சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம்
திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடைய பிரதிபிம்பமாகத் தோன்றி ,இறைவனிடம் அணுக்கத் தொண்டராக இருந்த சுந்தரர், ஒருசமயம் யாவரும் நெருங்கவும் முடியாத ஆலகால நஞ்சை இறைவனின் ஆணைப்படிக் கொண்டு வந்ததால் ஆலால சுந்தரர் எனப்பட்டார். ஒருநாள் நந்தவனத்தில் மலர் கொய்யும்போது,,உமாதேவியின் சேடியர்களான கமலினியும் அனிந்திதையும் அங்கு வந்தனர். இறைவனது திருவிளையாட்டினால் அவர்களிடையே அன்பு மலர்ந்தது. இதனைக் காரணமாகக் கொண்டு, அம்மூவரையும் நில உலகில் பிறக்குமாறு கட்டளை இட்டருளினான் பெருமான். இவ்விருவரையும் மணம் புரிந்து வருமாறு சுந்தரருக்குப் பணித்தான் பரமன்.
ஆலால சுந்தரரும் திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகனாக அவதரித்தார். அவரை நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் வளர்த்து வந்தார். மணப்பருவம் வந்தபோது புத்தூர் சடங்கவி என்பவரது பெண்ணை மணம் செய்ய நிச்சயித்தனர். திருமணச் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வயதான அந்தண வடிவில் சிவபெருமான் அங்கு எழுந்தருளி, சுந்தரன் எனக்கு அடிமை. என்று கூறி அம்மணத்தைத் தடுத்து ஆண்டார். முன்னோர்கள் எழுதித்தந்த ஓலையைக் காட்டியவுடன் சபையோர்கள் இனி எதுவும் செய்ய இயலாது. நீ இந்த வெண்ணெய்நல்லூர் அந்தணனுக்கு அடிமை என்றனர். ஓலை காட்டி ஆண்ட வள்ளலும் சுந்தரரைத் திருவெண்ணெய் நல்லூர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று மறைந்தருளினார். அர்ச்சனை நமக்குப் பாட்டே ஆவதால் தமிழால் நம்மைப் பாடுக என்று கூறிப் , “பித்தா” என்று அடி எடுத்துக் கொடுத்தான் அருட்துறை அண்ணல். சபையில் வன்மை பேசியதால் “ வன்தொண்டன் ” என்ற நாமத்தையும் தந்தருளினான்.சுந்தரரும் ஆண்ட வள்ளலைப் “ பித்தா பிறை சூடி” எனப் பாடத் தொடங்கினார்.
பல தலங்களிலும் இறைவனைப் பாடும் தொண்டை மேற்கொண்ட சுந்தரர்,திருவதிகையில் இறைவனது பாத தீக்ஷை பெற்றார். தில்லையைத் தரிசித்தபோது, சிவபிரான் அசரீரியாகத் திருவாரூருக்கு வா என்று அருளினான்.ஆரூர்ப் பெருமான் இவரைத் தோழனாக ஏற்றமையால், “தம்பிரான் தோழர்” என்ற நாமம் ஏற்பட்டது. அங்கு பணி செய்து வந்தவரும் கமலினியின் அவதாரமுமான பரவையைத் தியாகேசன் அருளால் மணந்தார். ஆரூர்க் கோயிலில் தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த அடியார்களை முதலில் வழிபடாமல் நேராக இறைவனது சன்னதிக்கு சுந்தரர் சென்றதைக் கண்டு விறன்மிண்ட நாயனார் வருந்தவே, இறைவன் சுந்தரருக்குத் திருத் தொண்டத் தொகை பாட அடி எடுத்துக் கொடுத்தான்.
சிவதருமத்திற்காக நெல் வேண்டி திருக் கோளிலி இறைவரைப் பாடியவுடன் குண்டையூரிலிருந்து நெல் மலை ஆட்களுடன் ஆரூருக்கு வந்து சேர்ந்தது. திருநாட்டியத்தாங்குடியில் கோட்புலியாரின் மகள்களைத் தன மக்களாகவே எண்ணிப் பாடலாயினார். திருப்புகலூரில் செங்கல்லில் தலை வைத்துப் படுத்துக் கண் விழித்தபின் அது பொன்னாக மாறி இருக்கக் கண்டு, திருவருளை வியந்து பதிகம் பாடினார். திருமுதுகுன்றில் பாடிப் பெற்ற பரிசான பன்னீராயிரம் பொன்னையும் மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் திருக்குளத்தில் பதிகம் பாடி மீண்டும் பெற்றார். திருக்குருகாவூரிலும் திருக்கச்சூரிலும் இறைவனே நேரில் எழுந்தருளி கட்டமுது தந்து இவரது பசி தீர்த்தார்.
திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்கு எழுந்தருளியபோது, அங்கு வந்த அனிந்திதையின் அவதாரமான சங்கிலியாரைக் கண்டார். இருவருக்கும் சிவனருளால் திருமணம் நடந்தது. ஒற்றியூரை நீங்கேன் என மகிழடியில் சபதம் செய்திருந்தும், ஆரூர்ப் பெருமானது வசந்த உற்சவம் வருவது கண்டு ஒற்றியூரை நீங்கும் போது கண் பார்வையை இழந்தார். வெண்பாக்கத்தில் இறைவன் கோலைக் கொடுத்து அருளினார். பின்னர் காஞ்சியில் இடக்கண்ணும் திருவாரூரில் வலக்கண்ணும் பெற்றார். பரவையாரின் பிணக்கு நீங்கப் பரமனே தூது சென்றார். இதற்கு வருந்திய ஏயர்கோன் கலிக்காம நாயனாரைத் திருப்புன்கூரில் சுந்தரருக்கு நண்பராக்கியது திருவருள்.
சேரஅரசரான சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரின் ஆருயிர் நண்பராயினார். திருவையாற்றில் பதிகம் பாடியவுடன் காவிரி ஆறு விலகி வழி விட்டது.அவினாசியில் முதலை உண்ட அந்தணச் சிறுவனை அவிநாசியப்பர் அருளால் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் ஆரூரர்.
திருவஞ்சைக்களத்தில் சேரர் அரண்மனையில் தங்கியிருந்த காலத்தில் தம்மைக் கயிலைக்கு வரப் பணித்தருளுமாறு அஞ்சைக்களத்து அப்பரிடம் விண்ணப்பிக்க, இறையருளால் அங்கு வந்த வெள்ளை யானையின் மேல் ஏறிப் பதிகம் பாடியவாறே சுந்தரர் கயிலைக்குச் சென்றடைந்தார். பரவையும் சங்கிலியும் முன்போலவே அம்பிகையின் சேடியர்கள் ஆயினர். சேரமானும் தமது குதிரையில் ஏறி சுந்தரருடன் கயிலை அடைந்து பெருமான் முன்னிலையில் தான் இயற்றிய திருக்கயிலாய ஞான உலாவை அரங்கேற்றினார். 8-ம் நூற்றாண்டில் பதினெட்டே ஆண்டுகள் வாழ்ந்தருளிய சுந்தரர் திருக்கயிலையை ஆடி மாதம் சுவாதி நன்னாளன்று அடைந்தார். “ வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி”