பெரிய புராணம் – முன்னுரை
சிவபெருமான் மீது கொண்ட ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச் செய்த பெரியவர்களது சரிதத்தைச் சொல்வதால் பன்னிரண்டாவது சைவத்திருமுறை நூலான இதனைப் பெரிய புராணம் என்றே அழைத்தனர். இதன் நூலாசிரியரான சேக்கிழார் இதற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் மாக்கதை என்பதாம். மாக்கதை என்பது பின்னர் பெரிய புராணம் என்று ஆயிற்று எனக் கொள்ளலாம்.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தீந்தமிழ்ப் பாடல்களால் அமையப்பெற்றது இந்நூல். தில்லை அம்பலவனே அடியெடுத்துக் கொடுத்த பெருமை உடைய பெரிய புராண வாயிலாகவே அறுபத்து மூன்று நாயன்மார்களின் அருட்செயல்களை விரிவாக அறிய முடிகிறது. மேலும் மூவர் அருளிய தேவாரப்பதிகங்களில் பலவற்றின் பதிக வரலாறுகளைச் சேக்கிழார் வாயிலாகவே அறிகிறோம். அவரைத் தவிர வேறு எவரால் தொண்டர் சீர் பரவ முடியும்?
பெரிய புராணத்தை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் இடம்பெறும் நன்னெறிகள் சிலவற்றையாவது கடைப்பிடிக்க முயற்சிப்பதே மிகவும் அத்தியாவசியம் என்ற எண்ணத்துடன் இந்நூலை அணுக வேண்டும்.அந்த எண்ணம் மேளிட்டவுடன் நமது மனக் கறைகள் அகன்று பக்குவம் ஏற்படுவதை அனுபவத்தால் அறியலாம். அப்போதுதான் ஸ்ரீ ரமண மகரிஷி போன்ற மகான்களால் போற்றப்பெற்ற இக்காப்பியத்தின் பெருமையும் அருமையும் புலப்படும்.
உலகம் உய்யவும், சைவம் தழைத்து ஓங்கவும் சிவனருளால் பன்னிரு திருமுறைகள் தோன்றின. தென் திசை செய்த புண்ணியத்தின் பயனாகத் திருவவதாரம் செய்த சிவனடியார்கள் பலர். அவர்களுள் அறுபத்து மூன்று அடியார்களது திருப்பெயர்கள் திருவாரூர் இறைவனருள் சுந்தர மூர்த்தி நாயனாரது வாக்காகத் திருத்தொண்டத் தொகை என்ற திருப்பதிகம் மலர்ந்தது. அதில் அடியார்கள் பெயரைக் கூறி அவர்க்கு அடியேன் என்று சுந்தரர் அருளினார். அதை அடிப்படையாகக் கொண்டு, திருமுறைகளை வகுத்துத் தந்தவரும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாரின் அருள் பெற்றவருமான நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர் திருவந்தாதி என்ற பிரபந்தத்தை அருளிச் செய்தார். இவ்விரண்டின் துணை கொண்டு குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் தில்லைக் கூத்தன் “உலகெலாம்” என்று அடியெடுத்துத் தர , திருத்தொண்டர் புராணத்தை இயற்றி அரங்கேற்றினார். பெருமையால் பெரிய அடியவர்களது புராணமாதலால் அதுவே பெரிய புராணம் என்று வழங்கப்படலாயிற்று. அதன் பெருமை கருதிய முன்னோரும் அதனைப் பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்த்தனர்.அநபாய சோழனின் அமைச்சராக விளங்கிய சேக்கிழாரது காலம் கி.பி. 12 ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.
சுந்தரரின் வரலாற்றை பல நாயன்மார்களது சரிதங்களின் இடையில் அமைத்துள்ளபடியால், சுந்தரரே காப்பியத் தலைவர் ஆகிறார். திருக்கயிலையில் துவங்கி அங்கேயே நிறைவு பெறுவதாக நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை வருணனை, நாட்டுச் சிறப்பு,நகரச் சிறப்பு,ஆகிய அங்கங்களோடு வீரம், கொடை,நீதி தவறாத அரசியல், கற்பு,தொண்டு, செயற்கரிய செயல்கள், நட்பு, பக்திச் சுவை ஆகிய உயர்ந்த அம்சங்களோடு விளங்குவது இப்புராணம்.
நாயன்மார்கள் பல்வேறு குலங்களில் உதித்தவர்கள். சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சை உடையவர்கள். சிவனடியார்களை சிவனாகவே பாவித்தவர்கள். தாம் செய்யும் தொண்டில் தலை சிறந்து விளங்கியவர்கள். வறுமையிலும் சோர்வடையாத தெளிந்த சித்தம் உடையவர்கள்/ அடியார்களுக்குள் வேற்றுமை பாராட்டாதவர்கள். ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கருதுபவர்கள். பொன்னையும் நவ மணிகளையும் காட்டிலும் சிவனடிகளை வாழ்த்தும் செல்வமே உயர்ந்த செல்வம் என்ற கொள்கை உடையவர்கள்.
ஒருசமயம் திருக்கயிலாய மலையில் உபமன்யு முனிவர் முதலியோர் குழுமியிருந்த போது வானில் ஒரு பேரொளி தோன்றியது. வானில் ஒளியாகச் செல்பவர் ஆலால சுந்தரர் என்றும் அனைவராலும் தொழப்படுபவர் என்றும் உபமன்யு முனிவர் கூறியதும், மற்ற முனிவர்கள் சுந்தரரது சரிதத்தையும் பெருமையையும் விளக்கமாகக் கூறியருள வேண்டும் என்று விண்ணப்பிக்கவே, முனிவரும் கூறலுற்றார்.
சிவபிரானுக்கு அணுக்கத்தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரர், நந்தவனத்தில் மலர் பறிக்கச் சென்ற போது, உமாதேவியின் தோழிகளான கமலினி,அனிந்திதை ஆகிய இருவரையும் கண்டு அவர்களிடம் ஒரு கணம் மனம் போக்கினார். தென்னாடு வாழ வேண்டி இறைவன் செய்த திருவிளையாடலால் இந்நிகழ்ச்சியைக் காரணமாகக் கொண்டு சுந்தரரை நிலவுலகில் பிறந்து அவ்விருவரையும் மணம் புரிந்து கொண்டு பின்னர் தன்னை வந்தடையுமாறு இறைவன் பணித்தான். இதனால் பதைத்த சுந்தரர் , நிலவுலகில் மையலுற்றால் தேவரீரே வந்து அடியேனைத் தடுத்து ஆள வேண்டும் என வேண்டவே, சிவபெருமானும் அவ்வண்ணமே அருள் செய்தான்.
புண்ணிய பூமியாகிய தென்திசை பல சிறந்த சிவதலங்களைத் தன்னிடத்தே கொண்டது. தனது தேர்க்காலில் மகனை ஏற்றிக் கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆண்ட பெருமை உடையது திருவாரூர் நன்னகர். அங்குள்ள பூங் கோயிலும் அதிலுள்ள தேவாசிரியன் மண்டபமும் அடியார்கள் ஒன்று கூடும் பெருமை வாய்ந்தது. இத்தகைய அடியார்களது பெருமையை உலகறியவே சுந்தரர் திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத் திருவவதாரம் செய்தருளினார். சிறு வயதில் நரசிங்க முனையரையர் என்ற சிற்றசரால் வளர்க்கப்பெற்றார். மணப்பருவம் வந்ததும் அவருக்குச் சடங்கவியார் என்பவரது மகளை மணம் பேசினர்.முன்னம் அருளியபடி,கமலினியாரையும் அநிந்திதையாரையும் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணம் செய்வதைத் தடுத்தாள வேண்டி இறைவன் அத்திருமணப்பந்தலில் வயோதிகராகத் தோன்றி, “ உன் குடி முழுதும் வெண்ணை நல்லூர் பித்தனுக்கு அடிமை”. என்று கூறி முன்னோர்கள் எழுதித் தந்த ஒலையையும் ஆதாரமாகக் காட்டவே, திருமணம் தடைப்பட்டது.
முதியவராக வந்த இறைவனைத் தொடர்ந்து திருவெண்ணை நல்லூர்க் கோயிலுக்குள் சென்றவுடன் இறைவன் மறைந்தருளியதோடு அசரீரியாக “முன்பு என்னைப் பித்தன் என்று வன்மை பேசியதால் வன்தொண்டன் என்ற நாமம் பெறுவாய். பித்தா எனத் துவங்கிப் பாடுவாயாக என அருளிச் செய்தார்.ஆகவே சுந்தரரின் திருவாக்கிலிருந்து “ பித்தா பிறை சூடி” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகம் உதித்தது. திருத்துறையூரில் தவநெறியும் திருவதிகையில் திருவடி தீக்ஷையும் பெற்றுத் தில்லையை வணங்கியபோது, திருவாரூருக்கு வா எனக் கூத்தப்பெருமானது அருள் வாக்கு ஒலித்தது. அதன்படித் திருவாரூரை அடைந்த நம்பியாரூரர், புற்றிடம்கொண்ட பெருமானைப் பாடித் தொழுது வந்தார். ஒருசமயம் அங்கு வந்த பரவையாரைக் கண்டார். கமலினியின் அவதாரமே பரவை. எனவே இருவரும் ஒருவரைஒருவர் விரும்பினர். அவ்விருவரையும் திருவாரூர் வாழ் அடியார்களைக் கொண்டு மணம் செய்வித்தான் பரமன். மேலும் தன்னையே இறைவன் தோழைமையாகத் தந்ததால் சுந்தரரை அனைவரும் “ தம்பிரான் தோழர்” என்று அழைக்கலுற்றார்கள்.
ஒருநாள் தேவாசிரியன் மண்டபத்திலிருந்த அடியார்களைத் தரிசித்தவாறே தியாகேசப்பெருமானது சன்னதியை அடைந்து, “ இவ்வடியார்களுக்கு அடியவன் ஆகும் நாள் எப்போது “ என நினைக்க, இறைவனும் , பெருமையால் தனக்குத் தானே நிகரான அவர்களைத் “ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் எனத் துவங்கிப் பாடுவாயாக என்று அடி எடுத்துக் கொடுத்தருளினான். சிவனருளால் சுந்தரரின் திருவாக்கிலிருந்து திருத்தொண்டத்தொகை என்ற திருப்பதிகம் எழுந்தது. தனித்தனியாக ஒவ்வொரு அடியார்க்கும் அடியேன் எனச் சிறப்பித்ததோடு தொகை அடியார்களையும் சிறப்பித்துப் பாடினார் சுந்தரர். அவ்வரிசையைப் பின்பற்றி நாயனார்களின் சரித்திரத்தை விரித்துரைக்கிறது பெரிய புராணம்.
கட்டுரை ஆசிரியர் அறிமுகம்
சிவபாதசேகரன்
மயிலாடுதுறையில் பிறந்து பள்ளிப்படிப்புக்குப் பின்னர் சென்னையில் பட்டப்படிப்பை முடித்து, எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றியபின் தனது ஓய்வு காலத்தில் சிவப்பணிகளைத் தொடர்கிறார்.சுமார் நாற்பது ஆண்டுகளாகத் திருவாதிரையான் திருவருட் சபையின் செயலாளராகவும், மூன்றாண்டுகளாக ஆர்த்ரா பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிர்வாக டிரஸ்டியாகவும் செயலாற்றிப் பிற்பட்ட நிலையிலுள்ள சிவாலயங்களின் திருப்பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் இவ்வமைப்புகள் மூலம் தொண்டாற்றி வருகிறார். வருவாயில்லாதபோதும் கிராமக்கோயில்களில் பணியாற்றிவரும் சிவாச்சாரியப் பெருமக்களுக்கு உதவுதலும், மக்களிடையே நமது ஆலயங்களின் மேன்மை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதும், திருமுறைகளை ஓதுவதும் ஓதுவிப்பதும், ஆறு வலைப்பதிவுகள் மூலம் தொலைவிலுள்ளோரும் ஈடுபட முயல்வதும், சிறு புத்தக வெளியீடுகள் செய்வதும், ardhra.org என்ற இணைய தளத்தின் மூலம் நாம் செய்ய வேண்டுவதை அறியச் செய்வதும் ,தலயாத்திரைகள் மேற்கொள்வதும் 64 வயதான இவர் ஆற்றிவரும் பணிகள். சைவ ஆதீனங்களின் மாத இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சேகர் என்று அழைக்கப்படும் இவருக்குத் திருமுறைச் செம்மணி, சிவநெறித் திருத்தொண்டர் என்ற பட்டங்கள் அன்பர்களால் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், மறைமலை அடிகளின் மாணாக்கரும் “ திருக்கோயில்“ பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான திரு ந.ரா. முருகவேள் அவர்கள் பேரன்புடன் அழைத்த சிவபாதசேகரன் என்ற பெயரையே வாழ்நாளில் தாம் பெற்ற பெரிய பேறாகக் கருதுகிறார்.
சென்னையில் வசித்துவரும் இவரது தொலைபேசிகள்: 044-23742189; 09840744337
இ- மெயில் முகவரி: ardhra.sekar@gmail.com
நாயன்மார் சரித்திரம்
தில்லை வாழ் அந்தணர்
கற்பனை கடந்த சோதி வடிவாகி , ஆதியாய்,நடுவும் ஆகி, அளவில்லா அளவும் ஆகி உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகித் தில்லைப் பெருவெளியில் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் புரியும் பெருமானைப் பூசிக்கும் பேரருள் பெற்றவர்கள் முதல் அடியார்களாகிய தில்லை வாழ் அந்தணர்கள்.முச்சந்தி முட்டாமல் காலம் தோறும் அம்பலவாணனைப் பூசித்தலைக் குறைவறச் செய்பவர்கள்.திருநீறு முதலிய சாதனங்களைத் தரித்து நல்லொழுக்கத்தில் மேம்பட்டவர்கள். நான்கு வேதங்களையும்,ஆறு அங்கங்களையும்,நான்கு உபாங்கங்களையும் ஐயம் திரிபறக் கற்றவர்கள். அந் நூல்கள் விதித்தபடியே, முத்தீ வளர்த்துக் கலியின் கொடுமைகளை உலகிற்கு வாராமே செய்பவர்கள்.பொற்சபையில் நடமாடும் பெருமானுக்குத் தொண்டு செய்வதையே செல்வமாகக் கருதுபவர்கள். தமக்குக் கிடைத்த விலையற்ற செல்வம் திருநீறே என்று எண்ணுபவர்கள். தானம்,தவம் இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள். எவ்வகைக் குற்றமும் இல்லாமல் மானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். இல்லறத்தை ஏற்று நல்லறம் செய்பவர்கள். இம்மையிலேயே சிற்றம்பலவனின் அருள் கிடைக்கப்பெற்றதால் இதற்கு மேலும் எதையும் வேண்டாதவர்கள். செம்மனம் உடைய இவர்கள் தமக்குத் தாமே ஒப்பாவார்கள். தெய்வத்தன்மை வாய்ந்த தில்லை மூவாயிரம் அந்தணர்களது பெருமையை உலகறிய வேண்டி, திருவாரூர்ப் பெருமானே “ தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரருக்குத் திருத்தொண்டத் தொகை பாட அடி எடுத்துக் கொடுத்தான் என்றால் இவர்களது பெருமையை யாரால் கூற முடியும்?
திருநீலகண்டநாயனார்
சிதம்பரம் எனப்படும் தில்லைப்பதியில் குயவர் குலம் உய்யுமாறு அவதரித்தவர் திருநீலகண்டர். சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதை இடையறாது மேற்கொண்டு வந்தார். மட்பாண்டங்களைச் செய்து அடியார்களுக்குத் திருவோடுகளை அளிக்கும் பணியில் தலை நின்றார். அவரது மனைவியார் கற்பில் மேம்பட்டவர். இளமை மீதுரவே, திருநீலகண்டர் சிற்றின்பத்துறையில் நாட்டம் கொண்டார். அப்போதும் தாம் செய்து வரும் தொண்டிலிருந்து சற்றும் மாறவில்லை.
ஒருநாள் ஒரு பரத்தையின் மனைக்குச் சென்று வந்த திருநீலகண்டர்பால் கோபம் கொண்ட அவரது மனைவியார், எம்மை இனி நீர் தீண்ட வேண்டா திருநீலகண்டத்தின் மீது ஆணை “ என்றார். இவ்வாறு பெருமானின் திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுக் கூறியதைக் கேட்ட திருநீலகண்டர், “எம்மை” என்று பன்மையாகக் கூறியதால் இனி உன்னை மட்டுமல்லாமல் எந்தப் பெண்ணையும் மனத்தாலும் தீண்ட மாட்டேன்” என்றார். இந்நிகழ்ச்சியைப் பிறர் அறியாமல் இருவரும் வாழ்ந்துவந்தனர். இவ்விதம் பல்லாண்டுகள் ஆகி,முதுமை வந்தது. ஆயினும் சிவபிரானிடத்தும் அவனது அடியார்களிடத்தும் இருந்த அன்பு ஒரு சிறிதும் குறையவில்லை.
இவ்விருவரின் பெருமையை உலகிற்குக் காட்ட வேண்டி, இறைவன் ஒரு சிவ யோகியின் வடிவெடுத்துத் திருநீலகண்டரின் மனைக்கு எழுந்தருளினான்.கையில் திருவோடேந்தி நீறு தாங்கிய நெற்றியுடனும் புன்னகை தவழும் திருமுகத்துடனும் தோன்றிய சிவ யோகியாரை மிக்க மகிழ்வுடன் வரவேற்று ஆசனத்தில் இருத்தி உபசரித்தார் திருநீலகண்டர். அப்போது சிவயோகியார் ,அடியவரை நோக்கி, “ யான் இந்தத்திருவோட்டை உம்மிடம் கொடுத்து வைக்கிறேன். இது விலை மதிப்பற்றது.நான் மீண்டும் வரும் வரையில் இதனைப் பாதுகாத்து வைப்பீராக.” என்றார். நீலகண்டரும் அதற்கு உடன்பட்டுத் திருவோட்டினைத் தனது இல்லத்தில் பாதுகாப்பாக வைத்தார். வந்த இறைவரும் விடை பெற்றவராய்த் தனது பொற்சபைக்குத் திரும்பினார்.
நீண்ட நாட்களுக்குப் பின் சிவயோகியார் வடிவில் மீண்டும் திருநீலகண்டரின் மனைக்கு எழுந்தருளினான். தான் கொடுத்த திருவோட்டினைத் திருப்பித்தருமாறு அடியவரிடம் கேட்டான். வீட்டில் எங்கு தேடியும் அவ்வொடு கிடைக்கவில்லை. பதைத்து நின்றபடியே வேறு ஒரு ஓடு பழையதைக் காட்டிலும் செய்து தருவதாகக் கூறினார். அதைக்கேட்டு சினம் கொண்ட சிவபெருமான்,” எனது திருவோட்டினைக் கவர்ந்து கொண்டு விட்டு இவ்விதம் பொய் சொல்கிறாய். எனவே உனது மகனைப் பற்றியவாறு குளத்தில் மூழ்கி ,ஓட்டினைக் கவரவில்லை என்று சொல்லுவாய்.” என்றான். அவ்வாறு செய்வதற்குத் தனக்கு மகன் இல்லாததால் வேறு எண்ண செய்ய வேண்டும் என்று திருநீலகண்டர் கேட்கவே, இறைவனும் “ உனது மனைவியின் கரத்தைப் பிடித்தவாறு குளத்தில் இறங்கி சத்தியம் செய்ய வேண்டும் “ என்றான். அப்போது நாயனார், தமக்கும் தனது மனைவிக்கும் இடையில் ஒரு சபதம் உள்ளது என்பதால் அவளைத் தீண்டி சபதம் செய்ய இயலாது என்று உரைத்தார். அதனை ஏற்க மறுத்த சிவயோகியார், அவரைத் தில்லை வாழந்தணர்களிடம் அழைத்துச் சென்று முறையிட்டார். தில்லை வாழந்தணரும் சிவயோகியார் கூறியபடி மனைவியின் கரம் பற்றிக் குளத்தில் மூழ்கி சபதம் செய்வதே முறை என்றனர். வேறு செய்வதறியாது நாயனாரும் அதற்கு உடன் பட்டார். அப்போதுகூட சபதம் பற்றிய விபரங்களை அவர்களிடம் கூறவில்லை.
அங்கிருந்த திருப்புலீச்சரம் என்ற கோயிலின் திருக்குளத்திற்கு மனைவியாருடன் சென்றடைந்தார் திருநீலகண்டர்.(வியாக்கிரபாதர் பூசித்த இத்தலம் தற்போது இளமையாக்கினார் கோயில் என்று அழைக்கப்படுகிறது) சிவயோகியாரின் முன்னிலையில் மூங்கிலால் ஆன ஒரு கோலின் ஒருபுறத்தைத் தாமும் மறு புறத்தைத் தனது மனைவியாரும் பற்றிக்கொண்டு குளத்தில் இறங்கி சத்தியம் செய்யலானார். இதனைச் சிவயோகியார் ஏற்க மறுக்கவே, அனைவரும் கேட்குமாறு தங்களுக்குள் சபதம் செய்து கொண்ட விவரத்தைக் கூறி, அதன் காரணமாகத் தனது மனைவியின் கரத்தைத் தீண்ட இயலாது என்றபடி,, மனைவியுடன் கோலைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கி எழுந்தார் புலன்களை வென்ற அன்பர். அப்படி மூழ்கி எழுந்தவுடன் முதுமை நீங்கி இருவரும் இளமையோடு திகழ்ந்தனர். அனைவரும் வியக்கும் வண்ணம் சிவயோகியார் மறைந்தருளினார். விடைமீது உமா தேவியாரோடு ஈசன் அருட்காட்சி அளித்தான். ஐம்புலன்களை வென்ற இருவரையும் நோக்கி இறைவன், “ என்றும் இளமை நீங்காது நம்மிடத்து இருப்பீர்களாக “ என்று அருளிச் செய்தான். அதன்படி நாயனாரும் அவரது மனைவியாரும் என்றும் இளமையோடு சிவலோகம் அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றனர்.
இயற்பகை நாயனார்
தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், ” இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் ” என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் ,காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தவர். சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி. இவரது பெயரைக் கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள். இவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார், அவரை வணங்கி, என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார் வந்த சிவ வேதியர், ” உனது மனைவியை வேண்டி வந்தனம்” என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து , இது எனக்கு ” எம்பிரான் செய்த பேறு ” என்றவாறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் ” உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் “: என்றார். அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், ” இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ ” என்று தனது ” தனிப் பெரும் கணவனாரை ” வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.
இன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், ” யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்” என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், ” இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் ” என மொழிந்தார்.
இவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தன மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, ” இயற்பகை முனிவா ஓலம்” என்று அழைத்தான். அதோடு, ” செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் ” என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், ” இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர் இன்னும் உளரோ? ” என்று வாளை ஓங்கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார். விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், ” உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.
இளையான்குடி மாறநாயனார்
இளையான்குடி என்ற ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த மாறர் என்பவர் பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானது திருவடிகளை மறவாதவராக வாழ்ந்து வந்தார். உழவுத் தொழில் வாயிலாகப் பெரும் பொருள் ஈட்டிய அவர்,சிவனடியார்களை உபசரித்து அறுசுவை உணவளித்துப் பெருந் தொண்டாற்றி வந்தார். அதனால் அவரது செல்வம் பெருகியது.
செல்வம் இல்லாத காலத்தும் அவர் தமது தொண்டைக் கைவிடமாட்டார் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டி நாயனாரிடத்திருந்த செல்வம் குறையுமாறு இறைவன் திருவுள்ளம் கொண்டான். நாளடைவில் இளையான்குடி மாற நாயனாரது செல்வம் குறையலாயிற்று. வறுமை தன்னை வந்தடைந்தவுடன் தன்னிடமிருந்த பொருள்களை விற்று அடியார்களுக்குத் தொண்டு புரிந்து வந்தார். அவரது மேன்மையை மேலும் உலகோர்க்கு உணர்த்தவேண்டி ஒரு மழைக்கால இரவு வேளையில் பெருமான் அவரது இல்லத்திற்கு சிவனடியார் வேடத்தில் எழுந்தருளினான். அன்று எவரும் உதவி செய்யாததால் நாயனார் பசியோடு இருந்தார். மழையில் நனைந்தபடி எழுந்தருளிய சிவனடியாரை இல்லத்திற்குள் வரவேற்று அவரது உடல் ஈரத்தைப் போக்கி அமருவதற்கு ஆசனம் அளித்தார். மனைவியாரிடம் சென்று, “ மிகுந்த பசியுடன் வந்துள்ள அடியாருக்கு உணவிட வேண்டும். நம்மிடம் ஏதும் இல்லையே என்ன செய்வது என வினவினார். அதற்கு அவரது மனைவியார், “இந்நேரத்தில் நமக்கு எவரும் உதவ மாட்டார்கள். நாம் பகலில் விதைத்த செந்நெல் வயலில் இந்நேரம் முளை விட்டிருக்கும் அதனை ஒரு கூடையில் கொண்டு வந்தால் அமுது படைக்கலாம் என்றார்.” இதனைக் கேட்ட நாயனார் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதுபோல் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
இருண்ட அவ்விரவில் மழையில்நனைந்தபடி வயலை நோக்கிக் கால்களால் வழியைத் துழாவிக்கொண்டு சென்று அங்கு மழை நீரால் மிதந்து கொண்டிருந்த நெல்முளைகளைக் கையால் தடவிக் கூடையில் சேகரித்துக் கொண்டு இல்லம் திரும்பினார். அதனைக் கண்ட மனைவியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்று அதிலிருந்த சேற்றைக் கழுவிச் சுத்தப்படுத்தினார். பிறகு, உலை மூட்டுவதற்கு விறகு இல்லையே என்று கலங்கியபோது, வீட்டுக் கூரையில் கட்டப்பட்டிருந்த அலக்குகளை அறுத்து வந்து தந்தார் நாயனார். அவற்றை அடுப்பிலிட்டுத் தீ மூட்டி நெல்லின் ஈரம் போகுமாறு அதனை வறுத்தார் துணைவியார். அரிசியாகக் குற்றி உலையிலிட்டு அமுது தயாரித்ததும் கறிக்கு என்ன செய்வது என்று நாயனாரை நோக்கினார். உடனே நாயனார் வீட்டின் கொல்லைப்புறம் சென்று அங்கே முளைத்திருந்த சிறிய கீரைகளைப் பாசத்தினை அறவே பறிப்பவர் போலப் பறித்து வந்து மனைவியாரிடம் தந்தார். அதனைக் கழுவித் திறம்படச் சமைத்ததும் சிவனடியாரை அமுதுண்ண அழைக்குமாறு கணவனாரிடம் கூறினார்.
நித்திரை செய்பவர் போல் சயனித்திருந்த அடியாரை நோக்கி,” அடியேன் பிறவிக்கடலிலிருந்து உய்யும் வண்ணம் எழுந்தருளிய பெரியோரே, திருவமுது உண்ண எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அப்போது சிவனடியார் வேடத்தில் வந்த இறைவன் சோதி வடிவாகக் காட்சி அளித்து ,” வறுமையிலும் சிவனடியார்க்கு உணவளிக்கும் நீங்கள் இருவரும் என்பால் வருக. அங்கு குபேரன் சங்க நிதி போன்ற செல்வங்களைக் கையில் ஏந்தி உங்களுக்கு ஏவல் செய்வான். அங்கு பேரின்பத்துடன் என்றும் வாழ்வீராக” என்று அருள் செய்தான். நாயனாரும் அவரது மனைவியாரும் பேரின்ப வீடு பெற்றுப் பெருவாழ்வு பெற்றனர்.
மெய்ப்பொருள் நாயனார்
சிவபெருமானது அடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு ஆட்சி செலுத்திய ஒரு அரசரை மக்கள் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைத்தனர். திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்டு சேதி நாட்டை ஆண்டு வந்த மலாடர் மரபினர் இவர். அரச நெறிப்படி மக்களைப் பாதுகாத்தும் பகைவர்களை வென்றும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். சிவாலயங்களில் திருவிழாக்கள் வழிபாடுகள் ஆகியவை நடைபெறுவதற்குப் பெரிதும் உதவி வந்தார். தமது பொருள்கள் அனைத்தும் சிவனடியார்க்கே உரியவை எனக் கருதி ,அடியார்களுக்குக் குறைவறக் கொடுத்துவந்தார்.
நாயனாரிடம் பகைமை பூண்ட முத்தநாதன் என்ற சிற்றரசன் படையுடன் பலமுறை போர் புரிந்து தோல்வியுற்றுப் போயினான். ஆனால் அவரை வஞ்சனை மூலம் வெல்வது என்ற எண்ணத்துடன், நீறிட்ட நெற்றியுடனும் முடித்துக் கட்டிய சடையுடனும் தவ வேடம் பூண்டான். உடைவாளைப் புத்தகக் கவளி ஒன்றில் மறைத்து வைத்துக் கொண்டு நாயனாரது அரண்மனை வாயிலை அடைந்தான். சிவ வேடம் கண்ட வாயிற்காவலரும் தடை ஏதுமின்றி உள்ளே செல்ல அனுமதித்தனர். மன்னர் உறங்கிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது,தத்தன் என்ற அரசரது மெய்க்காவலன், அரசர் உறங்குவதாகக் கூறினான். அது கேட்ட முத்தநாதன் தான் முத்திதரவல்ல ஓர் பொருளைக் கொண்டு வந்துள்ளேன் என்னைத் தடை செய்யாதே என்று கூறிவிட்டு நேராக உள்ளே சென்றான். அரசரின் அருகிலிருந்த அரசியார் சிவவேடம் பூண்டவர் வருவதைக் கண்டு அரசரை எழுப்பினார். சிவவேடப் பொலிவைக்கண்டு தலை வணங்கிய நாயனாரிடம் முத்தநாதன், “ சிவபெருமான் அருளிய ஆகம நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். அதனைப் பட்டத்தரசி இல்லாமல் தனிமையில் நாமிருவரும் இருக்கும்போது காட்டுவோம்” என்றான். அது கேட்ட நாயனாரும், தேவியாரை அந்தப்புரத்திற்குப் போகுமாறு செய்தார்.
பொய்த்தவத்தொடு வந்த முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் இருக்கச் செய்தார் அரசர். வஞ்சகனும் மடியிலிருந்த புத்தகத்தை அவிழ்ப்பவன் போல் மறைத்து வைத்திருந்த உடைவாளை வெளியில் எடுத்துத் தான் முன்னம் நினைத்திருந்த அக்கொடிய செயலைச் செய்து முடித்தான். அந்நிலையிலும் மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனக் கருதிய நாயனார் அவ்வஞ்சகனை வணங்கினார். உடைவாளால் குத்தப்பட்டுக் குருதி பெருக நிலத்தில் விழும் அரசரைக் கண்ட தத்தன் பதைத்து ஓடி வந்து தனது வாளால் முத்தநாதனை வெட்டப்புகுந்தபோது அதனைத் தடுத்த நாயனார், “ தத்தா அவர் நம்மவர். அவரை ஒன்றும் செய்யாதே. அவருக்கு எந்தத் தீங்கும் நேராதபடி கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்பி வருவாயாக “ என்றார்.
நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற அனைவரும் அங்கு வந்து முத்தநாதனைக் கொல்வதற்காகச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைத் தடுத்த தத்தன் அரசரது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்கள் அதனைக் கேட்டு விலகியதும் முத்த நாதனைப் பாதுகாப்பாக நாட்டு எல்லையில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினான் தத்தன். இச்செய்தியைக் கேட்பதற்காகவே உயிர் தாங்கிக் கொண்டிந்த அரசரை வணங்கி, முத்தநாதனுக்குத் தீங்கு வராமல் கொண்டு விட்டு வந்ததைக் கூறினான். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நாயனார், தத்தனை நோக்கி, “ ஐயனே, இன்றைக்கு நீ செய்த உதவியைப்போல் வேறு யாரால் செய்ய முடியும்” என்று கூறினார். பின்னர் தனது உற்றார் உறவினர்களை அருகில் அழைத்து, “ நீங்கள் அனைவரும் திருநீற்றின்மீது வைத்த அன்பைப் பாதுகாத்து வாழ்வீர் “ எனக் கூறி,சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தை செய்யலானார். அப்போது இறைவன் காட்சி அளித்துத் தேவர்களும் அறியாத தனது திருவடி நீழலை நாயனாருக்கு அருளி இடையறாப் பேரின்பம் அருளினான்.
விறன்மிண்ட நாயனார்
மலை நாட்டிலுள்ள செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளர் குலம் விளங்கத் தோன்றியவர் விறன்மிண்ட நாயனார். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு பூண்டவர். சிவத்தலங்களுக்குச் சென்று வணங்கி வருபவர். அப்படிச் செல்லுமிடங்களில் சிவனடியார்களை முதலில் வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்கி வந்தார்.
ஒருமுறை பலதலங்களையும் தரிசித்தவராகத் திருவாரூர் சென்றடைந்தார். அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை வணங்கிச் செல்லாமல் சுந்தரர் நேராகத் தியாகேசப் பெருமானிடம் செல்வதைக் கண்டு மனம் வருந்தினார். இவ்வாறு செய்வதால் சுந்தரரும் அவரை ஆட்கொண்ட தியாகேசனும் புறகு என்றார். இதனைக் கேட்ட நம்பியாரூரர் அடியார் பெருமையைப் பாட விழைந்து தியாகேசனை நாடினார். அதன் பின்னரே இறைவன் அடி எடுத்துத்தர, திருத்தொண்டத்தொகை என்ற திருப்பதிகம் உதயமானது. இவ்வாறு சிவநெறியைப் பல காலம் பாதுகாத்துப் போற்றி வந்த விறன்மிண்டர் இறை அருளால் கண நாயகர் ஆகும் பேறு பெற்றார்.
உலகம் உய்யவும் ,நாமெல்லாம் கடைத்தேறவும் சைவம் தழைக்கவும் சுந்தரர் வாயிலாகத் திருத்தொண்டத் தொகை வெளிப்படக் காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனாரது அன்பின் திறத்தை என்னென்பது?
அமர்நீதி நாயனார்
சோழ நாட்டில் ( குடந்தைக்கு அருகிலுள்ள ) பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலம் விளங்க வந்து தோன்றியவர் அமர்நீதியார். அவர் பொன்,முத்து, இரத்தினம், ஆடை ஆகியவற்றை வாணிபம் செய்து வந்தார். சிவ பெருமானது சேவடிகளை மறவாமலும் சிவனடியார்களுக்குக் கந்தையும்,கீழும் கோவணமும் அளித்தும் வாழ்ந்து வந்தார். திருநல்லூரிலுள்ள சிவாலய விழாவுக்கு அடியார்கள் வருகை தரும்போது அவர்களுக்கு அன்னம் பாலித்ததோடு மடமும் அமைத்துத் தந்து அருந் தொண்டாற்றி வந்தார்.
நாயனாரது தொண்டை உலகம் அறியவேண்டி ஒருநாள் சிவபெருமான் ஓர் அந்தணர் குல பிரமசாரி வேடத்துடன் அமர்நீதியாரின் திருமடத்திற்கு எழுந்தருளினார். எதிர்கொண்டு வரவேற்று வணங்கிய அவரிடம் பெருமான், “ உமது மடத்தில் அடியார்களுக்குத் திருவமுதும்,கந்தையும்,கீளும்,கோவணமும் தருவதாகக் கேள்வியுற்று இங்கு வந்தேன். என்றார். அதக் கேட்டுப் பேருவகை அடைந்த நாயனாரை நோக்கி இறைவன், “ நான் இப்போது காவிரியில் நீராடச் செல்கிறேன், ஒருவேளை மழை வரினும் தரித்துக் கொள்வதற்காக மாற்றுக் கோவணம் கொண்டு வந்துள்ளேன். அதனை நான் வரும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்வீர். ஏனெனில் அக்கோவணத்தின் பெருமையைக் கூற முடியாது” என்றார். அதற்கு இணங்கிய நாயனாரும் அகோவணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்துவிட்டு வந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் காவிரியில் நீராடிய பிரமசாரி வேட ஈசுவரன், வழியில் மழை வந்ததால் நனைந்தபடியே அமர்நீதியாரது மடத்திற்கு வந்து சேர்ந்தார். அதற்குள் அறுசுவையுடன் கூடிய திருவமுதை ஆக்குவித்து அவரை வரவேற்று வணங்கினார். “ ஈரக் கோவணத்தை மாற்ற வேண்டும். யான் உம்மிடம் கொடுத்த மற்றொரு கோவணத்தை எடுத்து வருக” என்று அப்பிரமசாரி கூறியவுடன் நாயனார் அதனை எடுத்து வர உள்ளே சென்றார். வைத்த இடத்தில் அதனைக் காணாது அதிசயித்துப் பதறி அதற்குப் பதிலாக வேறோர் கோவணத்தைக் கொண்டு வந்து கொடுத்து தமது குற்றத்தைப் பொறுக்குமாறு வேண்டினார்.
நாயனார் கூறியதைக் கேட்ட அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான்,” நன்று நீர் கூறுவது ! வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டீர். “ என்றார். அமர்நீதியார் தமது பிழையைக்கு மிக வருந்தி, “ இக்கோவணம் மட்டுமின்றி, பொன்,மணி,பட்டாடைகள் ஆகியவற்றையும் தருகிறேன். அவற்றை ஏற்றுக்கொண்டு அடியேனது தவறைப் பொறுத்தருள வேண்டும்” என்றார். அதற்கு அப்பிரமசாரி , “ பொன்னும் மணியும் எமக்கு வேண்டா. எனது கோவணத்திற்குச் சமமான கோவணத்தைத் தந்தால் போதும்” என்றார். இதைக்கேட்டு முகம் மலர்ந்த நாயனார் ஒரு பெரிய தராசினைக் கொண்டு வந்து நிறுத்தி அதில் ஒரு தட்டில் தண்டிலிருந்து பிரமசாரி ஒரு கோவணத்தை வைக்க, மற்றொன்றில் தான் நெய்ந்த மற்றொரு கோவணத்தை இட்டார். தராசுக்கோல் சமமாக நிமிராததால் தன்னிடமிருந்த பட்டாடைகள்,செல்வம், அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார். அப்போதும் அக்கோல் சமமாக நிமிராதது கண்டு அதிசயித்த அமர்நீதியார், “ இப்போது எஞ்சியுள்ளவை யானும் எனது மனைவியும் சிறு வயது மகனும் மட்டுமே.எங்களையும் தராசில் ஏற அனுமதிக்க வேண்டும் ” என்றார். அவரது அன்பின் உயர்வை உலகோர் காண வேண்டி பிரமச்சாரியாக வந்த சிவபெருமான் அவர்களும் தட்டில் ஏறுவதற்கு உடன்பட்டார். நாயனார் மிக்க மகிழ்ச்சியுடன் அவரது திருவடிகளை வணங்கித் தாமும் தனது மனைவி, மகன் ஆகியோருடன் அக்கோலை வலம் வந்து, “ நாங்கள் திருவெண்ணீற்று அன்பில் சற்றும் பிழையாதவர்களாக இருந்தால் இத்தட்டு நேராக நிற்பதாக “ எனக் கூறி, திருநல்லூர் இறைவரை வணங்கிப் பஞ்சாக்ஷரத்தை ஓதியபடியே தட்டின் மீது ஏறி நின்றார்கள். அடியவரது அன்பின் திறத்தால் இரு தட்டுக்களும் சமமாக நின்றன. தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். பிரமசாரி வடிவத்தில் வந்த சிவபெருமான் உமாதேவியோடு காட்சி தந்தருளினார். இறையருளால் அத்தராசுக் கோல் தெய்வ விமானமாக மாறியது. அமர்நீதி நாயனாரும்,அவரது மனைவியாரும், புத்திரனும் அதில் ஏறி சிவலோகத்தை அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றனர். ,