மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள சன்னா நல்லூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள திருமருகலில் இருந்து திருச்செங்காட்டங்குடி வழியாகத் திருப்பயத்தங்குடி(திருப்பயற்றூர்) என்ற பாடல் பெற்ற தலத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள கீழத்தஞ்சை என்ற ஊரில் தோன்றியவர் செருத் துணை நாயனார். இவ்வூரை ” மருகல் நாட்டுத் தஞ்சாவூர் ” எனக் குறிப்பார் சேக்கிழார் பெருமான்.
இவர் திருவாரூர்ப் பூங்கோயில் பெருமானிடம் அளவிறந்த பக்தி பூண்டவர். ” மெய்யன்புடைய சைவர்” என்று உலகோர் புகழும் வகையில் காலம் தோறும் திருவாரூர் ஆலயம் சென்று அரும் பணிகள் செய்து வந்தார்.
ஒருநாள் அக்கோயிலுக்கு வந்த பல்லவ மன்னரான கழற்சிங்கரது பட்டத்து அரசியானவர் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்ததைக் கண்டு வெகுண்ட செருத் துணை நாயனார் அதனைச் சிவாபராதமாகக் கருதி அரசியின் மூக்கைத் தனது குறு வாளால் துணித்து வீழ்த்தினார். அதனை கேள்வியுற்ற கழற்சிங்க நாயனாரும் அங்கு வந்து விவரம் அறிந்தபின், அரசியார் பூவை எடுத்ததற்குக் காரணமான அவளது கையையும் துணித்தார். இவ்வாறு திருப்பள்ளித்தாமத்தை மோந்த குற்றத்திற்காக அரசியின் மூக்கை அரிந்த செருத்துணையார் சிவப்பணிகள் பல செய்து பொன் அம்பலத்தாடுவாரது பாத நீழலை அடைந்து ” இறவா இன்பம் எய்தினார்”
நாயனார் சிவமுக்தி பெற்றது, ஆவணிப் பூச நன்னாளாகும்.