ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்

ஞான சம்பந்தரின் ஞானப் பனுவல்கள்

சிவபாதசேகரன், சென்னை

 

ஞானம் என்பது கற்கும் சரக்கு அல்ல. ஞானமயமான இறைவனிடமிருந்தோ அல்லது ஞானாசிரியனிடமிருந்தோ பெறப்படுவது அது. ஆதி குருவான பரமேசுவரன் யாரிடத்தும் கலைஎதுவும் கற்காமலேயே, எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாக விளங்கி, ஆல மர நீழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானப்பொருளைச் சொல்லாமல் சொல்லி அருளியபடியால், “ கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை” என்கிறது அப்பர் தேவாரம். தாருகாவனத்தில் கஜாசுரனை யானை வடிவில் ஆபிசார ஹோமம் மூலம் ஏவிவிட்ட யானையை அடக்கிக் க்ருத்திவாசனாக அந்த யானையின் தலை மீது வீர தாண்டவம் ஆடிய பின்னர், அம்முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்து அருளியதாகப் புராணம் கூறும். ஞானமே முக்திக்கு எதுவாகிறபடியால் அதனை ஈசுவரனே அருளியதாக , “ முத்தியும் ஞானமும் முறை முறை பலபல நெறிகளும் காட்டி “ என்று பாடுவார் சுந்தரர்.

ஞானம் இருக்கும் இடத்தில் அமானுஷ்ய சக்தி தானே வந்துவிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் சமண மதமும் புத்த மதமும் மேலோங்கியிருந்த காலத்தில், அவற்றை எதிர்கொள்ளும் திறன் படைத்த புத்திரன் தமக்கு வேண்டும் என்று சீர்காழிப் பதியில் சிவபாத இருதயர் பரமசிவனை நோக்கித் தவம் செய்தார். அத்தவத்தின் பலனாக , வேத-சைவநெறிகள் மீண்டும் தழைத்து ஓங்குமாறு சீர்காழிப் பிள்ளையார் திரு அவதாரம் செய்தருளினார். தந்தையுடன் ஆலயக் குளக்கரையில் பசி மேலிட்டு  தோணியப்பரின் விமானத்தை நோக்கி “ அம்மே,அப்பா “ என்று குழந்தை அழுதபோது உமாதேவியுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளி, அப் பாலகனுக்குப் பாலளித்து வருமாறு தேவியிடம் கூறவே, அம்பிகையும் அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்துப் பொற்கிண்ணத்தில் சிவஞானம் கலந்த திருமுலைப்பாலைத் தந்தருளினாள். சிவஞானம் உண்டதால் அப்போதே அக்குழந்தை சிவஞானசம்பந்தர் ஆகி, தனக்குப் பால் தந்தருளிய அம்மையப்பர்களைத் தந்தைக்குக் காட்டி, “ தோடுடைய செவியன் “ எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் அருளிச் செய்தார். ஞானம் உண்டதால் எல்லாக் கலைகளும் கைவரப்பெற்றார் ஞான சம்பந்தர்.

உபநயன காலத்தில் வந்திருந்த அந்தணர்களுக்கு, நால் வேதங்களின் உட்பொருள் பஞ்சாக்ஷரமே என்று பதிகம் பாடினார். “ நான் மறை கற்றவன் “ என்று அவர் தம்மை சொல்லிக் கொண்டாலும், நான்மறைகள் தாமாகவே அவரிடம் சென்று அடைந்தன என்பதே உண்மை. பதினாறே ஆண்டுகள் இந்நிலவுலகத்தில் வாழ்ந்து சிவத்தல யாத்திரைகள் செய்து தேவாரப் பதிகங்கள் அருளியுள்ளதால் அப்பனுவல்கள் வேத சாரமாகவே ஆயின. எனவே இவரை, “ வேத வாயர் “ “ ஞான மா முனிவர் “ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். வேத வாக்கானது மெய்ம் மொழி என்பதால், இவரது ஞான மயமான பனுவல்களும் பொய்யா மொழி ஆயின. அவற்றைப் பாராயணம் செய்வோர் அடையும் பலனை ஆணையிட்டுக் கூறுகிறார் ஞான சம்பந்தர்.

சம்பந்தர் தேவாரம் முழுதுமே ஞானம் கலந்த தேனாகச் சுவைக்க வல்லவை. பண்ணும்,தாளமும் கொண்ட இசைப்பனுவல்கள் அவை. இன்றைய காலத்திலும் வேண்டுவார் வேண்டியதை அருள வல்ல மந்திர மறை அப்பனுவல்கள். இடம் கருதி அவரது ஒரு பதிகத்தையாவது இங்கு சிந்திப்போமாக.

அப்பதிகமாவது திருவாவடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் மீது பாடப் பெற்றது. திருஞான சம்பந்தர் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்த காலத்தில் அவரது தகப்பனார் சீர்காழியிலிருந்து புறப்பட்டுவந்து தனது மகனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். சீர்காழியில் தாம் ஒரு சிவ யாகம் செய்வதால்  அதற்குப் பொருள் வேண்டும் என்பதே அவ்விண்ணப்பம்.

தந்தையின் விருப்பத்திற்கிணங்கிய சம்பந்தர் அப்போது திருவாவடுதுறைப் பெருமானை நோக்கிப் பாடியருளிய பதிகம் அற்புதமானது. இறைவன் அருளால் ஒரு பூத கணம் மூலமாக ஆயிரம் பொன் பெற்றார் என்பது வரலாறு. அப்பதிகம் நமக்கு உணர்த்தும் கருத்துக்கள் ஒப்புயர்வற்றவை.

நமக்குத் துன்பம் வந்தாலும், பிணியினால் உபாதை  தொடர்ந்தாலும், இறைவனை விடாப்பிடியாகப் பற்றாமல் மேலெழுந்தவாரியாக நினைக்கிறோம் அல்லவா? ஆனால் இத்தருணங்களில் பெருமானின் திருவடிகளை மறவேன் என்கிறார் சம்பந்தர்:

“ இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்” என்பது அவ்வுயர்ந்த கருத்து.

வாழ்க்கையில் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் இறைவனது நினைப்பு நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது ?  ஆனால் சம்பந்தரோ, “ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன் “ என்கிறார்.

வழிபாடு என்பது இரு சில மணித் துளிகள் மட்டுமல்லாமல் இமைப்பொழுதும் இறைவனை நெஞ்சை விட்டு நீங்காதபடி நினைத்திருத்தலாகும் என்பதை, “ நனவினும் கனவிலும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் “ என்பதால் அறியலாம்.

நோய்கள் பலவிதம். தும்மல்,இருமல் போன்றவை தொடர்ந்தால் ஏற்படும் தொல்லை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். “ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியல்லால் அரற்றாது என் நா “ என்பதால், அந்நிலையிலும் தளராமல் சிவ நாமாக்களைச் சொல்ல வேண்டியதன் அவசியத்தை உணர வைத்தருளுவார்.

கையிலுள்ள செல்வம் யாவும் இழந்த நிலையிலும் அதற்கு அஞ்சாமல் இறைவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதை, “ கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் “ என்று வலியுறுத்துகிறார்.

உண்ணும்போதும்,பசித்திருந்தாலும் உறங்கினாலும் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதை, “ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர் அடியலால் சிந்தை செய்யேன்” என்று உபதேசிக்கிறார் ஞான சம்பந்தர்.

சித்த சுவாதீனம் உள்ளவர்களே இறைவனை நினையாமல் இருக்கையில், அதனை இழந்தவர்கள் எவ்வாறு நினைக்கக் கூடும் ? ஆனால் பித்துப் பிடித்துத் திரிந்தாலும் தீராத நோய் வந்தாலும் உன் பாதங்களை மறவேன் என்கிறார் சம்பந்தர். “ பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியல்லால் அரற்றாது என் நா “ என்பன அவ்வுயர்ந்த வரிகள்.

இப்பதிகத்தை நாள் தோறும் பாராயணம் செய்து அருள் பெறுவோர் பலர் இன்றும் இருக்கிறார்கள். இதுபோன்ற திருப்பதிகங்கள் தேவாரம் முழுதும் விரவி உள்ளன. பாராயணம் செய்வதற்கு நாம் பேறு பெற்றிருக்க வேண்டும்.

****************************

This entry was posted in Latest News. Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.