அரிசில்கரை புத்தூர் என்ற சோழ நாட்டுத்தலம் அரிசிலாற்றின் கரையில் இருப்பது. மூவர் தேவாரமும் பெற்றது. இத்தலத்துப் பெருமானை நித்தலும் ஆராதித்து வந்தவர் புகழ்த்துணையார். இவர் ஆதி சைவ மரபினர். அகத்து அடிமை செய்வதில் நிகரற்றவராக விளங்கிய அவரது பெருமையை சுந்தரர், “ அகத்து அடிமை செய்யும் அந்தணன் “ என்று சிறப்பிக்கின்றார்.இவ்வாறு சிவபெருமானைத் தவத்தோடு தத்துவத்தின் வழி நின்று வழிபட்டு வரும்போது கடுமையான பஞ்சம் அப்பகுதியில் ஏற்பட்டது. அந்நிலையிலும், அவர் “ எங்கோமான் தனை விடுவேன் அல்லேன்” என்று இராப்பகலாக அரிசிலாற்று நீரால் அபிஷேகம் செய்தும், பல்வேறு மலர்களால் அருச்சனை செய்தும் தனது பணியில் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் பசியினால் மிகவும் நலிவடைந்த நிலையிலும் ,புகழ்த்துணை நாயனார் , பூஜை செய்வதற்காக இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்யமேற்பட்ட போது , தளர்வு ஏற்பட்டு ,அயர்ச்சியினால் அபிஷேக நீர் இருந்த குடம் கையிலிருந்து நழுவி, இறைவரது திருமுடியின் மீது வீழ்ந்தது. அப்போது சிவனருளால் அவருக்குத் துயில் வந்தது.
புகழ்த்துணையாரின் கனவில் இறைவன் எழுந்தருளி, “ பஞ்சம் தீரும் வரையில் நாமே உனக்கு நித்தமும் ஒரு காசு தந்து அருளுவோம் “ என்று அருள் புரிந்தான். அதன்படி நித்தலும் பீடத்தின் கீழ் ஒரு காசு அருள , இறையருளைக் கண்டு வியந்த நாயனாரும் பஞ்சம் தீரும் வரையில் காசினைப் பெற்றுப் பசிப்பிணி நீங்கியவராகத் தமது தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார். இவ்வாறு செஞ்சடைப் பெருமானுக்கு மெய்யடிமைத் தொழில் செய்து வந்ததன் பயனாகப் புனிதர் பொன்னடி நீழலைச் சேர்ந்தார். இவர் முக்திப்பேறு அடைந்தது ஆவணி மாத ஆயில்ய நன்னாளாகும்.
இத்தலம் , கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தற்காலத்தில் அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது.