பெரும்பாலான ஆலயங்கள் மிகப் பழமை வாய்ந்தவைகளாக இருந்தும் அவற்றின் புராணவரலாறுகள், விழாக்கள், கல்வெட்டுச் செய்திகள் ஆகிய தகவல்கள் முழுமையாக மக்களிடம் சென்று அடையவில்லை என்றே கூறலாம். அர்ச்சகர்களிடமிருந்தும் ஆலயத் தகவல்கள் முழுதும் அறியப் பட இயலவில்லை. தல வரலாறு புத்தகம் பெரிய கோயில்களில் மட்டுமே கிடைக்கக் கூடும். அதுவும் தமிழில் மட்டுமே அச்சிடப் படும். ஆலயத்தின் மீது அருளாளர்களும் புலவர்களும் இயற்றிய பாடல்கள் மற்றும் செய்யுள் வடிவில் உள்ள தல புராணங்களும் அச்சிடப் படாமலேயே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டு வருவதால் மூல நூல்கள் அழிவிலிருந்து காப்பாற்றப் படுகின்றன என்று கூறலாம். இம்முயற்சி முழுவதுமாக நிறைவேற்றப் பட வேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகக் கோயில்களைத் தரிசிக்க வருவோர் எண்ணிக்கை கூடி வரும் இந்நாளில் அவர்களுக்கு ஆலயச் சிறப்புக்களை ஆங்கிலத்திலாவது எடுத்துக் கூறுவோர் இல்லாவிடினும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்ட தல வரலாற்றுப் புத்தகங்களாவது கிடைக்க வழி செய்ய வேண்டும். குறைந்த பட்சமாக அத்தகவல்களை சுருக்கமாக அறியும்படி தகவல் பலகைகள் வைக்கப் பட வேண்டும். அண்மையில் உள்ள பிற தலங்கள் பற்றியும் அவற்றிற்குச் செல்லும் வழி பற்றியும் குறிப்பிட வேண்டும். வசதி படைத்த அன்பர்கள் இச்சிறு கையேடுகளைத் தங்கள் ஊரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் இரயில் நிலையங்களிலும் கிடைக்கும்படி செய்யலாம்.
வெளி மாநிலத்தோர் வருகை தரும் ஆலயங்களில் உள்ள சன்னதிகளில் மூர்த்திகளின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதி வைக்கலாம். வெளி நாட்டவர்கள் வருகை தரும் ஆலயங்களில் ஆங்கிலம் தெரிந்த அன்பர்கள் அவர்களிடம் தாமாகவே அணுகி , ஆலயச் சிறப்புக்களையும் மூர்த்திகள் பற்றிய புராண வரலாறுகளையும் எடுத்துக் கூறினால் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைவதை இன்றும் பார்க்க முடிகிறது.