திருமூலதேவ நாயனார் சரித்திரம்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருமூலரை , ” நம்பிரான் திருமூலன் ” என்று பரவுகிறார் சுந்தர மூர்த்தி நாயனார். திருக்கயிலாயத்தில் நந்திதேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் திருமூலர். அஷ்ட சித்திகளையும் ஒருங்கே பெற்ற இந்த சித்த புருஷர், அகத்திய முனிவரைத் தரிசிக்க வேண்டித் தென் திசையில் உள்ள பொதிகை மலையை நோக்கிப் பயணிக்கையில், வழியில் திருக்கேதாரம், நேபாளத்திலுள்ள பசுபதி நாதம், காசி, திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலம், காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை வீரட்டானம், சிதம்பரம் ஆகிய தலங்களைத் தரிசித்தவராகத் திருவாவடுதுறைக்கு அண்மையில் உள்ள சாத்தனூர் என்ற ஊரை அடைந்தபோது , பசுக்களை மேய்க்கும் மூலன் என்ற இடையன் ஒருவன் மாண்டு கிடப்பதையும் அவனைச் சுற்றி நின்று, அவன் மேய்த்த பசுக்கள் கண்ணீர் சிந்திக் கதறுவதையும் கண்டார்.
பசுக்களின் துயரம் தீர்க்க வேண்டித் தனது உடலை ஓரிடத்தில் வைத்து விட்டு, மூலனது உடலில் புகுந்தார். உயிர் பெற்று எழுந்த மூலனைக் கண்டு பசுக்கள் துயரம் நீங்கி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன. மூலனது மனைவியார் அவரைத் தனது கணவன் என்று எண்ணி , வீட்டுக்கு வரும்படி கூப்பிட, அதனை மறுத்த திருமூலர் அவளை நீங்கினார். தனது பழைய உடலைக் காணாது போகவே, மூலனது உடலில் இருந்தபடியே திருவாவடுதுறையை அடைந்து அரச மர நீழலில் அமர்ந்து யோகத்திலிருந்து, ஆகம சாரமாகத் தமிழில் ஆண்டுக்கு ஒரு பாடலாக,மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தார். பன்னிரு திருமுறைகளுள், இந்நூல் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ளது. இந்நூலின் அமைப்பினைச் சுருங்கக் காண்போமாக:
பாயிரம்: கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு, திருமூலர் வரலாறு ஆகியன.
முதல் தந்திரம்: உபதேசம்,யாக்கை நிலையாமை,செல்வம் நிலையாமை, கொல்லாமை, கல்வி, கள்ளுண்ணாமை ஆகியன.
இரண்டாம் தந்திரம்: அட்ட வீரட்டம்,இலிங்க புராணம், பஞ்ச கிருத்தியம் கர்ப்பக் கிரியை, சிவ நிந்தை, குருநிந்தை ஆகியன.
மூன்றாம் தந்திரம்: அட்டாங்க யோகம்,அட்ட மாசித்தி ஆகியன.
நான்காம் தந்திரம்: திரு அம்பலச் சக்கரம்,நவகுண்டம்,வயிரவி மந்திரம் ஆகியன.
ஐந்தாம் தந்திரம்: சரியை,கிரியை,யோகம்,ஞானம்,சத்தினி பாதம் ஆகியன.
ஆறாம் தந்திரம்: குரு தரிசனம் , திருநீறு, துறவு, தவ வேடம், ஞான வேடம் ஆகியன.
ஏழாம் தந்திரம்: ஆறாதாரம், சிவ பூஜை, குரு பூஜை, சமாதிக் கிரியை, பசு இலக்கணம் ஆகியன.
எட்டாம் தந்திரம்: அவத்தைகள், வாய்மை, அவா அறுத்தல், பத்தி, முத்தி ஆகியன.
ஒன்பதாம் தந்திரம்: பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷனை, தோத்திரம் ஆகியன.
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவரன்றே.
— திருமந்திரம்
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத் தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டு எ(ன்)னுச்சி
அடிமன்ன வைத்த பிரான் மூலனாகின்ற அங்கணனே.
— திருத்தொண்டர் திருவந்தாதி