சைவ சமயாசார்யர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற தலத்தில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகவாகத் தோன்றியருளியவர். இவரது தமக்கையான திலகவதியாருக்கு கலிப்பகையார் என்பவரை மணம் பேசிய நிலையில், போர்முனையில் அக்கலிப்பகையார் வீர சுவர்க்கம் அடைந்தார்., தமது பெற்றோர்களும் இறையடி சேர்ந்ததால் மனம் நொந்த திலகவதியார் தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அதைப் பொறாத மருள்நீக்கியார் தாமும் அவ்வாறே செய்து விடுவதாகக் கூறவே, தம்பியார் வாழ வேண்டும் என்ற தயையினால் அம்முடிவை மாற்றிக் கொண்ட தமக்கையார், திருவதிகை வீரட்டானத்து இறைவர்க்குத் தொண்டு செய்து வந்தார்.
சில ஆண்டுகளில் கல்வி கேள்விகளைக் கற்ற மருள்நீக்கியார் சமண சமயத்தைச் சேர்ந்து அச்சமய நூல்களைக் கற்று , தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார். இதனைக் கேள்வியுற்ற திலகவதியார், திருவதிகை இறைவனிடம் தனது தம்பி மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்ப அருளுமாறு வேண்டி வந்தார். இறைவனும் மருள்நீக்கியாரின் வயிற்றில் சூலை நோய் பற்றச் செய்யவே, அதனால் துன்புற்றவராக வேறேதும் செய்ய இயலாமல் மீண்டும் தமக்கையாரிடமே வந்து குறை இரந்தார்.
தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார்,அவருக்குத் திருநீறளித்து வீரட்டேசப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். அதன்படி ஆலயத்தினுள் சென்று, பெருமானிடம் முறையிட்டவுடன், இறையருளால் செந்தமிழ் மாலைகள் பாடும் திறன் பெற்றுக் ” கூற்றாயினவாறு ” எனத் தொடங்கித் தேவாரப் பாமாலை சூட்டலானார். அதனைத் திருச்செவியில் கேட்டு மகிழ்ந்த இறைவர் இன்னருளால் வானத்திடையே, ” நாவுக்கரசு என்னும் நற்பெயர் வழங்குவதாக” என்ற அசரீரி ஒலித்தது.
சமண சமயத்தை நீங்கி மீண்டும் தருமசேனர் சைவராக மாறி நாவரசர் என வழங்கப்படுவதைக் கேட்டு வெதும்பிய சமணர்கள் அவருக்குத் தீங்கு விளைவிக்கக் கருதினர்.பல்லவ மன்னனும் சமண சமயத்தவனாக மாற்றப்பட்டிருந்ததால் அதனைப் பயன்படுத்தி,நாவுக்கரசரை நீற்றறையில் இட்டும்,நஞ்சை அருந்தச் செய்தும், யானையின் காலால் இடறச் செய்தும் துன்பப்படுத்தினர். இவற்றால் அவருக்கு எந்தத்தீங்கும் விளையாததால் கல்லோடு அவரைக் கட்டிக் கடலில் விட்டனர். அப்போது நாவுக்கரசர் பஞ்சாட்சரத் திருப்பதிகம் பாடவே, கல் மிதந்து அதுவே தெப்பமாகி அவரைக் கரை சேர்த்தது. தனது தவறை உணர்ந்த மன்னன் மீண்டும் சைவனானான்.
சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று உழவாரப் பணி செய்து திருப்பதிகங்களால் இறைவனைப் போற்றி வழிபட்டு வந்தார் நாவுக்கரசர். பெண்ணாகடத்தில் சூலக் குறியும் ரிஷபக் குறியும் பெற்று, தில்லையைச் சென்று தரிசித்து மகிழ்ந்தார் வாகீசர். பின்பு சீகாழிக்குச் சென்று ஞானசம்பந்தப்பெருமானை நேரில் கண்டு மகிழ்ந்தார். சம்பந்தரும் அவரை ” அப்பர்” என்று அழைத்து வணங்கி மகிழ்ந்தார்.
திருச்சத்திமுற்றத்துப் பெருமானிடம் தமக்குத் திருவடி தீக்ஷை செய்யமாறு வேண்டிய அப்பர் பெருமானுக்கு இறைவரருளால் திருநல்லூர் என்ற தலத்தில் அப்பேறு கிட்டியது. பின்னர் திங்களூரில் அரவம் கடித்து மாண்ட அப்பூதி அடிகளின் மகனைப் பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்தார்.
திருவாரூரில் தியாகேசப் பெருமானைப் பதிகங்களால் துதித்து விட்டுத் திருப்புகலூரை அடைந்து, முருக நாயனாரது மடத்தில் ஞான சம்பந்தரோடு தங்கியிருந்தார்.பிறகு இருவரும் திருவீழிமிழலையை அடைந்து அங்கு நிலவிவந்த பஞ்சம் தீருமாறு பெருமானைப் பாடினர். அதன்பிறகு இருவருமாய்த் திருமறைக்காட்டிற்குச் சென்று வேதங்களால் பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திறக்கவும் மூடவும் பாடியருளினர். அங்கிருந்து இருவரும் திருவாய்மூரை அடையும் போது இறைவர் எதிர் காட்சி கொடுத்தருள, அக்காட்சியை சம்பந்தர் காட்டத் தாமும் தரிசித்துப் பரவசமடைந்தார் வாகீசர்.
பாண்டிமாதேவியின் அழைப்புக்கிணங்கி சம்பந்தப்பெருமான் மதுரையை நோக்கிப் புறப்பட்டவுடன், அப்பர் பெருமான் சோழ நாட்டுத் தலங்களைத் தொடர்ந்து தரிசித்துப் பணி செய்து வந்தார். சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த பழையாறை வடதளி ஆலயத்தை மீண்டும் திறந்து தரிசிக்காமல் செல்வதில்லை என்று உண்ணா நோன்பு மேற்கொள்ளவே, இறைவரருளால் அதனை அறிந்த அரசன் அக்கோயிலை மீண்டும் திறப்பித்தான். இவ்வாறு பல தலங்களை வணங்கியவராகத் திருப்பைஞஞீலியை அடைந்த அப்பர் பெருமானுக்குப் பசி மேலிட்டபோது , இறைவன் அவருக்குக் கட்டமுது தந்தருளினான்.
தல யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்ட அப்பர் பெருமான், காளத்தி மலையைத் தரிசித்தவராய்க் கயிலை யாத்திரை மேற்கொண்டார். உடல் தளர்ந்த நிலையிலும் உறுதி தளராத அவரைப் பெருமான் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கப் பணித்துத் திருவையாற்றில் திருக் குளத்தில் எழச் செய்து அங்கேயே கயிலைக் காட்சியைக் காட்டினான்.
பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்த வாகீசப்பெருமான், திரு மடம் ஒன்று அமைத்துக் கொண்டு இறைவனைப் பாமாலைகளால் துதித்து வரலானார். அப்போது அங்கு ஞான சம்பந்தர் எழுந்தருளி வருவது கண்டு மிக மகிழ்ந்தவராக அவரது சிவிகையைத் தாங்கினார். இருவரும் தமது தல யாத்திரைகளைப் பற்றி அளவளாவி மகிழ்ந்த பின்னர், பாண்டிய நாட்டுத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார் அப்பர்.
பின்னர் தமது 81 வது வயதில் திருப்புகலூரை அடைந்த வாகீசர் திருத்தொண்டு செய்து வரும் போது, உழவாரம் செய்யுமிடத்தில் பொன்னும் மணியும் தோன்றச் செய்தான் இறைவன்.ஆனால் அப்பரோ தமக்கு அவற்றால் என்ன பயன் என்று எண்ணி அவற்றை நீரில் எறிந்தார். தேவலோக மகளிர் தோன்றி அவரது உறுதியைச் சோதிக்கும் போது, தாம் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆட்பட்டதால் அவர்களால் மயக்குறேன் என்று திடமாக இருந்தார், ” புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்” என்று விண்ணப்பித்த அப்பர் பெருமானுக்கு இறைவன் ஓர் சித்திரை மாதத்து சதய நன்னாளில் சிவானந்த ஞான வடிவளித்துத் தம் சேவடிக்கீழ் ஆட்கொண்டருளினான்.
திருநாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூறாண்டின் இடைப் பகுதி என்பர் ஆராய்ச்சியாளர்.