சிவபாதசேகரன்
நாத்திகரையும் ஆத்திகர் ஆக்கிய திருவாசகம்

ஆன்மிகம் என்பது மத நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கையின் அளவு சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் காணப்படும். மற்றும் சிலருக்குத் துளிக்கூட இல்லாமலும் காணப்படும். ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளிடையேயும் இத்தகைய வேற்றுமைகள் காணப் படுவதைப் பார்க்கிறோம். வளர்க்கும் விதம் ஒன்றாகவே இருந்தாலும் எப்படி இவ்வாறு நிகழ்கிறது? சூழ்நிலைகளும் அவ்வப்போதுவரும் சோதனைகளும் துன்பங்களும் இதற்கு வழி வகுக்கின்றன. ஆனால் சோதிடர்களோ ஒருவனது ஜாதகத்திலே இவன் தெய்வ நம்பிக்கை உள்ளவனாக இருப்பானா இல்லையா என்று காண முடிகிறது என்பார்கள். முன் பிறவிப்பயன் என்பார்கள் மற்றொரு சாரார்.எது எப்படியாக இருந்தாலும் திடீரென்று ஒரு நாத்திகன் ஆத்திகன் ஆவதையும் ஆத்திகன் நாத்திகன் ஆர்வத்தையும் பார்க்கிறோம்.
பல்லாண்டுகளுக்கு முன் மிகவும் தெய்வநம்பிக்கை கொண்டிருந்த ஒரு மரத்தச்சர் தனது பத்து வயது மகள் பெரியம்மையால் தாக்கப்பட்டு உயிர் இழந்தவுடன் நாத்திகராக மாறியதைக் கண்டிருக்கிறேன். அந்தத் துயர சம்பவம் அவரது மனத்தை அவ்வாறு பாதித்து இருந்தது. நோய் வாய்ப்பட்டவர்களும் மருத்துவர் கைவிட்டு விட்டால் தெய்வமே காப்பாற்றவேண்டும் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஒருக்கால் அவர்களது நம்பிக்கைக்கு மாறாக நிகழ்ந்துவிட்டால் தெய்வத்தை இகழத் தொடங்கி விடுகிறார்கள்.
ஒரு நாத்திகவாதி ஏதோ ஒரு காரணத்தால் திடீர் என்று ஆன்மீகத்தைத்தேடி வருவதைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கும். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை நினைக்கும்போது வியப்பு பன்மடங்காக அதிகரிக்கிறது. அப்போது எனது நண்பரின் வேண்டுகோளின்படி தினமும் திருவாசகப் பாடல்களைச் சொல்லி யான் அறிந்த அளவில் அவற்றிற்கு விளக்கமும் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவரோ முழு நூலையும் கேட்க ஆவலாக இருந்தார்.அவ்வாறு ஒரு நாள் சொல்லிக் கொண்டு வரும்போது திடீர் என்று பின்னால் திரும்பிப் பார்த்தால் மற்றொரு நெருங்கிய நண்பர் நின்றுகொண்டு இருந்ததைப் பார்த்தேன். அவர் பழகுவதற்கு இனியவர். நாத்திகவாதியும் கூட. அவர் அங்கு வந்து சுமார் 20 நிமிடங்கள் ஆயிற்று என்கிறார். எனக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பதற்காக எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். நான் அவரது கொள்கைக்கு மாறாக இருந்தாலும் என் மீது நன்மதிப்பு கொண்டவராதலால் அவ்விதம் நடந்து கொண்டார். அவர் வந்து விட்டபடியால் திருவாசகப் பாராயணத்தை மறு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துப் புத்தகத்தை மூடி வைக்கத் தொடங்கினேன். ஆனால் அவரோ ஒரு நாற்காலியை என் அருகே இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து விட்டு என்னைத் தொடர்ந்து திருவாசகப் பாடல்களை படிக்கச் சொன்னார். இத்தனை நேரமும் அப்பாடல்கள் சிலவற்றைப் பின்னால் நின்றபடி கேட்டுக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். எனக்கோ நடப்பது கனவு போலத் தோன்றியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு பாடல்களை வாசித்து விளக்கம் சொல்லத் தொடங்கினேன். முழுவதும் கேட்ட அவர், தொடர்ந்து இரண்டு நாட்களும் கேட்க வந்து விட்டார்! மூன்றாவது நாள் வந்த அவர், தனக்கு ஒரு திருவாசகப் புத்தகம் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது வினாடிகள் ஆயிற்று. ஒப்புக் கொண்டபடி, மறுநாளே ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தேன். அன்றுமுதல் அவர் பரம ஆத்திகர் ஆகிவிட்டார். பாடல் பெற்ற தலங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் அவரும் கூடவே வருவார். இது திருவாசகம் செய்த அற்புதம் அல்லவா !
நண்பர் பெற்ற பேறு இறைவனை நோக்கித் திரும்பி, ஆர்வம் செழித்தது. நீங்கள் பெற்ற பேறு செவி வழிச் செய்தியானது சொந்த அனுபவமாகவும் மலர்ந்ததே. உங்கள் ஈடுபாட்டுக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த அருட்பரிசு.