ஆகமக் கல்வி

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர்

அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.

                                  — சுந்தரர் தேவாரம்

“ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் எழுந்தருளித் தனது ஐந்து முகங்களாலும் இருபத்தெட்டு ஆகமங்களைப் பெருமான் தோற்றுவித்து அருளியதாகத் திருவாசகம் கூறுகிறது. “ எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்” என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.தமிழகம் செய்த தவப்பயனாக இன்றளவும் ஆகம வழியில் சிவாலயங்களில் நித்திய பூஜைகள், கும்பாபிஷேகங்கள் நடைபெறுவது ஈசன் திருவருட் துணையினால் மட்டுமே ஆகும்.

இருபத்தெட்டு ஆகமங்களில் காரணம்,காமிகம் போன்ற சில ஆகமங்களே தற்போது கிடைப்பதோடு மட்டும்  அல்லாமல் பின்பற்றப் படுவனவும் ஆகும். பிற ஆகமங்கள் எவ்வாறு, எக்காலத்தில் மறைந்து போயின என்பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை. அவற்றை மீட்டெடுக்கும் தீவிர முயற்சி செய்யப்பட்டுள்ளதா என்றும் புலப்படவில்லை. எஞ்சிய ஆகமங்களையே தற்போதுள்ள ஆகம பாடசாலைகள் கற்பிக்கின்றன. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் இக்கல்வி முறை பின்பற்றப் படுகிறது.

ஆகமத்தொடு, வாழ்வியல் கல்வியும் தக்கோரைக் கொண்டு கற்பிக்கப்படுவதால் பாட திட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் சிறிது வேறுபாடுகள் இருக்கலாம். ஆகமக் கல்வியோடு, தற்காலக் கல்வியும் பன்னிரண்டாம் வகுப்பு வரை இணைத்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டையும் இணைத்துக் கற்கும் மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறிவு பெற்றாலும் அனைவரும் அறிந்த காரணத்தால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே, ஆகமப் பாடசாலைகளே கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் கொடுக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு எவ்வாறு பயன் தருகின்றன என்பது அடுத்த கேள்வி.அதிக வருமானத்தை விரும்பி சொந்த ஊரை விட்டு விட்டு வெளியூருக்கும் வெளி நாடுகளுக்கும் செல்பவர்கள் அவ்வாறு செல்லுமிடங்களில் இச் சான்றிதழ்களைக் காட்டித் தனது தகுதியை நிரூபிக்க முயலுகிறார்கள். அப்படியானால் சொந்த ஊர்களில் வாழையடி வாழையாகத் திருக்கோயில்களில் பணியாற்றி வந்தவர்கள் அக்கோயில்களைப் புறக்கணிக்கும் நிலையைப் பாடசாலைகள் ஆதரிக்கின்றனவா? பாடசாலைத் தரப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெளியேறுகையில் அவனுக்கு ,அவனது பூர்வீக ஊரிலேயே வாழும்படி வாழ்வாதாரம் செய்து தரப் படவில்லையே !

பாடசாலை நடத்துவதும் அத்தனை எளிது அல்ல. வெளியிலிருந்து பெரிய மனம் உள்ளவர்களின் துணையுடனும், நிரந்தர வைப்பு நிதியின் வட்டி வருவாயுடனும் மாணவர்களின் கல்வி, உணவு,உடை ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதை நாம் அறிவோம். இச் சிவபுண்ணியத்தில் வெளிநாடுகளில் வசித்து வரும் நம்மவர்கள் பங்கேற்க மேலும் முன்வந்தால் பாடசாலைகளில் மாணவர்களின்  எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உண்டு.அவர்களை இத்தருமத்தில் ஈடுபடச் செய்ய வேண்டிவர்கள் மடாதிபதிகளும், வெளிநாடுகளுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களும் ஆவார்கள். தனவந்தர்கள் பலர் அங்கு ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை ஆதி சைவர் நல சங்கங்களும் இணைந்து செய்யலாம்.

ஆகமம் கற்ற மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி நடந்து விட்டால் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மோகமும் ஒழிந்து விடும். ஆகமமும் தமிழும் ஒருங்கே பயில ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கல்வி ஸ்தாபனமே அரசு ஆதரவோடு நடை பெற வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பத்தை விட, இம்முறையில் கிடைக்கும் பலனைப் பல மாங்காய் என்றும் சொல்ல முடியும். இன்று ஆதிசைவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிவனுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் சமூகம் பாதை மாறி சம்பந்தமில்லாத,  மற்றும் மரியாதை முற்றிலும் கிடைக்காத இடங்களில் வேலைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. சொந்தக்  காலில் நிற்கும்போது சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. வறுமை முற்றிலும் நீங்கிவிடும். திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருபாலார்க்கும் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும். இத்தனையும் நடைபெற வேண்டுமானால் மேற்கூறியபடி போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைப்பு மூலம் ஒரே ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். சிவனருள் என்றென்றும் துணை செய்யும். சம்பந்தப் பட்டவர்கள் களப் பணி செய்ய முன்வர வேண்டும் என்று, வேதமாகவும்,ஆகமமாகவும், திருமுறைகளாகவும் நின்று அண்ணிக்கும்  பரம்பொருளை இறைஞ்சுவோமாக.

— சிவபாதசேகரன்

This entry was posted in General, General. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.