சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர்.
திருவாரூருக்குச் சென்று பூங்கோயிலில் உள்ள புற்றிடம் கொண்ட பெருமானைத் தரிசிப்பதைப் பெரும் பேறாகவும், மிகப்பெரிய ஊதியமாகவும் கருதி வந்தார். இவ்வாறு நியமத்துடன் வழிபட்டிருந்த போது, அக்கோயிலின் தனிச் சன்னதிகளில் ஒன்றாக விளங்கும் அரநெறியில் தீபம் ஏற்றி வழிபட விரும்பினார். மாலைக் காலம் வந்து விட்ட படியால், இருட்டுமுன் விளக்கேற்ற எண்ணினார். அண்மையில் உள்ள வீடுகளில் இருந்து நெய் வாங்கி வந்து தீபம் ஏற்றத் துணிந்தார்.
நெய் வேண்டி அவர் சென்ற வீடுகளோ சமணர்களது வீடுகளாக இருந்தன. அவர்கள் நமது நாயனாரை நோக்கி, “ கையில் தீபம் ஏந்தி ஆடும் உங்கள் கடவுளுக்கு விளக்கு எதற்கு? நெய் இங்கு இல்லை. விளக்கு எரிக்க வேண்டுமானால் தண்ணீரை விட்டு ஏற்றிக் கொள்வீர் ” என்று இகழ்ந்தனர். அது கேட்ட நமிநந்தியார் இறைவனது சன்னதிக்குத் திரும்பிச் சென்று முறையிட்டார்.
இவ்வாறு மனவருத்தத்துடன் நாயனார் முறையிட்டுப் பணிந்து வீழ்ந்த வுடன், தியாகேசப் பெருமானின் அருள் வாக்கு அசரீரியாக ஒலித்தது. “இனிக் கவலை நீங்கப்பெறுவாயாக.உனது விருப்பப்படியே எமது சன்னதியில் விளக்கேற்றுவதற்கு இக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து ஏற்றுவாயாக.” என்ற வாக்கைக் கேட்டவுடன் சிந்தை மகிழ்ந்த நமிநந்தி அடிகள் ஒருகணம் அம்மகிழ்ச்சி மேலிட்டுச் செய்வதறியாது திகைத்த பின்னர், திருக்குளத்திற்குச் சென்று நாதன் நாமமாகிய பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை ஜபம் செய்து, குளத்து நீரைக் கொண்டு வந்து இறைவனது சன்னதியில் உலகமே அதிசயிக்கும் வகையில் நீரால் விளக்கெரித்தார். இரவு மீண்டும் தம் ஊருக்குத் திரும்பி மனையில் நியமப்படி மறுநாள் காலையில் பூஜையைச் செய்துவிட்டுத் திருவாரூருக்கு மீண்டும் சென்றார். அரநெறி வீற்றிருந்த பிரானுக்குத் தீபம் ஏற்றிப் பணிகள் பலசெய்து, வலம் வந்து, அரிய தொண்டாற்றினார். இவை எல்லாம் நாம் உய்வதற்காகச் செய்தார் என்கிறார் சேக்கிழார் பெருமான் ( “ எந்நாளும் நன்மை பெருக நமிநந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.” – பெரிய புராணம் )
திருவாரூர்ப் பெருமான் ஒரு நாள் அருகிலுள்ள மணலிக்கு எழுந்தருளியபோது எல்லாக் குலத்து அடியார்களும் பெருமானுடன் உடன் வர, தாமும் அங்கு சென்று அவ்வருட் காட்சியில் திளைத்து மகிழ்ந்தார். எல்லோருடனும் ஒன்றியபடி மணலிக்குச் சென்றபடியால், தமது மனைக்குத் திரும்பிய நாயனார், இழிவு தீரக் குளித்து விட்டுப் பின்னர் சிவ பூஜை செய்யக் கருதித் தமது மனைவியாரிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். அப்போது இறைவர் அருளால் உறக்கம் வரவே, கனவும் வந்தது. அதில் வீதி விடங்கப் பெருமான் காட்சி அளித்து, “ திருவாரூரில் பிறந்தோர்கள் எல்லாம் நமது கணங்கள் ஆகும் தன்மையை அறிவாய்” என்று அருளிச் செய்து விட்டு மறைந்தார். தவற்றை உணர்ந்த நமிநந்தியார், அந்நிலையிலேயே,பூஜை செய்துவிட்டு மறுநாள் திருவாரூருக்கு விரைந்து சென்றார். பெருமான் அருளால் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் மணிகண்டனாகிய ஈசனது வடிவாவதைக் கண்டு தலை மீது கைகள் கூப்பியவராய் நிலமிசை வீழ்ந்து வணங்கிக் களிப்புற்றார்.
சிவனடியார்களுக்கு முறையுடன் வேண்டுவன எல்லாம் செய்து பணி செய்தபடியால், இவரைத் திருநாவுக்கரசு நாயனார் “ தொண்டர்க்கு ஆணி” என்று கூறும் பெருமை பெற்றதுடன் நீங்காப் புகழும் பெற்றார். நிறைவாகத் திருவாரூர்ப் பெருமானது பாத நீழலில் வைகாசிப் பூச நன்னாளில் சென்றடைந்தார்.
நாயனாரது அவதாரத் தலம் தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப் படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.