சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் முனையடுவார் நாயனார். இத்தலத்து இறைவரை இந்திரன், சூரியன்,காளி,நண்டு ஆகியோர் பூசித்துள்ளனர். அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் இத்தலத்தின் மீது தேவாரத் திருப்பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.
உலகில் பிறந்த பயனை அடைவது, சிவனடியார்களுக்கு உணவளிப்பதும், பெருமானது திருக் கோயில்களில் திருவிழாக் காண்பதும் ஆகிய சிவ புண்ணியங்களால் அடையலாம் என்பதை நாயன்மார்கள் பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களுள் சிவனடியார்களுக்கு உணவிடுவதை வழித் தொண்டாகக் கொண்டவர் இவர். அதிலும் அச்செயலை மிகுந்த அன்போடும் நெறி பிழையாமலும் ஆற்றியவர்.
போர்க் களத்தில் தோற்றவர்கள் தன்னிடம் வந்து அப்பகைவர்களை வென்று வந்தால் மாநிதியம் தருவதாகக் கூறினால்,அதனை ஏற்றுப் போர்க்களத்திற்குச் சென்று,பகைவரை வென்று, அப் போது கைப்பற்றிய பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து அவற்றைக் கூலியாக ஏற்றார்.. இவ்வாறு போர் முனைக்குச் சென்று பகைவரை வென்று வந்ததால் முனை அடுவார் என்று அழைக்கப் பட்டார்.
இவ்வாறு பெற்ற பொருள்கள் அனைத்தையும் சிவனடியார்களுக்கு நிரம்பக் கொடுத்ததோடு, சர்க்கரை, வாசனை உள்ள நெய், கறி, தயிர், பால் ஆகியவற்றோடு கூடிய சுவை உணவை அளித்து வந்தார். இதனைப் ” பன்னெடுநாள் ” செய்துவந்ததால் பெற்ற சிவபுண்ணியம், உமைகணவனது திருவருளால் அவரைச் சிவலோகத்தில் என்றும் இருக்குமாறு செய்தது. அதற்குக் காரணம் , நாயனாரது ” மாறாது அளிக்கும் வாய்மை ” என்று பெரிய புராணம் வாயிலாக அறிகிறோம்.
முனையடுவரது குருபூசைத் திருநாள்: பங்குனி மாதத்துப் பூரம்.