எறிபத்த நாயனார்
இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் அநபாய சோழன் வரை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்கள் தமது தலைநகர்களாகக் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச் சேய்ஞலூர், கருவூர் ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அழகு வாய்ந்த கருவூர் நகரின்கண் சிவ பெருமான் என்றும் நீங்காது அருள் வழங்கும் ஆநிலை என்னும் கோயில் உள்ளது. அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபடும் நியமம் மிக்க அடியார்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதைக் கடமையாகக் கொண்டவர் எறிபத்த நாயனார் என்ற பெரியோர் ஆவார். அடியார்களின் இடர்களைக் களைவதற்காகத் தமது கரத்தில் மழு (கோடரி) ஆயுதத்தை எப்போதும் தாங்கியிருப்பார்.
கருவூர் ஆநிலையப்பரிடம் அன்பு பூண்ட சிவகாமியாண்டார் என்ற முதிய அந்தணர் அந்நகரில் வாழ்ந்து வந்தார். தினமும் ஆநிலையப்பருக்கு மாலைகள் அளித்து வருவதை நியமமாகக் கொண்டவர் அவர். வைகறையில் தூய நீராடி, நந்தவனத்தை அடைந்து, அங்குள்ள மணமிக்க மலர்களைக் கொய்து, பூக்கூடையை நிறைத்து,அவற்றைக் கொண்டு அழகிய மாலைகளாகத் தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணித்து வந்தார்.
ஒருநாள் தனது தண்டில் பூக்கூடையைத் தொங்கவிட்டவாறு நவமிக்கு முன் தினம் சிவகாமியாண்டார் திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கரூரை ஆண்டு வந்த புகழ்ச் சோழரது பட்டத்து யானை திடீரென்று மதம் பிடித்து அவ்வீதி வழியே ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் பயந்தவாறு ஓடலாயினர். வயோதிகரான சிவகாமியாண்டார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பட்டவர்த்தனம் என்ற அந்த யானை அவரது பூக்கூடையப் பற்றி இழுத்து நிலத்தில் சிந்தி விட்டு விரைந்தது. அதன் காவலர்களோ அல்லது பாகர்களோ அதனைத் தடுக்காது போகவே, “ சிவதா சிவதா” என்று கதறிக்கொண்டு அந்த யானையின் பின்னர் ஓடினார் சிவகாமியாண்டார். மூப்புக் காரணமாக அவரால் ஓடமுடியாது நிலத்தில் விழுந்தார். அப்போது இறைவனை நோக்கி ஓலமிட்டுக் கதறினார். அந்த ஓலமிடும் ஓசை கேட்டு அங்கு வந்த எறிபத்தர் நடந்ததைக் கண்டு சினமுற்றவராக மதம்பிடித்த யானையைத் தொடர்ந்து சென்று, மலர்களைச் சிந்திய அதன் துதிக்கையைத் தனது மழுவினால் வெட்டி வீழ்த்தினார். அதனால் நிலத்தில் விழுந்து புரண்ட யானை இறந்தது. அதன் பக்கத்தில் வந்த குத்துக்கோற் பாகர் மூவரும், யானை மீதிருந்து செலுத்திய இருவரும் நாயனாரை எதிர்த்த போது அந்த ஐவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர். இதனைக் கண்ட பிற பாகர்கள் விரைந்து சென்று அரண்மனைச் சேவகர்களிடம் யானையும் சேவகர்களும் மாண்ட செய்தியைத் தெரிவித்தனர். அதனைக் கேள்வியுற்ற சோழ மன்னர் முழு விவரங்களையும் கேளாமல், சினம் கொண்டவராகத் தனது சேனைகளுடன் எறிபத்தர் இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கு பகைவர்கள் எவரையும் காணாது மழு ஏந்திய கையுடன் நிற்கும் எறிபத்தரை மட்டுமே கண்டார்.
“ இவரே யானையையும் சேவகர்களையும் கொன்றவர்” என்று பாகர்கள் எறிபத்தரைச் சுட்டிக்காட்டியவுடன்,சோழ மன்னர், ” இவர் சிவனடியாரைப் போல் அல்லவா காணப்படுகிறார். நற்குணம் மிக்கவராகவும் காணப் படுகிறார். யானை ஏதோ பிழை செய்திருக்க வேண்டும்.அதன் காரணமாகத்தான் அதனைத் தண்டித்திருப்பார்” என்றார். தனது குதிரையிலிருந்து இறங்கி நேராக நாயனாரை அணுகி அவரைத் தொழுது, “இந்த யானை செய்த குற்றத்தை அறியேன். அதற்குரிய தண்டனை போதுமோ எனவும் அறியேன்.அருளிச் செய்வீராக.” என்றார் அரசர்.
நாயனார் அரசரை நோக்கி நடந்தவற்றை விரிவாக எடுத்துரைத்தார். அதைக் கேட்ட மன்னர்,அச்சத்துடன் அவரை மீண்டும் வணங்கி, “ அது எனது பட்டத்து யானை ஆதலால் என்னையும் இந்த உடை வாளால் தண்டித்து அருளுவீராக” என்று எறிபத்தரின் கரங்களில் தனது உடைவாளைக் கொடுத்தார்.
புகழ்ச்சோழரின் பேரன்பினைக் கண்டு திகைத்த நாயனார், அவ்வாளை வாங்கிக் கொள்ளாவிடில் அரசர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வார் என்று அஞ்சி இப்படிப்பட்ட பேரன்புடைய மன்னருக்குத் தீங்கு நினைத்தேனே என்று கருதி, அதற்கு முன்பாகவே தாம் உயிர் நீப்பதே முறை என்று எண்ணியவராக அவ்வாளினால் தனது கழுத்தினை அறுக்க முயன்றார். அதனைக் கண்டு பதறிய மன்னர், “ ஆ!! கெட்டேன். பெரியோர் செய்கை அறியாது போயினேன்.” என்றவராக விரைந்து சென்று நாயனாரின் கைகளையும் வாளையும் பிடித்துக் கொண்டார். அதே நேரத்தில், புகழ்ச்சோழர் தமது எண்ணம் நிறைவேறாதது குறித்து வருந்தினார்.
அவ்விருவரது அன்பின் திறத்தை உலகோர் அறிய வேண்டி இறைவர் அருளால் ஓர் அசரீரி வாக்கு விண்ணில் பலரும் கேட்க எழுந்தது. “உங்களிருவரது அன்பின் உயர்வை உலகத்தவர் அறியவே இவ்வாறு நிகழ்ந்தது. இறந்து பட்ட யானையும் பிறரும் உயிர் பெற்று எழுவர்” என்ற சொல் விண்ணிலிருந்து எழுந்தது. அக்கணமே அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அதனைக் கண்ட நாயனார், வாளைக் கீழே போட்டுவிட்டு புகழ்ச் சோழரை வணங்க, அரசரும் எறிபத்தரை வணங்கினார்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவகாமியாண்டாரும் இத்திருவருட் செயலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். எறிபத்தரின் வேண்டுகோளை ஏற்றவராக புகழ்ச் சோழர் பட்டத்து யானையின் மேல் ஏறிக் கொண்டு,சிவபெருமானின் மலரடிகளைச் சிந்தித்தபடியே தமது அரண்மனையை அடைந்தார். சிவனடியார்களின் பெருமையை எவரே அறிய வல்லார் என நெகிழ்ந்தவராகச் சிவகாமியாண்டார் முன்போல் ஆநிலையப்பருக்குத் தொண்டு செய்து வரலாயினர். எறிபத்தரும் முன்போலவே கையில் மழுவேந்தி சிவனடிடயார்களின் துன்பம் களைந்து வந்தார்.அதன் பயனாகத் திருக் கயிலாயத்தில் சிவகண நாதராகும் பேறு பெற்றார். எறிபத்தரின் தொண்டினையும்,புகழ்ச் சோழரின் பெருமையையும் யாரால் அளவிட்டுக் கூற முடியும்? சிவபெருமான் ஒருவரால்தான் அளவிட முடியும்.
ஏனாதிநாத நாயனார்
சோழநாட்டில் வளம் மிக்க எயினனூர் என்ற ஊரில் ஈழக்குலத்தைச் சேர்ந்த ஏனாதி நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். ( எயினனூர் என்பது கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் உள்ளது. தற்போது ஏன நல்லூர் என்று வழங்கப்படுகிறது). சிவபக்திச் செல்வராக விளங்கிய நாயனார் அரசர்களுக்கு வாட்பயிற்சி செய்துவித்து வந்தார். ஈட்டிய பொருள்களை எல்லாம் சிவனடியார்களுக்கே அளித்து வந்தார். இதே வாட்பயிற்சித் தொழிலைச் செய்துவந்த அதிசூரன் என்பவன் நாயனாரது ஊதியமும் புகழும் பெருகி வருதலைக் கண்டு பொறாமை கொண்டு பகைமை பாராட்டி வந்தான். ஒருநாள் துணையாகச் சிலரை அழைத்து வந்து அதிசூரன் நாயனாரது வீட்டை அடைந்து அவரைப் போருக்கு அழைத்தான். ஏனாதினாதரும் தனது மாணாக்கர்களுடனும் உறவினர்களுடனும் வெளியில் வந்து,” யார் போரில் வெற்றி பெறுகிறாரோ அவரே வாட்பயிற்சி கற்பிக்கத் தகுதி உடையவர் ஆவார்” என்று அதிசூரன் கூறியதை ஏற்றுக் கொண்டு அவனுடன் போர் புரியலானார். இருபுறத்திலும் அனேக வீரர்கள் மாண்டனர். நாயனாரது ஆற்றலை எதிர்கொள்ள முடியாமல் அதிசூரனின் படைகள் பின் வாங்கின. அதிசூரனும் புறம் காட்டி ஓடினான். தனது வீட்டை அடைந்த அதிசூரன் உறக்கம் வராமல் வஞ்சனை மூலமாவது ஏனாதிநாதரை வெல்வேன் என்று உறுதி பூண்டான்.
மறுநாள் அதிசூரன் ஒரு ஏவலாள் மூலம் ஏனாதிநாதரை மீண்டும் துணை யாரும் இன்றித் தனியாக வேறோரிடத்தில் போருக்கு வரும்படி கூறி அனுப்பினான். நாயனாரும் அதன்படி, போர்க்களத்தை அடைந்து அதிசூரனது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.
திருநீறு அணிந்த அடியார்களுக்கு ஏனாதி நாதர் ஒருபோதும் தீங்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்த அதிசூரன், தனது நெற்றியிலும் உடலிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டு வாளையும்,கேடயத்தையும் ஏந்தியவனாக முகத்தைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்தை அடைந்தான்.
போர் துவங்கியதும் தன்னை நோக்கி வந்த நாயனார் காணும்படி அதுவரையில் கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்த தனது முகம் தெரியும்படி நின்றான். அப்போது அவனது முகத்தில் திருநீறு இருந்ததைக்கண்ட நாயனார், “ ஆ கெட்டேன்!! திருநீறு இட்டபடியால் இவர் சிவனடியார் அல்லவா! அவரை எதிர்க்கத்துணிந்தது பிழை அன்றோ! இனி அவர் உள்ளக்குறிப்பின்படியே நிற்பேன் எனக் கருதித் தனது கேடயத்தையும் வாளையும் நிலத்தில் போட்டார்.
பிறகு,” நிராயுதபாணியாக நின்றவரைக் கொன்றார் என்ற பழி இவருக்கு வந்து விடுமே” எனக்கருதி, வாளையும் கேடயத்தையும் மீண்டும் கைகளால் எடுத்துக் கொண்டு போரிடுபவர் போலப் பகைவன் முன் நின்றார். பாதகனாகிய அதிசூரன் அத்தருணமே தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டான். நாயனாரது பேரன்பைக் கண்ட சிவபெருமான் அவருக்கு ஆகாய வெளியில் காட்சி தந்து, “ இனி நீ நம்மை விட்டுப் பிரியாதிருப்பாயாக” எனக் கூறி அருளினார். நாயனார் திருநீற்றின் மீது வைத்திருந்த பேரன்பினை என்னென்று இயம்ப முடியும்?
கண்ணப்ப நாயனார்
பொத்தப்பி நாட்டில் மலைகளும் காடுகளும் சூழ்ந்த உடுப்பூர் என்ற பழம்பதி ஒன்று உண்டு.( கடப்பை மாவட்டத்தில் உள்ள புள்ளம்பேட்டை என்ற பகுதியைப் பொத்தப்பி நாடு என்பர். உடுப்பூர் என்பது தற்போது அரக்கோணம்- குண்டக்கல் பாதையில் உள்ள இராஜம் பேட்டைக்கு அருகில் உள்ள உடுக்கூர் என்பர்) அப்பகுதியில் வேட்டையாடும் வேடுவர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்களுக்குத் தலைவனாக நாகன் என்பவன் விளங்கினான். அவனது மனைவி தத்தை என்பவள் ஆவாள். அவர்கள் நீண்ட காலமாக மகப்பேறு இன்றி வருந்தினர். அக்குறை தீர முருகப்பெருமானது சந்நிதியில் நாள்தோறும் வேண்டி வந்தனர். பெரிய திருவிழா எடுத்துக் குரவைக்கூத்து நடத்திப் பெருமானை வழிபட்டனர். அதன் பலனாகக் கந்தவேள் கருணை புரியவே, தத்தை கருவுற்று ஓர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். வேடர் குலமே மகிழ்ச்சியில் திளைத்தது. பன் மணிகளை வாரி இறைத்தும், உடுக்கை முதலிய மங்கள வாத்தியங்களை முழக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கானகத் தெய்வங்களை வழிபட்டனர். அக்குழந்தையை நாகன் கையில் எடுத்தபோது திண் என்று இருந்ததால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான்.
ஓராண்டு ஆனதும் திண்ணனார் தளர்நடையிட்டார். அவரது நெற்றிக்குப் புலி நகச் சுட்டியையும் மார்புக்குப் பன்றி முள்ளும் புலிப்பல்லும் கோத்த மாலையையும் இடையில் சதங்கையையும் காலில் யானைத் தந்தங்களால் ஆன தண்டையையும் அணிவித்து அலங்கரித்து மகிழ்ந்தனர். மழலை பேசிப் பெற்றோரை மகிழச் செய்தார் திண்ணனார். ஐந்து வயது ஆனபிறகு வேடச் சிறுவர்களுடன் சோலைகளிலும் உடுப்பூரை அடுத்த காடுகளிலும் விளையாடுவார். புலிக் குட்டிகளையும், பன்றிக் குட்டிகளையும், நாய்க் குட்டிகளையும்,முயற்குட்டிகளையும் பிடித்து வந்து மரங்களில் கட்டி அவற்றை வளர்ப்பார்.
சில ஆண்டுகள் கழிந்தபின், நாகன் தன் மகனார்க்கு வில் வித்தையைத் தக்கோர் மூலம் நல்லதோர் நாளில் விழா எடுத்திக் கற்பித்தான்.புலி நரம்பாலான காப்பினைக் கையில் கட்டி வேடர்கள் வாழ்த்துக் கூறினார். பல்வகை உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு வில்விழா ஆறு நாட்கள் நடைபெற்றபின் வில்வித்தையினை ஆசிரியரிடம் நாள்தோறும் திண்ணனார் பயின்றார். அதோடு படைக்கலப் பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது தோற்றம், புண்ணியங்கள் அனைத்தும் ஒரு உருவம் பெற்று வந்தது போல விளங்கியது.
நாகனுக்கு வயது முதிர்ந்ததும் முன்போல வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே வேடர்களிடம் தனது மகனை வேடர் குலத் தலைவனாக ஆக்குவதாகத் தெரிவித்தான். அவர்களும் மகிழ்ச்சியுடன் அதற்கு உடன்படவே, தேவராட்டியை அழைத்துத் தன் மகன் முதன் முறையாகக் காட்டில் வேட்டையாடச் செல்ல இருப்பதால், அவனுக்குத் தீங்கு நேராதபடிக் காட்டிலுள்ள தெய்வங்களுக்குப் பூசை செய்யக் கோரினான். அவளும், தான் அங்கு வரும் முன்னர் நல்ல சகுனங்களைக் கண்டதாகக் கூறிப் ,பூசைக்கான பொருள்களை வாங்கிச் சென்றாள்.
வேடர்களுடன் திண்ணனார் நாகனிடம் வந்ததும், நாகன் அவரை ஆரத் தழுவிக்கொண்டு நல்லதோர் ஆசனத்தில் அமரச் செய்து, தனக்கு மூப்பு வந்து விட்டதால், வேடர்குல ஆட்சியை ஏற்று, மிருகங்களை வேட்டையாடியும்,பகைவர்களை வென்றும்,வேடர் குலக் காவலனாக விளங்குவாய் என்று கூறித் தனது உடைவாளையும் தோலையும் கொடுத்தான். தந்தையின் வார்த்தையை ஏற்ற திண்ணனார்,மீண்டும் நாகனது பாதங்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வேட்டையாடத் தயாரானார்.
மறுநாள் உதயத்தில் நீராடி,வேட்டைக் கோலம் பூண்டு,தேவராட்டியை வணங்கி அவளது ஆசியைப் பெற்றுக்கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டார். வேடர் படை தொடரக் காட்டில் வேட்டை தொடங்கியது. விலங்குகளைக் கொன்றபோது அவற்றின் குட்டிகளைக் கொல்லாது விட்டனர். அப்போது அங்கு கரிய காட்டுப்பன்றி ஒன்று தோன்றியது. திண்ணனாரும் அவரது மெய்க் காவலர்களாகிய நாணன்,காடன் ஆகிய இருவரும் அப்பன்றியைப் பின் தொடர்ந்தனர். ஒரு மலைச் சாரலை அடைந்ததும் திண்ணனார் தனது உடை வாளால் அப்பன்றியை வீழ்த்தினார். வெகுதூரம் அதனைத் துரத்தி வந்தபடியால் மிகுந்த களைப்பும் பசியும் அவர்களுக்கு மேலிட்டது. ஆகவே அப்பன்றியை நெருப்பில் காய்ச்சித் தின்று நீர் அருந்திய பின் காட்டு வேட்டையைத் தொடரலாம் என்று தீர்மானித்தார்கள்.
மலைக்கு அருகில் ஓடும் பொன்முகலியாற்றுக்குச் சென்றால் நீர் அருந்தலாம் என்று அறிந்தபின், பன்றியை அங்கு எடுத்துச் சென்றனர். அப்போது அம்மலையின் தோற்றம் திண்ணனாரை வசீகரித்ததால், நாணன் அவரிடம், அம்மலை காளத்தி மலை என்றும் அதன் மீது குடுமித்தேவர் இருப்பதால் நாம் அவரை அங்கு சென்று வழிபடலாம் என்றும் கூறினான். மூவரும் பொன் முகலிக் கரையை அடைந்ததும், திண்ணனார் காடனிடம் அப் பன்றியைக் காய்ச்சுவதற்காகத் தீக்கோல் மூலம் தீயை உண்டாக்கி வைக்குமாறு கூறிவிட்டு, நாணனும் அன்பும் வழி காட்டக் காளத்தி மலை மீது ஏறத் தொடங்கினார்.
திண்ணனார் திருக்காளத்தி நாதரைத் தரிசிக்கும் முன்பே பெருமானது கருணை நயனம் அவர் மேல் பதிந்தது. அதனால் அவரது முந்தைய வினைகள் யாவும் அப்போதே நீங்கின.அதனால் ஒப்பற்ற அன்பு வடிவம் ஆயினார்.
பெருமானைக் கண்டதும் ஆறாத இன்பம் அன்பு வெள்ளமாக மேலிட ஓடிச் சென்று அவரைக் கட்டித் தழுவி உச்சி மோந்து,புளகாங்கிதம் அடைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். இறைவனைப் பார்த்து, “ மிகக் கொடிய மிருகங்கள் வாழும் இப்பகுதியில் நீர் தனித்திருப்பது தகுமோ “ என வருந்தினார். பெருமான் மீது பச்சிலைகளும் பூவும் இருக்கக் கண்டு, அவ்விதம் செய்தவர் எவர் என்று கேட்டவுடன்,அருகிலிருந்த நாணன், தான் முன்பு ஒரு முறை நாகனுடன் வேட்டையாட வந்தபோது, ஒரு சிவப்பிராமணர் அப்பெருமானுக்கு நீர்,மலர்,இலைகள் ஆகியவற்றால் பூசித்துத் தாம் கொண்டு வந்த உணவை ஊட்டிப் பின்னர் ஏதோ சில மொழிகளைக் கூறிச் சென்றதைக் கண்டதாகக் கூறினான். அதைக் கேட்ட திண்ணனார் அச்செயல்கள் குடுமித்தேவருக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் போலும் என நினைந்து, தாமும் அவ்வாறே செய்ய உறுதி பூண்டார்.
பெருமான் பசியோடும் தனித்தும் இருக்கிறாரே! நானே சென்று நல்ல இறைச்சியை கொண்டு வருவேன் என்று எண்ணியவராகச் சிறிது தூரம் போவார். பிரிய மனமில்லாமல் மீண்டும் திரும்பி வந்து கண்ணீர் விட்டுக் கதறுவார். ஆனால் பெருமான் பசியோடு இருப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டாதவராக ஒருவாறு போய்வரத் துணிந்து கையில் வில்லும் அம்பும் ஏந்தியவராக, நாணன் பின்தொடர மலையை விட்டு இறங்கிப் பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தார்.
காடன் அவர்களை எதிர் கொண்டு வணங்கித் தான் நெருப்பைக் கடைந்து, பன்றி இறைச்சியைத் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறினான். அப்போது நாணன் காடனிடம் மலையின் மீது நடந்தவற்றைக் கூறி,”திண்ணன் குடுமித்தேவரை உடும்பு போலப் பிடித்துக் கொண்டு விட்டான். இந்த இறைச்சியையும் அவருக்காகவே எடுத்துச்செல்ல இங்கு வந்திருக்கிறான். நமது வேடர்குலத் தலைமையை நீக்கி, அவருக்கே ஆளாகிவிட்டான்” என்று கூறினான். இதைக்கேட்ட காடன், திண்ணனாரைப் பார்த்து, “ திண்ணா , நமது குலத் தொழிலைக் கைவிட்டு இவ்விதம் ஏன் செய்யத் துணிந்தாய்” எனக் கேட்டான். அதனைக் கேளாதவர் போலிருந்த திண்ணனார், வேக வைத்த இறைச்சியில் நல்ல சுவைப்பகுதிகளை அறிய வேண்டி, அதில் சிறிதை வாயில் போட்டுச் சுவை பார்த்தார். சுவையான இறைச்சிப் பகுதிகளைத் தனியாக சேமித்து வைத்தார். நாணனும் காடனும் இதைக் கண்டு அதிசயித்து,” சுவைத்த இறைச்சியை இவன் உண்ணாமல் உமிழ்கிறான். நமக்கும் தரவில்லை. அவனிடத்திலிருந்து வாய்ச்சொற்களும் வரவில்லை. ஏதோ மயக்கம் கொண்டு விட்டான் என்று தோன்றுகிறது. அதைப் போக்கும் வழி நமக்குத் தெரியாததால் உடனே நாகனிடம் இதுபற்றித் தெரிவித்துத் தேவராட்டி மூலம் இம்மயக்கத்தைத் தீர்க்க வேண்டும் “ என்று தமக்குள் முடிவு செய்து, தங்களுடன் வந்த வேடர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.
தம்முடன் வந்த இருவரும் திரும்பிச் சென்றதையும் கவனியாமல் குடுமித்தேவரிடம் விரைந்து செல்லும் ஒரே வேட்கையுடன் திண்ணனார் பெருமானுக்கு அமுதாக இறைச்சியை எடுத்துக் கொண்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுவதற்குப் பொன்முகலி ஆற்று நீரைத் தன் வாயில் முகந்து கொண்டார். பறித்த இலைகளைத் தந்து சிகையில் செருகிக்கொண்டார். வில்லையும் அம்பையும் கைகளில் ஏந்திக்கொண்டார்.
திருக்காளத்தி நாதரின் சன்னதியை அடைந்தவுடன் பெருமானது திருமுடியில் முன்னம் சார்த்தப்பட்டிருந்த மலர்களைத் தனது செருப்புக் காலால் அகற்றினார். உள்ளத்தில் பொங்கி எழும் அன்பினை உமிழ்பவர் போலத் தனது வாயில் அடக்கிக் கொண்டுவந்த நீரைப் பெருமானது திருமுடி மேல் உமிழ்ந்தார். தனது முடியில் கொண்டுவந்த இலைகளையும் மலர்களையும் இறைவரது திருமுடியின் மேல் சார்த்தினர். பின்னர், தாம் கொணர்ந்த இறைச்சியை இறைவர் முன் வைத்து,” பெருமானே! இதனைத் தேவரீர் ஏற்று அமுதுசெய்தஅருள வேண்டும். பற்களால் அதுக்கிச் சுவை மிகுந்ததைக் கொண்டு வந்துள்ளேன். ஏற்றருள வேண்டும்” என்று வேண்டினார். அப்போது மாலைப் பொழுது கழிந்து இரவு வந்தது. இரவில் கொடிய விலங்குகள் வந்தால் பெருமானுக்குத் துன்பம் விளைவிக்குமே என்று எண்ணி பேரன்புடன் கையில் வில்லும் அம்பும் தாங்கிப் பக்கத்தில் இரவு முழுதும் நின்று காவல் மேற்கொண்டார்.
மறுநாள் பொழுது விடிந்ததும் பெருமானுக்குத் திருவமுது செய்வதற்கு வேட்டையாடி வரப் புறப்பட்டார். தினந்தோறும் காளத்தி நாதருக்கு ஆகம வழியில் நின்று திருமஞ்சம் செய்து அமுதூட்டி மலரணிவித்து வழிபாடு செய்யும் சிவகோசரியார் என்ற ஆதி சைவர் அன்றும் வழக்கம்போலப் பூசைக்கான பொருள்களுடன் மலை ஏறி வந்து திருச்சன்னதியை அடைந்தார். இறைவர் முன் இறைச்சியைக் கண்டு பதறி, “ ஆ! கெட்டேன். இதுபோல் அனுசிதம் செய்தவர் எவர் என்று தெரியவில்லையே! வேடர்களாகவே இருக்க வேண்டும். இப்படி நிகழுமாறு தேவரீர் திருவுள்ளம் கொள்ளல் முறையோ! : என்று பதறிக் கண்ணீர் விட்டார். பிறகு அங்கு கிடந்த இறைச்சி,எலும்புத் துண்டுகள் ஆகியவற்றை திருவலகால் அகற்றினார். பொன்முகலிக்குச் சென்று நீராடிவிட்டு மீண்டும் வந்து சிவாகம முறைப்படிப் பிராயச்சித்தம் செய்தார். அதன் பின்னர் பெருமானை வேத மந்திரங்களால் துதித்துத் திருமஞ்சனம் செய்து முறையான வழிபாடுகளை நிறைவேற்றியவுடன் தனது இருப்பிடம் திரும்பினார்.
இறைச்சிக்காக வேட்டையாடச் சென்ற திண்ணனார் ஒரு பன்றியையும் கலை மான்களையும் அம்பெய்திக் கொன்று ஓரிடத்தில் கொணர்ந்து, விறகால் தீ மூட்டித் தான் வேட்டையாடி வந்த மிருகங்களின் இறைச்சி மிகுந்த பகுதிகளைத் தீயிலிட்டுப் பக்குவப்படுத்தி, வாயில் சுவைபார்த்து நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துத் தேனோடு கலந்து , முன் போல் வாயில் நீரும் , முடியில் மலர்களும் ஏந்தி மலைமேல் எழுந்தருளியுள்ள காளத்திநாதரைச் சென்று அடைந்தார்.
சிவகோசரியார் பகல் நேரத்தில் பூசித்துச் சென்ற மலர்களைத் தனது செருப்புக் கால்களால் நீக்கிவிட்டு, முன்போல் வாயே கலசமாகக் கொண்டு வந்த பொன்முகலி நீரால் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்து, மலரணிவித்துத் தான் கொணர்ந்த இறைச்சியையும் இறைவனது திருமுன்னர் வைத்து வணங்கினார்.” பெருமானே! அடியேன் சுவைத்துப் பார்த்த இறைச்சி இது. தேனும் கலந்துள்ளேன். ஆகவே தித்திப்பாக இருக்கும். தேவரீர் ஏற்றருள வேண்டும்” என்று விண்ணப்பித்து இரவு முழுதும் பெருமானை விட்டு அகலாது,,கண் துஞ்சாது, காவலாக நின்றார். சிவகோசரியாரும் தினமும் இவ்வாறு நடைபெறுவது தொடர்வதைக் கண்டு கலங்கி, அவ்விடத்தைத் தூய்மை செய்து விட்டு வழிபாடு செய்து வந்தார்.
இதற்கிடையில் நாணனும் காடனும் நாகனிடம் நடந்ததை விவரிக்கவே, பதைத்துப்போன நாகன் தேவராட்டியுடன் திண்ணனாரை அடைந்து தங்களுடன் திரும்பி வருமாறு கூறியும், இராச குளிகையால் இரும்பு பொன்னானது போலக் காளத்திநாதரது திரு நோக்கால் திண்ணனாரது வினைகளும் மும்மலமும் நீங்கி அன்புருவமாகி விட்டதால் அவர்களுடன் செல்ல அவர் உடன்படவில்லை. எனவே நாகனும் பிற வேடர்களும் வருத்தத்துடன் தங்களது இருப்பிடம் திரும்பினர்.
சிவகோசரியாரது பகற்பொழுது வழிபாடும் திண்ணனாரது இராப்பொழுது வழிபாடும் நான்கு நாட்கள் இவ்வாறு நடைபெற்றன.ஐந்தாம் நாள் காலை பூசை செய்ய வந்த சிவகோசரியார் இறைவனது சன்னதியில் இறைச்சி இருக்கக்கண்டு மிக்க துக்கமடைந்து, இத்தகைய அனுசிதம் நடைபெறாமல் திருவருள் புரிய வேண்டும் என்று பெருமானிடம் வேண்டிக்கொண்டு தனது இருப்பிடம் அடைந்தார். அன்றிரவு கனவின்கண் சிவபெருமான் தோன்றி, ‘ அன்பனே, இவ்வாறு செய்யும் அவனை வேடன் என்று கருதாதே. அவனது வடிவம் நம்பால் கொண்ட அன்பு வடிவமே ஆகும். அவனது அறிவு,நம்மை அறியும் அறிவேயாகும்.அவன் செய்வதெல்லாம் நமக்கு இனியனவே ஆகும். அவன் தனது கால்களால் நீ அன்புடன் சார்த்திய மலர்களை நீக்குவது, முருகனின் மலரடி என்மேல் படுவதைக் காட்டிலும் சிறப்பு உடையது. அவன் தனது வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரைக் காட்டிலும் சிறந்தது. பிரம- விஷ்ணுக்கள் சார்த்தும் மலர்கள், அவன் அன்புடன் சார்த்தும் மலர்களுக்கு இணை ஆக மாட்டா. அவன் வாயில் சுவைத்துப் பார்த்து அளிக்கும் ஊனமுதம், வேத வழியில் வேள்வி செய்து வேதியர்கள் அளிக்கும் அவிர்ப்பாகத்தைக் காட்டிலும் இனிமையானது. முனிவர்கள் கூறும் மந்திரங்கள்,அவன் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இணை ஆக மாட்டா. அவனது உயர்ந்த பக்தியின் மேன்மையை நாளைக்கு உனக்குக் காட்டுவோம். தற்போது மனக்கவலை ஒழிந்து நாளை நமது சன்னதிக்கு வந்து மறைந்திருந்து அதனைக் காண்பாயாக” என்று கூறி மறைந்தருளினார்.
விடியற்காலையில் கண்ட கனவாதலால் மீண்டும் உறங்காது விடியும் வரை விழித்திருந்த சிவகோசரியார் பொன்முகலியில் நீராடி விட்டுப் பிறகு திருக்காளத்தி நாதரை வழக்கம் போல் பூசை செய்து விட்டு, இறைவனது கட்டளைப்படி மறைவில் ஒளிந்திருந்தார். ஆறாவது நாளான அன்றும் திண்ணனார் முன்போல் வேட்டையாடி இறைச்சியைப் பக்குவமாகச் செய்து, வாயில் திருமஞ்சன நீரையும் தலையில் மலர்களையும் கொண்டவராகக் காளத்தி நாதரின் திருச் சன்னதியை அடைந்தார்.அப்போது தீய சகுனங்களைக் கண்டு பதறிய திண்ணனார் , “ ஆ! கெட்டேன், எம்பெருமானுக்கு நான் இல்லாத நேரத்தில் ஏதோ தீங்குநேர்ந்திருக்குமோ?” என்று கலங்கியபடி விரைந்து வந்தார்.
திண்ணனாரின் அன்பை சிவகோசரியார் அறிவதற்காகக் காளத்திநாதர் தமது வலது கண்ணிலிருந்து இரத்தம் வழிவதுபோலக் காட்சி தந்து கொண்டிருந்தார். தூரத்திலிருந்தே இதைப் பார்த்துவிட்ட திண்ணனார் பதறிப்போய் விரைந்து ஓடி வந்து இவ்வாறு செய்தவர் யார் என்று அறியாமல் மதி மயங்கலானார். அவர் கொண்டுவந்த ஆற்று நீரும் மலர்களும் தரையில் சிந்தின. கையிலிருந்த இறைச்சியும், வில்லும் அம்பும் நழுவிக் கீழே விழுந்தன. கையால் துடைத்துப் பார்த்தும் இரத்தப்போக்கு நிற்காது போகவே, பெருமானுக்குத் துன்பம் விளைவித்தவர் வேடரோ அல்லது விலங்குகளோ என்று என எண்ணி நெடுந்தூரம் தேடிப்பார்த்தும் எவரையும் காணாது மீண்டும் பெருமானிடமே திரும்பி வந்தார்.பாதமலர்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கினார். இத் துயரைத் தீர்க்கும் மருந்தினையும் இப்பாவியேன் அறியேன். என் செய்வேன் என்று கதறினார்.
மலை அடிவாரத்திற்குச் சென்று வேடர்கள் அம்புகளால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தக் கட்டும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பறித்துக் கொண்டு மனோவேகத்தினும் விரைவாகப் பெருமானிடம் வந்தடைந்தார். இரத்தம் ஒழுகும் கண்ணில் அம்மருந்துகளைப் பிழிந்தும் இரத்தம் வருவது நிற்கவில்லை. “ ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்ப்பது “ என்ற பழமொழி அப்போது அவருக்கு நினைவில் வந்தது. தனது கண்ணை அம்பினால் தோண்டிப் பெருமானது கண்ணில் அப்பினால் இரத்தம் நின்றுவிடும் என்று கருதினார். அதன்படித் தனது கண்ணை அம்பாள் அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பரின் கண்ணில் அப்பினார். அப்போது இரத்தம் வருவது கண்டு மகிழ்ச்சி மேலிடக் குதித்துக் கூத்தாடினார். உன்மத்தர் போல் ஆயினார்.
திண்ணனாரின் அன்பை மேலும் சிவகோசரியாருக்குக் காட்டத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தனது இடது கண்ணில் இரத்தம் பெருகுமாறு செய்தருளினார். அதனைக் கண்ட திண்ணனார், “ஆ! கெட்டேன். மறு கண்ணிலும் இரத்தம் பெருகுகிறதே! ஆயினும் இதனைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அஞ்சேன். எனது மறு கண்ணைத் தோண்டி எடுத்துப் பெருமானாரது கண்ணில் இப்போதே அப்புவேன் “ என்றார்.பெருமானின் உதிரம் ஒழுகும் இடது கண் இருக்குமிடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள அக்கண்ணின் மேல் தன இடது காலை ஊன்றிக் கொண்டு, அம்பினால் தனது இடக் கண்ணைத் தோண்ட முயன்றார். தேவாதி தேவராகிய திருக்காளத்தி நாதர் இதனைப் பொறுப்பரோ? அக்கணமே தமது கரத்தை வெளியில் நீட்டிக் கண்ணைத் தோண்ட முயலும் திண்ணனாரின் கையைப் பிடித்து, “ நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப” எனக் கூறி அருள் செய்தார். இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த சிவகோசரியார் மகிழ்ச்சி வெள்ளத்தில்; ஆழ்ந்து பெருமானை வணங்கினார். வேதங்கள் முழங்கத் தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்று முதல் திண்ணனார்க்குக் கண்ணப்பர் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. கண்ணப்பரின் கையைப்பிடித்த பெருமான் அவரை என்றும் தமது வலது பாகத்தில் நிற்குமாறு அருளிச் செய்தார். இதனைக் காட்டிலும் அடையத்தக்க பேறு உலகில் வேறு யாது உளது?
, , குங்கிலியக் கலய நாயனார்
சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் எட்டினுள் தன்னைச் சரணாக அடைந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகப் பெருமான் இயமனைக் காலால் கடந்த தலம் திருக்கடவூர் என்பதாகும். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த கலயனார் என்பவர் காலகாலனாகிய சிவபிரானது பொன்னார் திருவடிகளை நாள்தோறும் அன்புடன் வணங்கிப் பூசித்து வந்தார். மணம் மிக்க குங்கிலியம் கொண்டு தூபம் இடும் தொண்டினைத் தவறாது செய்து வந்தார். அதன் காரணமாக அவர் குங்கிலியக்கலயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
குங்கிலியம் இடும் தொண்டினைச் செய்து வரும்போது நாயனாருக்கு வறுமை வந்தது.ஆயினும் தமது திருப்பணியைக் கைவிடாமல் நடத்தி வந்தார். வறுமை மேன்மேலும் அதிகரிக்கவே,தமது நிலங்களையும் பிற உடைமைகளையும் விற்று அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். நாளடைவில் குடும்பத்தோர் அனைவரும் உணவின்றி வருந்தினார்கள். அப்போது கலயனாரது மனைவியார் தமது தாலியைக் கழற்றிக் கணவரிடம் தந்து நெல் வாங்கி வரும்படி கூறினார். கலயரும் அதைப் பெற்றுக் கொண்டு நெல் வாங்கவேண்டிக் கடை வீதிக்குச் சென்றார். அப்போது எதிரில் ஒரு வணிகன் ஒரு மூட்டையை எடுத்து வரக்கண்டு அது என்ன பொதி என்று அவனிடம் வினவினார். அதற்கு அவன், அப்பொதி, குங்கிலிய மூட்டை என்றான். அவ்வார்த்தையைக் கேட்ட நாயனார் மிக்க மகிழ்ந்து, தம்மிடம் இருந்த பொன்னால் ஆன தாலியைக் கொடுத்துக் குங்கிலியம் வாங்கினார். அடுத்த கணமே, குங்கிலி யத்தைப் பெற்றுக்கொண்ட நாயனார் வீரட்டேசுவரர் ஆலயத்தை அடைந்து குங்கிலியம் ஏற்றி வழிபட்டார். சிவ சிந்தனையுடன் அங்கேயே தங்கிவிட்டார்.
அன்றிரவு கலயனாரது மனைவியாரும் மக்களும் பட்டினியுடன் மிகுந்த அயர்வடைந்தவர்களாக வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சிவனருளால் குபேரன் நாயனாரது மனையில் நெற்குவியல்,நவமணிகள், பொற் குவியல் ஆகிய எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து நிறைத்து வைத்தான். கலையனாரது மனைவியாரின் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, தாம் இவ்வாறு அருளியதை உணர்த்தினார். உடனே கண் விழித்த அவ்வம்மையார் திருவருளை வியந்து,துதித்த வண்ணம் கணவனாரது வருகையை எதிர் நோக்கியிருந்தார்.
கால காலனும் கருணைக்கடலுமான கடவூர்ப் பெருமான் கலய நாயனாரின் கனவில் எழுந்தருளி, “ அன்பனே. மிகுந்த பசியோடு இருந்தும் உனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தாய். உடனே உனது மனைக்குச் சென்று உணவு உட்கொண்டு பசித்துன்பம் தீரப்பெறுவாயாக” என்று அருளிச் செய்தார்.வீட்டுக்குச் சென்ற நாயனார் தமது மனையானது மாளிகையாகத் தோற்றம் அளிப்பதையும், நிதிக் குவியல்கள் நிறைந்திருப்பதையும்,கண்டு வியந்து, இவ்வாறு எங்ஙனம் ஆயிற்று என்று மனைவியாரை வினவ, அவரும், “ நீலகண்டப்பெருமானின் திருவருள்” எனக் கூறினார். இதைக் கேட்டுப் பரவசமான கலயனார், “ அடியேனையும் ஆட்கொண்டு திருவருள் செய்த திறம் தான் என்னே” என்று பெருமானைப் போற்றினார்.பின்னர் அவ்வம்மையார்,தமது கணவனாருக்கும் சிவனடியார்களுக்கும் திருவமுது ஊட்டினார். பெருமானது திருவருள் வாய்க்கப்பெற்றதால் இருவரும் பலகாலம் சிவனடியார்களுக்கு அமுதூட்டியும்,ஆலயத்தில் குங்கிலியப்பணி செய்தும் வாழ்ந்து வந்தனர்.
ஒரு சமயம் தாடகை என்ற பக்தை திருப்பனந்தாள் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள செஞ்சடையப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தபோது அவளது அபிஷேகத்தை சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்து ஏற்றுக் கொண்டபின்னர் அதற்கு அடையாளமாகச் சாய்ந்த நிலையிலேயே நின்று விட்டபடியால் மீண்டும் நிமிர்த்தும் எண்ணம் கொண்ட சோழ மன்னன் தனது யானைகளையும் சேனைகளையும் கொண்டு கயிற்றால் இழுப்பித்து முயன்றும் அது முடியாமல் போயிற்று. அதனால் கவலையில் மன்னன் ஆழ்ந்ததைக் கேள்விப்பட்ட கலயனார் திருப்பனந்தாளுக்கு எழுந்தருளி, இலிங்கத் திருமேனியைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த பூங் கச்சினைத் தனது கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். அன்பரது அன்புக்குக் கட்டுப்பட்ட பெருமான் நிமிர்ந்து நின்றார். சோழ மன்னனும் மிக்க மகிழ்ச்சியடைந்து கலயனாரை வணங்கித் துதித்தான். சில நாட்கள் அங்கு தங்கிவிட்டுப் பின்னர் திருக்கடவூர் வந்தடைந்த நாயனார் முன்போல் குங்கிலியத் தூபப் பணி செய்து வந்தார்.
தல யாத்திரையாகத் திருக்கடவூர் வந்த திருஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் கலய நாயனார் எதிர்கொண்டு வணங்கித் தமது மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை உணவு படைத்து வழிபட்டு அவர்களது திருவருளையும்,கடவூர் ஈசனின் திருவருளையும் ஒருங்கே பெற்றார். இவ்வாறு பெருமானுக்கும் அவனது அடியார்களுக்கும் தொண்டுகள் பல செய்து வந்த நாயனார் அதன் பலனாக இறைவரது திருவடி நிழலை அடைந்தார்.
**********************
மானக்கஞ்சாற நாயனார்
சோழ நாட்டில் வளம்மிக்க பதிகளுள் ஒன்றான கஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குலத்தில் மானக் கஞ்சாரர் bbjjஎன்பவர்,பரம்பரையாக அரசனின் படைத்தலைமை புரியும் சேனாபதிக் குடியில் அவதரித்தார். { கஞ்சாறு என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் என்று தற்போது வழங்கப்படும் தேவார வைப்புத் தலம் என்பர், மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கஞ்சா நகரம் என்ற ஊரும் உள்ளது.. இவ்விரு ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் மானக்கஞ்சாற நாயனாரது திருவுருவங்கள் உள்ளன.}
சிவபெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டு தமது செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கே உரிமை ஆக்கி,அவர்கள் விரும்புவனவற்றை அவ்வடியார்கள் கேட்கும் முன்பே குறிப்பால் அறிந்து கொடுத்து வந்தார். (திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் இவரை வள்ளல் என்று குறிப்பிடுவதும் காண்க)
மகப்பேறின்றிச் சில காலம் வருத்தமுற்று வாழ்ந்த நிலையில் அக்குறை தீர வேண்டி அம்பலக்கூத்தனின் அருளால் அவரது மனைவியார் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அச்செய்தி அறிந்த கஞ்சாறூர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாயனாரும் சிவனடியார்களுக்கு அளவற்ற செல்வத்தை வாரி வழங்கினார். நாளடைவில் அக்குழந்தை பிறைச் சந்திரன்போல் வளர்ந்து பேதைப் பருவத்தை அடைந்தது. பேரழகுடன் திகழ்ந்த தமது பெண்ணிற்கு மணம் புரிய எண்ணினார் மானக்கஞ்சாரர் அதே மரபில் வந்தவரும் சிவபெருமானுக்கு அன்பருமான ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் அப்பெண்ணைத் தாம் மணம் புரிய வேண்டிச் சில முதியோர்களை மானக்கஞ்சாரறது மனைக்கு மணம் பேசி வருமாறு அனுப்பி வைத்தார். அவர்களை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,தமது மகளை ஏயர்கோனுக்கு மணம் செய்து தரச் சம்மதம் தெரிவித்தார்.
சோதிடர் மூலம் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடை பெற்றன. நகரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. நாயனாரது உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். பொற்கலசங்களில் பாலிகைகளை நிறைத்து, வெண் முளைகளைச் சாத்தினர். திருமண நாளுக்கு முதல் நாள் மானக்கஞ்சாரர் தமது சுற்றத்தாருடன், மங்கல வாத்தியங்கள் முழங்கக் கஞ்சாறூருக்கு அருகில் வந்து தங்கினார்.
நாயனார் கஞ்சாற்றுக்கு வந்து சேரும் முன்னரே, சிவபெருமான் ஓர் மாவிரத முனிவர் வேடம் கொண்டு அங்கு எழுந்தருளினார். அவரது வெண்ணீறணிந்த நெற்றியும், வெண் நூலணிந்த மார்பும் கோவணம் அணிந்த இடையும்,அழகிய மேலாடையும், எலும்பாபரணமும் கண்டோரைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. கையில் விபூதிப் பை ஏந்தி, உடல் முழுதும் விபூதி தரித்து,மாவிரத முனிவர் வேடத்தில் பெருமான் மானக்கஞ்சாரறது வீட்டை அடைந்தார். உலகம் உய்ய வேண்டி அவ்வாறு எழுந்தருளிய பிரானை எதிர்கொண்டு வரவேற்ற நாயனார்,” தேவரீர் இங்கு எழுந்தருளியதால் அடியேன் உய்ந்தேன் “ என்றார்.
அங்கு நடக்க இருக்கும் மண விழாவைப்பற்றி நாயனார் வாயிலாக முனிவர் வேடத்தில் வந்த இறைவன் கேட்டவுடன், அவருக்கு மங்கலம் உண்டாகுமாறு ஆசி வழங்கினார்.நாயனார் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கியபின் தனது மகளையும் அழைத்து வந்து அவரை வணங்கச் செய்தார். தம்மை வணங்கி எழுந்த அப்பெண்ணை நோக்கியருளிய பின் முனிவராக வந்த பெருமான்,நாயனாரை நோக்கி, “ இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்றார். இதனைக் கேட்ட நாயனார், தமது உடைவாளை உருவி, “ இப்படி இவர் பஞ்சவடிக்காகக் கூந்தலைக் கேட்க அடியேன் பேறு பெற்றேன்” என்று கூறியபடி பூங்கொடி போல் அங்கு நின்று கொண்டிருந்த தனது அன்பு மகளின் கூந்தலை அடியோடு அரிந்து, அதனை மாவிரத முனிவரின் மலர்க்கரத்தில் வழங்கினார். அதனை வாங்குவதுபோல நின்ற முனிவர் உடனே மறைந்து, உமாதேவியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வானத்தில் காட்சி தந்தருளினார். அக்காட்சியைக் கண்டு உடல் முழுதும் புளகாங்கிதம் அடைந்த நாயனார் தனது இரு கைகளையும் தலைமீது கூப்பியவராக நிலத்தில் பலமுறை வீழ்ந்து வணங்கினார். வானத்திலிருந்து மலர்மழை பொழிந்தது. நாயனாரை நோக்கிய இறைவன், “ நீ நம்பால் கொண்டிருந்த அன்பை உலகறியச் செய்ய வேண்டி இவ்வாறு செய்தோம் “ என்றருளினார். கண்டவர்கள் களிப்படையவும்,வியப்படையவும் இங்ஙனம் அருள் செய்த பின் பெருமான் மறைந்தருளினார்.
தலை முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணம் செய்து கொள்வது என்று ஏயர்கோன் தயங்கியபோது, அசரீரியாகப் பெருமான், “ மனம் தளர வேண்டாம். அவளது கூந்தலை மீளக் கொடுத்தருளுவோம்” என்ருளியவுடன் அவளது கூந்தல் முன்போல் வளர்ந்தது. திருவருளின் திறம் கண்டு அனைவரும் நெகிழ்ந்து அதிசயித்தனர். ஏயர்கோனும் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நாயனாரின் சீரிய தொண்டைக் கண்டு உலகமே வியந்தது. தொண்டர்க்குத் தொண்டரான நாயனார் நிறைவாக இணையில்லாப் பெரும்பதமாகிய சிவானந்தப் பேற்றினை அடைந்தார்.
******************************
அரிவாட்டாய நாயனார்
சோழ வளநாட்டில் திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள தண்டலை நீள்நெறி என்ற தேவாரப்பாடல் பெற்ற தலத்துக்கு அண்மையில் கணமங்கலம் என்ற ஊர் உளது. அவ்வூரில் வேளாளர் குலம் விளங்குமாறு தோன்றியவர் தாயானார் என்பவர் ஆவார். செல்வம் மிக்கவராகத் திகழ்ந்த தாயானார் இல்வாழ்க்கையில் இருந்துகொண்டு நல்லறம் செய்து வந்தார். சிவபக்தியில் மேம்பட்ட இவர், தினமும் பெருமானுக்கு செங்கீரையும் மாவடுவும் சிவ வேதியர்கள் மூலம் கொடுத்து வந்தார்.
சிவபெருமானின் திருவுள்ளப்பாங்கின் படி நாயனாரது செல்வம் குறைந்து வறுமை மேலிட்டது. ஆயினும் நாயனார் தமது தொண்டினை விடாது செய்து வந்தார். கூலிக்காக நெல்லறுத்துக் கூலியாகப்பெற்ற செந்நெல்லை சிவபெருமானுக்குத் திருவமுதாக ஆக்கினார். கார்நெல்லைத் தமது உணவிற்காக ஆக்கிக் கொண்டார். அவ்வூரிலிருந்த வயல்கள் யாவும் செந்நெல்லே விளையுமாறு பெருமான் திருவுள்ளம் கொண்டார் தான் செய்த புண்ணியமே இவ்வாறு செந்நெல் மட்டுமே விளைகிறது என்று கருதிய நாயனார், பெற்ற நெல் முழுவதையும் சிவ பெருமானுக்கே ஆக்கிவிட்டுத் தமக்கு உணவின்றிப் பட்டினியாக இருந்தார்.
நாயனாரது மனைவியார் வீட்டின் பின்புறம் விளைந்த கீரையைப் பறித்து வந்து சமைத்துக் கணவனாருக்குப் பரிமாறினார். இருவரும் அதனை மட்டுமே உண்டபோதிலும் இறை தொண்டை விடாது செய்து வந்தனர். வீட்டுத் தோட்டத்தில் கீரைகளும் விளைவது குறைந்து போகவே, இருவரும் தண்ணீரை மட்டும் அருந்தி சிவத் தொண்டை இடைவிடாமல் தொடர்ந்தனர்.
ஒருநாள் நாயனார், பெருமானுக்கு அமுது செய்விப்பதற்காகத் தாம் வயலிலிருந்து கொண்டு வந்த செந்நெல்லையும், மாவடுவையும், கீரையையும் கூடையில் வைத்துச் சுமந்து சென்றார்.அவருக்குப் பயனின் அவரது கற்புடை மனைவியார் பஞ்சகவ்வியத்தை மண் கலயத்தில் வைத்து ஏந்திச் சென்றார். பலநாட்களாக உணவு உட்கொள்ளாத களைப்பினால் நாயனார் பசி மயக்கத்தால் தல்லாடியபடிக் கீழே விழுந்தார். ஒரு கையில் பஞ்ச கவ்வியத்தை ஏந்தியபடியே,மற்றொரு கையால் கணவனாரைத் தாங்கிப் பிடித்தார் மனைவியார். இதற்கிடையில் நாயனார் தாங்கி வந்த கூடை நழுவி, அதற்குள் இருந்த பொருள்கள் கமரில் (நிலவெடிப்பில்) விழுந்துவிட்டதன. இதைக்கண்டு பதறிப் போன நாயனார், “ இனிமேல் கோயிலுக்குச் சென்று பயன் ஏதுமில்லை.. இன்று பெருமானுக்குத் திருவமுது ஆக்கும் பேறு பெறாததால் யான இனி இருந்து என்ன பயன்” எனக் கூறி அரிவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். அது மட்டுமா? தனது பிறவித்துன்பத்தையும் வேரோடு அறுக்கத் துவங்கினார்.
அன்பரின் மனுருதியைக் கண்ட சிவபெருமான் அக்கணமே கமரிளிருந்து கையை உயர்த்தி நாயனாரின் அரிவாள் ஏந்திய கையைப் பிடித்து,அந்தச் செயலைத் தடுத்தருளினார். அப்போது கமரிளிருந்து நாயனாரின் கையைப்பிடிக்கும் ஓசையும், மாவடு விடேல் விடேல் என்னும் ஓசையும் ஒன்றாக எழுந்தன. இறைவனது பெருங்கருணையைப் போற்றிய தாயானார், விடையின் மீது உமாதேவியுடன் காட்சி கொடுத்தருளிய பரம்பொருளை வணங்கித் துதித்தார். பெருமானும் நாயனாரது தொண்டைக் கண்டு மகிழ்ந்து ,“ நீயும் உனது மனைவியும் நம் உலகை அடைந்து என்றும் வாழ்வீர்களாக” எனக் கூறி மறைந்தருளினார். இவ்வாறு அரிவாளால் கழுத்தை அரிந்ததால் இவர் அரிவாட்டாயர் என்ற புகழ் நாமம் பெற்றார். பெருமான் அருள் பெற்ற அரிவாட்டாய நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்தனர்.
ஆனாய நாயனார்.
சோழ வள நாட்டின் ஒரு பகுதியாகிய மேல் மழநாடு என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் லால்குடி என்று தற்போது அழைக்கப்படும் திருத்தவத்துறையைத் தலைநகராகக் கொண்டது. இம் மேன்மழ நாட்டிற்கு ஆபரணம் போல் விளங்குவது திருமங்கலம் என்ற ஊராகும். இவ்வூரில் ஆயர்(இடையர்) குலத்திற்கு விளக்குப் போல அவதரித்தவர் ஆனாயர் ஆவார். தூய வெண்ணீற்றின் மீது பேரன்பு பூண்டு ஒழுகிய ஆனாயர் தமது குலத் தொழிலாகிய ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டு, பசுக்களுக்குத் துன்பம் வாராமல் பாதுகாத்து வந்தார். அப்போது புல்லாங்குழலில் சிவ பஞ்சாக்ஷரத்தை சுருதி லயத்தோடு வாசிப்பார். அவ்விசையைக் கேட்டவுடன் சராசரங்கள் எல்லாம் மெய்ம்மறந்து உருகி நிற்கும்.
ஒரு சமயம் ஆனாய நாயனார் தனது நெற்றியில் திருநீற்றை நிறையப்பூசிக்கொண்டு இடுப்பில் மரவுரி தரித்து அதன் மீது பூம்பட்டினைக் கட்டிக் கொண்டு கோலும் குழலும் ஏந்தியவராகப் பசுக்கூட்டத்தை அழைத்துக் கொண்டு அவற்றை மேய்ப்பதற்காகச் சென்றார். வழியில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொன்றைப் பூவினை அணிந்த சிவபிரானைப் போல அழகாகக் காட்சி அளித்ததால் அதனைச் சிவ வடிவாகவே எண்ணி மட்டற்ற அன்போடு மனம் உருகி நின்றார்.உடனே தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்தை அதில் அமைத்துக் கேட்போரைப் பரவசப்படுத்தும்படி குறிஞ்சி ,முல்லை ஆகிய பண்களோடு இசைத்தார்.
இசை நூல் இலக்கணம் வழுவாமல் இன்னிசை பாடியதால் பசுக்கூட்டங்களும் மேய்வதை மறந்து அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றன. கன்றுகளும் தாய்ப்பசுக்களிடம் பால் ஊட்டுவதை விட்டு ஆனாயாரைச் சூழ்ந்து கொண்டன. மான் முதலிய விலங்கினங்களும் அவரிடம் வந்து கூடின. மயில்கள் தோகை விரித்து ஆடுவதை நிறுத்தி விட்டு நாயனார் அருகில் வந்தன. இதனைக் கண்ட பிற ஆயர்களும், நாகர்களும், கின்னரர்களும்,தேவர்களும் இசையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேர்ந்தனர். மிருகங்களும் தங்கள் பகையை மறந்து அவ்விடம் சேர்ந்து நின்றன. அசையும் பொருள்களும் அசையாப் பொருள்களும் ஆனாயரின் இசையில் மயங்கி நின்றன. அந்த இசை நிலவுலகத்தை நிறைத்ததொடு வானத்தையும் தன் வயம் ஆக்கியது. அதோடு பொய்யன்புக்கு எட்டாத பொதுவில் ஆனந்த நடனம் புரியும் சிவபெருமானின் திருச் செவியிலும் சென்று அடைந்தது.
இசை வடிவாய்,இசைக்கு மூல காரணராக விளங்கும் சிவபெருமான், உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, “ நமது அடியார்கள் எப்போதும் இக்குழலோசையைக் கேட்கும்படி இந்நிலையிலேயே நம்பால் வந்தடைவாயாக “ என்று அருளிச் செய்தார். அதன்படி ஆனாயரும் தேவர்கள் மலர் மழை பொழியவும், முனிவர்கள் வேதங்களால் துதிக்கவும், குழலிசையை வாசித்துக் கொண்டே பெருமானைத் தொடர்ந்த நிலையில் நாயனாருக்கு இன்னருள் செய்த இறைவன் தனது பொன்னம்பலத்தைச் சென்றடைந்தருளினார்.