சிவபாத சேகரன்

Photo Couurtesy : From WEB
மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அனுபவங்கள். அவை கற்றுத் தரும் பாடங்கள் நம் நெஞ்சை விட்டு நீங்காதவைகளாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் சில கசப்பான அனுபவங்களாகவும் இருக்கலாம். மனத்தைக் காயப் படுத்தி இருக்கலாம். அதனால் அச் சம்பவத்தை மறந்துவிடவே முயற்சி செய்கிறோம். ஆனால் அம்முயற்சி பல தருணங்களில் பலனற்றுப் போய் விடுகிறது. மனத்தில் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்தி விடுகிறது. எனவேதான் அவை தீயினால் ஏற்பட்ட புண்ணைக் காட்டிலும் ஆறாத தன்மை உடையவை என்று வள்ளுவர் கூறினார். இதற்கு முற்றிலும் மாறாக இனிய அனுபவங்கள் தரும் இன்பம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நின்று இன்பத்தைத் தருபவை. இவ்வனுபவங்களில் ஆன்மீகத்தின் பங்கு சொல்லில் அடங்காதது.
ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும்போது மெய் சிலிர்க்கும் அனுபவங்கள் பலருக்கும் ஏற்படுவது உண்டு. இவ்வாறு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பலவற்றுள் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்ற போது ஏற்பட்ட இனிய அனுபவம் மறக்க முடியாதது. மீண்டும் மீண்டும் இன்பத்தை வாரி வழங்குவது. ” தன் அடைந்தார்க்கு இனியன் இடைமருதனே” என்பது தேவாரவாக்கு. அந்த இன்பம் பழச்சுவையையும்,கரும்புச் சாற்றின் சுவையையும், பெண்டிர், அரசர் ஆகியோரால் பெறக் கூடிய இன்பத்தையும் விட இனியது என்பதால் இடைமருதனை இனியன் என்கிறார் அப்பர் பெருமான்.
நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை சிதம்பரத்தில் நடை பெறுவது போலவே அனைத்துச் சிவாலயங்களிலும் மகாபிஷேகம் நடைபெறுகிறது. ஒருமுறை அந்த அபிஷேகத்தைத் தரிசிக்கத் திருவிடை மருதூர் செல்லும் வாய்ப்பு இறையருளால் அமைந்தது. காலை பத்து மணிக்கு மேல் துவங்கி அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை நடைபெறும்போது நண் பகல் ஆகிவிடும் என்று தெரிந்தது. ஒன்பது மணிக்கே ஆலயத்தை அடைந்து எல்லா சன்னதிகளையும் தரிசனம் செய்தபின்னர் நடராஜர் சன்னதியை அடைந்தேன். சில பெண்மணிகள் திருவாசக பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒருவேளை திருநெல்வேலிப் பக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அபிஷேகம் ஆரம்பிக்கும்வரை திருவாசகம் கேட்கலாம் என்று நானும் சன்னதியில் அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்தில் அபிஷேக சாமான்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.
அபிஷேகம் ஆரம்பிக்கும்போது சுமார் 11 மணி ஆகியிருக்கலாம். ருத்ர பாராயணத்தை செய்துவிட்டு திருவாசகப் பாடல்கள் சிலவற்றையும் ஓதும் பேறு கிட்டியது. எவ்வளவோ வேத பாராயணங்கள் நடைபெற்ற இந்த ஆலயத்தில் அபிஷேக காலத்தில் வேத பாராயணம் செய்ய யாருமே இல்லையே என்ற எண்ணம் மேலிட்டது. அங்கிருந்தபடியே திரும்பிப் பார்த்தால் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்கலாம். வேத நாயகனாகிய உன் சன்னதியில் இப்படி நேரலாமா என்ற ஏக்கத்துடன் சுவாமியைப் பார்த்தபடியே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். கண்ணில் நீர் பெருகியது. எனக்காக எதுவும் வேண்டவில்லை. உனக்காகத்தான் வேண்டிக் கொண்டேன் என்று மனத்தால் கேட்டபடி நின்றுகொண்டிருந்தேன்.அபிஷேகம் அநேகமாக நிறைவடையும் அத்தருணத்தில் அந்த அதிசயம் நடந்தது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு வேதியர் தனது மகளுடன் அங்கு ஓடோடி வந்தார். அபிஷேகம் நிறைவாவதற்குள் வந்து விட வேண்டும் என்ற அவரது நோக்கம் நன்றாகவே புலப்பட்டது. நேராக நடராஜர் சன்னதி வாயிலருகில் நின்று கொண்டு ருத்ரம் , சமகம் ஆகியவற்றை பாராயணம் செய்தார். அலங்காரம் நடைபெறும்போது திரை இடப்பெற்று இருந்ததால் அவரிடம் சென்று, தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், தான் திருவானைக்காவலில் இருந்து வருவதாகவும், மாலையில் சிதம்பரத்தில் நடைபெறவிருக்கும் நடராஜர் அபிஷேகத்தைக் காண வேண்டித் தன் மகளுடன் பஸ்ஸில் சிதம்பரத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகவும், திருவிடைமருதூர் அருகில் பஸ் வந்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு உள்ளுணர்வு தன்னை அங்கேயே இறங்கி கோயிலுக்கு உடனே செல்லும்படிகே கட்டளை இட்டதாகத் தோன்றியதால் அங்கேயே இறங்கி விட்டதாகவும் கூறினார். தீபாராதனைக்குப் பிறகு அர்ச்சகரிடம் சென்று விபூதி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார். நானும் விபூதியை அர்ச்சகரிடம் பெற்றுக் கொண்டபின் மீண்டும் ஒரு முறை அந்த வேதியரிடம் உரையாடவேண்டும் என்ற விருப்பத்துடன் அவர் நின்ற இடத்தை நோக்கினேன் ஆனால் அவரை அங்குக் காணவில்லை ! ஒருவேளை மகாலிங்க சுவாமியின்
உட்பிராகாரத்தில் இருக்கிறாரோ என்று தேடியும் அவரைக் காண இயலவில்லை. கோபுர வாசல் வரையிலும் அவரைக் காண முடியவில்லை. சில நிமிடங்களில் அவர் மாயமாக மறைந்தவுடன் திரும்பவும் மகாலிங்கப் பெருமானை நோக்கினேன். ஒருவேளை அவ்வேதியனாகி வந்தது நீயே தானோ, இந்த அற்பனின் மனக்கருத்தைப் பூர்த்தி செய்யத்தான் இப்படித் தோண்றினாயோ என்று சிந்தித்தேன். அங்கிருந்து அகல மனமே வரவில்லை. ” வேண்டுவார் வேண்டுவதே ஈவான் ” என்ற அப்பர் வாக்கை நினைவுபடுத்தத்தான் பெருமான் இவ்வாறு திருவிளையாடல் செய்தானோ என்று தோன்றியது.