கயிலாய நாதனாகிய சிவபெருமானைப் பல மார்க்கங்களின் மூலம் வழிபட்டு நற்கதி பெற்ற மகான்கள் பலருள் நாதோபாசனை மூலம் ஆராதனை செய்து அருள்பெற்ற பக்தர்களுள் மகா வைத்யநாத சிவன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

நன்றி : வலைத் தளம்
தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் ஸ்ரீ துரைசுவாமி ஐயருக்கும் ஸ்ரீமதி அருந்ததி அம்மையாருக்கும் மகவாக 26.5.1844 அன்று தோன்றியவர் இந்த மகான். ஐவரும் இவருடன் தோன்றிய ஸ்ரீ ராமஸ்வாமி என்பவரும் இளம் வயது முதலே கர்நாடக இசையில் மிக்க ஆர்வம் கொண்டிருந்த படியால். தக்க குருமார்களிடம்சென்று சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார்கள். இதே ஊரில் ஸ்ரீ மங்கள நாயகி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயிலுமிருந்ததால் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார் வைத்யநாத சிவன்.
ஏழு வயதில் அவருக்கு உபநயனம் நடை பெற்றது. அதற்குப் பல சங்கீத மேதைகள் வருகை தந்தனர். அவர் சங்கீதத்தில் நிபுணராகத் திகழ்த்ததைக் கண்டு வியக்காத வித்வான்கள் இல்லை எனலாம். பல சமஸ்தான மன்னர்களும் ஆதீன கர்த்தர்களும் இவரைக் கௌரவித்தனர்.அவரது பன்னிரண்டாவது வயதில் மகான் என்ற பட்டம் வழங்கப்பெற்றது. பதினாறாவது வயதில் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளிடம் மந்திரோபதேசம்பெற்றார். தந்தையிடம் பஞ்சாட்சர மந்திர உபதேசம் பெற்றார்.
திருவையாற்றுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள பிரணதார்த்தி ஹரனாகிய பஞ்ச நதீசுவரர் மீது 72 மேளகர்த்தா ராகங்களைக் கொண்ட ராக மாலிகைக் க்ருதி ஒன்றை இயற்றினார். தமையனாருடன் இணைந்து பெரிய புராணக் கீர்த்தனைகளை இயற்றினார் .
வையச்சேரி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் நடராஜ மூர்த்தி விக்ரகம் ஒன்றை இவர் மூலம் அளித்தார். கோயில் குளத்தில் சிவகாம சுந்தரி விக்ரகம் கிடைத்தது. இரண்டையும் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். எளிய வாழ்க்கையை மேற்கொண்ட இவர் நியமத்துடன் விபூதி- ருத்ராக்ஷம் தரித்தவராய் சிவபூஜையைத் தினமும் செய்து வந்தார். இவரது இசைக் கச்சேரிகளின் நிறைவில் தேவாரத் திருவாசகப் பாடல்கள் இடம் பெறும் .
இவரது 49 வது வயதில் உடல் நலம் குன்றியது. 27.01.1893 அன்று திருவையாற்றில் தங்கியிருந்த போது சிகிச்சை பலன் இன்றிப் போனது. தனது கைகளைக் கூப்பிக் கொண்டு ” சிவ சிவ ” என்று உச்சரித்தவாறு சிவனது பாத கமலங்களைச் சென்றடைந்தார்.