காரைக்கால் அம்மையார்

karaikal ammaiyar2

காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்பவரது மகனான பரம தத்தனே ஏற்றவன் எனக் கருதினான் . முதியோர்கள் பலரும் காரைக்கால் நகருக்கு வந்து, நீ பெற்றெடுத்த மகளைப் பரமதத்தனுக்கு மணம் புரிவாயாக என்றார்கள். அதன்படி, இருவீட்டாரும் சம்மதித்து, மண நாள் நிச்சயமானதும் மண ஓலை மூலம் உற்றார் உறவினர்களுக்கு அறிவித்தனர்.
மயில் போன்ற புனிதவதியாருக்கும் காளை போன்ற பரமதத்தனுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. தனது அருந்தவப்புதல்வியை நாகைக்கு அனுப்ப மனம் வராத தனதத்தன், தன் மகள் இல்லறம் நடத்துவதற்காகக் காரைக்கால் நகரிலேயே ஒரு அழகிய மாடம் அமைத்து அவ்விருவரையும் அங்கு வசிக்கச் செய்தான். இவ்வாறு திருமணம் இனிதே நடந்தேறியபின்னர் ,நிதிபதி, நாகைக்குத் திரும்பினான். புனிதவதியாரும், சிவபெருமான் கழலுக்கு அன்பு செய்தவராக, மனையறத்தின் பண்பு வழுவாமல் இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.
karaikal ammaiyarசிவனடியார்கள் வந்தால் அவர்களை உபசரித்து,உணவு அருந்தச் செய்து,அவர்களுக்கு ஆடைகளும் ஆபரணங்களும் வழங்குவதை நியமமாகக் கொண்டிருந்தார் புனிதவதியார். அவ்வாறு இருந்து வரும் நாட்களில், ஒரு சமயம், பரமதத்தனிடம் இரு மாங்கனிகளைச் சிலர் கொண்டு வந்து தந்தனர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன் அவர்களைத் தனது மனைக்கு அனுப்பி,அக்கனிகளைப் புனிதவதியாரிடம் கொடுக்குமாறு கூறினான். அதன்படி வந்தவர்களும்,அவ்விரு மாங்கனிகளையும் புனிதவதியாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
பன்னகாபரணரான சிவபெருமானது அடியார் ஒருவர் மிகுந்த பசியோடு அவ்வேளையில் புனிதவதியாரின் மனையை வந்தடைந்தார். அவரது பாதங்களை வணங்கி வரவேற்ற புனிதவதியார், அவரது பசியைத் தீர்க்கக் கருதி, விரைந்து இன்னமுதாக்கி , இதனை விடப் பேறு உண்டோ என்று கருதியவராக அடியாருக்கு அமுது செய்வித்தார். பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாரது இலையில் படைத்தார். பசி நீங்கிய அடியார், மனமகிழ்ந்து அவரது செயலை உவந்தவராக அங்கிருந்து நீங்கினார்.
வீடு திரும்பிய பரமதத்தன், நீராடிவிட்டு உணவருந்த வந்தபோது,கற்பில் சிறந்த புனிதவதியார் அவனுக்கு அமுது செய்விக்கலானார். அப்போது இலையில் இட்ட மாங்கனியை உண்ட வணிகன், தான் அனுப்பிய மற்றொரு கனியையும் இலையில் இடுமாறு பணித்தான். அதனைக் கொண்டு வருவார் போல அகன்ற புனிதவதியார் மனம் தளர்ந்து, இறைவனை வேண்டி நிற்கவே, பெருமான் அருளால் அவரது கைகளில் அதி மதுரமான மாங்கனி ஒன்று வந்தடைந்தது. அதனைப் பெற்று மிகவும் மகிழ்ந்த புனிதவதியார் உடனே விரைந்து சென்று கணவனாருக்கு அதனைப் படைத்தார். அக்கனியின் சுவை மூவுலகிலும் இருத்தல் அரியது என உணர்ந்த வணிகன், புனிதவதியாரிடம் அக்கனி எவ்வாறு கிடைத்தது என்று உரைக்குமாறு கேட்டான்.
கணவனிடம் உண்மையைக் கூறுவதே முறை என்று எண்ணியவராகப் புனிதவதியார் நடந்தவற்றை எடுத்துக் கூறி, ஈசன் திருவருளே மற்றொரு கனியையும் தந்தது என்றார். அப்படியாயின் அதே போன்ற அதிமதுரக் கனியை ஈசனிடம் மீண்டும் பெற்றுத் தருவாய் என்று பரமதத்தன் கூறினான். அதனைக் கேட்ட புனிதவதியார், இறைவனைத் துதித்து ” பெருமானே, இப்போது தேவரீர் மற்றோர் கனியை வழங்கி அருளாவிட்டால் எனது உரை பொய் என்று ஆகி விடுமே” என்றார். அப்போது,யாவரும் அதிசயிக்கத்தக்க வகையில், சிவனருளால் ஒரு மாங்கனி அவரது கையை வந்தடைந்தது . அதனைத் தன் கணவனாரிடம் புனிதவதியார் கொடுத்தவுடன் பரமதத்தன் அதனைப் பெற கைகளை நீட்டுயபோது, அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்ட வணிகன் அஞ்சி நடுங்கினான்.

புனிதவதியாரை மனைவியாகக் கருதாமல் தெய்வத்தன்மை வாய்ந்த பெண்ணாகக் கருதி, இனி மேல் அவருடன் கணவனாக வாழ்வது தகாது என எண்ணி ,. கடல் கடந்து வணிகம் செய்வது கொண்டு வருவதாகக் கூறி விட்டு, அங்கிருந்து நீங்கி, சுற்றத்தார் துணையுடன் மரக்கலம் ஒன்றைக் கொண்டு கடல் கடந்து ஒரு நாட்டிற்குச் சென்று பொருளீட்டிய பின்னர்,மீண்டும் நாகைக்கு வந்து சேர்ந்தான். அந்நகரில் மற்றோர் பெண்ணை விவாகம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றான். புனிதவதியாரைத் தெய்வமாகவே எண்ணிய வணிகன் அப்பெண் குழந்தைக்குப் புனிதவதி என்றே பெயரிட்டான்.
கடல் கடந்து வாணிபம் செய்து மீண்ட பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருப்பதாகச் செய்தி வரவே, புனிதவதியாரை அவரது சுற்றத்தார்கள் ஒரு சிவிகையில் ஏற்றி, பரமதத்தன் இருந்த நகருக்குக் கூட்டி வந்தனர். அவரது வருகையை அறிந்து அச்சம் அடைந்த வணிகன், தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் புனிதவதியாரது இருப்பிடத்தை அடைந்தான். புனிதவதியாரது புனித அடிகளில் மனைவி-குழந்தையுடன் வீழ்ந்து வணங்கி,” நாங்கள் வாழ்வது உமது அருளால்” என்றான்.
இவ்வாறு கணவன் ,தன்னை வணங்குவதைக் கண்டு அச்சமடைந்த புனிதவதியார் , சுற்றத்தார்கள் பக்கத்தில் சென்று ஒதுங்கி நின்றார். பரமதத்தனை ” இவ்வாறு செய்தல் தகுமோ ” எனக் கேட்டார்கள் சுற்றத்தார்கள். அவர்களை நோக்கிய வணிகன், ” இவர் மானுடர் அல்லர். பெரும் தெய்வம். ஆகவே அவரது பெயரையே இக்குழந்தைக்கு இட்டேன். நீங்களும் அவரைப் போற்றிப் பணியுங்கள்” என்றான். அதனைக் கேட்ட சுற்றத்தாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனைக் கண்ட புனிதவதியார், ” கணவனுக்கென்றே இவ்வுடலைத் தாங்கி வந்தேன். இந்த வார்த்தைகளைக் கேட்ட படியால்,, இவ்வுடலின் தசைப் பகுதியைக் கழித்து விட்டுப் பேய் வடிவம் அடியேன் பெறுமாறு அருள் செய்வாய்” என்று பரமனை வேண்டி நின்றார்.இறைவனும் அவர் வேண்டியபடியே புனிதவதியாரைப் பெண் பேயாக்கினார் மண்ணும் விண்ணும் வணங்கும் பேய் வடிவத்தை ஈசனருளால் பெற்றார். எங்கும் மலர் மழை பொழிந்தது. தேவ துந்துபிகள் முழங்கின. முனிவர்களும் வணங்கினர். சுற்றத்தார்கள் தொழுது வணங்கியவராக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
பேய் வடிவம் பெற்றவுடன் இறைவனை, அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணி மாலை ஆகிய துதிகளால் பரவினார் பேயார். பேய் வடிவைக்கண்டவர்கள் அஞ்சி விலகினார். தனது உருவம் எதுவாக இருந்தால் என்ன, ஆண்ட நாயகனாகிய சிவபெருமான் என்னை அறிவார். அதுவே போதுமானது என்ற சிந்தையுடன், கயிலாயத்தை நோக்கிச் சென்றார் புனிதமான வடிவம் பெற்ற மன நிறைவுடன். கால் நடை தளர்ந்ததும்,தலையினால் நடந்து சென்றார்.

அவ்வெள்ளி மலையின் மீது அவ்வாறு ஏறி வருவதைக் கண்ட உமாதேவியார், இறைவனை நோக்கி , இவ்வாறு பேய் வடிவில் வருவது யார் என்று வினவ, பெருமான், ” இவள் நம்மைப் பேணும் அம்மை” என்று உலகெலாம் அறியும் வகையில் அருளிச் செய்தார். இவ்வாறு கயிலாய நாதன் அருளவும், பேயார் , அவ்வருளை வியந்து போற்றி, ” அப்பா” என்று பிரானது செம்பொற் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். வணங்கிய அம்மையாரது அன்பு கண்டு மகிழ்ந்த இறைவன், ” நீ வேண்டும் வரம் யாது ” என்று வினவ, அம்மையார், ” தருமமே வடிவாகிய இறைவா, என்றும் குறையாத பேரன்பு கொண்டு உன்னை வழிபட வேண்டும். பிறவாத நிலை பெற வேண்டும். ஒருக்கால் பிறந்து விட்டாலும் உன்னை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் . நான் மகிழ்ச்சியோடு உன்னைப் பாடி, நீ ஆடும்போது உனது திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று வரம் வேண்டினார் அம்மை.
karaikal ammaiyar4” தென்திசையில் உள்ள திருவாலங்காட்டுக்குச் சென்று அங்கு நாம் ஆடும் மாநடம் கண்டு ஆனந்தமயமாகி நம்மைப் பாடுவாய் ” என்று இறைவன் கட்டளை இட, காரைக்கால் அம்மை திருவாலங்காட்டைத் தலையினால் நடந்து சென்றடைந்தார். அங்கு அண்டம் உற நிமிர்ந்தாடும் அப்பனை மூத்த திருப்பதிகம் பாடி வணங்கினார். பின்னர் ஒரு பங்குனி சுவாதி நன்னாளன்று ஆடும் சேவடிக்கீழ் என்றும் இருந்து பாடிக்கொண்டிருக்கும் உயர் நிலை இறையருளால் பெற்றார்.
காரைக்காலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் மாங்கனி விழா மிகச் சிறப்பாக நடை பெறுகிறது. ஊரின் மத்தியிலுள்ள சிவாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சன்னதி இருக்கிறது. புராணப்படி, காரைக்கால் அம்மையாரது வரலாறு இவ்விழாவின் போது நடத்திக் காட்டப்படுகிறது.
IMG_20170708_223628புனிதவதியார் ஜனனம், பரமத்தனுடன் திருமணம் ,புனிதவதியாரின் இல்லம் தேடி சிவனடியார் மிக்க பசியுடன் வருதல் போன்ற ஐதீக காட்சிகள் நமக்கு முன்னே தோன்றுகின்றன. பிக்ஷைக்காக பிக்ஷாடனரையே ஊர்வலமாக எழுந்தருளச் செய்கிறார்கள். பவழக் கால் சப்பரத்தில் பெருமான் எழுந்தருளும்போது வழி நெடுகிலும் மக்கள் தீபாராதனை தட்டில் மாம்பழங்களையும் சேர்த்து சமர்ப்பிக்கின்றனர். விழாவுக்கு வரும் பக்தர்களும் மாம்பழங்களைப் பிரசாதமாகப் பெற்று மகிழ்கின்றனர். சுவாமியை நோக்கியவாறே அதிகார நந்திகேசுவரரும் எழுந்தருளுகின்றார்.
அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் பரமதத்தனைத் தரிசிக்கிறோம். அந்த இடம் காசுக் கடைத் தெரு என்ற வணிகர் வீதியாக அக்காலத்திலிருந்தே வழங்கப்பட்டது. மாலையில் பரமதத்தன் கடல் தாண்டி போவதற்காகப் பெரிய படகு ஒன்றை ஊர்வலமாக நகரில் எடுத்து வருகிறார்கள். மின் விளக்குகளால் அது அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இரவில் பரமதத்தனின் இரண்டாவது திருமணத்தை நடத்திக் காட்டுகிறார்கள். செய்தி அறிந்த புனிதவதியார் பல்லக்கில் எழுந்தருளுகிறார். பரமதத்தன், தன் மனைவி மக்களுடன் அவரை மும்முறை வலம் வந்து வணங்குகின்றனர். விடியற்காலை சுமார் 5 மணி அளவில் காரைக்கால் அம்மையார் யாவரும் போற்றும் பேய் உருவத்துடன், ஊரிலுள்ள சிவாலயத்தை நோக்கி எழுந்தருளும்போது, சுற்றிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. மங்கலான தீவர்த்தி ஒளியில் மட்டுமே அம்மையாரைத் தரிசிக்க முடியும்.

சிவாலயத்தை அடைந்ததும், அம்மையாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான அன்பர்கள் வந்திருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு பரவசமாகின்றனர். வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் காணவேண்டிய அற்புத தரிசனம் இது. ஆதி அந்தமில்லா இறைவனின் திருநடனத்தின் போது அருகே இருந்து கீதம் பாடும் பேறு பெற்ற அம்மையின் மலர்த்தாள் போற்றுவோமாக.

This entry was posted in Nayanmars. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.