆரம்பித்தவுடனேயே கதவம் திருக்காப்பிட்டது. திருவருளை வியந்த அனைவரும் பெருமானது பொன்னடிகளை வணங்கித் துதித்தனர். அன்று முதல் இறைவனுக்கு முன்புள்ள திருவாயில் திறப்பதும் மூடுவதும் வழக்கமாக நடை பெற்று வருகிறது.
தாம் கதவம் நீங்குமாறு பாடுகையில் திருக்காப்பு நீங்குவதற்குக் காலம் தாழ்ந்ததையும் அதே சமயம் கதவம் திருக்காப்பிட வேண்டி சம்பந்தர் பாட ஆரம்பித்தவுடனேயே கதவம் மூடியதையும் அன்றிரவு அப்பர் பெருமான் நினைந்து, சிவபெருமானது திருவிள்ளக்குரிப்பை அறியேன் என்று அஞ்சியவராகக் கவலையுற்று அதே நினைவுடன் துயில் கொண்டார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் எழுந்தருளி,” திருவாயமூரில் இருப்போம் அங்கே வா “ என்று அருளி விட்டு மறைந்தார். துயில் நீங்கிய அப்பர் பெருமான்,
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா என்று போனார் அதென் கொலோ
எனத் துவங்கிப் பதிகம் பாடியபடியே திருவாய்மூரை நோக்கிச் சென்றார். அதனைக் கேள்வியுற்ற திரு ஞான சம்பந்தரும் அவரைத் தொடர்ந்து செல்லலாயினார். நாவரசருக்கு வழிகாட்டிக் கொண்டு முன்சென்ற இறைவன் பொற்கோயில் ஒன்றைக் காட்டி விட்டு மறைந்தருளினான். அப்போது ஞானசம்பந்தர் காணுமாறு இறைவன் காட்சி கொடுத்து அருளினான். அக்காட்சியை அப்பருக்குக் காட்டினார் சம்பந்தப்பெருமான். அதனைக் கண்டு பரவசமாகிய அப்பர், “ பாட அடியார் பரவக் கண்டேன்” எனத் துவங்கும் திருத் தாண்டகத்தால் இறைவனைத் துதித்தார். பின்னர் இருவரும் திருவாய் மூர்க் கோயிலை வணங்கி வலம் வந்து போற்றியபின் திருமறைக்காட் டிற்குத் திரும்பிவந்து மறைக்காட்டு மணாளனைத் துதித்துக் கொண்டு அங்கே தங்கி இருந்தனர்.
திருமறைக்காட்டில் இருவருமாகத் தங்கியிருந்த போது , பாண்டிய மன்னனின் பட்டத்து அரசியும் சோழ மன்னனின் மகளுமான மங்கையர்க்கரசியாரும் மந்திரியாகிய குலச்சிறையாரும் ஞானசம்பந்தரிடம் சிலரைத் தூது விடுத்தனர். அவர்களை அன்போடு வரவேற்ற காழிப்பிள்ளையார் அனைவரது நலத்தையும் வினாவினார். அதற்கு அவர்கள் பாண்டிய நாட்டில் சமணம் ஓங்கி ,மன்னனும் அவ்வழி சென்று விட்டதால் சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளி சமணரை வென்று சைவ நெறியைத் தழைக்கச் செய்ய வேண்டும் என்று பாண்டிமாதேவியும் அமைச்சரும் விரும்புவதாகக் கூறினார்கள். அதனை ஏற்ற சம்பந்தர் உடனடியாகப் பாண்டிய நாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தார். அதனைக் கண்ட நாவுக்கரசர், அவரைத் தடுத்து, “ சமணர்கள் வஞ்சனை மிக்கவர்கள். எல்லாத் தீங்கையும் துணிந்து செய்பவர்கள். அவர்களால் எனக்குக் கொடுமைகள் பல நிகழ்ந்தன. எனவே தாங்கள் அங்குச் செல்லலாகாது” என உரைத்தார். அதனைக் கேட்ட ஞான சம்பந்தப்பெருமான், “ அப்பரே, இறையருளால் சமணரை வென்று சைவ நெறியை மலரச் செய்வேன். தேவரீர் அங்கு என்னுடன் வர வேண்டாம். சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு இருப்பீராக. “ என்று கூறி விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டார்.
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்குச் சென்ற பிறகு,திருநாவுக்கரசர் சில நாட்கள் திருமறைக்காட்டில் தங்கிப் பணி செய்துவிட்டுத் திருநாகைக் காரோணம் முதலிய தலங்களைத் தரிசித்துத் திருவீழிமிழலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு விண்ணிழி விமானத்தின் கீழ் வீற்றிருக்கும் பெருமானை வணங்கினார்.அதன் பின்னர் திருவாவடுதுறையை அடைந்து அங்கு ஞானசம்பந்தர் ஆயிரம் பொன் பெற்ற அருட் திறத்தைத் தனது பதிகத்தில் சிறப்பித்துப் பாடினார். பின்னர் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்தவராகப் பழையாறை வடதளி என்ற திருக்கோயிலை வந்தடைந்தார். அக்கோயிலை எவரும் வழிபடாத வகையில் சமணர்கள் மூடி வைத்திருந்ததைக் கண்டு மனம் வருந்திய அப்பர் பெருமான் திருக்கோயில் திறக்கப்பட்டு இறைவனைத் தரிசிக்கும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டார். அவரது செய்கையை சிவபெருமான் அரசனது கனவில் தோன்றி அறிவித்ததும் மன்னனும் அமைச்சர்களோடு ஆலயத்திற்கு விரைந்து சென்று சமணர்களை அங்கிருந்து அகற்றித் திருக்கோயிலைத் திறப்பித்தான். நாவரசரும் ஆலயத்துள் நுழைந்து பெருமானைப் பணிந்து, “ தலையெலாம் பறிக்கும்” எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
காவிரியின் இரு கரைகளிலும் உள்ள சிவத்தலங்களைத் தரிசித்துத் திருப்பதிகங்கள் பாடி வணங்கித் திருவானைக்கா ,திருவெறும்பியூர் ,திருச்சிராப்பள்ளி ,திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் பதிகங்கள் பாடி, உழவாரப்பணி செய்தபடி,த் திருப் பைஞ்ஞீலியைச் சென்றடைந்தார்.
திருப் பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியில் மிகுந்த பசியும் நீர் வேட்கையும் ஏற்பட்டபோதும் மனம் தளராமல் சென்று கொண்டிருந்த அப்பர் பெருமான் வரும் வழியில் ஒற்று சோலையையும் குலத்தையும் உண்டாக்கி, ஓர் அந்தன வடிவம் கொண்டு அவர் முன் தோன்றினான் சிவபெருமான். அவரது பசியைப்போக்குவதர்காகப் பொதி சோறு அளித்து,” இதனை உண்டு, இக்குளத்து நீரைப் பருகி இளைப்பரிக்கொண்டு செல்வீராக” என்று அருளினான். தாமும் திருப் பைஞ்ஞீலிக்குச் செல்வதாகக் கூறி அவருடன் ஊரை வந்து அடைந்ததும் மறைந்தருளினான். இதனைக் கண்டு அதிசயித்த அப்பர் பெருமான் தம் பொருட்டு இவ்வாறு இறைவனது கருணை இருந்தவாறு எண்ணி எண்ணி விழி நீர் பெருக்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். அங்குச் சில நாட்கள் தங்கியிருந்து உழவாரப்பணி மேற்கொண்டு வந்தார்.
வடதிசையிலுள்ள திருத்தலங்களைத் தரிசிக்க வேண்டி அங்கிருந்து புறப்பட்டுத் திருவண்ணாமலையை அடைந்து அங்கே தங்கிப் பதிகங்கள் பாடினார். பின்னர் தொண்டை நன்னாட்டுப் பதிகளை வணங்குவதற்காக அண்ணாமலையிலிருந்து புறப்பட்டுத் திருவோத்தூரை அடைந்தார். அத்தலத்து இறைவன் மீது பாமாலைகள் சூட்டி உழவாரப்பணி புரிந்த பின்னர் காஞ்சி மாநகரை அடைந்தார்.
காஞ்சி வாழ் அடியார்கள் அனைவரும் திருநாவுக்கரசரது வருகையால் மிகவும் மகிழ்ந்து நகரை அலங்கரித்து அவரை வரவேற்றார்கள். திருவேகம்பனது செம் பொற் கோயிலின் கோபுரவாயிலை வணங்கியபடி அம்பிகை தழுவக் குழைந்த மேனியனாகிய ஏகம்பப்பெருமனைப் பேரன்புடன் வணங்கிக் “ கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை “ என்ற பதிகத்தால் பரவினார். திருக்கச்சி மயானம், கச்சி மேற்றளி,திருமாற்பேறு ஆகிய தலக் கோயில்களை வணங்கிப் பதிகங்கள் பாடி விட்டு மீண்டும் காஞ்சி வந்தடைந்தார்.
“ கச்சி ஏகம்பன் காண் அவன் என் கண் உளானே “ என்று நிறைவு பெறும் திருத்தாண்டகத்தால் ஈசனைத் துதித்தார். பின்னர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுத் திருக்கழுக்குன்றம், திருவான்மியூர் ஆகிய தலங்களை வழிபட்டுத் திருவொற்றியூரைச் சென்றடைந்தார். அன்பர்கள் எதிர் கொண்டு வரவேற்க,அப்பர் பெருமான் திருக்கோபுரத்தை வணங்கி எழுத்தறியும் பெருமானாகிய புற்றிடம் கொண்ட பெருமானை, “ வண்டோங்கு செங்கமலம்” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தால் போற்றி வணங்கினார்.
சில நாட்களுக்குப் பிறகு திருப்பாசூரை அடைந்து இறைவனைத் திருக்குறுந்தொகை,திரு நேரிசை,திருத்தாண்டகப் பதிகங்களால் போற்றிப் பழையனூர்த் திருவாலங்காட்டை அடைந்து “ திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே” என்ற ஈற்றடி கொண்ட திருத்தாண்டகத்தால் பாடி வணங்கினார். பின்னர், திருக்காரிக்கரை என்ற தலத்தை வழிபட்டுவிட்டுத் திருக்காளத்தியை அடைந்து கண்ணப்பர் தொழுத கண்ணுதற் கடவுளை விழுந்து இறைஞ்சிக் கண் களிகூரப் பரவசமாகி , “ என் கண்ணுளான் “ என்ற மகுடம் கொண்ட திருத்தாண்டகத்தால் போற்றினார்.
திருக்கயிலை மலையைத் தொழும் பெரு விருப்புடன், வட திசை நோக்கிச் சென்றார். வழியில் திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) என்ற தலத்தை அடைந்து தமிழ் மாலையால் வணங்கித் தெலுங்கு நாட்டைக் கடந்து கன்னட நாட்டில் திருக்கோகரணத்தை வணங்கி,மாளவ ,இலாட மற்றும் மத்தியப் பிரதேசங்களைக் கடந்து வாரணாசியை(காசி) அடைந்தார். கங்கை பாயும் அப்புண்ணிய தலத்தில் விசுவேசனை வணங்கித் தன்னுடன் வந்த அடியார்களை அவ்விடமே விடுவித்து, மனிதர்கள் செல்ல அரிதான கானகங்களின் வழியே உணவு-உறக்கம் ஆகியவற்றை நீக்கி இரவு பகலாக எங்கும் தங்காமல் நடந்து சென்றார். அதனால் அவரது திருவடிகள் நொந்து தேய்ந்தன. தனது கைகளைக் கொண்டு தாவிச் சென்றதால் மார்பின் சதைகளும் எலும்புகளும் தேய்ந்து முறிந்தன. வேறு செயலின்றிக் கயிலை நாதனையே சிந்தித்தவராக அவ்வழியிலேயே தங்கி இருந்தார்.
அப்பர் பெருமான் செயலற்றுக் கிடந்த இடத்தருகில் ஒரு தடாகத்தை உண்டாக்கிய சிவபெருமான் தானே அவர் முன் ஓர் அந்தண உருவில் எழுந்தருளி அவரை நோக்கி,” திருக்கயிலை மலையை மானிடர்கள் எளிதில் சென்று அடைய முடியாது. எனவே மீண்டுச் செல்வீராக” என்றான் . அதனை ஏற்க மறுத்த வாகீசர், “ ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று கூறினார். அவரது மன உறுதியை உலகுக்குக் காட்டிய ஈசன் அசரீரியாக,” ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திரு “ என்று ஒலித்தவுடன் உடல் ஊறுகள் முற்றிலும் நீங்கிய வாகீசர் பெருமானைத் தொழுது, “தேவரீர் திருக்கயிலையில் இருக்கும் கோலத்தை அடியேன் கண்டு தொழ அருள் செய்வீராக”எனப் பணிந்து விண்ணப்பித்தார். ( “அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்”. – பெரிய புராணம்)
அப்போது இறைவனது அசரீரி வாக்கு, “ இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் காண்பாயாக” என்று ஒலித்ததும், திருநாவுக்கரசர் இறைவனை வீழ்ந்து வணங்கி, “ வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி” எனத் துவங்கும் திருத்தாண்டகத்தால் பரவி, ஐந்தெழுத்தை ஓதியபடி அத் தடாகத்தில் மூழ்கினார்.
சிவபெருமானது திருவருளால் உலகமே வியப்புறும் வண்ணம் திருவையாற்றுத் தடாகத்தில் எழுந்து கரையில் ஏறியவுடன் அங்குள்ள சராசரங்கள் யாவும் சிவ சக்தி வடிவாகவே தோன்றக்கண்டார். திருவையாற்றுக் கோயில் திருக்கயிலாயம் போலக் காட்சி அளித்தது. திருமாலும்,பிரமனும்,இந்திரனும் உள்ளிட்ட தேவர்கள் சிவபெருமானைப் போற்றிசைக்கும் ஒலி எங்கும் எழுந்தது. வேத முழக்கமும், தேவ மாதர்களது இசையும் நிறைந்தது. தேவர்களும்,அசுரர்களும் முனிவர்களும் இயக்கர் கின்னரர் முதலியோரும் எங்கும் நிறைந்து விளங்கினர். வெள்ளிப் பனிமலையின் மீது மரகதக் கொடி போன்ற உமா தேவியுடன் பவள மேனியனாய் வீற்றிருந்த வள்ளலாரை வாகீசர் தரிசித்தார்.
( “ வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவள வெற்பு என இடப் பாகம் கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.” — பெரிய புராணம் )
கண்கள் அருவி நீர் பாயக் கைகள் சிரத்தின் மீது கூப்ப,மெய் சிலிர்க்க ஆனந்தக் கூத்தாடியும் பாடியும் கயிலை நாதனைத் தரிசித்த வாக்கின் மன்னவனாரது அனுபவ நிலையை யாரால் கூற முடியும்?
சிறிது நேரத்தில் கயிலைக் காட்சி மறைந்து திருவையாற்றுத் திருக்கோயில் மட்டுமே தெரியலாயிற்று. தாம் அங்கு கண்டவற்றைத் திருப்பதிகமாக,
“ மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் “
எனத் துவங்கிப் பாடியருளினார். மேலும் பல பதிகங்கள் பாடி அத்தல த்தில் பல நாட்கள் தங்கிப் பணி செய்து கொண்டிருந்தார்.
திருவையாற்றை விட்டுப் புறப்பட்ட திருநாவுக்கரசர் அருகாமையில் உள்ள திரு நெய்த்தானம்,திருமழபாடி ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் பாடிப் பணி செய்தபின் திருப்பூந்துருத்திக்கு வந்து சேர்ந்தார். கோயிலை வலம் வந்து பணிந்து, “ பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன் நானே” எனப்பாடினார். மேலும் திருக் குறுந்தொகை,திரு விருத்தம் ஆகியன பாடிப் பல நாட்கள் அங்கு தங்கியிருந்தார். திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் அமைத்துக் கொண்டு பலவகைப்பட்ட திருத்தாண்டகங்களையும் திருவங்கமாலை முதலாய பல திருப்பதிகங்களையும் பாடியருளி உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார்.
மதுரையம்பதியில் சமணர்களை வாதில் வென்று சைவத்தை நிலைநாட்டி விட்டுத் திருஞானசம்பந்தப்பெருமான் திருநாவுக்கரசரை சந்திக்க விரும்பித் திருப்பூந்துருத்தியை வந்தடைந்தார். அதனை அறிந்த அப்பர் பெருமான் சம்பந்தப்பிள்ளையாரின் சிவிகையைத் தாங்குபவர்களில் தானும் ஒருவனாக இருக்க வேண்டி ஒருவரும் அறியாதபடி முத்துச் சிவிகையைத தாங்கி வந்தார். பூந்துருத்திக்கு அண்மையில் வந்ததும்,சம்பந்தர் சிவிகையில் இருந்தபடியே, “ “ அப்பர் எங்கு உற்றார்?” என, அச்சிவிகையைத் தூக்குபவர்களுள் ஒருவராக இருந்த நாவரசர் மனமுருகி,” அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப்பெற்று இங்கு உற்றேன்” எனக் கூறித் துதித்தார். அதனைக் கேட்ட சம்பந்தர் விரைந்து அச்சிவிகையிலி ருந்து இறங்கி, திருநாவுக்கரசரை வணங்க, அப்பரும் அவர் வணங்காமுன் வணங்கினார்.இருவருமாகப் பெருமானது கோயிலை வணங்கித் துதித்து அத்தலத்திலேயே தங்கியிருந்தனர்.
மதுரையில் சமணர்களை வென்றதையும், பாண்டியன் கூன் நிமிர்ந்து சைவனானதையும், அனைவரும் திருநீறணிந்ததையும், மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையாரது அன்பின் மேன்மையையும் திருஞானசம்பந்தர் வாயிலாகத் திருநாவுக்கரசர் அறிந்தார். அவர்களைக் காண விரும்பிப் பாண்டியநாடு செல்லத் திருவுள்ளம் கொண்டார். சம்பந்தரும் தொண்டைநாட்டுப் பதிகளைத் தரிசிக்க விரும்பி அப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு திருப்பூந்துருத்தியிலிருந்து புறப்பட்டார்.
திருப்புத்தூரை வணங்கித் திருப்பதிகம் பாடிய நாவுக்கரசர் மதரைத் திரு ஆலவாயை அடைந்து “ முளைத்தானை” எனத் துவங்கும் தாண்டகம் பாடி , நெடுமாற பாண்டியனும் அவனது தேவியான மங்கையர்க்கரசியும் குலச்சிறையாரும் போற்ற அங்குத் தங்கியிருந்து திருநேரிசை, திருவிருத்தம் ஆகிய தமிழ்ப் பாமாலைகளால் ஆலவாய் அண்ணலடி போற்றிவந்தார். பின்னர் திருப்பூவணம் சென்று, “ வடிவேறு திரிசூலம்” எனும் திருத்தாண்டகம் பாடிவிட்டுத் திரு இராமேச்சுரத்தை அடைந்தார். அங்குத் திருநேரிசை பாடிப் பல நாட்கள் தங்கிய பின், திருநெல்வேலி,திருக்கானப்பேர் முதலிய பாண்டிப்பதிகளை வணங்கிக் கொண்டு சோழ நாட்டை அடைந்து திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்குத் தங்கிய காலத்தில், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத் தாண்டகம்,க்ஷேத்திரக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித் திருநேரிசை,ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணம்,பாவநாசப்பதிகம்,சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடியருளி,உழவாரப்பணியில் தலை நின்றார்.
திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகுக்குக் காட்ட வேண்டி, சிவபெருமான் அவர் உழவாரம் செய்யும் இடத்தில், பொன்னும் மணிகளும் தோன்றச் செய்தான். ஆனால் அவற்றை மண் கற்களுக்குச் சமமாகக் கருதிய வாகீசர் அவற்றை அருகிலிருந்த தடாகத்தில் வீசி எறிந்தார். அப்பரின் தூய துறவு நிலையை யாவரும் அறியவேண்டி இறையருளால் தேவலோகப் பெண்டிர் அங்குத் தோன்றி நடனம் ஆடினார். சிவபெருமான் திருவடிக்கே வைத்த நெஞ்சுடைய திருநாவுக்கரசர் அவர்களை நோக்கி, “ உங்களால் இங்கு ஆவது ஏதுமில்லை. யான் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆளாகி உள்ளேன்” என்ற கருத்தில் “ பொய்ம் மாயப் பெருங்கடலில்” என்று தொடங்கித் திருத்தாண்டகம் பாடினார். அரம்பையர்கள் இதைக் கண்டு அவரை வணங்கிச் என்றனர்.
சிலநாட்கள் சென்றபின், தன்னைப் புகலூர் அண்ணல் நரகத்தில் கிடக்க ஒட்டான் சிவலோகத்தில் இருத்திடுவான் என்ற கருத்தில் திருவிருத்தமும், இறைவனது திருவடிக்கே சென்று சேர வேண்டும் என்ற விருப்போடு, திருத் தாண்டகமும் பாடியருளினார்.
“ எண்ணுகேன் என் சொல்லி எ ண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே
என்பது அத்திருத்தாண்டகத்தின் முதல் பாடல். இவ்வாறு பாடித் தொழுததும் இறைவன் அருளாலே சித்திரை மாத சதய நன்னாளில் சிவபெருமானது திருவடி நீழலில் ஆண்ட அரசு அமர்ந்தருளினார். வானோர் மலர்மாரி பொழிந்தனர். விண்ணதிர இசைக் கருவிகள் முழங்கின. அனைத்து உயிர்களும் பெருமகிழ்ச்சி பெற்றன.
**************************************
குலச்சிறை நாயனார்
பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்ற நில வளம் மிக்க ஊரில் குலச்சிறையார் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதில் அவர் தலைசிறந்து விளங்கினார். அவர்கள் எக்குலத்தவராயினும் நல்லவராயினும் தீயவராயினும் அவற்றைப் பொருட் படுத்தாது சிவனடிக்கு அன்பு கொண்டவராக இருந்தால் அவர்களை வணங்கிப் போற்றி வந்தார். அவர்கள் தனித்து வந்தாலும் பலராக வந்தாலும் எதிர்கொண்டு வணங்கி அன்புடன் திருவமுது செய்வித்து வந்தார்.விபூதி-ருத்திராக்ஷம் தரித்தவர்களையும் பஞ்சாட்சரம் ஒதுபவர்களையும் பேரன்புடன் துதித்து வந்தார்.
பாண்டிய மன்னனாகிய நின்ற சீர் நெடுமாறனிடம் குலச்சிறையார் முதலமைச்சராக விளங்கி அரச காரியங்களைத் திறம்படச் செய்து வந்தார். அத்துடன் பாண்டியனின் தேவியாகிய மங்கையர்க்கரசியின் சைவத் தொண்டிற்கு உறுதுணையாகவும் இருந்தார். அப்போது பாண்டிய நாடு சமணர் வயப்பட்டு இருந்தமையால் அரசியாரின் விருப்பப்படித் திருஞானசம்பந்தரிடம் தூது அனுப்பி அவரை மதுரைக்கு எழுந்தருள வேண்டினார். சம்பந்தப்பெருமாநிடத்துப் பெரிதும் பக்தி பூண்டு அவரது பொன்னார் திருவடிகளைத் தலைமேல் கொண்டு பணி செய்தார். சம்பந்தரிடம் சமணர்கள் வாதத்தில் தோற்றுத் தாம் ஏற்ற சபதப்படிக் கழு வேற முற்பட்டபோது தீமை நீங்குமாறு அவர்களைக் கழுவேற்றும் பணி ஏற்றார்.
*******************************************
பெருமிழலைக் குறும்ப நாயனார்
மிழலை நாட்டில் பெருமிழலை (புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது என்பர்) என்ற செழுமை மிக்க ஊரில் குறுநில மன்னராகப் பெருமிழலைக் குறும்பர் என்பவர் இருந்தார். குறும்பர் வமிசத்தில் தோன்றிய இவர்,சிவனடியார்கள் பால் பேரன்பு பூண்டு திருவமுதூட்டித் தமது செல்வங்களை எல்லாம் அவர்களுக்கே உரியதாக்கி வந்தார்.
திருவாரூரில் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகை பாடியதை அறிந்த பெருமிழலைக் குறும்பர் சுந்தரரது திருவடிகளை நாள்தோறும் வணங்குவதே இறைவனது திருவடிகளை அடைய எளிய வழி எனத் துணிந்தார். ஆகவே, பரவை மணாளரான சுந்தர மூர்த்தி நாயனாரது திருநாமத்தை நாவினால் விடாது உச்சரித்ததால், அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம்,வசித்துவம் ஆகிய அட்ட மா சித்திகளையும் கைவரப்பெற்றார். ஐந்தெழுத்தை ஓதி சித்தி அனைத்தும் பெற்றார்.
இவ்வாறு பெருமிழலைக் குறும்பர் இருந்துவரும் காலத்தில், சுந்தரர் கொடுங் கோளூரை அடைந்து அங்குள்ள திருவஞ்சைக் களத்து ஈசனை வணங்கிப் பதிகம் பாடினார். அதன் உட்குறிப்பு,நிலவுலக வாழ்வு நீங்கப்பெற்று ஈசனை அடைய வேண்டும் என்பது. சுந்தரரின் வேண்டுகோளுக்கு இரங்கிய பெருமான் அவரைக் கயிலைக்கு வெள்ளை யானையின் மீது ஏறி வர அருள் பாலித்தான். இதனை யோகத்தால் அறிந்த பெருமிழலைக் குறும்பர் “கண் இழந்து வாழ்வதுபோல் சுந்தரரைப் பிரிந்து வாழேன் அவர் கயிலை சென்று சேர்வதன் முன் யோகத்தால் சென்று சேர்வேன் “ எனத் துணிந்தார். யோகத்தால் அவரது பிரம ரந்திர வாயில் திறந்தது. சுந்தரர் கயிலையை அடையும் தினத்திற்கு (ஆடி சுவாதி) முன் தினத்திலேயே(ஆடி சித்திரை) திருக் கயிலையை அடைந்து சிவனடியைச் சேர்ந்தார்.
***************************
பேயார் ( காரைக்காலம்மையார் )

சோழ நாட்டுக் கடற்கரைப்பட்டினமான காரைக்கால் என்ற நகரில் வணிகர் குலத் தலைவராகத் தனதத்தன் என்பவர் .வாழ்ந்து வந்தார்.அவர் செய்த தவத்தின் பயனாகத் திருமகள் போன்ற தோற்றம் கொண்ட பெண் மகவாகப் புனிதவதியார் அவதரித்தார். இளமையிலிருந்தே சிவபெருமானது திருவடிகளுக்குப் பேரன்பு பூண்ட திலகவதியார் சிவனடியார்களையும் வணங்கி வந்தார்.
தன் மகளுக்கு மணப்பருவம் வந்ததும், தனதத்தன் தனது குடிக்கு ஒத்த ஆண்மகனுக்கு அவரைத் திருமணம் செய்து தர எண்ணிய வேளையில், நாகப் பட்டினத்து வணிகன் ஒருவன் தனது மகனான பரமத்தனுக்குப் புனிதவதியாரை மணம் பேசப் பெரியோர்களைக் காரைக்காலுக்கு அனுப்பி வைத்தான். அவர்களை வரவேற்ற தனதத்தன் பெரிதும் மகிழ்ந்து மணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். நல்லதோர் மண நாளில் காரைக்காலில் மயில் போன்ற சாயலை உடைய புனிதவதியாருக்கும் காளை போன்ற பரமத்தனுக்கும் திருமணம் வேத விதிப்படி நடைபெற்றது.
தனது குடிக்கு ஒரே மகளானதால் நாகப்பட்டினத்திற்குப் போக விடாமல் காரைக்காலிலேயே அருகாமையில் ஓர் மாளிகையை தனதத்தன் புது மணத் தம்பதியருக்கு அமைத்துத் தந்து அளவற்ற நிதியையும் தேவையான மற்ற பொருள்களையும் அளித்தான். பரமதத்தனும் தனது மனைவியாருடன் அதில் தங்கி இல்லறம் சிறக்க வாழ்ந்ததோடு வணிகத்திலும் மேம்பட்டான்.
ஒருநாள் தனதத்தனைச் சந்திக்க வந்த சிலர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றனர். அவற்றைத் தமது இல்லத்தில் கொடுக்குமாறு அவர்களிடம் தனதத்தன் கூறினான். கணவனார் அனுப்பி வைத்த மாங்கனிகளைப் புனிதவதியார் இல்லத்தில் வாங்கி வைத்தார். சற்றைக்கெல்லாம் ஒரு சிவனடியார் அம்மனைக்கு எழுந்தருளினார் அவரது வருகையால் மகிழ்ந்த புனிதவதியார் அவரை உபசரித்து அமுது படைக்கத் தொடங்கினார். தனது கணவனார் கொடுத்து அனுப்பிய இரு மாங்கனிகளுள் ஒன்றை மனமகிழ்ந்து பசியால் வாடியிருந்த அம்முதிய சிவனடியாருக்கு அமுது செய்வித்தார். அந்த அடியவரும் இதனால் பெரிதும் மகிழ்ந்து விடைபெற்றுச் சென்றார்.
நண்பகலில் மனைக்குத் திரும்பிய பரமதத்தன் நீராடிய பின் உண்ண அமர்ந்தான். அன்னம், கறிவகைகளை இலையில் இட்டபின், எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து கணவனுக்குப் படைத்தார் புனிதவதியார். அம்மாங்கனியின் சுவையைப் பெரிதும் விரும்பிய பரமதத்தன், மற்றொரு மாங்கனியையும் இலையில் இடுமாறு கூறினான். அதனைக் கொண்டு வருபவர்போல் ஒரு புறம் தள்ளி நின்று செய்வதறியாமல் மனம் தளர்ந்து . சிவபிரானது திருவடிகளைச் சிந்திக்கலானார். அப்போது அவரது கரத்தில் அதிமதுர மாங்கனி ஒன்று இறை அருளால் வந்தடைந்தது. சிவனருளை எண்ணித் துதித்து மிக்க மகிழ்ச்சியுடன் அதனைக் கணவனார் உண்ணுமாறு இலையில் படைத்தார் . அதை உண்ட பரமதத்தன் அப்பழத்தின் சுவை அமுதினும் சிறந்து விளங்குவதைக் கண்டு, புனிதவதியாரை நோக்கி, ” இப்பழம் நான் முன் கொடுத்தனுப்பிய மாங்கனியினும் சுவையில் வேறு பட்டு இருக்கிறது. மூவுலகங்களிலும் இதைப் போன்ற கனியைப் பெறுவது அரிது. இக்கனியை எவ்வாறு பெற்றாய்?” எனக் கேட்டான். வேறு செயலின்றிக் கணவனாரிடம் நடந்தவற்றைக் கூறினார் கற்புக்கரசியான புனிதவதியார்.
“ஈசன் அருளால் அதிமதுரக் கனி பெற்றது உண்மையாயின் அவனருளால் இன்னும் ஒரு கனியைப் பெற்றுத் தருவாயாக” என்ரூ கூறினான் பரமதத்தன். அங்கிருந்து நீங்கி சிவபெருமானது கழல்களை வேண்டி, “ இன்னொரு கனியை இப்போது தேவரீர் தராவிடில் முன்னம் தந்தது பொய் என்று ஆகி விடுமே” என வேண்டியவுடன் திருவருளால் ஒரு மாங்கனி புனிதவதியாரது கரத்தை வந்தடைந்தது. அதைக் கொண்டு வந்து கணவனின் கையில் கொடுத்தவுடன் அக்கனி திடீரென்று மறைந்து விட்டது. அதனைக் கண்டு அச்சமடைந்த பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வப் பிறவியாக எண்ணி அவரை விட்டு நீங்க வேண்டும் என்று துணிவு கொண்டான்.
கடல்கடந்து சென்று பெரும் திரவியம் ஈட்டி வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஒரு கப்பலில் வாணிபம் செய்வதற்கான பொருள்களை ஏற்றிக்கொண்டு தான் விரும்பிய தேசத்தில் தங்கினான் பெரும் பொருள் சம்பாதித்து அங்கு சில நாட்கள் தங்கி விட்டுப் பின்னர் பாண்டிய நாட்டிலுள்ள ஒரு கடற்கரைப் பட்டினத்தை அடைந்தான். அவ்வூரார் ஒப்புதலுடன் ஒரு வணிகர் குலப் பெண்ணை மணந்து அங்கு வாழ்ந்து வந்தான். ஆனால் புனிதவதியாருக்குத் தான் செய்த வஞ்சனையை எவரிடத்தும் கூறாமல் மண வாழ்க்கை வாழ்ந்துவரும் நாளில் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மகவுக்குச் சடங்குகள் செய்து, தான் அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தனது குல தெய்வமாகக் கருதியபடியால் அவரது நாமமாகிய “ புனிதவதி” என்ற பெயரை அக்குழந்தைக்கு இட்டான்.
கற்பினுக்கரசியாகப் புனிதவதியார் கணவனாரது வருகைக்காகக் காரைக்காலில் காத்திருந்தபோது பரமதத்தன் வேறோர் பெண்ணை மணந்து பாண்டிய நாட்டுப் பட்டினத்தில் வாழ்வதைப் புனிதவதியாரின் சுற்றத்தார்கள் கேள்விப்பட்டனர். எனவே, சிவிகை ஒன்றில் புனிதவதியாரை ஏற்றித் தோழிகள் சூழப் பாண்டிய நாட்டுப் பட்டினத்தை அடைந்து தாம் வந்த செய்தியைப் பரமதத்தனுக்கு முன்கூட்டி அறிவித்தனர். அவரது வருகையைக் கேள்விப்பட்ட பரமதத்தன் மனத்தில் பயத்துடன் தனது இரண்டாவது மனைவியோடும் பெண் குழந்தையோடும் புனிதவதியாரிடம் வந்து அவரது திருவடியில் வீழ்ந்து வணங்கினான். “ நான் உம் அருளால் வாழ்வதால் இக்குழந்தைக்கும் உமது திருப்பெயரையே இட்டுள்ளேன்” என்றான். தனது கணவன் இவ்வாறு தம்மை வணங்குவதைக் கண்ட புனிதவதியார், அச்சத்துடன் தந்து சுற்றத்தார்கள் பக்கம் சென்று நின்றார். சுற்றத்தார்கள் பரமத்தனிடம், “ நீ இவ்வாறு மனைவியை வணங்குவது என்னை?” என்றனர். அதற்கு அவன், “ இவர் நம்மைப் போல் சாதாரண மானுடர் அல்லர். நமக்கெல்லாம் பெரும் தெய்வமும் ஆவார். அதனால் தான் அவரை அஞ்சி நீங்கி வந்தேன். அவர் பெயரையே குழந்தைக்கும் இட்டுள்ளேன். அதுபோலத் தாங்களும் அவரைப் போற்றுங்கள்” என்றான். இதைக் கேட்ட சுற்றத்தார்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
கணவனாரது சொற்களைக் கேட்ட புனிதவதியார், சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, “ இதுவரையில் கணவன் பொருட்டுத் தாங்கிய தசைப் பொதியை நீக்கி உமது பூத கணங்கள் போற்றும் பேய் வடிவைத் தந்தருளுவீராக” என்று வேண்டினார். திருவருளால் அவர் வேண்டியபடியே அழகின் இருப்பிடமான சதைப்பகுதிகளை உதறிவிட்டு எலும்பே உடலாக விண்ணும் மண்ணும் போற்றும் பேய் வடிவம் பெற்றார். தேவர்களும் முனிவர்களும் மகிழ,சிவகணங்கள் கூத்தாட, துந்துபிகளின் முழக்கத்துடன் மலர் மாரி பெய்தது. சுற்றத்தார்கள் அச்சத்துடன் அவரைத் தொழுதுவிட்டு அங்கிருந்து நீங்கினர்.
அதற்குப்பின் திருவருளால் ஏற்பட்ட ஞானத்தால் இறைவனைத் துதித்து “ அற்புதத் திருவந்தாதி” யும், “ திரு இரட்டை மணி மாலை”யும் பாடினார். பிறகு, திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்லலானார். அவரது பேய் வடிவைக் கண்டவர்கள் அஞ்சி ஓடினர். கயிலை மலைக்கு அருகில் சென்றதும் அங்கே காலால் நடப்பது தகாது என்று மகிழ்ச்சி மேலிடத் தலையால் நடந்து சென்றார். இதனைக் கண்ட உமாதேவியார், இவ்வாறு தலையால் நடந்து வரும் எலும்பு வடிவின் பேரன்புதான் என்னே?” என்று வியந்தார். அதற்கு விடையாகப் பெருமான் உமையன்னையை நோக்கி, “ உமையே, இவ்வாறு நம்மைக் காண வருபவள் நம்மைப் பேணும் அம்மை ஆவாள். இப்பெருமை மிக்க பேய் வடிவை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டாள்.” என்று கூறி, காரைக்கால் அம்மையை நோக்கி, “ அம்மையே” உலகெலாம் உய்ய அழைத்தார். அப் பேரருளைக் கேட்ட அம்மையார், ஈசன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, “ அப்பா” என்றார்.
சிவபெருமான் அம்மையை நோக்கி, “ நம்மிடம் நீ வேண்டும் வரம் யாது” என்று கேட்க, அதற்கு அம்மையார், “ என்றும் மாறாத அன்பு தங்களிடம் இருக்க வேண்டும். அடியேன் உலகத்தே இனிப் பிறவாமல் இருக்க வரம் தரல் வேண்டும். இவ்வையகத்தே ஒருக்கால் பிறக்க நேர்ந்தால் உன்னை என்றும் மறவாதிருக்கும்படி வரமளிக்க வேண்டும். அற வடிவான பரம்பொருளே, அது மட்டுமல்ல. நான் மிக்க மகிழ்ச்சியோடு உன் புகழைப் பாடும்போது, உனது திருவடியின் கீழே இருக்குமாறு அருள் புரிதல் வேண்டும் “ என்று வேண்டினார்.
“ இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்றார் “
— பெரிய புராணம்
சிவபெருமான் அவர் வேண்டிய வரங்களை அருளியபிறகு, அம்மையிடம், “ தென்னாட்டிலுள்ள பழையனூர்த் திருவாலங்காட்டில் நாம் ஆடுகின்ற தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்து, நம்மைப் பாடிக் கொண்டு இருப்பாயாக” என்று அருளிச் செய்தான். .
காரைக்கால் அம்மையாரும் தலையினால் நடந்து திருவாலங்காட்டை அடைந்து திருக்கோயிலில் அண்டமுற நிமர்ந்து ஆடும் பெருமானை உளம் குளிரத் தொழுதார். அப்பொழுது, “ கொங்கை திரங்கி” எனத் தொடங்கும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தையும், “ எட்டி இலவம்” எனத் துவங்கும் திருப்பதிகத்தையும் பேரன்பு பொங்கப் பாடியருளினார்.
சிவபெருமானால் “ அம்மையே” என்று அழைக்கப்பெற்றவரும், பெருமானது அண்டமுற ஓங்கி ஆடும் அற்புதத் திரு நடனத்தை எப்போதும் தரிசித்துக் கொண்டு அந்த ஆடும் சேவடிக்கீழ் என்றும் அமர்ந்திருக்கும் பேற்றினைப் பெற்றவருமான காரைக்கால் அம்மையின் பெருமையை யாரால் கூற இயலும்!
***************************************
அப்பூதி அடிகள் நாயனார்
சோழநாட்டுத் திங்களூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியார் ஆவார். சிவபெருமானிடத்தில் அளவற்ற அன்பு பூண்டு பெருமானது அன்பர்களிடமும் மிக்க அன்பு செலுத்தி வந்தார். திருநாவுக்கரசு நாயனாரை நேரில் காண்பதற்கு முன்பே அவரை ஈசன் ஆட்கொண்ட திறத்தைக் கேள்விப்பட்டார். அதனால் அப்பர் பெருமானிடம் அவருக்கு எல்லையற்ற பக்தி ஏற்பட்டது. தனது மனையில் உள்ள மக்களுக்கும், பசுக்களுக்கும், அளவுகோல்களுக்கும் திருநாவுக்கரசரது திருப்பெயரையே இட்டார். தான் அமைத்த திருமடம்,சாலை,தண்ணீர்ப்பந்தல்,குளம் ஆகியவற்றுக்கும் திருநாவுக்கரசரின் திருப்பெயரையே இட்டு வழங்கி வந்தார்.
இங்ஙனம் பல்வேறு அறப் பணிகளை வாகீசப்பெருமானது திரு நாமம் கொண்டு நடத்தி வரும்போது, ஒருநாள் திருப்பழனத்தைத் தரிசித்த அப்பர் பெருமான் அருகிலுள்ள திங்களூரைத் தரிசிக்க வேண்டிச் சென்றார். வழியிலிருந்த தண்ணீர்ப் பந்தலை அடைந்தவுடன் அப்பந்தலுக்குத் “ திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்” என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டார். இவ்வாறு இப்பெயரிட்டிருப்பவர் யார் என்று அங்கிருந்தவரை அவர் கேட்க அதற்கு அவர்கள், “ திங்களூரில் வாழும் அப்பூதி அடிகளார் இப்பந்தர் மட்டுமல்லாது, குளம்,சாலை ஆகியவற்றிற்கும் நாவுக்கரசரின் பெயரைச் சூட்டியிருகிறார்” என்று தெரிவித்தார்கள். இதன் கருத்தை அறிய வேண்டி அப்பூதியாரின் மனையை அடைந்தார் அப்பர் பெருமான்.
சிவனடியார் ஒருவர் வந்துள்ளார் என்று அறிந்த அப்பூதியார் மனைக்கு வெளியில் வந்து திருநாவுக்கரசரது திருவடிகளை வணங்க அப்பரும் அவர் வணங்காமுன் வணங்கினார். “ அருள் ததும்பும் திரு வடிவினை உடையீர்! தாங்கள் எழுந்தருள முன்னம் தவம் செய்தேன் போலும் “ என்றார் அப்பூதியார். அதற்கு அப்பர் பெருமான், “ திருப்பழனத்தைத் தரிசித்துவிட்டுத் திங்களூர் வரும் வழியில் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டும்,பிற அறச் செயல்களைப் பற்றிக் கேள்விப் பட்டும் தங்களைக் காண வந்தோம். அவ்வறங்களுக்கு உமது பெயரை இடாது வேறொரு பெயரை இட வேண்டியதன் காரணம் என்ன என்று கூறுவீராக” என்றார்.
அதனைக் கேட்ட அப்பூதியார் சிந்தை நொந்தவராய் ,” சமணர்கள் பல்லவ மன்னனுடன் விளைவித்த தீங்குகளைத் திருவருள் துணை கொண்டு வென்று , கல்லினோடு பூட்டிச் சமணர்கள் கடலில் வீசிய போது அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு அஞ்செழுத்து ஓதிக் கரை ஏறிய பெருமை கொண்ட திருநாவுக்கரசரையா “வேறொருவர்” என்றீர்? மங்கல வேடம் பூண்டும் இவ்வார்த்தைகளைக் கூறினீர்.நீர் எங்கு உறைபவர்? நீர்தாம் யார் என்று இயம்புவீராக” என்று சினத்துடன் மொழிந்தார். அப்பூதியாரின் பேரன்பைக் கண்ட திருநாவுக்கரசர், ” இறைவனால் சூலை நோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட சிறுமையேன் அடியவன்” என்றார்.
இதனைக் கேட்ட அப்பூதியார் உரை தடுமாறியவராக் கண்ணில் ஆனந்த அருவிநீர் பாயக் கைகள் சிரமேல் கூப்பியவராய் திருநாவுக்கரசரது திருவடிக் கமலங்களை வீழ்ந்து வணங்கினார். பெறற்கரிய நிதியினைப் பெற்றவரைப் போல் மனமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கூத்தாடினார். செய்வதறியாமல் திகைத்து ஆடினார்;பாடினார். வீட்டிற்குள் சென்று மனைவி,மக்கள், சுற்றத்தார் ஆகியோரை அழைத்து வந்து அப்பர் பெருமானை வணங்கச் செய்தார். வாகீசப்பெருமானை இல்லத்தினுள் எழுந்தருளச் செய்து அவரது திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொள்வதன்மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடையப்பெற்றார். பின்னர் நாவரசரை ஓர் ஆசனத்தில் அமரச் செய்துப் பூசித்து, திருவமுது செய்தருளுமாறு வேண்டவே, அப்பரும் அன்பரின் வேண்டுகோளை ஏற்றார்.
அப்பூதியடிகள் தனது மனைவியாரிடம்,” வாகீசப்பெருமான் நமது இல்லத்தில் எழுந்தருளி அமுது ஏற்பது நாம் முன் செய்த ஆகும். இதனால் நாம் உய்ந்து விடுவோம் “ எனக் கூறியதும், மனைவியாரும் பேருவகையுடன், அறுசுவையோடு கூடிய திருவமுதையும்,காய் கறிகளையும் சமைத்தார். பிறகு தனது மூத்த மகனான மூத்த திருநாவுக்கரசைத் தோட்டத்தில் சென்று நல்லதோர் வாழைக் குருத்தை அரிந்து வருமாறு அனுப்பினார்.
நல்ல தாய் தந்தையர் ஏவலால் இப்பணி கிடைக்கும் பேறு பெற்றேன் என்று மகிழ்ந்த மூத்த திருநாவுக்கரசு தோட்டத்திற்கு விரைந்து சென்று வாழைக் குருத்தை அரிய முற்படும்போது பாம்பு ஒன்று அவனைத் தீண்டியது.அப்பாம்பினை உதறி விட்டு விஷத்தால் நான் கீழே விழும் முன்பு அரிந்த இக்குருத்தைச் சென்று கொடுப்பேன் என்று ஓடிவந்து தாயின் கையில் கொடுத்துவிட்டு மயங்கி வீழ்ந்தான். தலைக்கு ஏறியதால் விடம் இறந்தது தெரிய வந்தது. ஆனால் அப்பூதியாரும் அவர் மனைவியாரும் வாகீசர் இதனை அறிந்தால் அமுது செய்ய மாட்டார் என்பதால் மாண்ட மகனை ஓர் பாயினுள் வைத்து மூடி பின்புறம் இருத்தி விட்டு இனியும் தாழ்த்தலாகாது என விரைந்து வந்து அப்பர் அமுது செய்ய அழைத்தனர் .
திருநாவுக்கரசரை வணங்கி, “தேவரீர் அமுது செய்து எமது குடி முழுதையும் உய்யும் வண்ணம் ஆட்கொண்டு அருள வேண்டும்” என்று அப்பூதியார் விண்ணப்பித்தார். ஓர் ஆசனத்தில் அமர்ந்து வெண்ணீறு அணிந்து வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் திருநீற்றினை அளிக்கும்போது, “ மூத்த மகனையும் திருநீறு பெற அழைப்பீராக” என்றார் வாகீசர். நிகழ்ந்தவற்றைக் கூறாமல், “ இப்போது அவன் இங்கு உதவான்” என்றார் அப்பூதி அடிகள். அதனைக் கேட்ட அப்பரது மனத்தில் ஓர் தடுமாற்றம் எழுந்தது. நடந்தவற்றை விவரமாகக் கூறுவீராக என்று கேட்டார் நாவுக்கரசர். இனியும் உண்மையை மறைக்கக் கூடாது என்பதால் வேறு வகை இன்றி நடந்தவற்றைக் கூறினார் அப்பூதி அடிகள். அதைக் கேட்ட வாகீசர்,” இவ்வாறு செய்பவர் வேறு யார் உளர்? எனக் கூறிவிட்டு இறந்த மகனைத் திருக்கோயிலின் முன் கொண்டு வரச் செய்தார். அப்போது சிவபெர்மானது திருவருளை வேண்டி, “ ஒன்று கொலாம்”எனத் துவங்கும் திருப் பதிகத்தைத் திருநாவுக்கரசர் பாடியதும், உறக்கத்திலிருந்து எழுபவன் போல் மூத்த திருநாவுக்கரசு விடம் நீங்கி அவரது திருவடியைத் தொழுதான். இதனைக் கண்டோரெல்லாம் திருத் தொண்டின் பெருமையை வியந்து போற்றினர். ஆனால் அப்பூதியாரும் அவரது மனைவியாரும் ,” அன்பர் அமுது செய்ய இடையூறு ஏற்பட்டு விட்டதே” என்று வருந்தினர். அவர்களது வருத்தத்தைப் போக்கிய நாவுக்கரசர் அமுதுண்ண இசைந்தார்.அதற்கு முன் அம்மனை கோமயம் கலந்த நீரால் மெழுகிக் கோலமிடப்பட்டது அப்பூதியாரும் அவரது மக்களும் உடனிருந்து அமுது செய்யுமாறு அப்பர் பெருமான் கூறியதும், அவ்வாறே அப்பூதியாரது மனைவியார் பரிமாற , வாகீசருடன் அப்பூதியாரும் அவரது மைந்தரும் திருவமுது செய்தனர். பின்னர் அங்குப் பல நாட்கள் தங்கிவிட்டு விடைபெற்றார் வாகீசப்பெருமான்.
திங்களூருக்கு அண்மையிலுள்ள திருப்பழனத்தை அடைந்த வாகீசர், அப்பூதியடிகளின் திருத்தொண்டின் பெருமையை அத் தலத்து இறைவன் மீது “ சொன்மாலை” என்ற திருப்பதிகம் பாடியபோது அதன் கடைசிப் பாடலில் சிறப்பித்தருளினார். இவ்வாறு அப்பர் பெருமானது திருவடிகளே உறுதிப் பொருளாகக் கொண்டு அதனை எந்நாளும் துதிக்கும் ஊதியத்தையும் பெற்றார் அப்பூதி அடிகள். இதனால் தில்லையம்பலத்துள் நடமாடும் ஈசனின் பொற்பாத நிழலை அடைந்து பேரின்ப நிலை பெற்றார்.
************************************
திருநீலநக்க நாயனார்
சோழவளநாட்டில் அரிசொலாற்றின் வடகரையிலுள்ளதும் திருமருகலுக்கு அண்மையில் உள்ளதுமான திருச்சாத்தமங்கை என்பது சாமவேதம் ஓதும் அந்தணர்கள் முத்தீவளர்த்தும், அங்குள்ள அயவந்தி எனும் ஆலயத்திலுள்ள சிவபெருமானையும் அவனது அடியார்களையும் அன்பொடு அர்ச்சித்தும் வாழும் பதியாக விளங்கியது. அத்தகைய மூதூரில் திருநீலநக்கர் என்ற அந்தணர் குலத்தைச் சேர்ந்த பெருந்தகையார் வாழ்ந்து வந்தார். நாள்தோறும் அயவந்தி மேவிய சிவபிரானது திருவடிகளை வணங்கி அர்ச்சிப்பதையும் அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தலையும் நியமமாகக் கொண்டு வந்தார்.பஞ்சாக்ஷர ஜபத்தை விதிப்படி செய்து வந்தார்.
ஒருநாள் சிலந்தி ஒன்று சிவலிங்கத்திருமேனியின் மீது விழுந்ததைக் கண்டு தனது குழந்தையின் மீது சிலந்தி விழுந்தால் அதனை உடனே வாயால் ஊதி விளக்கும் தாயைப் போல அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நீலனக்கரது மனைவியார் அச்சத்தோடு விரைந்து சென்று தனது வாயால் சிவலிங்கத் திருமேனியை விட்டு அச்சிலந்தி போகும்படி ஊதினார்.அதனால் அவரது வாயிலிருந்த உமிழ்நீரும் பெருமான் மீது படுவதைக் கண்ட நாயனார் பதறிப்போய் “இனி உன்னைத் துறந்தேன்” என்று மனைவியாரைக் கோபித்தார்.
மாலைநேரம் வந்தபிறகு தமது பூஜைகளை முறைப்படி முடித்துக் கொண்டு மனை திரும்பினார் நீலநக்கர். ஆனால் அவரது மனைவியாரோ உள்ளத்தில் அச்சத்தோடு மனைக்கு வராமல் திருக்கோயிலிலேயே தங்கி விட்டனர். மனையில் அன்றிரவு பள்ளிகொண்ட நாயனாரது கனவில் சிவபெருமான் எழுந்தருளித் தனது திருமேனியைக் காட்டி, “ உனது மனைவி ஊதிய இடங்கள் தவிரப் பிற இடங்களில் சிலந்தியின் கொப்புளங்கள் தோன்றியுள்ளதைக் காண்பாயாக” என்று அருளிச் செய்தார். உடனே விழித்தெழுந்த நீலநக்கர், கைகளைக் கூப்பியவராக ஆனந்தம் மேலிடக் கூத்தாடினார். பெருமானது கருணையை எண்ணிஎண்ணிக் கண்ணீர் விட்டுக் கதறினார். இறைவனைப் பாடித் துதித்துவிட்டுப் பின்னர் கோயிலிலிருந்து மனைவியாரை மனைக்கு அழைத்து வந்தார். பின்னர் முன்னைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியுடன் பெருமானுக்குப் பூஜைகள் சிறப்புடன் செய்தும் அடியார்களுக்கு வேண்டுவன அளித்தும் வந்தார்.
இங்ஙனம் வாழ்ந்து வரும்போது திருஞானசம்பந்தரது பெருமைகளைப் பலர் கூறக் கேட்டு அவரை நேரில் வணங்க வேண்டும் என்ற பெரு விருப்புக் கொண்டார். அப்போது தல யாத்திரையாக சம்பந்தப்பெருமான் ,திருநீலகண்ட யாழ்ப்பாணணாரும் ,அவரது மனைவியாரான மதங்க சூளாமணியாரும் பிற அடியார்களும் உடன்வரச் திருச்சாத்தமங்கைக்கு எழுந்தருளினார். அதுகண்டு பெருமகிழ்வுற்ற நீலநக்கர் ஊரை அலங்கரித்துப் பந்தலிட்டு, உற்றார் உறவினரோடும் திரு ஞான சம்பந்தரை எதிர் கொண்டு வரவேற்று வணங்கினார். பின்னர் சம்பந்தரையும் அவரோடு வந்த அடியார்களையும் தமது மனைக்கு அழைத்துச் சென்று திருவமுது செய்வித்தார். அன்றிரவு தமது மனையிலேயே அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்தார்.
இரவு நேரம் வந்ததும், சம்பந்தர் நீலநக்கரை அழைத்து, “இன்றிரவு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாகிய மதங்க சூளாமணியாரும் துயிலுவதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்வீராக” என்றருளினார். அதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நீலநக்கர், அவ்விருவரும் தனது மனையின் மையப்பகுதியிலிருந்த வேதிகையின் அருகில் துயில் கொள்ளுமாறு வேண்டினார். நீலநக்கரும் அவ்வண்ணமே அமைத்துக் கொடுத்ததும் வேதிகைத் தீ வலமாகச் சுழன்று முன்னைக் காட்டிலும் எழில்பெற விளங்கியது.
மறுநாள் காலை துயில் எழுந்த சம்பந்தப்பெருமான் அயவந்தினாதரின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அதில் நீலநக்கரின் பெருமையைச் சிறப்பித்துப் பாடியருளினார்.
திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கையிலிருந்து நீங்கும்போது நீலநக்கர் தானும் உடன் வர விரும்பவே, சம்பந்தர் அவரைத்தடுத்து, சாத்தமங்கையிலேயே இருக்குமாறு பணித்தார். அதன்படி நீலநக்கரும் தனது பதியிலேயே தங்கி இருந்தார். இடையிடையே ஞானசம்பந்தர் தங்கியிருந்த பதிகளுக்குச் சென்று சம்பந்தரோடு கலந்திருந்து மீண்டும் சாத்தமங்கைக்குத் திரும்புவார். இப்படிப் பலநாட்கள் சம்பந்தரின் கழலிணைகளை இடையறாது சிந்தித்து வந்தித்து விட்டு, நல்லூர்ப் பெருமணத்தில் சம்பந்தரோடும் அடியார்களோடும் சிவ சோதியில் கலந்து கயிலை மலையில் வாழும் பேரின்ப நிலை பெற்றார்.
***********************************
நமிநந்தி அடிகள் நாயனார்
காவிரி பாயும் சோழநாட்டில் ஏமப்பேறூர் என்ற இயற்கை வளம் மிக்க ஊரில் நமிநந்தி அடிகள் என்பவர் அந்தணர் குடியில் அவதரித்தார். ( தற்காலத்தில் திருநெய்ப்பேர் என்று வழங்கும் இத்தலம் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது.) அவர் சிவபெருமானது திருவடிகளைவணங்கி வழிபடும் தவத்தை மேற்கொண்டவர். தினமும் திருவாரூர் சென்று வழிபடுவதே சிறந்தது என்ற நியமம் பூண்டு அங்கு சென்று வருவதை மேற்கொண்டார்.
ஒருநாள் திருவாரூர்ப் புற்றிடம்கொண்ட பெருமானை வழிபட்ட பின் அங்கிருந்த அரநெறி என்ற தனி ஆலயத்தை அடைந்து தொண்டுகள் பலவற்றைச் செய்யலானார். இரவுப்பொழுது வரும்போது பெருமானது சன்னதியில் எண்ணற்ற நெய் தீபங்களை ஏற்ற எண்ணினார். மாலை வந்துவிட்டதால் தனது ஊருக்குச் சென்று நெய் கொண்டு வருவதற்குக் கால தாமதம் ஆகும் எனக் கருதி, அருகிலிருந்த மனை ஒன்றுக்குச் சென்று விளக்கெரிக்க நெய் தருமாறு கேட்டார். அம்மனையில் இருந்த சமணர்கள் வெளியில் வந்து “ கையில் அனல் ஏந்தி ஆடும் உமது கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய் இல்லை. விளக்கெரிப்பதானால் குளத்து நீரைக் கொண்டு எரிப்பீராக “ என்றார்கள்.
சமணர்களது ஏளனத்தால் மனம் நொந்த நமிநந்தி அடிகள் நேராக ஆரூர்ப் பெருமானது கோயிலை அடைந்து கண்ணீர் மல்க வீழ்ந்து வணங்கினார். அப்போது இறையருளால், “ நமிநந்தியே. அஞ்ச வேண்டாம். இக்குளத்து நீரைக் கொண்டு வந்து இடையறாது எரியுமாறு விளக்கேற்றுக “ என்ற அசரீரி மொழி ஆகாயத்திலிருந்து எழுந்தது. திருவருளை வியந்த நமிநந்தியடிகள், சிவநாமத்தை உச்சரித்த வண்ணம் திருக்குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு கரை ஏறி, திருக்கோயிலில் இருக்கும் ஆரூர் அரநெறிப் பெருமான் சன்னதியில் உலகமே வியக்கும் வண்ணம் திரு விளக்கு ஏற்றினார். அவர் ஏற்றிய தீபங்களும் சுடர்விட்டு மேலெழும்பிப் பிரகாசித்தன. விடிய விடிய அவ்விளக்குகள் எரிந்தன. பின்னர் அவ்விரவே புறப்பட்டுத் தன் மனையை அடைந்து நித்திய பூஜையைக் குறைவறச் செய்துவிட்டு உறங்கலானார். விடிந்தவுடன் தமது பூஜையை முடித்துக் கொண்டு திருவாரூர் சென்று ஆரூர் அரநெறியில் தொண்டாற்றி, மாலையில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு இரவுப் பொழுதில் ஏமப்பேரூறுக்குத் திரும்புவார். இவ்வாறு பலகாலம் அவரது பணி தொடர்ந்தது.
திருவாரூர்ப்பெருமானது பங்குனி உத்திர விழா வந்தபோது, நமிநந்தி அடிகள் பெருமானுடன் மணலி என்ற ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். அவ்வாறு எல்லாக்குலத்தோரும் உடன் சென்று வருவது வழக்கம். மணலிக்குச் சென்று திரும்பிய அடிகள் வீட்டின்உ ள்ளே செல்லாது புறத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அவரது மனைவியார், சிவபூஜை செய்து அக்கினி காரியம் செய்து உணவருந்தி விட்டுப் பள்ளி கொள்வீராக என்று தமது கணவனாரிடம் கூறினார். அதற்கு நமிநந்தியார், “ விழாவிற்கு எல்லாக் குலத்தோரும் வந்திருந்தபடியால் தீட்டு உண்டாயிற்று. ஆகவே நீராடித் தூய்மை செய்து கொண்ட பின்னரே மனையுள் புகுந்து சிவபூஜை செய்ய வேண்டும். அதற்காகக் குளிர்ந்த நீர் தயாரித்து வைப்பாயாக என்றருளினார்.
சற்றைக்கெல்லாம் திருவருளாலோ அல்லது களைப்பினாலோ இறைவனது திருவடிகளை நினைந்து கொண்டிருந்த அவருக்குத் துயில் வந்தது. அப்போது வந்த கனவில், ஆரூர்ப்பெருமான் அவரது பூஜைக்கு வருபவர் போலத் தோன்றி, “ திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோரும் நமது கணங்களே. இதனைக் காண்பாயாக “ என்று அருளினார். உள்ளம் பதைத்து, அஞ்சி எழுந்த நமிநந்தியார், கனவுபற்றி மனைவியிடம் கூறி விட்டு, நீராடாமல் நேராக மனைக்குள் சென்று சிவபூஜை செய்தார்.
விடியற்காலையில் திருவாரூர் சென்றதும் அங்கிருந்தோர் அனைவரும் சிவ சாரூப வடிவத்துடன் காட்சியளிக்கக் கண்டு தலை மீது கைகளைக் கூப்பியவாறு நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கித் தமது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினார். பின்னர் தனது ஊரினின்றும் நீங்கித் திருவாரூரிலேயே தங்கிப் பணிகள் பல செய்து வந்த நமிநந்தியடிகள் ஆரூர்ப்பெருமானது செம்பொற் சோதியில் கலந்து திருவடி நீழலில் என்றும் தங்கும் பெருவாழ்வு வந்து எய்தப்பெற்றார்.