வேதமும் சைவமும் தழைக்கவும், பிற சமயங்களின் பிடியிலிருந்து சைவ நெறியைக் காக்கவும் சீர்காழிப் பதியில் அந்தணர் மரபில் கவுணிய(கௌண்டின்ய)கோத்திரத்தில் அவதாரம் செய்தருளியவ்ர் திருஞான சம்பந்தர்.
சைவ சிகாமணி என்று போற்றப்பெறும் காழிப்பிள்ளயாரைத் தவம் செய்து பெற்றோர் சிவபாத இருதயரும் பகவதி அம்மையும் ஆவார்கள். மூன்றாண்டு ஆகியபோது தனது தந்தையுடன் ஆலயத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பிரமதீர்த்தத்தில் தந்தை மூழ்கி ஜபம் செய்கையில், குழந்தைக்குப் பசி மேலிடத் தனது கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு தோணியப்பரின் சிகரத்தைப் பார்த்து அம்மே,அப்பா என்று அழுதருளினார். குழந்தையின் அழுகை தீர்த்தருள வேண்டி இறைவன்,உமா தேவியுடன் விடை (ரிஷபத்தின்) மேல் தோன்றியருளி, அக்குழந்தைக்குப் பால் அளித்து வருமாறு அம்பிகையைப் பணித்தான். தேவியும் அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்தருளி,பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலைக் கறந்தருளி சிவஞானத்து இன்னமுதத்தைக் குழைத்து அக்குழந்தைக்குத் தந்தருளினாள் .அக்கணமே, அம்மறைச் சிறுவனுக்கு எல்லையில்லாததும் ,உவமை இல்லாதததுமான கலை ஞானமும் சிவஞானமும் உண்டாயின. எனவே சிவஞானசம்பந்தர் ஆயினார். கரையேறிய தந்தையார் குழந்தையின் வாயில் பால் ஒழுகக் கண்டு, ” உனக்குப்பால் தந்தது யார்” என்று கோல் ஓச்சிக் கேட்டவுடன், தோணிச் சிகரத்தை நோக்கிக் கையால் சுட்டிக் காட்டித் ” தோடுடைய செவியன்” எனத் துவங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை அடையாளங்களுடன் தந்தைக்குக் காட்டியருளினார்.
தந்தையுடன் அருகிலுள்ள திருக்கோலக்கா என்ற தலத்தை அடைந்து,கையால் தாளமிட்டுப் பாடுகையில், இறைவரருளால் அவரது கைகளில் பஞ்சாட்சரம் பொறித்த பொற்றாளம் வந்து அடைந்தது. பின்னர் தந்தையின் தோளில் அமர்ந்தவாறு தனது தாயின் பிறந்த ஊராகிய திரு நனி பள்ளியைச் சென்று வணங்கிப் பாலையாய் இருந்த அந்நிலத்தை ” ஆணை நமது” எனப் பாடி நெய்தலாக்கினார். அதன் பின்னர் பல தலங்களைத் தரிசித்து விட்டு சீர்காழிப் பதிக்கு மீண்டும் வந்து அடைந்தார்.
அப்போது அவரை, யாழில் வல்லவரும் எருக்கத்தம்புலி யூரைச் சேர்ந்தவருமான திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் தன் மனைவியார் மதங்க சூளாமணியுடன் வந்து தரிசித்தார். அதுமுதல் சம்பந்தரோடு தலயாத்திரை மேற்கொண்டு அவரது பாடல்களை யாழில் வாசித்து வந்தார். பின்னர், பாணனாருடன் தில்லை முதலிய தலங்களைத் தரிசித்துவிட்டு, நெல்வாயில் அரத்துறையை அடைந்தார். பாதம் நோவ நடந்துவந்து, அருகிலுள்ள மாறன்பாடியில் தங்கியபோது, அரத்துறைப் பெருமானது அருளால் அவருக்கு முத்துச் சிவிகை குடை, சின்னம் ஆகியவை வந்தடைந்தன.அதுமுதல் சிவிகையில் ஏறி சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளலானார்.
சீகாழியை வந்தடைந்த ஞானசம்பந்தப்பிள்ளையாருக்கு வேத விதிப்படி உபநயனம் நடைபெற்றபோது அங்கிருந்த அந்தணரிடம், ” வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” எனப் பதிகம் பாடி உணர்த்தினார்.
தன்னைக் காண வந்த திருநாவுக்கரசருடன் அளவளாவிய பின்னர் இருவருமாகப் பல சிவத்தலங்களைத் தரிசித்தனர். அப்பர் பெருமான் தனித்து யாத்திரை மேற்கொண்ட பிறகு, சம்பந்தர் திருப்பாசிலாச்சிராமத்தை அடைந்து கொல்லிமழவனின் மகள் முயலகன் என்ற நோயால் துன்புறுவதைக் கண்டு இரங்கி, அத்தலத்து இறைவர் மீது பதிகம் பாடியவுடன் அப்பெண் நோய் நீங்கப்பெற்றாள் பிறகு, திருச்செங்குன்றூரை அடைந்தவுடன் உடன் வந்த அடியவர்களும் ஊர் மக்களும் குளிர் சுரத்தால் வருந்துவதைக் கண்டு, திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்நோய் அகலச் செய்தார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து விட்டுப் பட்டீச்சரத்தை அடைந்தபோது இளவேனிற் கால வெய்யில் வாட்டியது. அத்தல இறைவர் சம்பந்தப்பெருமானுக்கு முத்துப் பந்தர் தந்தருளினார்.
திருவாவடுதுறைக்குச் சென்றபோது சீகாழியிலிருந்து அவரது தந்தையார் வருகை தந்து,தாம் செய்ய இருந்த சிவ வேள்விக்குப் பொருள் வேண்டவே, “இடரினும் தளரினும் ” எனப் பதிகம் பாடி சம்பந்தர் வேண்டியதும், மாசிலாமணீசர் திருவருளால் ஒரு சிவபூத கணம் ஆயிரம் பொன்னைப் பலிபீடத்தின் மீது கொண்டு சேர்த்தது. அதனை வேள்வி செய்வதற்காகத் தந்தையிடம் கொடுத்து விட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டார். உடன் வரும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் வாழ்ந்துவந்த திருத் தருமபுரத்தை அடைந்தவுடன் பாணரின் யாழால்தான் சம்பந்தரின் பதிகங்களுக்குப் பெருமை எனும்படி உறவினர்கள் பேசியதைக் கேட்டுப் பொறாத பாணனார், யாழில் அடங்காப் பதிகம் ஒன்று பாடுமாறு விண்ணப்பிக்க, பிள்ளையாரும், ” மாதர் மடப்பிடியும்” எனத் துவங்கும் பதிகத்தை யாழில் அடங்காதவாறு பாடியருளினார். திருச்சாத்த மங்கையில் திருநீல நக்கராலும்,புகலூரில் முருகனாராலும், திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டராலும் உபசரிக்கப்பெற்றுத் திருமருகலை வந்தடைந்தார். தன்னை மணம் முடிக்க இருந்த வணிகன் பாம்பு கடித்து மாண்டதால் கதறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு இரங்கி, மருகல் பெருமானைப் பாடி அவ்வணிகனை உயிர்ப்பித்து இருவருக்கும் மண முடித்தருளினார்.
திருப்புகலூரில் திருநாவுக்கரசர் வாயிலாகத் திருவாரூர் ஆதிரை நாள் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்து ஆரூர்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார். திருக்கடவூரில் குங்கிலியக் கலயனாரை சந்தித்து அளவளாவிய பின்னர் திருவீழிமிழலையை அப்பர் பெருமானுடன் சென்றடைந்தார். அப்போது அங்கு பஞ்சம் நிலவிப் பலரும் துயரமுறுதல் கண்டு இறைவரிடம் வேண்ட, பெருமான் கைத்தொண்டு செய்ததால் அப்பருக்கு நல்ல காசினையும், தம் மகனார் ஆனதால் வாசியுள்ள காசினையும் அளித்தருளினான். சம்பந்தப்பெருமான் வாசி தீரக் காசு வேண்டி இறைவர் மீது பதிகம் பாடியாவுடன் பெருமான் அருளால் வாசியில்லாக் காசு பெற்றார் . அதனைக் கொண்டு இருவரும் பஞ்சம் தீரும் வரை அனைவருக்கும் உணவிட்டனர். வீழி விமானத்தில் காழிக் காட்சியும் காணப் பெற்றார் ஞானசம்பந்தர்.
இருவருமாகத் திருமறைக்காட்டைச் சென்றடைந்து வேதங்கள் திருக்காப்பிட்ட கதவினைப் பதிகங்கள் பாடி மீண்டும் திறக்கவும் மூடவும் செய்தனர்.
அப்போது பாண்டிய நாட்டிலிருந்து மங்கர்க்கரசியாரது அழைப்பு வரவே, மதுரைக்குச் செல்லப் புறப்பட்ட சம்பந்தரை, ” இன்று நாளும் கோளும் தீயனவாக உளதே ” என்று அப்பர் தடுக்க, சம்பந்தப்பெருமான், ” நாளும் கோளும் அடியார்க்கு நல்லனவே செய்வன எனுமாறு ” வேயுறு தோளி பங்கன்” எனத் துவங்கும் திருப்பதிகம் பாடியருளி,மதுரை மாநகருக்குப் புறப்பட்டார்.
மதுரையில் பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாகிய குலச்சிறையாரும் அவரை வரவேற்றனர்.அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் தீ வைத்ததும், சம்பந்தர் பதிகம் பாடவே, அது வெப்புநோயாகப் பாண்டிய மன்னனைப் பற்றியது. சமணர்களால் பாண்டியனைக் குணப்படுத்த முடியாமல் போகவே, சம்பந்தர் அங்கு சென்று, மந்திரம் ஆவது நீறு எனப் பதிகம் பாடி வெப்புநோய் தீரச் செய்தருளினார். அதுகண்டு பொறாத சமணர்கள் அவரை அனல் வாதம்,புனல் வாதம் செய்ய அழைத்தனர். தாங்கள் ஒருக்கால் தோற்றால் கழுவேறுவதாகவும் மன்னனிடம் கூறினர். இவற்றிலும் சம்பந்தர் வென்றதால், தமது சபதப்படிசமணர்கள் கழுவேறினர். பாண்டியன் மீண்டும் சைவனானான். மன்னனும்,அரசியாரும் உடன் வர, சம்பந்தப்பெருமான் ஆலவாய் அண்ணலை வழிபட்டு அந்நாட்டிலிருந்த ஏனைய சிவப்பதிகளையும் தரிசித்துப் பதிகங்களால் பரமனைப் பரவினார்.
பின்னர் சோழ நாட்டை நோக்கிப் பயணிக்கையில், புத்த நந்தி ஒருவன் இகழவே,அதைக் கண்டு மனம் பதைத்தவராக, சம்பந்தரின் பஞ்சாக்ஷரப்பதிகப் பாடலொன்றை உடன் வரும் அடியார் பாடியவுடன் அப்புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது.
பல தலங்களையும் தரிசித்துவிட்டு அப்பர் எழுந்தருளியிருந்த திருப்பூந்துருத்திக்கு அண்மையில் செல்லும்போது, அப்பர் பெருமான் அவரது சிவிகையைத் தாமும் சுமந்து வருவதை அறிந்து, சிவிகையிலிருந்து இறங்கி அப்பரை வணங்க, வாகீசரும் இவரை வணங்கி மகிழ்ந்தார்.
பின்னர் தொண்டை நாட்டுத் தலங்களைத் தரிசித்து வரும்போது திருவோத்தூரில் பதிகம் பாடி ஆண் பனையைப் பெண் பனையாக்கி அற்புதம் புரிந்தார்.காளத்தியை வணங்கி விட்டு அங்கிருந்தபடியே வடநாட்டுத் தலங்களைப்பாடினார்.
மயிலாப்பூருக்கு எழுந்தருளி, கபாலீசப்பெருமானைப் பதிகத்தால் பரவி,அரவம் கடித்து மாண்டிருந்த சிவநேசரின் மகளான பூம்பாவையை உயிர்ப்பித்தருளினார்.
பல தலங்களை வணங்கி விட்டுச் சீகாழியை அடைந்ததும், அவரை மணம் செய்து கொள்ளுமாறு பெற்றோரும் ஏனையோரும் வேண்டி, நல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பி என்பவரது மகளை மணம் பேசினர்.அவர்களது வற்புறுத்தலுக்கு இணங்கிய சம்பந்தப்பெருமானுக்குத் திருமணம் அத்திருப்பதியில் நடைபெற்றது. தான் மணந்த பெண்ணுடன் சம்பந்தர் அக்கினியை வலம் வந்து, காதலாகிக் கசிந்து எனத் துவங்கும் பஞ்சாட்சரப் பதிகத்தைப் பாடியருளியவுடன், ஒரு சோதி தோன்றியது, திருமணத்திற்கு வந்திருந்த அடியார்கள் அனைவரும் அதில் புகுந்ததும், தாமும் தனது மனைவியாருடன் வைகாசி மூல நன்னாளன்று அந்த சிவசோதியில் கலந்தருளினார்.
பதினாறு ஆண்டிகளே வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சைவ சமய பிரதம ஆசாரியராக விளங்கும் திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
” திருஞானசம்பந்தர் பாத மலர்கள் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.” — பெரிய புராணம்.