நாயன்மார் சரித்திரம்- 3 (தொடர்ச்சி)
மும்மையால் உலகாண்ட சருக்கம்
மூர்த்தி நாயனார்
பொதிகை மலையைக் கொண்டதும்,தாமிரபரணி ஆற்றினால் வளம் பெறுவதும், கொற்கைத்துறையில் முத்துக்கள் விளைவதும் ஆகிய சிறப்புக்களை உடையது பாண்டிய நாடு. திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலர் போல விளங்குவது அதன் தலைநகராகிய மதுரை ஆகும். முச்சங்கம் வளர்த்த இந்நகர், சங்கப்புலவர்களில் ஒருவராக இறைவனே வீற்றிருந்த பெருமையை உடையது. மீனாக்ஷி தேவியுடன் சோமசுந்தரேசுவரப் பெருமான் எழுந்தருளியுள்ள திரு ஆலவாய் என்னும் திருக்கோயில் இந்நகருக்குத் தனிச்சிறப்பை வழங்குவது ஆகும்.
சிவராஜதானியாகத் திகழும் மதுரையம்பதியில் வணிகர் குலம் செய்த தவப்பயனாக மூர்த்தியார் என்பவர் அவதரித்தார். அவர் சிவபெருமானிடம் அளவற்ற அன்புடன் வாழ்ந்து வந்தார். பெருமானது திருவடிகளே தமது உறவும், நட்பும் செல்வமும் எனக் கொண்டு நாள்தோறும் திருவாலவாய்ப் பெருமானது திருக்கோயிலுக்குச் சென்று சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்தார். எவ்வாறானாலும் அப்பணியை விடாது செய்வது என்ற கொள்கை உடையவராக இருந்தார்.
அக்காலத்தில் வடுக வகுப்பைச் சேர்ந்த கர்நாடக அரசன் ஒருவன் தனது கடல் போன்ற சேனையுடன் வந்து மதுரையைக் கைப்பற்றினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன். சிவனடியார்கள் பல்வகைத் துன்பங்களுக்கு ஆளாயினர். அத்துன்பங்களுக்கிடையில் மூர்த்தியார் தனது சந்தனப் பணியை விடாமல் செய்து வந்தார். அதைக் கண்டு பொறாத மன்னன் அவருக்குச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதபடி செய்தான்.
மனவருத்தமுற்ற மூர்த்தியார் சோமசுந்தரக்கடவுளின் திருக்கோயிலை அடைந்து அங்கிருந்த ஒரு சந்தனம் தேய்க்கும் கல்லில் தனது முழங்கையை வைத்துத் தேய்த்தார். அதனால் இரத்தம் வெளிப்பட்டதோடு தோலும்,சதையும்,எலும்பும் தேயலாயின. அதைக் கண்டு பொறாத இறைவன், அசீரியாக,” நம்மீது உள்ள அன்பால் இவ்வாறு இனிச் செய்ய வேண்டாம். உனக்குத் தீங்கு செய்த கொடுங்கோலரசனின் ஆட்சி முடிவு பெற்று, நீயே இப்பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து, உலகைக் காத்து, சந்தனப்பணியையும் தொடர்ந்து செய்து, இறுதியில் நமது சிவலோகத்தை அடைவாயாக” என்று அருளிச் செய்தார். அதனைக் கேட்ட நாயனார், கல்லில் தன கையைத் தேய்ப்பதை நிறுத்தியவுடன், இறையருளால் காயங்கள் மறைந்து, கையும் முன்போல் ஆயிற்று.
அன்றிரவு திடீரெனக் கருநாடக மன்னன் மடியவே, அவனது மனைவியாரும்,உறவினர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மன்னனுக்கு மகவு இன்மையால், அமைச்சர்கள் பட்டத்து யானையைக் கண்ணைக் கட்டி வீதியில் விட்டு யாரை அழைத்து வருகிறதோ அவரையே அரசனாக்குவது என்று முடிவெடுத்தார்கள்.
வீதிகளில் சென்ற யானை திருக்கோயில் வாயிலிலே நின்று கொண்டிருந்த மூர்த்தியாரை அடைந்து அவரை வணங்கித் தன் முதுகில் ஏற்றி வைத்துக் கொண்டது. அதைக் கண்ட அமைச்சர்களும் மதுரை மாநகர மக்களும் அவரது திருவடிகளை வணங்கி நின்றனர். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மூர்த்தியாரை ஏற்றிச் சென்ற யானை முடி சூட்டும் மண்டபத்தை அடைந்தது. அதிலிருந்து இறங்கிய மூத்தியாரை அமைச்சர்கள் அரச சிங்காதனத்தில் அமர்த்தி வணங்கினர். யாக குண்டங்களில் தீ வளர்த்து மங்கலச் செயல்கள் புரிந்தனர். அவர்களை நோக்கிய மூர்த்தியார்,” சைவம் தழைப்பதானால் இந்நாட்டை ஆளச் சம்மதிக்கிறேன்” என்றார். அனைவரும் அதற்கு உடன்படுவதாக உறுதி ஏற்றனர். மூர்த்தியாரும், திருநீற்றை அபிஷேகப் பொருளாகவும் ருத்திராக்ஷத்தை ஆபரணமாகவும், சடைமுடியைக் கிரீடமாகவும் கொண்டு அரசாட்சியை ஏற்றார். எனவே இம்மூன்றையும் கொண்டு உலகாண்டதால் “ மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரர் இவரைச் சிறப்பித்தார்.
பின்பு முடிசூட்டு மண்டபத்தை நீங்கி வீதிகளின் வழியே யானை ஏறிச் சென்ர மூர்த்தியார் மதுரை நகர வலம் வந்தார். அரண்மனையை அடைந்து வெண்கொற்றக் குடையின் கீழ் செங்கோலாட்சி செவ்வனே செய்து வந்தார். நாட்டில் சமணர்களது ஆதிக்கம் நீங்கி சைவ சமயம் மேலோங்கியது. ஐம்புலன்களையும் வென்றவாகத் திகழ்ந்த மூர்த்தியார் நெடுங்காலம் அரசாட்சி செய்து மக்களைக் காத்து, சைவ நெறிகளைப் புரந்து பகைவர்களிடமிருந்து பாண்டியநாட்டைக் காத்தார். நிறைவாகச் சிவபிரானது திருவடி நீழலை அடைந்து ஆறாத இன்பம் பெற்றார்.
************************************************
முருக நாயனார்
காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருப்புகலூர் என்ற சிவத்தலம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. அங்கிருந்த பெரியோர்கள் இருளிலும் ஒளி தருமாறு மெய் முழுதும் திருநீற்று ஒளி விளங்கத் துலங்குபவர்கள். அவ்வொளியால் கரு வண்டுகளும் வெண்ணிறமாகத் தோன்றும். பறவைகளும்,வண்டுகளும் செய்யும் ஒலி பதிகங்கள் பாடுவதைப் போலத் தோன்றும். பொய்கைகளில் அலர்ந்த தாமரைகளிலிருந்து தேன் துளிகள் பொழிவதைக் கண்டால் அது பதிகங்களைக் கேட்டு உருகிய அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதைப் போலத் தோன்றும்.
திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் முருகனார் என்பவர் அவதரித்தார். நான்மறைகளைக் கற்று நாள் தோறும் ஓதி வந்ததோடு,வர்த்தமாநீசுவரம் என்ற அத்தலத்திலுள்ள சிவாலயத்திற்குத் தினந்தோறும் சென்று, பூக்களால் ஆன மாலைகளைப் பெருமானுக்குச் சார்த்தி வந்தார்.
விடியற்காலையில் துயில் எழுந்து, நீராடிவிட்டு நந்தவனத்திற்குச் செல்வார். அங்கு மலரவிருக்கும் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ நிலப்பூ ஆகிய மலர் வகைகளில் தக்க மலர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பூக்கூடைகளில் பறிப்பார். பிறகு அவற்றைத் தனி இடம் ஒன்றில் வைத்துக் கொண்டு கோவை மாலை,இண்டை மாலை, பத்தி மாலை, கொண்டை மாலை,தொங்கல் மாலை,சர மாலை ஆகிய பலவகை மாலைகளை அந்தந்தக் காலங்களுக்கு ஏற்றபடிக் கட்டுவார். பின்பு அவற்றைக் காலந்தோறும் வர்த்தமாநீசுவரருக்குத் தூய அன்போடு சார்த்தி அர்ச்சனைகள் செய்து வழிபடுவார். இடைவிடாது பஞ்சாட்சரத்தை ஜபம் செய்து கொண்டிருப்பார்.
அக்காலத்தில் உமையம்மையிடம் ஞானப்பால் உண்டு தேவார அமுதம் பொழிந்து வந்த திருஞான சம்பந்தப் பெருமான் அத்தலத்திற்கு எழுந்தருளியபோது முருக நாயனார் அவரைத் தாம் எதிர் கொண்டு வணங்கி வரவேற்று, சைவசிகாமணியாகிய சம்பந்தப் பெருமானைத் தமது இல்லத்திற்கு அழைத்து வந்து இருத்தி, உபசரித்தார்.திருநாவுக்கரசு நாயனாரும்,சிறுத்தொண்ட நாயனாரும் திருநீல நக்க நாயனாரும் இவருக்கு நண்பராயினர்.
பின்னர், தாம் செய்து வந்த சிவபூசையின் பயனாகத் திரு நல்லூர்ப் பெருமணத்தில் திருஞானசம்பந்தரின் திருமணத்திற்குச் சென்று அங்கு அடியார் பெருமக்கள் அனைவருக்கும் சிவலோகத்தியாகேசரின் அருளால் சிவச்சோதி தோன்றவே அதில் இரண்டறக் கலந்து பெருமானின் திருவடி நீழலை அடைந்தார்.
**********************************************
உருத்திர பசுபதி நாயனார்
காவிரியால் வளம் பெறும் சோழ நாட்டில் திருத்தலையூர் என்ற ஊர் உளது ிமுசிறிக்கு அருகிலுள்ளதிருத்தலையூரிலும் மயிலாடுதுறையிலிருந்து கொல்லுமாங்குடி வழியாகக் காரைக்கால் செல்லும் வழியிலுள்ள திருத் தலையூரிலும் உள்ள சிவாலயங்களில் உருத்திர பசுபதி நாயனாரது மூல விக்கிரகங்கள் உள்ளன.) அவ்வூரிலுள்ள அந்தணர்கள் வளர்க்கும் தீயினால் மழை பொய்யாது பருவம் தோறும் பெய்யும். அவ்வூரார்கள் சிவதருமம் செய்பவர்களாகவும் நீதிமான்களா கவும் திகழ்ந்தனர். அத்தலத்தில் அந்தணர்கள் குலத்தில் பசுபதியார் அவதரித்தார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாக விளங்கும் பஞ்சாட்சர மகா மந்திரத்தை உள்ளடக்கிய உருத்திரத்தை இடையறாது அதற்குரிய சுருதியுடன் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
அங்குள்ள தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு கைகளைத் தலை மேல் கொண்டு இரவும் பகலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரத்தை இடைவிடாது பல நாட்கள் பசுபதியார் ஓதி வந்தார். அதனால் தாமரையில் வீற்றிருக்கும் பிரம தேவனைப் போல் தோன்றினார்.
இங்ஙனம் ருத்திரத்தை இடையறாது ஒதி வந்தமையால் ருத்திர பசுபதியார் எனப்பட்டார். நாயனாரது அளவற்ற அன்பினால் மகிழ்ந்த ஈசனும் அவருக்கு இன்னருள் புரிந்தான். அதனால் ருத்திர பசுபதியார் சிவபுரத்தை அடைந்து பெருமானது இணையடி நீழலில் இனிதே அமர்ந்தார்.
********************************************************
திருநாளைப்போவார் நாயனார்
சோழ நாட்டில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள ஆதனூர் என்ற ஊரில் புலையர் சேரியில் நந்தனார் என்பவர் அவதரித்தார். அவ்வூர் இயற்கை வளம் மிக்கது. விண்ணளாவும் சோலைகளும், வாளை மீன்கள் பாயும் தாமரைத் தடாகங்களும் நண்டுகள் நிறைந்த வயல்களும் அங்கு விளங்கும். மாளிகைகளும் அடியார் கூட்டமும் நிறைந்த ஆதனூரில் உள்ள புலைப்பாடியில் உழவுத் தொழிலை மேற்கொண்டவர்கள் வாழ்ந்து வந்தனர். புல் கூரை கொண்ட அவர்களது இல்லங்கள் மீது சுரைக்கொடிகள் பரந்து விளங்கும். அங்கு கோழிக் குஞ்சுகளும் நாய்க் குட்டிகளும் சுற்றித் திரியும். வஞ்சி மரத்தடியில் பானைகளில் கோழிகள் அடை காக்கும். தென்னம் பொந்துகளில் நாய்க்குட்டிகள் உறங்கிக்கொண்டிருக்கும். விடியலில் சேவல்கள் கூவி உழவர்களை எழுப்பும். புலை மகளிர் நெல் குற்றும் போது பாடுவர். பறை கொட்டி அதற்குத் தக்கபடி ஆடுவர்.
புலைச்சேரியில் வாழ்ந்துவந்த நந்தனார் சிவபெருமானிடம் இணையற்ற அன்பு கொண்டு தமது மரபிற்கு ஏற்ற வகையில் சிவ தருமங்களைச் செய்து வந்தார். பெருமானது கோயில்களில் நாள்தோறும் முழக்கப்படும் இசைக் கருவிகளுக்குத் தேவையான தோலையும்,வாரையும் அளித்து வந்தார். பூசைக்குத் தேவையான கோரோசனையைக் கொடுத்து வந்தார். திருக்கோயிலின் வாயிலில் நின்றபடியே அன்பு மிகுதியால் ஆடியும் பாடியும் மகிழ்ச்சி அடைவார்.
ஆதனூரிலிருந்து புறப்பட்ட நந்தனார்,திருப்புன்கூர் சிவலோகநாதரிடம் பேரன்பு பூண்டு அத்திருக்கோயிலுக்குப் பல பணிகள் செய்தார். அங்கு ஓர் குளம் எடுத்தார்.திருக்கோயில் வாயிலில் இருந்தபடியே தலையாரக் கும்பிட்டுக் கூத்தாடினார். அங்கிருந்தபடியே பெருமானைத் தரிசிக்க விரும்பவே, அவருக்கு அருள் புரிய எண்ணி, சிவபெருமான் தமக்கு முன் இருந்த இடப தேவரைச் சற்றே விலகி இருக்க ஆணையிட்டருளினார். தரிசனம் கண்ட நந்தனார், ஆனந்தக் களிப்பால் ஆடியும் பாடியும் கோயிலை வலம் வந்து வணங்கினார். அருகிலுள்ள சிவத் தலங்களுக்கும் சென்று தனது பணியைச் செய்து வந்தார்.
ஒருநாள் அவருக்குத் தில்லையைக் காணும் விருப்பம் மேலிட்டது. அதே எண்ணத்தில் அன்று இரவு முழுதும் உறங்காதிருந்தார். அதே சமயம் தமது குலத் தன்மை அதற்கு ஏற்ப இல்லாததால் சோர்வடைவார். ஆனால், தில்லை செல்லும் வேட்கை அதிகரிக்கவே,” நாளைக்குப் போவேன்” என்று ஒவ்வொரு நாளும் சொல்லி வந்தார். அதனால் அவருக்குத் திருநாளைப் போவார் என்னும் நாமம் ஏற்பட்டது.
பல நாட்கள் இவ்வாறு கழிவதைக் கண்டு, எனது பிறவிப் பிணி நீங்குமாறு இன்றே தில்லைக்குச் செல்வேன் என்று ஒரு நாள் முடிவெடுத்தவராகத் தில்லை எல்லையை வந்தடைந்தார். உடனே நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கிப் பின்னர் அவ்வெல்லையை இரவு பகலாக வலம் வந்தார். தமது குலத் தன்மை கருதி, அந்நகருக்குள் செல்ல அஞ்சினார். அடங்காத அன்பு மேலிட, ஐயனின் திருநடனம் எவ்வாறு காண்பேன் என்ற நினைவில் ஒரு நாள் இரவு துயில் கொண்டபோது தில்லை அம்பலவன் கனவில் காட்சி தந்தருளினான். “ இப்பிறவித் துயர் நீங்கும் வண்ணம் நீ தீயினில் மூழ்கி அந்தணர்கள் புடைசூழ நம்மை வந்து அடைவாயாக” என்று அருளினான். தில்லை வாழ் அந்தணர்களின் கனவிலும் எழுந்தருளிய இறைவன், நந்தனாருக்காக அவர்களைத் தீ அமைத்துத் தருமாறு அருளினான்.
தில்லை அம்பலவனின் கட்டளைப்படி திருக்கோயிலின் வாயிலின் முன்பு வந்து கூடிய மறையோர் நந்தனரிடம் சென்று,” ஐயரே, அம்பலவர் அருளால் தங்களுக்குத் தழல் அமைத்துத் தர வந்துள்ளோம்” என்றார்கள். அதைக் கேட்ட நந்தனார் ” அடியேன் உய்ந்தேன்” எனக் கூறி அவர்களைத் தொழுதார்.
தெற்குத் திருவாயிலருகே தீக் குழி அமைக்கப்பட்டது. அம்பலவனின் பெருங்கருணையை எண்ணி உருகியபடியே, நந்தனார் அதனை வலம் வந்தார். ஆடல்வல்லா திருவடிகளைச் சிந்தித்துக் கை கூப்பியவராக அத்தீயினுள் நுழைந்தார். அப்போது அவரது பழைய உருவம் மறைந்தது. மார்பில் பூணூலும் சடைமுடியும் தாங்கிய புண்ணிய முனிவராக அத்தீயிலிருந்து செந்தாமரை மலருரையும் நான்முகனைப்போல் எழுந்தார். வானத்தில் தேவ துந்துபிகள் முழங்கின. தில்லை மூவாயிரவரும் அவரைக் கைகூப்பித் தொழுதனர். மலர் மாரி பொழிந்தது.
பொன்னம்பலத்தே அனவரதமும் ஆனந்த நடம் புரியும் எம்பிரானைத் தரிசிக்க வேண்டி திருநாளைப் போவாராம் மறை முனிவர் தில்லை வாழ் அந்தணர்கள் உடன் வரத் தெற்கு வாயில் வழியாக நுழைந்து பொற் சபையை அடைந்தார். அதன் பின்னர் அவரை எவரும் காணவில்லை. அவ்வாறு குஞ்சித பாத நீழலை அடைந்த நாயனார் பெற்ற பேரருளை எண்ணித் தில்லை மறையோர் அதிசயத்துடன் தொழுதனர்.
************************************************
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
உலக உயிர்களுக்குத் தாயாகவும் தலைவியாகவும் திகழும் உமாதேவியார் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, சிவாகம முறைப்படி பூசை செய்து,முப்பத்திரண்டு அறங்களையும் செய்து,பெருமானை மணந்த சிறப்புடையது தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரம் ஆகும். இத்தொண்டை மண்டலத்தில் புகழ் மிக்க சிவாலயங்கள் அநேகம் உள்ளன. ஒரு வணிகனுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எழுபது வேளாளர்கள் தீப்பாய்ந்த வரலாறுடைய பழையனூர் ஆலங்காடும், திருக்காளத்தி,திருஇடைச்சுரம்,திருக்கழுக்குன்றம்,திருமுல்லைவாயில், திருவூறல், திருமாற்பேறு,திருவல்லம்,திருப்பாசூர் திருவொற்றியூர், திருமயிலாப்பூர்,திருவான்மியூர் ஆகிய தலங்களைக் கொண்டு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,மருதம் ஆகிய நால்வகை நிலவளங்களோடு கூடியது தொண்டை நன்னாடு.
விருந்தினர்களை விரும்பி உபசரிப்பவர்களும், வேள்வி செய்யும் மறையோர்களும்,பாலாற்று நீரால் வயல்களைச் செழிக்கச் செய்யும் உழவர்களும், கடல் மீன்கள்,முத்து,பவழம் ஆகியவற்றைச் சேகரிக்கும் பரதவர்களும் அங்கு வாழ்ந்து தீமையைக் கனவிலும் நினையாத சிந்தை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
மேன்மைமிகு தொண்டை நாட்டில் எக்காலத்தும் நிலைத்து விளங்கும் நகரம் காஞ்சியம்பதியாகும்.காஞ்சியில் எவ்வுயிரும் உய்யும் வண்ணம் மாமர நீழலில் கம்பையாற்றி மணலால் சிவலிங்கம் அமைத்து, அறம் வளர்த்த செல்வியாய்,தவச் சுடராய் காமாக்ஷி தேவி என்றும் வழிபட்ட பெருமையை உடையது இத் தலம். எண்ணில்லாத ஆகமங்களை அருளிச் செய்த சிவபெருமான்,தாம் விரும்புவது அவ்வாகம வழியில் செய்யப்படும் பூசையே என உணர்த்தியருள, உலகன்னையும் பெண்ணில் நல்லாளும் பெருந் தவக்கொழுந்துமாகிய எம்பிராட்டி, ஏகம்பப்பெருமானைப் பூசித்தாள் கமலினி,அனிந்திதை என்னும் இரு சேடியர்கள் அம்பிகா வனத்திலிருந்து தூய மலர்களைக் கொணர்ந்து தர, கம்பை ஆற்று நீராலும் சந்தனம் முதலிய திரவியங்களாலும் பெருமானை வழிபட்டாள் பெருமாட்டி.
ஈசனின் திருவிளையாடலால் கம்பையாறு பெருகி வந்து அம்மைக்கு அச்சம் விளைவித்தது. தாம் வழிபடும் மூர்த்திக்கு ஊறு விளையுமோ என்று அஞ்சித் தனது வளைக் கரங்களால் பெருமானைத் தழுவிக் கொண்டாள் தேவி. அவளது அன்புக்கு மகிழ்ந்த ஏகம்பநாதன் வெளிப்பட்டு அருளி, “ உனது பூசை என்றும் முடிவதில்லை வேண்டும் வரம் கேள் ” என்று அருளிச் செய்தான், அறம் வளர்த்த நாயகியும் பெருமானை வணங்கி,” ஐயனே, அடியாளது பூசை எக்காலத்தும் நிலைபெறச் செய்ய வேண்டும். சிவாபராதம் ஒன்றைத் தவிர இத்தலத்திலுல்ளோர் செய்யும் பிழைகளை மன்னித்து அருள வேண்டும்” என வேண்டினாள். பெருமானும் அங்ஙனமே வரமளித்தருளினான். காமாக்ஷி தேவியும் காமகோட்டத்தில் இருந்து கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்து வந்தாள்.
காமகோட்டத்தின் அருகில் உலகாணித் தீர்த்தம் என்ற தீர்த்தம் ஒன்று உண்டு. அதில் நீராடுபவர் பாவங்கள் நீங்கப்பெற்று மோட்சத்தை அடைவர். காஞ்சி நகரில் தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. புண்ணிய தீர்த்தம்,இஷ்ட சித்தி தீர்த்தம்,சர்வ தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் அங்கு உள்ளன. அதிசயங்கள் பலவற்றைக் கொண்ட காஞ்சி நகர எல்லையை விகடசக்ர விநாயகரும், வயிரவரும், முருகப்பெருமானும் காவல் புரிகிறார்கள். கரிகால் பெருவளவன் இந்நகரை அமைத்து மக்களை அங்கு குடியேற்றினான். அந்நகரில் அந்தணர், வணிகர்,அரச மரபினர், வேளாளர் ஆகியோர் வசிக்கும் வீதிகள் இருந்தன. திருவிழாக் கோலம் பூண்ட இந்நகரில் மக்கள் தத்தம் குலத்தொழில்களைத் திறம்படச் செய்து, நல்லறம் செய்து வாழ்ந்தனர்.
வளம் மிக்க காஞ்சி நகரில் ஏகாலியர் குலத்தில் சிவத் தொண்டர் ஒருவர் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்கினார். சிவத்தொண்டர்களின் மனக் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டுவன செய்து தொண்டாற்றியதால் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். சிவனடியார்களது துணிகளை அழுக்குப் போகத் துவைத்துக் கொடுத்து வந்தார். அதனால் அவரது பிறவியாகிய அழுக்கும் நீங்க ஏதுவாயிற்று.
திருக்குறிப்புத் தொண்டருக்கு அருள் புரிவதற்காகச் சிவபெருமான் ஒரு ஏழையின் வடிவம் தாங்கி அழுக்கேறிய கந்தை தரித்தவராக மாலும் காணாத திருவடிகள் நிலத்தில் தோய, அன்பர் முன் வந்து தோன்றினார். அடியார் வேடம் பூண்டு வந்த பெருமானைக் கண்டு மகிழ்ந்த நாயனார் அவரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கி மகிழ்ந்தார். பிறகு,” தேவரீர் அணிந்துள்ள கந்தையைத் தந்தருளினால் அடியேன் அதனை அழுக்கு நீக்கித் தருகிறேன்” என்று விண்ணப்பித்தார். வேடம் ஏற்று வந்த பெருமானும்,” இக்கந்தை அழுக்கேறியதுதான். குளிர் காலமாதலால் கதிரவன் மறைவதற்குள் இதனைத் தோய்த்து விட்டுப் பின்னர் உலர்த்திக் கொண்டு வருவீராக. இல்லையேல் இந்த உடல் குளிரால் அவதிப்படும்” என்றார். நாயனாரும் அக்கந்தையை மாலைக்குள் தந்துவிடுவதாகக் கூறி அதனை எடுத்துப் போனார்.
தடாகத்திற்குக் கந்தையை எடுத்துச் சென்ற நாயனார் அதன் அழுக்கு நீங்கத் துவைக்கையில் சிவபெருமானின் திருவிளையாடலால் மேகங்கள் திரண்டு வந்து பெருமழை கொட்டியது. அதைக் கண்டு பதறிய நாயனார்,தாம் தவசியார்க்குத் தந்த வாக்கு பொய்யாகி விட்டதே என வருந்தினார். மழையோ நிற்காமல் இரவு நேரம் வரை பெய்தது. தவசியாரின் திருமேனி குளிரில் வருந்துமாறு செய்து விட்டேனே என எண்ணினார். அப்பிழைக்குத் தண்டனையாகத் தன் தலையைத் துணி துவைக்கும் கல்லில் மோதிக் கொள்ளத் துவங்கினார். அப்போது காமாக்ஷி அம்பிகையின் வளைத் தழும்பு பட்ட ஏகாம்பர நாதரது மலர்க்கை நாயனாரைப் பிடித்து நிறுத்தியது. அடை மழை நின்று, வானம் பூமாரி பெய்தது. கொன்றை மலர் அணிந்த சிவபிரான் உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் தொண்டருக்குக் காட்சி வழங்கினான். பேரன்பு பெருகத் தலை மீது கரங்கள் கூப்பியபடிப் பெருமானைத் தொண்டர் வணங்கி நின்றார். “ உனது பெருமை மூவுலகும் அறியுமாறு செய்தோம். “ இனி நீ நம்முடன் வந்து நம்மைப் பிரியாது இருப்பாயாக “ எனத் திருவாய் மலர்ந்தருளிய இறைவன், திருஏகம்பத்தில் புகுந்தருள,அன்பரும் இறைவனது மலரடிகளை அடைந்தார்.
***********************************
சண்டேசுர நாயனார்
பொய்யாக் காவிரி பாயும் சோழ வள நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் சேய்ஞலூர் என்ற பழமையான ஊர் உள்ளது.இத்தலம் முருகப்பெருமானால் வழிபடப்பட்டதால் இப்பெயர் பெற்றது.சேய் என்பது இங்கு முருகனைக் குறிக்கும். ( கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் இவ்வூருக்குச் செல்லும் சாலை பிரிகிறது. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது). இங்கு வெண்ணீறணிந்து,நான்மறை ஓதி,ஐம்புலனடக்கி, முத்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கு வீதிகளில் வேதஒலி முழங்கிக்கொண்டிருக்கும்.பால் சொரியும் பசுக்கூட்டங்கள் சென்று கொண்டிருக்கும். இயற்கை வளம் மிக்க நீர்நிலைகளும்,வயல்களும்,சோலைகளும் மிகுந்திருக்கும். சோழ மன்னர்கள் முடி சூட்டிக்கொள்ளும் ஐந்து நகரங்களில் இதுவும் ஒன்று. பண்ணுக்குப் பயனாக நல்ல இசையும், பாலின் பயனாக இனிய சுவையும், கண்ணுக்குப் பயனாக அது காட்டும் ஒளியும், கருத்துக்குப் பயனாக அஞ்செழுத்தும் விண்ணிற்குப் பயனாக மழையும், வேதத்தின் பயனாகச் சைவமும் இருப்பதைப்போல மண்ணுக்குப் பயனாக விளங்கியது சேய்ஞலூர்.
பெருமைகள் பல பெற்ற திருச்சேய்ஞலூரில் அந்தணர் குடியில் காசிப கோத்திரத்தில் எச்சதத்தன் என்பவன் இருந்தான். அவனது மனைவியின் பெயர் பவித்திரை என்பதாகும்.அவள் சிவபக்தி மிக்கவள். அவளது திருவயிற்றில் வேத நெறி தழைக்கவும், மறைக்குலம் மேன்மைபெறவும், சைவத் திறம் ஓங்கவும் விசாரசருமர் என்பவர் அவதரித்தார்.
ஐந்து ஆண்டுகள் கடந்ததும்,கலைகள் பலவும் கற்கத் தொடங்கிய விசார சருமருக்கு ஏழாண்டுகள் ஆனதும் மரபுப்படி உபநயனம் செய்விக்கப்பட்டது. வேதங்களை அவர் எளிமையாகக் கற்றதைக் கண்ட ஆசிரியர்கள் வியந்தார்கள். அளவிலாக் கலைகளுக்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது தில்லைக் கூத்தனின் திருவடிகளே என்று விசார சர்மர் உணர்ந்ததால் அவரது மனம் சிவபெருமானிடம் மேலும் பேரன்பு கொண்டு விளங்கியது.
ஒருநாள் தெருவழியே பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்ற ஆயன் ஒருவன் அக்கூட்டத்திலிருந்த ஒரு பசு அவனை முட்டப்புகவே, அதனைக் கோலால் அடித்தான். இதனைக் கண்ட விசார சர்மர் அவனைக் கண்டித்ததோடு, பசுக்களின் பெருமையை அவன் அறியும்படி உணர்த்தி அருளினார். உலகிலேயே பசுக்கள் பிற உயிர்களிலும் மேம்பட்டவை என்றும்,எல்லா நதிகளும் அவற்றின் பால் உள்ளன என்றும் தேவர்களும் முனிவர்களும் அவற்றின் அங்கங்களில் உள்ளனர் என்றும் சிவபெருமானுக்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் உரிமை உள்ளவை என்றும் பெருமானும் பிராட்டியும் எழுந்தருளும் இடப தேவரின் குலத்தைச் சார்ந்தவை என்றும் அவை பாதுகாக்கப்படவேண்டியவை என்றும், அதுவே சிவபெருமானை வழிபடும் நெறியும் ஆகும் என்றும் அறிவுறுத்தினார். இனிப் பசுக்களைத் தாமே மேய்ப்பதாகவும் கூறினார். மறையோர்களின் இசைவு பெற்றுப் பசுக்களை அன்றுமுதல் மேய்க்க முன்வந்தார்.
விசார சருமர் பசுக்களை மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரே புற்களைப் பறித்துக் கொண்டு வந்து அவற்றிற்குத் தருவார். அவற்றை நீர்நிலைகளில் நீர் அருந்தச் செய்வார். பிற மிருகங்களால் அவற்றிற்குத் துன்பம் நேராதவாறு காப்பார். வெய்யில் நேரங்களில் அவற்றை மர நிழல்களில் தங்கச் செய்வார். மாலையில் பால் தரும் நேரத்தில் அவரவர் வீட்டிற்கு ஓட்டிச் சென்று விட்டு விட்டு வருவார். அதனால் பசுக்கள் முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பால் சொரிந்தன.
பசுக்கள் விசாரசருமரிடம் சென்று கன்றுக்குக் கருணை பாலிப்பது போலத் தாமாகவே பால் சொரிந்தன. அதனைக் கண்ட விசார சருமர் அப்பாலை சிவபெருமானுக்குத் திருமஞ்சனமாக்க எண்ணினார்.
மண்ணியாற்றங்கரையில் ஒரு ஆத்தி மரத்தடியில் இருந்த மணல் திட்டில் மணலால் சிவலிங்கம் அமைத்தார். மனத்தினாலே அப்பெருமானுக்குத் திருக்கோயிலும்,கோபுரமும்,மதியும் அமைத்தார். ஆத்தி மலர்களையும் பிற நன் மலர்களையும் கொண்டு வந்து சேர்த்தார். புதிய குடங்களை எடுத்துக் கொண்டு பசுக்களிடம் சென்றதும் அவை அக்குடங்கள் நிறையுமாறு பாலைப் பொழிந்தன. அவற்றைத் தாம் அமைத்த மனக் கோயிலருகே வைத்துப் பேரன்போடு இறைவரைப் பாலினால் அபிஷேகம் செய்தார். அதுவே எம்பிரான் மகிழ்ந்து ஏற்ற பூஜை ஆயிற்று. பின்னர் மலர்களால் அர்ச்சித்து விட்டு இல்லம் திரும்புவார். இவ்வாறு பூசையினைத் தினமும் செய்து வந்தார். பசுக்கள் வீடு திரும்பியதும் முன்னை விடச் சற்றும் குறைவில்லாமல் பால் தந்தன.
விசாரசருமர் இவ்வாறு பசுக்களிடம் பால் கறந்து சிவபூஜை செய்வதைக் கண்ட அயலான் ஒருவன் பசுக்களின் உரிமையாளர்களிடம் சென்று பாலை விசாரசருமர் வீணாக்குவதாகப் புகார் செய்தான்.அதக் கேட்ட அந்தணர்கள் விசார சருமரின் தந்தையான எச்ச தத்தனிடம் நடந்ததைக் கூறினார்கள். இனி அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வதாக அவர்களிடம் கூறிவிட்டு வீடு திரும்பிய எச்சதத்தன் மறுநாள் தானே சென்று நடப்பதைக் கண்டறிவதாக எண்ணினான்.
மறுநாள் காலை வழக்கம்போல் விசாரசருமர் பசுக்களை அழைத்துக் கொண்டு மண்ணியாற்றங் கரையை அடைந்தார். அவரைத் தொடர்ந்த எச்ச தத்தன் அவர் அறியாதபடி ஒரு குராமரத்தின் மீது ஏறிக் கொண்டு ஒளிந்திருந்தான். மண்ணியாற்றில் நீராடிவிட்டு வந்த விசார சருமர், முன்போல் மணலால் திருக்கோயில் அமைத்து மலர்களைக் கொய்து கொண்டு வந்தார். மேய்ந்துவிட்டு வந்த பசுக்கள் தாமாகவே சொரிந்த பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு ஆகம வழிப்படிப் பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டினார்.
ஒளிந்திருந்து தன மகனாரது செய்கையைக் கண்ட எச்சதத்தன் மிக்க சினம் கொண்டான். மரத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து கையிலிருந்த கோலால் விசாரசருமரை முதுகில் அடித்தான். அவரைப் பலவாறு கடிந்தான். ஆனால் சிவபூஜையில் ஒன்றியிருந்த விசார சருமர் அவற்றைக் கவனியாமல் பெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதிலேயே சிந்தை செலுத்தி இருந்தார். இதனால் மேலும் கோபமடைந்த எச்சதத்தன் பால் குடங்களைக் காலால் உதைத்தான். தியானம் களைந்த விசாரசருமர் பாலை இடறியது தந்தை என்று அறிந்தார். தந்தையே ஆயினும் சிவாபராதம் செய்ததால் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணி அருகில் கிடந்த ஒரு கோலை எடுத்தார். அக்கோல் உடனே மழுவாக மாறியது. அதனைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டி வீழ்த்தினார். எச்சதத்தனும் கால்கள் இழந்து குருதி பெருக, மண் மேல் விழுந்து இறந்தான். சிவபூஜைக்கு வந்த இடையூறு நீங்கியவுடன் பழையபடி அப்பூஜையைத் தொடர முற்பட்டார் விசார சருமர்.
பாலகனின் ஒப்பற்ற பூசைக்கு மகிழ்ந்த ஈசனும் உமாதேவியோடு விடை ஏறி, பூதகணங்கள் சூழ வந்து காட்சி கொடுத்தருளினார். தேவர்களும் முனிவர்களும் வேத மொழிகளால் துதித்தனர். காட்சி தந்த இறைவனைக் கண்ட அப்பாலகனும் மகிழ்ச்சி பொங்கப் பெருமானது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
விசாரசருமரைத் தனது திருக் கரங்களால் எடுத்து அனைத்து,உச்சி மோந்த எம்பெருமான் , “ நம் பொருட்டு உனது தந்தையின் கால்கள் வெட்டினாய். இனி உனக்கு அடுத்த தந்தை யாமே ஆவோம்” என்று அருளி அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கி “ நாம் உண்ட கலமும் சூடும் மாலை,அணிகலம் ஆகியவையும், உடுக்கும் உடைகளும் உனக்கே ஆகுக. உனக்குச் சண்டீசன் என்ற பதவியையும் தந்தோம்” எனக் கூறியருளினான். பின்னர், தனது திருமுடியிலிருந்த கொன்றை மாலையையும் அப்பாலகனுக்குச் சூட்டியருளினான்.
தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அனைவரும் ஹர நாமம் கூறி ஆர்ப்பரித்தனர்.இசைக்கருவிகள் முழங்கின சிவகணங்களும் மறைகளும் துதித்தன. இவ்வாறு சைவம் ஓங்குமாறு விசார சருமர் சண்டேச நாயனார் ஆகிச் சண்டீச பதம் பெற்றார். நாயனாரால் கால்கள் வெட்டுண்டு இறந்த எச்சதத்தன் இறையருளால் அப்பிழை நீங்கியவனாகிச் சுற்றத்தாருடன் திருக் கயிலை அடையும் பேறு பெற்றான். இதனால் சிவனடியார்கள் பிழைக்கினும் அது தவமாவது பெறப்பட்டது.
****************************************************