அரிவாட்டாய நாயனார்

Thandalaicheri (2)சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ள பாடல் பெற்ற தலமான தண்டலை நீள் நெறி ( தண்டலைச்சேரி)க்கு அருகாமையில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குடியில் தோன்றியவர் தாயர் என்பவர். இவரும் இவரது மனைவியாரும் மிகுந்த அன்போடு சிவபெருமானது திருக்கோயிலுக்குத் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நிவேதனத்திற்காக  வழங்கும் அரும்பணியைச் செய்து வந்தனர். மனைவியார் ஆன் ஐந்தும் எடுத்துக் கொண்டு கணவனாரைப் பின்தொடர்ந்து உடன்சென்று பணி ஆற்றி வந்தார்.

Thandalaicheri (1)நாளடைவில் அவரது செல்வம் வேழம் உண்ட விளாங்கனி போல் மறைய ஆரம்பிக்கவே, கூலிக்கு வயலில் வேலை செய்து நெல் கொண்டு அதைக் கொண்டு செந்நெல் பெற்று, இறைத்தொண்டு ஆற்றி வந்தனர். ஒரு சமயம் கூலி நெல் முழுவதும் செந்நெல்லாகவே இருந்தது. தனக்கு உணவுக்கு நெல் இல்லாமல் போனாலும் இறைவரது பணி முட்டாமல் செந்நெல் கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ந்து, அதனை முழுவதுமாக  அமுது படைத்தார். இது  அடியேன் செய்த புண்ணியம் எனக் கருதினார்.

பசியினால் மிகத்தளர்வுற்ற நாயனாரும் அவர்தம் மனைவியாரும் தமது வீட்டுத் தோட்டத்திலிருந்த இலைகளை உண்டும் நீர் அருந்தியும், சிவத் தொண்டை விடாமல் செய்து வந்தனர்.

ஒருநாள் நாயனார் தமது  கூடையில் செந்நெல் அரிசியும்,செங் கீரையும், மாவடுவும், ஏந்தி முன்செல்ல, ஆன் ஐந்தை ஏந்தியவராக மனைவியார் பின் தொடர்ந்தார். அவ்வாறு செல்லும்போது தளர்ச்சி மேலிட்டுத் , தாயனார் நிலத்தின் மீது விழும்போது, மனைவியார் அவரைத் தாங்கினார். அப்பொழுது கூடையில் இருந்த அரிசியும், கீரையும், மாவடுவும்  கமரில்          ( நில வெடிப்பிற்குள்) சிந்தி விட்டன. இதைக் கண்டு தாயனார் மனம் பதைத்தவராக, எல்லையில்லாத தீயனேன் இன்று பெருமானுக்கு அமுது செய்விக்கும் பேறு பெற்றிலேன் என்று கருதி ,அக்குற்றத்திற்காகத் தனது கழுத்தினை அரிவாளைக் கொண்டு அரியலுற்றார்.

மாசில்லாத அன்பரது அச்செயலைக் கண்டு தரியாத இறைவரது திருக்கை அக்கமரிலிருந்து வெளிப்பட்டு நாயனாரின் கையைப் பிடித்துத் தடுத்ததோடு  “ மாவடு விடேல் விடேல் “ என்ற ஓசையும் எழுந்தது. பெருமானின் கருணையைக் கண்டு நெகிழ்ந்து போற்றிய தாயனாருக்கும்  அவரது மனைவியாருக்கும் இறைவன் ரிஷப வாகனனாய்க் காட்சி அளித்து, இருவரும் சிவலோகத்தில் வாழும் பேற்றையும் அளித்து அருள் செய்தான்.

அன்பின் காரணமாகத் தனது கழுத்தையே அரிவாளைக் கொண்டு அரிய முற்பட்ட தாயனார் அன்று முதல் அரிவாள் தாயர் எனப்படுவாராயினார்.

நாயனாருக்கு முக்தி அளித்த தை மாதத் திருவாதிரை நாளன்று தண்டலைச்சேரி சிவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

This entry was posted in Nayanmars. Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.