நாகப்பட்டினத்தில் பரதவர் குலம் விளங்கத் தோன்றியருளியவர் அதிபத்தர். நுளையர்பாடிக்குத் தலைவராக இருந்த இவர், சிவ பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு , தங்கள் குலத் தொழிலான மீன் பிடித்தலைச் செய்து வந்தபோது, வலையில் அகப்படும் மீன்களுள் ஒன்றை சிவனுக்கென்று கடலில் விட்டு விடுவதை நியமமாகக் கொண்டிருந்தார்.
நாயனாரது பேரன்பை உலகு அறியும் வண்ணம் இறைவர் செய்த திருவிளையாடலால், நாள் ஒன்றுக்கு ஒரு மீனே வலையில் அகப்பட்டது. இருப்பினும் தனது உறுதி தளராமல் அம்மீனைக் கடலிலேயே விட்டு வந்தார். இப்படிப் பல நாள்கள் ஒரு மீனே அகப்படுவதும் அதனைக் கடலில் விடுவதும் தொடர்ந்தது. நாயனாரும் அவரைச் சேர்ந்தவர்களும் பலநாட்கள் உணவின்றி உடல் மெலிந்தனர். இருப்பினும் அதிபத்தர் தான் செய்துவரும் தொண்டிலிருந்து சிறிதும் மாறாதிருந்தார்.
ஒருநாள் மீன்வலையில் விலைமதிப்பில்லா நவமணிகளைக் கொண்ட பொன்மீன் ஒன்று அகப்பட்டது. உலகெலாம் வியப்ப வெளிப்பட்ட மீனை “இது என்னை ஆளுடைப் பரமனுக்கே ஆகும்” என்று கடலில் விட்டார். மெய்த்தொண்டரின் இச்செயலால் விண்ணில் ரிஷபாரூடராகப் பெருமான் வெளிப்பட்டருளி, அவரைத் தமது அடியார்களோடு இருக்கும் சிவலோக வாழ்வளித்தார்.
நாயனார் முக்திப்பேறு பெற்ற ஆவணி மாத ஆயில்யத்தன்று, நாகையில் காயாரோகண சுவாமி ஆலயத்தில் சுமார் 3 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. அதிபத்தரது உற்சவத் திருமேனியும் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள பரதவ குலத்தோர் அவரைப் படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சிறிது தூரம் செல்கிறார்கள். தங்க மீன் பதுமை ஒன்று வலையில் அகப்படுவதைத் தொடர்ந்து அதனைக் கடலில் எறியும் ஐதீகம் நடைபெறுகிறது கரைக்கு வந்து சேரும் நாயனாருக்கு ரிஷப வாகனக் காட்சியும் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.