சிவபாதசேகரன்

திருவாரூர்க் கோயிலைக் காண்போருக்கு மீண்டும் அதனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக ஏற்படும். அந்த ஊரில் பிறந்தவர்கள் முக்தி அடைகிறார்கள் என்று தல புராணம் கூறும். ” திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரரின் அமுத வாக்கு. தியாகராஜப் பெருமானின் சாயரக்ஷை பூஜையைக் காண்பதற்காகப் பலமுறை அங்கு சென்றிருந்தாலும் ஒரு முறை அங்கு நிகழ்ந்த அற்புதம் மனத்தை விட்டு நீங்குவதில்லை.
சாயரக்ஷை தரிசனம் செய்த நிறைந்த மனத்தோடு மேற்கு கோபுரம் வழியே வெளியே வந்து கொண்டு இருந்தேன். அங்கிருந்து பேருந்து நிலையம் சென்று கும்பகோணத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் வெளிப் பிராகார வலத்தை முடித்துக் கொண்டு மேற்கு கோபுர வாயிலை நெருங்கும் சமயத்தில் கால்களில் கடுமையான வலி ஏற்பட்டது.ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கூட யாரும் வராததால் அதே இடத்தில் நின்று கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கோயிலின் உட்பக்கத்தைத் திரும்பி நோக்கியபடி , தியாகேசா என்று முறையிட்டபடியே சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன். பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேற்கு கோபுர வாயிலைக் கடந்து கமலாலயக் கரையை அடி மேல் அடி வைத்தபடி மெதுவாக வந்தடைந்தேன். வலியோ நிற்பதாக இல்லை.
அந்த சமயம் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எனக்கு அருகில் வந்து இறங்கினார். கோயிலுக்கு உள்ளே அவர் செல்ல ஆரம்பித்தபோது நான் அவரிடம் என் நிலைமையைச் சொல்லிவிட்டு, நான் கும்பகோணம் செல்ல இருப்பதால் பேருந்து நிலையம் செல்லக் குறுக்குவழி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர், பேருந்து நிலையம் தூரத்தில் இருப்பதால் இந்த நிலையில் நடந்து செல்வது கடினம் என்று சொன்னார். நான் இருக்கும் இடத்தில் ஆட்டோ கிடைப்பதும் துர்லபம். அதற்கும் வெளி வீதி வரை நடக்க வேண்டும். பிறகு அவருக்கு இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். ” ஐயா, தங்களை வடக்கு வீதி வரை எனது ஸ்கூட்டரில் கொண்டு விடுகிறேன். அங்கேயே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகளில் தாங்கள் ஏறிக் கொள்ளலாம். உங்களை அங்கு இறக்கி விட்டுப் பிறகு கோயிலுக்குள் செல்கிறேன்” என்கிறார். என் கண்களில் நீர் கசிந்தது. பிறகு என்னை அங்கு கொண்டுபோய் இறக்கிவிட்டு உடனே கோயிலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் பேருந்தும் வந்தது. மிகுந்த சிரமப்பட்டுப் படிகளில் ஏறினேன். அதிர்ஷ்ட வசமாக உட்கார இருக்கையும் கிடைத்தது.
எனது அடுத்த கவலை, கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும் முன்பாக உள்ள மேம்பாலத்தில் இறங்கினால் வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கிடைக்க வேண்டுமே என்பது. என்னால் வீடு வரை நடந்து செல்ல நிச்சயமாக முடியாது என்று தோன்றியது. எப்படியோ கும்பகோணம் மேம்பாலத்தை அடைந்து ஒருவழியாகப் பேருந்தை விட்டு இறங்கினேன். சாலையைக் கடக்க வேண்டும். கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. நான் பயந்தபடியே ஆட்டோக்களும் அங்கு அந்த சமயம் வரவில்லை. மீண்டும் ஆரூரானைத் துணைக்கு அழைத்தேன். ” தியாகேசா, இதென்ன சோதனை” என்று கதறவே முடிந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
கைப்பேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. சாலை ஓரம் நின்றபடியே பேச முற்பட்டேன். பேசியவர் எனக்கு மிகவும் தெரிந்தவர். அப்போதுதான் சென்னையிலிருந்து வந்தாராம். தாராசுரத்தில் நண்பரைப் பார்த்துவிட்டு என்னையும் வீட்டுக்கு வந்து பார்ப்பதற்காக நண்பரின் பைக்கை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். வீடு பூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காகக் கைப்பேசியில் பேசியிருக்கிறார். நான் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னேன். அதற்கு அவர், ” நீங்கள் அங்கேயே இருங்கள். நான் ஐந்து நிமிடங்களில் அங்கு வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். அதேபோல ஐந்து நிமிடத்திற்குள் வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறுநாள் வைத்தியரிடம் போகலாம் என்கிறார். மறுநாள் காலை வலி இருந்தால் தானே வைத்திரிடம் போவதற்கு ! எனக்கோ வழக்கம் போல் நடக்க முடிந்தது. இவ்வளவும் கனவில் நடந்ததுபோல் இருந்தது.
GOD presents HIMSELF to those who Trust in HIM.