அகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள்

திருக் கடம்பந்துறை (குளித்தலை), திருவாட்போக்கி (ஐயர் மலை), திரு ஈங்கோய் மலை ஸ்தல மகாத்மியங்கள் 

                                                                   முன்னுரை

சிவபாதசேகரன்

                                                             சிவபாதசேகரன் 

                       திருவாதிரையான் திருவருட் சபை,சென்னை

திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள அற்புதமான சிவஸ்தலங்கள் மூன்றை நாம் இப்போது சிந்திக்குமாறு திருவருள் கூட்டியுள்ளது. அம்மூன்றின் பெயர்களை நாவினால் உச்சரித்தல் சிறந்த சிவபுண்ணியத்தைத் தரும். நேரில் சென்று தரிசிப்பவர்கள் பெறும் பயன் அளவிட முடியாதது. அம மூன்று தலங்களாவன, கடம்பந்துறை ( குளித்தலை), திருவாட்போக்கி ( ஐயர் மலை ), மற்றும் திரு ஈங்கோய் மலை என்பனவாம். ஒரே நாளில் காலையில் கடம்பந்துறையையும் , உச்சி வேளையில் ஐயர் மலை எனப்படும் வாட்போக்கியையும், மாலையில் திரு ஈங்கோய் மலையையும் தரிசிக்க வேண்டும்.மூன்றுமே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் கடம்பந்துறையும், வாட்போக்கியும் காவிரியின் தென்கரையிலும்,ஈங்கோய் மலை வடகரையிலும் அமைந்துள்ளன.

இம்மூன்று தலங்களின் மான்மியங்களைப் பற்றிய சிறு நூல் ஒன்று நம் கைவசம் இருந்த போதிலும் தலங்களை நேரில் சென்று தரிசித்த பிறகே அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் காலம் தாழ்த்த வேண்டியிருந்தது. இத்தலங்களை இரண்டாவது முறையாகத் தரிசித்த பிறகே எழுதும் ஆவல் மேலோங்கியது. அப்புத்தகம் 1891 ம் ஆண்டே வெளியிடப்பட்டதால், தற்போது பக்கங்களைத் திருப்பினால் உடையும் அபாய நிலையில் உள்ளது. அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். இம்மூன்று தலங்களுக்கும் வடமொழியில் புராணம் இருந்ததாகவும், அதனை சிதம்பரம் பிரமஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்த்ரி என்பவரைக் கொண்டு வடமொழியில் அச்சிட்டதாகவும், பின்னர் மேற்படி சாஸ்த்ரி அவர்களைக் கொண்டு தமிழாக்கம் செய்து, பதிப்பித்ததாகவும் அந்நூலில் காணப்படுகிறது.

                                                           கடம்பந்துறை

                    ( குளித்தலை என்று வழங்கப்படுகிறது ):

                                               20180217_080704

இருப்பிடம்: திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 35 கி.மீ. ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு.

புராணச் செய்திகள்:
நைமிசாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் சத்திர யாகம் செய்து சிவபெருமானை நோக்கி அருந்தவம் செய்து கொண்டு                              இருந்தனர்.அப்போது சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய பிற முனிவர்கள், ஒப்பில்லாத கடம்பவன மகாத்மியத்தை எடுத்துரைக்குமாறு விண்ணப்பித்தனர். அதற்கிசைந்து, சூத முனிவரும் அதனைக் கூறலானார். முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான்.

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை அவனது முடி மேல் வைத்து, ” காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக ” என்று அருளி, அம்மகாலிங்கத்தில் மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான்.

முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள் சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக் கடம்பவனத்தை அடைந்தவுடன் அத்தோஷம் அவர்களை நீங்கியது.

ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, ” இத் தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு ” என்கிறார்களே, அதன் மகிமையைத் தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார்.
கபிலைப் பசுவானது பருத்த கண்களும்,சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந் தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது. அதன் பால்,தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது.ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீ ரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள்.

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, ” முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப் பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் ” என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் ப்ரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார்.

முன்னொரு காலத்தில் சோமகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதருக்குரிய மந்திரத்தைப் புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இமையிலும் மறுமையிலும் பெறலாம் .

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார். குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.

சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெரும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும் அதிக பலனைப் பெறலாம்.

இதுபோல வடக்கு நோக்கிய தலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார். இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும் அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும் பாவ நிவர்த்தி பெறுகிறான்.

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதாயுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.

யாத்திரை முறை: கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: ” விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத் தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம்.

இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் ” என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார்.

தலப் பாடல்கள் சில:
பண்ணின் மொழி கேட்கும் பரமனை
வண்ண நன் மலரான் பல தேவரும்
கண்ணனும் அறியான் ; கடம்பந்துறை
நண்ண நம் வினையாயின நாசமே
                                               — திருநாவுக்கரசர் தேவாரம்

அழுகு திரிகுரம்பை ஆங்கு அதுவிட்டு ஆவி
ஒழுகும் பொழுது அறிய வொண்ணா — கழுகு
கழித்து உண்டு அலையா முன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு. 

                                             — ஐயடிகள் காடவர் கோன் நாயனார்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழால் பாடியுள்ளார்.

****************
                                          திருவாட்போக்கி (ஐயர் மலை)

20180217_090404

 இரத்தினகிரி என்னும் ஐயர் மலை குளித்தலைக்கு அருகிலுள்ள சிற்றூர். கடல் மட்டத்திலிருந்து 1178 அடிகள் உயரத்தில் உள்ள சிவாலயத்தை அடைய 1017 படிகள் ஏறவேண்டும். வழி நெடுகிலும் உயர்ந்த பாறைகள், மூலிகைச் செடிகள், குரங்குக் கூட்டங்கள் என்பவற்றைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றால் ரத்னகிரீசுவரரின் ஆலயத்தை அடையலாம். திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் பெற்ற இத்தலம் மிகவும் பழைமை வாய்ந்தது. சோழ,பாண்டிய,சாளுக்கிய,விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் சுமார் 50 உள்ளன. திருச்சிராப்பள்ளியிலிருந்து குளித்தலை வழியாக ஐயர் மலையை அடையலாம். மலைக் கோயிலாக இருப்பதால் காலை பத்து மணிக்கு மேல் தான் திறக்கிறார்கள். உச்சிக்கால பூஜை விசேஷமாகக் கருதப்படுவதால் அந்த நேரத்தில்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள்.

20180217_090244
தல வரலாறு:
ஒரு சமயம், நைமிசாரண்யத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் சிவபெருமானைக் குறித்துத் தியானித்துக்கொண்டிருக்கும்போது, தவசிரேஷ்டராகிய சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய முனிவர்கள், ” முனிவர் பெருமானே, தாங்கள் இங்கு எழுந்தருளிய போதெல்லாம் பல ஸ்தலங்களின் வரலாறுகளைக் கூறி அருளினீர்கள். ஒரு காலத்தில் ஆதி சேஷனுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த போரில் மேரு மலையின் சிகரங்கள் பலவிடங்களில் வீழ்ததாகக் கூறினீர்கள். அவ்வாறு அவை வீழ்ந்த இடங்கள் என்ன என்பதையும் அவற்றின் சிறப்பையும் எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் ” என்று பிரார்த்தித்தார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்த சூத முனிவர், ” யாராலும் சொல்ல முடியாத பெருமையை உடைய அத்தலங்களைப் பற்றி யான் அறிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன் ” என்றார்.

20180217_090647

” பாண்டிய நாட்டில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகஸ்தியரால் வழிபடப்பெற்ற நீலாசலம் என்ற தலம் உள்ளது. அங்கு வில்வ மர நீழலில் எழுந்தருளியிருக்கும் பரமேசுவரனுக்கு ஈசான திசையில் ஓர் மலை இருக்கிறது. காவிரியின் மேற்கரையில் பூமிக்குள் ஒரு பாகம் அழுந்தியபடி சுவேதாசலம் என்ற மலை உள்ளது. அங்கு தேவ தீர்த்தமும் வன்னி வ்ருக்ஷமும் உள்ளன. இங்கிருந்து மூன்று யோசனை தொலைவில் காவிரியின் தென்புறத்தில் இரத்தின கிரி என்ற மலை உள்ளது. அங்கு மகிமை வாய்ந்த வேப்ப விருக்ஷமும் உள்ளது. தேவேந்திரனுக்கு சாபம் நிவர்த்தி ஆன தலம் அது. மேலும் காவிரியின் வடகரையில் புளிய விருக்ஷத்தொடு கூடிய மரகதாசலம் என்ற மலையும் இருக்கிறது. இவையன்றிக் கந்த நதிக் கரையில் குண்டிகாசலத்தில் வன்னிகர்ப்பம் என்ற ஸ்தலம் இருக்கிறது. இவற்றுள் இப்போது உங்களுக்கு, நினைத்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களையும் நீக்கும் இரத்தினாசலத்தின் பெருமைகளை ஒருவாறு சொல்கிறேன் ” என்றார்.

” இரத்தினகிரீசுவரரைத் தரிசித்த அளவில் எல்லாப் பாவங்களும் விலகும்.இம்மலை பூமியில் விழுந்த வேகத்தால் தரைக்கு உள்ளே ஒரு பாகம் அமிழ்ந்து இருக்கிறது.இது பதினாறு யோசனை உயரமும் மூன்று யோசனை அகலமும் கொண்டது. இங்கு மகிமை வாய்ந்த தேவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன. இரத்தின லிங்கம் உமா தேவியால் பூஜிக்கப்பட்டது. இங்கு எட்டு தீர்த்தங்கள் உள்ளன. மலை உச்சியில் தேவ தீர்த்தம் உள்ளது. என் போன்றவர்களால் அதன் பெருமை சொல்லுவது மிகக் கடினம். முனிவர்கள் பலர் இங்குக் கடும் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். பஞ்சாக்ஷரமே இம்மலை வடிவு என்பார்கள். வேதப் பொருளாய் விளங்கும் பரமன் இங்கு வீற்றிருக்கிறான்.

20180217_093339

பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தலத்தின் காட்சி கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய் எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணங்கித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சக்ஷர  ஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும். ”

அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்துதேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில்,தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கி தினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில்எழுந்தருளி அவனுக்குக் காட்சி அளித்தார்.

ரத்தினகிரியில் தவம் செய்வோர் அனைவருக்கும் இஷ்ட சித்திகள் நிறைவேறும் என்ற வரத்தையும் அளித்தருளினார். அப்போது இந்திரன் சுவாமியைத் தோத்திரம் செய்தான். அத்தோத்திரத்தை சிவபூஜை முடிவில் படிப்பவர்கள் அஷ்ட ஐசுவர்யங்களையும் பெறுவர். எவ்வித நோய்க்கும் ஆளாக மாட்டார்கள். அரசனாக இருந்தால் போரில் வெற்றி கிட்டும். பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும். சந்தேகம்  வேண்டாம் என்று சுவாமியே திருவாய் மலர்ந்து அருளினார்.

“தக்ஷிணாயணம்.உத்தராயணம் , விஷு , சூரிய-சந்திர கிரகணம் அமாவாசை,சோமவாரம்,ஜன்ம நக்ஷத்திரம், ஸ்ராத்த தினம் ஆகிய புண்ணிய காலங்களில் தேவ தீர்த்தத்தில் ” ஆயாகி ” என்னும்மந்திரத்தை மும்முறை உச்சரித்து நீராடி விட்டு, வேம்புக்கு அபிஷேகம் செய்து,சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு, அந்தணர்களுக்குத் தானம் செய்தால் கயா ஸ்ராத்த பலனைப் பெறலாம். வேம்பினடியில் கன்னிகா தானம் செய்தால் சிவலோகம் சித்திக்கும்.

இரத்தினாசலத்தைச் சுற்றி உள்ள ஐந்து குரோச இடத்திற்குள் அந்தணர்க்கு வீடும் விளைநிலங்களும் தானம் செய்யும் அரசன் சிவரூபம் பெறுவான். ஒரு மாத காலம் இங்குத் தங்கி, தேவ தீர்த்தத்தில் நீராடி, வேம்பைப் பூஜித்தால், குஷ்டம், வாதம் குன்மம் போன்ற கொடு நோய்கள் விலகி விடும். தானே உதிர்ந்த வேம்பின் இலைகளைப் புசித்தால் குருடர்கள் கண் பெறுவர். செவிடர்கள் கேட்கும் திறனையும், ஊமைகள் பேசும் வன்மையையும் பேச்சு திக்குப வர்களுக்குப் பேச்சும், நல்ல கல்வியும் அங்கக் குறைவு உள்ளவர்களுக்கு அழகிய சரீரமும் பிள்ளை இல்லாதோருக்குப் புத்திர பாக்கியமும் வாய்க்கும் . வேம்பின் பெருமையை சிவசன்னதியில் படிப்போர் முக்தி வரம் பெறுவர்.”

நைமிசாரண்ய முனிவர்கள் கேட்குமாறு சூத மாமுனிவர் கூறலுற்றார்: ” முன்னாளில் வாயு பகவான் தன் வலிமையால் மேரு மலைச் சிகரங்களைப் பிடுங்கிய குற்றம் நீங்குவதற்காக இரத்தின கிரியை அடைந்து, தன் பெயரினால் ஒரு தீர்த்தம் அமைத்து, நாள் தோறும், மல்லிகை, ஜாதி, மகிழ்,குருந்தம், குவளை, ஆகிய புஷ்பங்களாலும், சண்பகம்,வில்வம் ஆகியவற்றாலும் இரத்தினகிரீசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வந்தான்.  “தபோவாய ” என்று தொடங்கும் மந்திரத்தை உச்சரித்தபடி வாயு தீர்த்தத்தில் நீராடி, சிவபிரானையும்,தேவியையும் வழிபட்டு வந்தான். அவ்வாறு வழிபட்டது துலா மாத பௌர்ணமி தினமாகும். ஒருநாள் பூஜை முடிவில் கைகளைச் சிரத்தின் மீது கூப்பியவாறு, ஆனந்தக்கண்ணீர் மல்க, ” தேவேச சம்போ, கங்காதரா,சங்கரா, தேவரீரது திருவடிகளை ஒருபோதும் மறவேன். வேதப்பொருளே, க்ஷேத்ரங்களுக்கு அதிபதீ , எனது பிழை பொறுத்து நற்கதி தர வேண்டும் ” என்று பிரார்த்தித்தான். அவனது பக்திக்கு இரங்கிய பெருமானும் உமாதேவியுடன் காட்சி அளித்து, வாயு தேவன் உலகெங்கும் வியாபித்து, ஒவ்வொரு சரீரத்திலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,கூர்மன், கிருகரன், தேவதத்தன் ,தனஞ்சயன் என்ற பத்துப் பெயர்களோடு இருக்குமாறு அருள் பாலித்தார். ஐப்பசிப் பூரணையில் வாயு தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று நற்கதி பெறுவர். எனவும் வரமளித்தருளினார்.

வாயு பகவான் பழி நீங்கப்பெற்ற வரலாற்றை நாரத முனிவர் மூலம் அறிந்த ஆதிசேஷன், தானும் மேருவை அசைத்த குற்றத்தில் ஈடுபட்ட பாவம் நீங்குமாறு, பூலோகத்தை அடைந்து, மேற்குக் கடலோரம் உள்ள கோகரணம், சங்குகரணம்,பிரபாசம்,அனந்த சயிலம், சோமேசுவரம் , கபிலேசுவரம் ,கேரள நாட்டைச் சார்ந்த சகிய மலை,ஸ்ரீ கண்டம், வில்வாரண்யம்,தர்மேசுவரம், வியாசாசிரமம்,சுசீந்திரம் , அவினாசி,பவானி கூடல், வராகி கூடல், சுவேதாசலம், கருவூர், வாலீசுவரம் , அகஸ்தீசுவரம், திருவையாறு, அறப்பளீசுவரம், அனலேசுவரம், ஈங்கோய் மலை, கதம்ப வனம், சங்கராசலம் ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் இரத்தினகிரியை அடைந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த வியாசர்,அத்திரி, பாரத்துவாஜர், ஜமதக்கினி, காத்தியாயனர், அதிசிருங்கர்,மயூரமுகர், ஆகிய முனிவர்களை வணங்கி, குங்கிலிய மரம் ஸ்தாபித்து அதனருகில் தன பெயரால் ஒரு தடாகத்தையும் ஏற்படுத்தி, ” நமோஸ்து ஸர்பேப்யோ ” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து, தீர்த்தத்தின் நடுவில் சங்கநிதி முதலாகிய நதிகளை ஆவாகித்து, “ப்ரம்மஜக்ஞானம் : எனத் துவங்கும் மந்திரத்தையும், பஞ்சாக்ஷரத்தையும் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து, சூரியன் ஸ்தாபித்த கங்காசல தீர்த்தத்தில் நூற்றெட்டுக் குடங்கள் கொண்டுவந்து பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை,நிவேதனம் ஆகியன செய்து, பலமுறை நமஸ்கரித்து கரங்களைக் கூப்பியவாறு, ” உலக நாயகனே, யானை உரி போர்த்த பரம்பொருளே, பிறை சூடிய பெருமானே, அர்த்தநாரீசப் பெருமானே, சிறியேனது குற்றம் பொறுத்தருளுவீராக. ” என்று பிரார்த்தனைகள் செய்தான். இதனால் மகிழ்ந்த ஈசனும், ” ஆதிசேஷனே, உனது குற்றத்தை நாம் நீக்கி அருளினோம். நீ பரிசுத்தனாவாய் ” எனத் திருவாய் மலர்ந்து அருளினார்.

சூதர் மேலும் கூறினார் ” சிவத்துரோகமானது இத்தலத்தில் மாத்திரமே நீங்கும். மந்திரங்களில் காயத்திரி போன்று , மேருவின் ஐந்து முடிகளுள் இரத்தினகிரி சிறந்ததாகும். பிற இடங்களில் செய்த பாவங்கள் இங்கு வந்தால் நீங்கும். ஆனால் இங்கு செய்யும் பாவம் இங்கு மட்டுமே நீங்கும். இங்கு நந்தவனம் அமைப்போரும், விளக்கிடுவோரும், சிவசாரூப்பியம் பெறுவர். இத்தலத்தைச் சிந்தித்தாலே,முக்தி பெறலாம். புரட்டாசி சுக்கில பக்ஷ சதுர்த்தசியில் நாக தீர்த்தமாடினால் சிவாபராதம் நீங்கலாம். சூரிய கிரகண காலத்தில் சூரிய புஷ்கரணியில் ஸ்நானம் செய்தால் குஷ்டம்,அபஸ்மாரம் போன்ற நோய்கள் நீங்கும். இங்கு தில தர்ப்பணம் செய்தால் நீண்ட காலம் கயிலையில் வாழலாம் .” என்றார்.

உதயாசலம் அருகில் மந்தேகம் என்ற தீவில் இருந்த தவ வலிமை பெற்ற அரக்கர்கள், உதயத்தில் சூரியனோடு போர் புரியும்போது சூரியனால் அவர்களை வெல்ல இயலவில்லை. அசரீரி வாக்கின்படி, தேவர்,கருடர், காந்தருவர்,கின்னரர்,கிம்புருஷர், முனிவர்கள் ஆகியோர் வழிபடும் இரத்தினாசலத்திற்குச் சென்று வழிபட வேண்டி, அசனி என்பவனை சூரியன் அங்கு அனுப்பித் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சுவாமிக்கு பூஜைகள் நடத்துவித்தான். அதற்கு மகிழ்ந்த இறைவனும், அவ்வரக்கர்களை வெல்லும் வலிமையை சூரியனுக்கு அளித்தருளினார். சூரியனால் உண்டாக்கப்பெற்ற சூரிய தீர்த்தத்தில் சித்திரை பௌர்ணமியன்று காலையில் ” சசித்திரம் ” எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம். அந்த தினத்தில் சூரியன் உச்சி வேளையில் சுவாமியை பூஜை செய்வது ஆண்டு தோறும் நடை பெறுகிறது. சூரியதீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தால் எல்லா நலன்களும் பெற்று இறுதியில் சிவபிரானது திருவடி நீழலை அடையலாம். அயனம்,விஷு, கிரகண புண்ணிய காலங்களில் இதில் நீராடினாலும் சிவ சன்னதியில் தூப தீபம் இட்டாலும் எல்லா ஐசுவர்யங்களையும் பெறலாம். அங்கு செய்யப்படும் பித்ரு காரியங்களால் பித்ருக்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்பா பத்திரா நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்திய முனிவரைத தன்னுடன் தீர்த்த யாத்திரைக்கு வருமாறு நாரதர் வேண்டவே , இருவருமாக புறப்பட்டு, காஷ்மீரம்,பிரபாசம்,வில்வாரண்யம்,கேதாரம்,காசி, பிரயாகை,அவந்தி,கோமதி ஆகிய தளங்களைத் தரிசித்தனர். பின்னர் குசல க்ஷேத்திரத்தைதரிசிக்க வேண்டி நாரதர் அகத்தியரிடம் விடை பெற்றுச் சென்றார். பின்னர் பல சிவக்ஷேத்திரங்களையும் தரிசித்து விட்டு , விந்திய பர்வதத்தில் ஒரு பிறேதத்தைக்கண்டு அதன் வரலாறை அறிந்து கருணை கொண்டவராய், நற்கதி உண்டாக்க வேண்டும் என்று அப்பிறேதத்துடன் அகத்திய முனிவர் கடம்ப வனம் அடைந்தார். அங்குக் காவிரி நீரால் அதன் மீது தெளித்தவுடன், அப்பிரேதம் திவ்விய சரீரம் பெற்று, முனிவரை வணங்கிவிட்டுகே கடம்பவன நாதரையும் அம்பிகையையும் துதித்துப் பின்னர் விமானமேறிக் கயிலாயத்தை அடைந்தது. கடம்ப வனத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபிரானை இடைவிடாமல் சூரிய அஸ்தமனத்திளிருந்து பூஜை செய்து வந்தார். மறு நாள் காலை உதயத்தின்போது அவருக்கு அருள் செய்யும்பொருட்டு அவர் முன் காட்சி அளித்தார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த முனிவர் பெருமானைப் பலவாறு தோத்திரம் செய்தார். பிறகு இரத்தினகிரியை அடைந்து, மேற்புறத்தில் தனது பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி, கங்கை முதலிய எல்லாத் தீர்த்தங்களையும் அதில் ஆவாகனம் செய்தார். அதில் தானும் ஸ்நானம் செய்துவிட்டு மத்தியான காலத்தில் வேத மந்திரங்களால் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனங்கள் செய்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ” கருணைக் கடலே, சர்வலோக நாயகா, இரத்தின கிரீசனே, உனக்கு நமஸ்காரம்,நமஸ்காரம். ” என்று துதித்தார். அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் சுவாமி அவருக்குக் காட்சி அளித்தவுடன், முனிவர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, ” பிரபோ, வேத ரகசியமான ஸ்ரீ பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை அடியேனுக்கு உபதேசித்து அருள வேண்டும். ” என்று பிரார்த்தனை செய்தார்.

அராளகேசி அம்பிகையோடு சர்வாலங்கார சுந்தரராகக் காட்சி அளித்த பெருமான், அகஸ்தியரின் சிரத்தின் மீது தனது திருக் கரங்களை வைத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். அன்று முதல் அகத்தியர் ஜீவன் முக்தரானார். பின்னர் பெருமானை வணங்கி, ” தேவரீர் மத்தியான காலத்தில் அடியேனுக்குத் தரிசனனம் தந்ததால் தங்களுக்கு மத்தியான சுந்தரர் என்ற திருநாமம் வழங்கப்பெற வேண்டும். இன்று முதல் பகலில் தரிசனம் செய்வோர் முக்தி பெற வேண்டும். ” என்ற வரம் வேண்டவே சுவாமியும் அவ்வாறே ஆகுக என வரமளித்தருளினார். கார்த்திகை ஞாயிறுகளில் அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, ” உதித்தம் ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தால் கொடு நோய்கள் அனைத்தும் நீங்கும். அம்மாதத்து செவ்வைக் கிழமைகளில் உதயத்தில் கோமயத்தைச் சிரச்த்திளிட்டு, : “அக்கினி முர்தா ” என்ற மந்திரத்தை உச்சரித்து இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் வறுமை நீங்கிப் பெரும் செல்வம் பெறலாம்.
வீரசேனன் என்ற சூரிய குலத்து அரசன் செங்கோல் செலுத்தி வந்த காலத்தில் அவனைக் காண ஒரு கபாலிகன் வந்தான். அரசனை உலோகாயுத மார்க்கத்தில் செலுத்தினான். அதன் விளைவாக வைதீகர்களையும்,அறிவுரை சொல்லும் மந்திரிககையும் புறக்கணித்தும்,ஆலய பூஜைகள் நடத்தத் தவறியும் அக்கிரமங்கள் செய்ததால் நாட்டில் மழை பெய்யவில்லை.

வேதங்களும்,சத்தியமும், தவமும், அச்சமும்,கற்பும் இருந்தால் தானே நாடு வளமடையும் ! இறைவனது பூஜை இல்லா து போகவே நாடு சுடுகாடு போல் ஆயிற்று. அரசனும் சின்னாட்களில் நோயால் வருந்தி இறந்தொழிந்தான். அவனை யமதூதர்கள் யமனது சொற்படி நரகத்தில் தள்ளினார்கள். அதன்பிறகு கண்டோர் அஞ்சும்படிப் பிரேத வடிவில் விந்திய மலையில் பசியோடு கிடந்தான்.

தனது தீவினையால் இது விளைந்ததே என துக்கப்பட்டான். அப்போது அங்கு உரோமச முனிவர் வருகை தந்தார். அவரைக் கொன்று தின்னும் எண்ணத்துடன் அவரை நோக்கி விரைந்து ஓடினான். ஆனால் முனிவரது தவத் தீ அவனை அருகில் செல்ல முடியாதபடி தடுத்தது. பிழைக்கு வருந்திய அவன்பால் கருணை கொண்ட முனிவர், ” கண்டவுடனே பாவங்கள் நீங்கும் இரத்தின கிரிக்குச் சென்றால் உனது பிரேத வடிவம் நீங்கப் பெறுவாய் ” என்றார். அதன்படி அவனும் அங்கு சென்று உரோமச தீர்த்தத்தில் மூழ்கி, ” யோ ப்ரம்ம ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்தான். பின்னர் இரத்தினாசலப் பெருமானையும், சுரும்பார்குழலி அம்பிகையையும் தரிசித்தான். நிவேதனங்கள் செய்து, உள்ளன்புடன் பஞ்சாக்ஷர ஜபம் செய்தான். அப்போது அவனுக்கு இரங்கிய இறைவன், அவன் முன்னே காட்சி அளித்தருளினார். உடனே மன்மதனுக்குஒப்பான சரீரம் பெற்றான். அதுமுதல் அந்த தீர்த்தம் பிரேத மோக்ஷ தீர்த்தம் எனப்பட்டது. இதில் ஸ்நானம் செய்தால் பிரேதத்தன்மை ஒருபோதும் ஏற்படாது. அவனது வம்சத்தவர்களும் மோக்ஷம் பெறுவர்.

பாரத்வாஜ முனிவரும் இங்குத் தவம் செய்து தீர்த்தம் உண்டாக்கினார். வராக வடிவெடுத்த விஷ்ணுவும் அக்னி திசையில் தீர்த்தம் ஏற்படுத்தினார். அந்த விஷு தீர்த்தத்தில் ” விஷ்ணோர் லலாட ” எனத் துவங்கும் மந்திரத்தை உச்சரித்து ஸ்நானம் செய்பவரது பிருக்கள் திருப்தி அடைவார்கள்.

இம்மலையின் வடபுறம் துர்க்கா தேவி உண்டாக்கிய கன்யா தீர்த்தம் உள்ளது. அங்கு அவள் ,மகிஷனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றாள் . மகா நவமியில் அதில் நீராடினால் சர்வ சித்தி உண்டாகும். சிவபெருமான் அருளிய வாளால் மகிஷனது உயிரைத் துர்க்கா தேவி போக்கியதால் வாட் போக்கி என்று பெயர் வந்தது என்று கூறுவதும் உண்டு.

ஆரிய தேசத்து மன்னன் ஒருவன் தனது மணிமுடி காணாமல் போகவே அதைத் தேடிப் பல ஊர்களுக்கும் போய்விட்டு முடிவாக இங்கு வந்தான். அப்போது வயதான வேதியன் ஒருவன் இரத்தினகிரிப் பெருமானிடம் அது இருக்கிறது எனக் கூற, மன்னனும் மலை மீதேறி சன்னதியை அடைந்தான். அப்போது ஒரு அந்தணன் வடிவில் தோன்றிய இறைவன், காவிரி நீரால் இங்குள்ள கொப்பரையை நிரப்பினால் மணி முடி கிடைக்கும் என்று கூறவே அவ்வாறு செய்யலானான். ஆனால் எவ்வளவு முயன்றும் கொப்பரை நிரம்பவில்லை. கோபமுற்ற மன்னன் அவ்வந்தணன் மீது வாளை வீசவே, அந்தணன் சிவலிங்கத்தில் மறைந்து விட்டான். இலிங்கமூர்த்தியில் இருந்து இரத்தம் பெருகியதைக் கண்ட மன்னன் வாளால் தன உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அப்போது இறைவன் அங்குத் தோன்றி அரசனது வாளை விலக்கி (போக்கி )மணிமுடியைத் தந்து அருளினான். இதனால் ஏற்பட்ட தழும்பு சுவாமியின் திருமுடியில் இன்றும் உள்ளது. ஆரிய மன்னனின் உருவச் சிலையையும் கோயிலில் காணலாம்.

காஞ்சியைச் சேர்ந்த ஆயர் ஒருவர் தன் தங்கைக்கு மகப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை நிறைவேறியவுடன் தன் தலையைக் காணிக்கையாக்கினார். அவரது வைராக்கியம் காரணமாக அவரை வைரப் பெருமாள் என்கின்றனர். மலைக்குச் செல்லும் வழியில் இவரது சன்னதியும் அதனருகில் வேப்ப மரமும் உள்ளன. மலைக்காவல் தெய்வமான இவருக்கு இரத்தினகிரீசுவரருக்குத் தீபாராதனை ஆனவுடன், தீபாராதனை செய்கிறார்கள்.

குளித்தலையிலிருந்து இடையர் ஒருவர் தினமும் இங்கு வந்து ஒரு குடம் பசும் பாலை அபிஷேகத்திற்கு அளித்து வந்தார். ஒருநாள் அப்பால் குடத்தை ஒரு காக்கை கவிழ்த்து விடவே, இந்த இடையர் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அப்போது இறைவன் அங்குத் தோன்றி, ” அன்பனே, வருந்த வேண்டாம். இம்மலை எனது வடிவே யாகும். அதன் மீது சிந்திய பால் என்னை அபிஷேகித்தது போலாகும் ” என்றருளி அக்காக்கையை எரித்தார். அது முதல் இங்குக் காக்கைகள் பறப்பதில்லை. காகம் அணுகா மலை என்றும் பெயர் வந்தது.
சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் ஜோதிர் லிங்கமாகவும், மலை முழுவதும் மாணிக்க மயமாகவும் காட்சி அளித்து ஒரு பாறையின் மீது பொன்னை அளித்தான் என்று தல வரலாறு கூறுகிறது. அப்பாறை, ” பொன்னிடும் பாறை ” எனப்படுகிறது. சித்திரை பிரமோற்சவத்தில் ஐந்தாம் நாள் விழாவில் இவ்வரலாறு இடம் பெறுகிறது

துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும்,சப்த கன்னிகைகளும் இருப்பதை மலையில் பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார் என்றும் கூறுவர்.

பூம்புகாரை நீங்கிய பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் என்று இறைவனை வழங்குவர்.

20180217_104527

மன்னர் வழிபட்டதால் சுவாமிக்கு இராஜ லிங்க மூர்த்தி எனப் பெயர் வந்தது. இம்மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறாது என்பர். வறண்ட காலங்களில் சகுனக் குன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்வதாகக் கூறுவர்.
ஒவ்வொரு நாளும் 8 கி,மீ. தொலைவிலுள்ள காவிரி ஆற்று நீரைக் குடங்களில் நிரப்பித் தலை மீது சுமந்து வருகின்றனர் பன்னிரண்டாம் செட்டியார் மற்றும் சோழிய வெள்ளாளர் மரபினர்.

சிவலிங்கப்பெருமான் மீது அபிஷேகித்த பால் சில மணிகளில் தயிராக மாறி விடுகிறது. பிற தெய்வங்களுக்கு அபிஷேகிக்கப்படும் பால் அவ்வாறு தயிராவதில்லை.
சித்திரையில் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள நவத் துவாரங்கள் வழியாக சூரியன் தனது கிரணங்களால் பெருமானை வழிபடுகின்றான்.

மாதந்தோறும் பௌர்ணமியன்று பக்தர்கள் மூலிகைகள் நிறைந்தஇந்த கிரியை வலம் செய்கின்றனர். . அவ்வாறு வலம் வரும்போது காட்டுப் பிள்ளையார் கோயிலருகில் நின்று கொண்டு மாணிக்க மலையனே என்று உரக்க அழைத்தால் எதிரொலி கேட்கிறது.

                   திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசல மகாத்மியம்

20180218_100223

தலத்தின் இருப்பிடம்: திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கில் சுமார் 40
கி.மீ. தொலைவில் நாமக்கல் சாலையில் முசிறிக்கு அருகில்
காவிரியின் வடகரையில் உள்ளது  திரு ஈங்கோய் மலை என்னும்
தலம். திருஞானசம்பந்தராலும், நக்கீரராலும் பாடப்பெற்ற 
இத்தலத்தில் மாலையில்  வழிபாடு செய்வது சிறப்புடையது
என்பர்.

தல வரலாறு:
தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார  முனிவர்,
ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , ” தாங்கள் முன்பு
ஒருமுறை  மரகதாசல மகிமை பற்றிச் சுருங்கக் கூறி 
அருளியுள்ளீர்கள். தற்போது அதனை  விரிவாகக் கூறி 
அருளவேண்டும் ” என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான்  அத்தலப் பெருமையை  விரிவாகக்கூறியருளினார்.

முன்பொருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள்
யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்பொழுது 
ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு
மலையைச் சுற்றிக்கொண்டு , வாயுவைச் செல்ல முடியாைமல்
தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற  இடங்களில் உயிர்கள் மடியத்
தொடங்கின. தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய
ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு
செல்லும்படி வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு
வேகத்தோடு , அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள்
ஐந்தைப் பிடுங்கியவாறு தென்தி நோக்கிச் சென்றான் .
அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின.
அவற்றுள் ஒன்ரே மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின்
அம்சமாகப் புளியமரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும்
கூறுவர். பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப்  பூஜித்து
 சிருஷ்டித் தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான்.விஷ்ணுவும் இப் பெருமானை  வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும்  அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை , ரோமச ரிஷி
ஆகியோரும் நற்கதி பெற்றுள்ளனர்.

20180218_101943

பிரமன் வழிபட்டது : தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க
வேண்டி, கிருத யுகத்தில் பிரம தேவன் இத் தலத்தை  அடைந்து
பிரம  தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம  ஞானம் எனத் தொடங்கும்
மந்திரத்தை  ஜபித்தவனாக அதில் ஸ்நானம் பசய்து, திருப் புளிய
மர நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப்பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தானங்களின் 
பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள் இம்மை
மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர். இங்கு
சிவராத்திரி தினத்தில் பிரம  தீர்த்த ஸ்நானம் செய்து நறு
மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை  அர்ச்சித்தால், பிற 
தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு
ஒப்பாகும். புளியடியையும் பெருமானையும் ஒருங்கே  வலம்
வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள்.

முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள் . இங்கு  செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச்
செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளியவிருக்ஷத்தை  நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும். ஒ சனற்குமார  முனிவரே  ! இத்தலத்தை  நினைத்த நீரும்,அதன் மகிமைமயப் பகர்ந்த யானும் பாக்கிய சாலிகள் ஆனோம்.மறைகளின் முடிவாகவும், முக்தி தரவல்ல புண்ணிய
மூர்த்தியாகவும், கற்பகக் கொழுந்தாகவும் அடியார்கள் பொருட்டு நின்மலனாகிய பரமேசுவரன் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.” என்று நந்தியெம்பெருமான்  அருளிச் செய்தார்.

உமை வாம  பாகம் பெற்றது : .ஒரு காலத்தில், பிருங்கி
ரிஷியானவர் அம்பிகையைத் துதியாைமல் சிவனை  மட்டுமே 
துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை ,
மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப்
பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத்தவம் செய்து வந்தாள்.
கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி ,
அவள் வேண்டியபடியே  தனது நீங்காத பாகமாக  ஏற்றதால்
அர்தநாரீசுவரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும்
அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம்
வரவே , தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும்
சக்தியை  இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் ,தண்டம் போன்ற 
கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.

இத்தலம் போக -மோக்ஷங்களைத்  தரவல்லது.. கார்த்திகை  சுக்கிர
வாரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயாசான்னம் தானம்
செய்தால் , துன்பங்கள் எல்லாம் நீங்கும். நவராத்திரியின் போது
வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின்
பாதங்களை  அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள்.
இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில்
உயர்ந்தவனாவான். பெருமானையும் பெருமாட்டியையும் 
நியமத்துடன் வழிபட்டால், தம் பித்ருக்களுடன் சிவலோகத்தை 
அடையலாம். எனவே ,இத்தலப் பெருமையை அளவிட்டுச்
சொல்வது அரிது.

20180218_103558

அகத்தியர் வழிபட்டது :முனிவர்களால் வணங்கப்பெறும்
அகத்தியர் தன் சிஷ்யர்களாகிய பிற முனிவர்கலோடு ஒரு
சமயம் தீர்த்த யாத்திரையாக திருக் கேதாரம் முதல்
திருவிராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது
வழியில் கடம்பவனத்மத அடைந்து காவிரியிலிருந்து
பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து கடம்பவன நாதருக்கு
அபிபஷகம் செய்து,மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்.
பின்னர், அருகிலுள்ள இரத்தினகிரிக்குச் சென்று,சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து புனிதநீரை  மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து,    மலர்களால் அலங்காரமும் அர்ச்சனையும் செய்து வேத கீதங்களால் துதித்து,ஆலயத்தை  மும்முறை வலம் வந்து, மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார்.

மாலைக் காலம் வருவதறிந்த அகத்தியர், காவிரியைக் கடந்து,
மரகதாசலத்தை  அடைந்தார். அந்த  வேளையில் கோயில்
அர்ச்சகர்கள் பூஜையை  முடித்துக் கொண்டு ,  ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர்,இறைவனைத் தரிசிக்க முடியாைல் போனது பற்றி  மிக்க வருத்தம் அடைந்தார். அப்போது  ஒரு அசரீரி  வாக்கு ஒலித்தது: “மா பாதகங்களையும் தீர்த்து அருள் புரியும் இம் மலையை அடைந்த பிறகும்  ஏன் துயரம் அடைகிறாய் ? பசுக்கள்,பக்ஷிகள்,மிருகங்கள் ஆகியவை  எந்தக் காலத்தில்இங்கு வந்தாலும் குற்றமில்லை . அவற்றிலும், காற்று,ஈ, பசு, அக்கினி, நெய் , நெல், யோகி ,அந்தணர் ஆகியோர் எக்காலத்திலும் அசுத்தமாவதில்லை.ஆகவே  நீ இப்போது ஈ உருவில் உள்ளே  சென்று இறைவனை வழிபடுவாயாக. இறைவனருளால் அவரது திருமேனியில் தங்கிய தக்ஷகன் என்னும் நாகராஜன் இம்மலையின் மேற்புறத்தில்  சர்ப்ப நதி வடிவில் இருக்கிறான் .  அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப் பெறுவதோடு மீண்டும் பழைய உருவையும் பெறுவார்கள். ஆகவே  நீ அத்தீர்த்தத்தை  நாடிச் சென்றால்  உன் கருத்து நிறைவேறும் ” என்று கூறியவுடன் , மகிழ்வுற்ற அகத்தியர்,  இறைவனைத் துதித்தார். பெருமானது கருமணயினால், அவரது கண்டத்தில் இருந்த தக்ஷகன் , நதி ரூபமாக ஆகிக் காவிரியோடு கலந்தது. அச்சங்கமத்தில் ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெறவேண்டி 
அகத்தியர் ஸ்நானம் செய்தவுடன் ஈயுருவம் பெற்றார்.
இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாரத்
தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார்.
பிறகு வெளியில் வந்து சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்தவுடன்
முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம்
சென்றடைந்தார் . அது முதல் இம் மலை, ஈங்கோய் மலை  எனப்
பெயர் பெற்றது. வைகாசி மாதப் பௌர்ணமியில் அகத்தியர் சித்திகள் பெற்றதால், அவ்வாறு அந்தநாளில் சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்து இயன்ற அளவு தானங்கள் செய்தால் பாவங்கள்
நீங்கப் பெற்று, விரும்பிய சித்திகள் அனைத்தும் கைகூடும்.

வீதி ஹோத்திரன் முக்தி பெற்றது  : கிருத யுகத்தில் நர்மதை  நதி
தீரத்தில் அக்னிசர்மா  என்ற அந்தணர் சிவபிரானை  விதிப்படி
வழிபாட்டு வந்தார். அவருக்கு வ ீவீதிஹோத்திரன்,தூமகந்தன்,
மேதாவி ஆகிய மூன்று சீடர்கள் இருந்தனர். ஒருநாள்
அக்னிசர்மா ,வீதிஹோத்திரனை அழைத்து ” இன்று நான்
செய்யவிருக்கும் பிதுர் சிரார்தத்திற்குத் தேவையான பாலைக்
கொண்டு வருவாயாக ” என்றார்.வீதிஹோத்திரனும்  தனது
வீட்டிற்குச் சென்று தர்மகேது  என்னும் தனது தந்தையிடம் இது
பற்றிக் கூறினான். பிதாவானவர் வீட்டிலிருந்த பாலைக் குடத்தில்
நிரப்பி, ஆசிரியரிடம் கொடுக்குமாறு கூறினார். அக்குடத்தை 
எடுத்துச் செல்லும் வழியில் பசி மிகுந்ததால் வீதிஹோத்திரன்
குடத்திலிருந்த பாலை  ஒரு படி அளவு எடுத்துக் குடித்துவிட்டு
மீண்டும் குடத்தை  நீரால் நிரப்பிக் கொண்டு ஆசிரியரிடம்
சென்றான். இவனது செயலை  ஞானத்தால் அறிந்த ஆசிரியர்,
பிதுர் சிரார்தத்திற்குப் பழுது ஏற்பட்டதைக் கண்டு சினந்தவராக,
வீதிஹோத்திரனைப் பிசாசாக அலையுமாறு சபித்து விட்டு வேறு
பால் கொண்டு வந்து பிதுர் காரியத்தைச் செய்தார். 

பிசாசாகப் பலவிடங்களிலும் அமலந்த வ ீவீதிஹோத்திரனைக்
கண்ட கோபில முனிவர் அவனுக்கு இரங்கி, ” மிகக்
கொடியதான குருத் துரோகத்தை நீக்க வல்லது மரகதாசலம்
மட்டுமே ஆகும். எனவே  என்னோடு  அங்கு சென்று அங்குள்ள
சுதா புஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப்பெறுவாய்” என்றார்.
பாற்கடல் கடையப்பெற்றபோது அதிலிருந்து எழுந்த திவலை 
இங்கு வந்து விழுந்த வேகத்தால் இத்தீர்த்தம் உண்டாயிற்று
கோபில முனிவரும் அவநை மரகதாசலத்திற்கு அமழத்துச்
சென்று சர்ப்ப நதி சங்கமத்திலும் சுதா புஷ்கரணியிலும் நீராடச்
செய்தவுடன் வீதிஹோத்திரனது பாவம் நீங்கியது. இத்தீர்த்தத்தை 
நினைப்பது  தவமாகும் . மார்கழியில் பௌர்ணமியும் திருவாதிரை நக்ஷத்திரமும் கூடிய சுப தினத்தில் இதில் நீராடினால்
நற்பலன்கள் வாய்க்கும். இச்சரிதத்தைப் படிப்பவரும் கேட்பவரும்
பாவம் நீங்கப்பெற்றுச் சிவனருள் பெறுவர் .

தீர்த்தச் சிறப்பு ; தேவர்களும் அசுரர்களும் பாற்கதலைக் கடைந்தபோது  ஐராவதம், கற்பக விருக்ஷம்,காமதேனு , உச்சி
சிரவம், சிந்தாமணி ,மகாலக்ஷ்மி  ,அமிர்தம் ஆகியவை 
தோன்றின . ஆலகாலவிஷம் வெளிப்பட்டபோது  அனைவரும்
அஞ்சி ஓடிக் கயிலை  நாதனைச் சரண்  அடைந்தனர்.
உமாபதியான பரமேசுவரன் அனைவரிடமும் கருமண கூர்ந்து,
அவ்விஷத்தை  அருந்தி, கண்டத்தில் இருத்தி, நீலகண்டரானார்.
எழுந்த அமுதம் சிறு திவலைகளாகப் பல இடங்களில்
சிதறியபோது , ஒரு திவலை,மரகதமலையின்  வடபாகம் வந்து
வீ ழ்ந்தது. இப்புஷ்கரணியின் ஒரு துளி பட்டவுடன்  இறந்த
மிருகங்களும் ,பறவைகளும்கூட உயிர் பெற்றன . இத்தீர்த்தத்தை 
உட்கொண்டால் எல்லாவித விஷங்களும் நீங்கும். பிறவித்
துயரும் நீங்கும். இயமனும் இவ்விடத்தில் பொன்னி நதியின்
வடபுறம்  தீர்த்தம் அமைத்தான். அதில் மார்கழி மாத மங்கள 
வாரத்தில் நீராடினால் பிறவித்துயர் நீங்கும். பித்ருக்கள் மகிழ்வர்.
தீர்த்தக்கரையில் செய்யப்படும் தானங்கள் அளவற்ற பலன்
கொடுக்கும். அங்கு கிருஷ்ணனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் மாக
மாத பௌர்ணமி  ஸ்நான விசேஷம் உடையது. 

வைகாசி பிரமோற்சவத்தில் சித்திரை  நக்ஷத்திரத்தில் நடை பெறும் தேர்த் திருவிழாவைக் காண்போர் பெரும் பலனை 
எவ்விதம் சொல்ல முடியும் ? முத்து பவளம், ஸ்படிகம்,
ருத்ராக்ஷம் ஆகியவற்றால் ஆன மாலைகளைப் பெருமானுக்கு 
அணிவித்தால் சாயுஜ்ஜிய பதவி அடையலாம். தைப்  பூசத்தன்று
காவிரியில் நீராடி, ஈங்கோய் மலையை வலம் வந்தால்
உலகையே  வலம் வந்த பலன் கிட்டும். அவ்வாறு வலம் வந்தால்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு அசுவமேத யாகம் செய்த பலமனப்
பெறலாம். சுவாமி சன்னதியில் விளக்கேற்றினால் பேரறிவும் 
ஞானமும் வாய்க்கும். நந்தவனம் அமைத்தல், கீதங்கள் பாடுதல்,
சிறிது பொழுதேனும் அம்மலையில்  இருத்தல் ஆகியவற்மைச்
செய்தால் இம்மை மறுமைப் பலன்கள் யாவும் சித்திக்கும்.
இத்தகைய தொண்டர்கள் சிவபெருமானுடைய  திருவடி நீழலைப்
பெற்று உய்வார்கள் என்பது சத்திய வாக்கு என்று உமரத்தார் சூத
மா  முனிவர்.

நவசித்தர்கள் பூஜித்தது: சூத மா முனிவர் மேலும் கூறலானார்:
” முனிவர்களே, இத்தல மகாத்மியம் இரகசியமானது. தெய்வ
இலக்கணைமானது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. நாத்திகர்களுக்கு இதனைப்  பகர்ந்தால் மிகுந்த பாவத்திற்கு ஏதுவாகும். மரகத மலைக்கு ஒன்பது சிகரங்கள் ஏற்பட்ட வரலாற்மை இப்போது கூறுவோம்.

ஒருசமயம் திருக் கயிலாயத்தில் இறைவனது சன்னதியில் சித்தர்கள் ஒன்பது பேர் சென்று  , தவம் செய்வதற்கு 
ஏற்ற இடம் எது என்று கேட்டவுடன் , அம்மையப்பரும், ” சித்தர்களே ,
காவிரியின் வடகரையிலுள்ள மரகத கிரிக்குச் சென்று தவம்
செய்தால் யாம் அங்கு உங்களுக்குக் காட்சி அளித்து வேண்டிய
வரங்களை  நல்குவோம். இனிமேல் அச்சிகரம் ஒன்பது
முடிகளைக் கொண்டு விளங்கும் ” என்றருளினார். அது கேட்டு
மகிழ்ந்த சித்தர்கள் மரகதாசலத்தை அடைந்தவுடன் அம்மலைக்கு 
ஒன்பது முடிகள் உண்டாயின. இந்த அற்புதத்தைக் கண்டு
அதிசயித்த சித்தர்கள், காவிரியில் நீராடி, சிவபிரானை 
இடை விடாது கருத்தில் இருத்திப் பன்னிரண்டு ஆண்டுகள் தவம்
செய்தனர். அதன்பிறகு, வில்வ இலைகள், வெட்சி, புன்னை ,
அரளி, மாதுளை ,மந்தாரை  கோங்கு , இலவு ஆகியவற்றால்
அர்ச்சித்து, பஞ்ச கவ்யங்களாலும், இளநீர்,சந்தனம் ஆகிய
அபிஷேகப் பொருள்களாலும் விதிப்படி பூஜித்தனர். பழ வகைகள்,
சித்திரான்னம், ஆகிய நிவேதனங்கள் செய்து, சத்ரம்,
சாமரம்,நிருத்தம்,கீதம்,தாம்பூலம் ஆகிய உபசாரங்கள் செய்து
பரம சிவனைத் தோத்திரம் செய்து வணங்கினார்கள்.

சித்தர்களின் தவத்திற்கு இரங்கி சிவபிரான் காட்சி தந்ததும்,
ஒன்பது சித்தர்களும் விழிகள் ஆனந்த நீர் பெருகக் கைகளை  
உச்சியில் கூப்பியவாறு, பரமனது பாத கமலங்களில் வீ ழ்ந்து
வணங்கித் தோத்திரம் செய்தனர். ” தேவாதி தேவா , மரகதாசல
நாயகா, ஞானமூர்த்தியே , பசுபதியே,   பரமயோகியே ,
மும்மூர்த்திகளுக்கும் மேலானவனே , புவனாதிபதியே , அன்பர்க்கு
அன்பனே , வாக்கும் மனமும் கடந்த ஆனந்த மயனே , கருணை 
வடிவே , பிரணவப் பொருளே  , நினது திருவடிகளை  வணங்கி
உய்ந்தோம் . உம்மையன்றிப் பிறிதொன்றையும் வேண்டோம் .
நின்னடிக்கு அபயம்” என்று பலவாறு போற்றினர். உலகோர் 
உய்யும் வண்ணம் இவ்வீங்கோய் மலையில் உமாதேவியாருடன்
தாங்கள் எப்பொழுதும் வீற்றிருக்க வேண்டும். இங்கு வரும்  அடியார்கள் வேண்டிய யாவும் சித்திக்க அருள வேண்டும்.
அறுபத்துநான்கு கலைகளும் எங்களுக்கு எளிதில் விளங்குமாறு 
கருணை  புரிய வேண்டும் ” என்று வரம் வேண்டினர். அவ்வாறே 
ஆகுமா று வரமருளிய பெருமான்  அவர்களை  எப்போதும் 
அம்மலையிலேயே இருக்குமாறு  திருவருள் புரிந்தார். அதனால்
அவர்கள் இன்னமும் அங்கு வசித்து வருகிறார்கள்  என்று
முனிவர் கூறினார்.

தேன் அபிஷேகச் சிறப்பு : முன்பு அகத்திய முனிவர் ,தானே ஈவடிவம் கொண்டு கானகம் சென்று, தேன் கூடுகளிலிருந்து பெற்ற தேனைக் கொண்டு வந்து பல்லாண்டுகள் மரகதாசலேசுவரரை 
அபிஷேகித்து வந்ததால் இம்மலை ஈங்கோய் மலை  எனப்பட்டது.
இப்பொழுதும் ஈ வடிவில் அகத்தியர், பெருமானைத் தேனினால்
எந்நாளும் அபிஷேகித்து வருகிறார்.வைகாசி,கார்த்திகை 
மாதங்களில் தேனபிஷேகம் செய்வதால் அவ்வாறு செய்பவர்க்கும் அவரது சுற்றத்தார்க்கும் அளவற்றபுண்ணியம் கிடைக்கும்.

முன்பு ஒரு குரங்கானது இங்குள்ள (திருப்) புளிய மரத்தின்
மீதிருந்த தேன் கூட்டை இழுக்கும் போது அங்கிருந்த தேனீக்கள்
வெளிப்பட்டு அக்குரங்கைக் கடித்தன. அத்துன்பத்தால்
குரங்கானது, தன் கையிலிருந்த தேன்கூட்டைக் கை  நழுவ
விட்டு விட்டது. அக்கூடானது அம்மரத்தின் கீழிருந்த
சிவலிங்கத்தின் மீது விழவே , அதில் இருந்த தேன்,
பெருமானுக்கு அபிஷேகமாயிற்று. அப்புண்ணியத்தால்
அக்குரங்கானது மறு பிறப்பில்  சுப்பிரபன் என்ற அரசனானது.
அரசனான சுப்பிரபன், தன் சுற்றமும் படையும்  உடன் வர
ஈங்கோய் மலையை அடைந்து  தானங்கள் பல செய்து,
திருப்பணிகள் செய்து, நாள் தோறும் சுவாமிக்குத் தேன்
அபிஷேகம் செய்வித்தான்,மற்றொரு சமயம் . சுப்பிரப
மகாராஜாவுக்கு எங்கு தேடியும்  தேன்கிடைக்காமல் போகவே,,
மனம் வருந்தித் தனது காதுகளை  வாளினால் அறுக்கத்
தொடங்கும்போது  ரிஷப வாகனனாய் மரகதாம்பிகையுடன்
இறைவன் காட்சி கொடுத்து அவனைக் கயிலையில் சிவ
கணங்களுக்கு அதிபன் ஆக்கினார். விண்ணவரும் மண்ணோரும் 
இவ்வதிசயத்தைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்திரன் மந்திரோபதேசம் பெற்றது  : முன்னர் கௌதம  ரிஷியின்
சாபம் பெற்ற தேவேந்திரன் , நாணம் கொண்டு ஒரு வாவியினுள்
மறைந்திருந்தான். பின்னர் நாரதரின் அறிவுரைப்படி
மரகதாசலத்தை அடைந்து அங்கிருக்கும் அகத்திய முனிவரை 
வணங்கி, அவரிடம் மந்திரோபதேசம் பெற்றான் . அம்மந்திரம்
மா பாவியர் தியானித்தாலும் கொடிய பாவங்களையும் நீக்க
வல்லது. அதற்கு ரிஷி அகஸ்தியர். சந்தஸ், அனுஷ்டுப்.
தெய்வம், கிருபாசமுத்திரைாகிய மரகதாசல நாதர்.
அம்மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை  ஜபிக்குமாறு இந்திரனிடம்
அகத்தியர் கூறியருளினார். இந்திரனும் அதன்படியே , அதனைப்  பல்லாண்டுக் காலம் ஜபித்து வந்தான். அவனது
தவத்தைக் கண்ட இறைவன், அவன் முன்பு காட்சி
அளித்தருளினார். பரவசப்பட்டவனாய் இந்திரன், சிவபெருமானைத் தோத்திரம் செய்தான்: ஓ நின்மலா, நான்மறை முடிவே ,உலகங்களுக்கு அதிபதியே , ஒப்பற்ற பரம்பொருளே , பார்வதி நாதா, நின் பாதங்களைச் சரண் அடைந்தேன். கொடியேனது  பாவங்களைத் தாங்கள்தான் போக்கி அருளி நற்கதி தர வேண்டும்” என்று மனமுருகி வேண்டினான். சிரத்தின் மீது
கைகளை அஞ்சலி செய்தவனாக, ” பெருமானே,கௌதமரின்
சாபம் நிவர்த்தி ஆகவேண்டும். அடியேன் தேவரீரது  திருவடிகளை 
எக்காலமும் மறவாத வரம் தர வேண்டும். என்று பிரார்த்தனை 
செய்ய, பரனும் அவ்வாறு  ஆகட்டும் என வரம் அளித்தருளினான். பாவம் நீங்கப் பெற்ற  இந்திரன்,திருக்கோயிலைத்  திருப்பணி பலவும் செய்து, வைகாசி மாதத்தில் உற்சவமும் செய்வித்தான்.
அமாவாசை ,பௌர்ணமி  கிரகண காலங்கள், சிவராத்திரி,
பிரதோஷம், ஆகிய நாட்களில் மரகதாசல மூர்த்திக்குப்
பாலினால் அபிஷேகம் செய்விப்பது பெரும் புண்ணியமாகும் .
அது சிறந்த சிவபுண்ணியமாக  வளர்ந்து நற் பலன்களைக் கொடுக்கும்  என்பது சத்திய வார்த்தை  .”
” புண்ணியசாலிகளான முனிவர்களே , நாம் முன் செய்த
தவப்பயனால் இம்மகாத்மியத்தை  ஓதவும் .கேட்கவும் பெற்றோம் 
இதனை ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் படிப்போரும்
கேட்போரும் மரகதாசல மூர்த்தி திருவருளால் இம்மை
மறுமைப் பலன்கள் அனைத்தும் பெறுவர் . நிறைவாக,
பரமேசுவரனது திருவடி நீழலில் நீங்காது வீற்றிருந்து முக்தி
இன்பத்தைப் பெறுவர் .” எனக் கூறி  அருளினார்.
                                                        *********************

வானத்து உயர் தண் மதி தோய் சடைமேல்  மத்த மலர்  சூடித்
தேன் ஒத்தன மென்மொழியாள் மான் விழியாள் தேவி  பாகமாக்
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே .
                                        —- திருஞானசம்பந்தர் தேவாரம்
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்தேறி — நொடியுங்கால்
இன்னதென அறியா  ஈங்கோயே  ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை . 

              —– நக்கீரர் அருளிய திருஈங்கோய் மலை  எழுபது

********************************

This entry was posted in Resources. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.