சோழப் பேரரசர்கள் சிவபக்தியோடு திகழ்ந்ததுடன் ஏராளமான சிவாலயங்களைக் கட்டியும்,திருப்பணிகள் செய்வித்தும்,விழாக்கள் நடத்தியும், அக்கோயில்களின் வளர்ச்சிக்கு நிபந்தங்கள் ஏற்படுத்தியும் அரும் தொண்டாற்றினர். அதில் பெரும் பங்கு ஆற்றியவர், கண்டராதித்த சோழரின் பட்ட மகிஷியாகத் திகழ்ந்தவரும் , செம்பியன் மாதேவியார் என்று போற்றப்படுபவரும் ஆன அரசியார் ஆவார்.
செம்பியன் மாதேவியார் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர். தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த இந்த ராஜமாதா , தனது பரம்பரையினருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டியவர். கி.பி. 910 முதல் 1001 வரை வாழ்ந்த இப்பெருமாட்டியார், செங்கல்லால் ஆன கோயில்களைக் கருங்கற்களால் கட்டித் திருப்பணி செய்தார். இவரது கணவனார் கண்டராதித்த சோழர்,தில்லை நடராஜப் பெருமான் மீது பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இருப்பதைக் காணலாம்.
தமது கொழுந்தனாராகிய சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலர், அருள்மொழிவர்மர்(ராஜராஜர்) , மகளான குந்தவைப் பிராட்டியார் ஆகியோரை வளர்த்து நல்வழி காட்டியவர். பிற்காலத்தில் ராஜராஜர் தஞ்சைப் பெரிய கோயில் கட்டியதற்கு உறுதுணையாக இருந்தவர். தமது மகன் உத்தம சோழன் சிறு வயதினனாக இருந்தபோதே கண்டராதித்தர் இறையடி சேர்ந்து விடவே, அவரது சகோதரர் அரிஞ்சய சோழர், இவரது வேண்டுகோளின் படி அரியணை ஏறினார். இவரது ஆட்சியிலும் ,ராஜ மாதாவின் ஊக்கத்தால் பல சிவாலயங்கள் திருப்பணி செய்யப்பெற்றன. அரிஞ்சயருக்குப்பின் உத்தம சோழனுக்குப் பதிலாக ராஜ ராஜன் ஆள்வதையே விரும்பியவர் இம்மாதரசி. கண்டராதித்தர் சிவ பூஜை செய்வது போன்ற சிற்பத்தைத் தான் கற்றளியாக்கிய திருநல்லம் சிவாலயத்தில் அமைத்துள்ளார். திருநல்லம், திருமுதுகுன்றம்(விருத்தாசலம்),தென்குரங்காடுதுறை ,திருவாரூர் அரநெறி,திருமணஞ்சேரி,திருக்கோடிகாவல்,ஆனாங்கூர், திருவக்கரை,திருச்சேலூர் போன்ற ஏராளமான சிவாலயங்கள் இம்மாதேவியாரால் திருப்பணி செய்யப்பெற்றவை.
கி.பி. 1019 ல் இராஜேந்திர சோழன், இம்மூதாட்டியின் நினைவாக அவரது திருவுருவத்தை நிறுவி, நிபந்தங்கள் அளித்ததைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. உத்தம சோழரின் மனைவியார், தங்களது மாமியாராகிய இவரது பிறந்த தினமாகிய சித்திரை மாதக் கேட்டை நட்சத்திரத்தன்று விழா எடுத்தனர். இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரும் செம்பியன் மாதேவி எனப்பட்டது. இங்குள்ள கைலாச நாதர் ஆலயம் மிகப்பெரியது. நாகை திருவாரூர் வழியில் உள்ள கீவளூரிலிருந்து தேவூர் வழியாகக் கச்சனம் செல்லும் வழியில் தேவூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
ஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரைக் கேட்டையன்று செம்பியன் மாதேவியாருக்கு ஊர் மக்களால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன.