“ அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் “ என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர். மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கில் உள்ள அம்பர் மாகாளம்(திருமாகாளம்) என்ற ஊரில் தோன்றியவர். வேதம் பயிலும் அந்தணர் குலத்தவர் . சிவனடியார்களிடம் பேரன்பு பூண்டவர். அவர்களைப் பாதம் பணிந்து வணங்கி அமுது செய்விக்கும் பண்பினர். பஞ்சாட்சர ஜபம் செய்வதை நித்தலும் நியமமாகக் கொண்டவர். ஈசன் அடியார்கள் எத்தன்மையர்களாக இருந்தாலும் அவர்களே நம்மை ஆளுபவர்கள் என்ற எண்ணம் உடையவர். உமையொரு பாகனை வேத வேள்விகளால் வழிபட்டு அதன் பயனாக ஏழு உலகங்களும் இன்பம் பெறுமாறு ஈசனது மலர்க் கழல்களை வாழ்த்துவதே பேறு எனக் கருதியவர்.
திருவாரூருக்குச் சென்று தியாகேசப் பெருமானின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்த சுந்தர மூர்த்தி நாயனாரிடம் நட்பு பூண்டு மண் உலகும் விண் உலகும் போற்றும் அவரது திருவடிகளைப் போற்றி வந்தார். அதன் பயனாக ஐம்புலன்களையும் வென்று சிவலோகப் பெரு வாழ்வு பெறும் பெருவரம் பெற்றார்.
அம்பர்மாகாளத் தலபுராணம் தரும் செய்திகள்:
அம்பர்மாகாளத்தில் தான் நடத்தவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகராஜப் பெருமானே எழுந்தருளவேண்டும் என்ற பேராவல் சோமாசி மாறருக்கு வந்தது. அதனை சுந்தரரிடம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்தார். தம்பிரான் தோழரான சுந்தரர் அதனைத் தியாகேசப் பெருமானிடம் விண்ணப்பித்தார்.
சோம யாகம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாகசாலைக்குள் இறைவனும் இறைவியும் பறை வடிவில் கணபதியும் கந்தனும் இரு குழந்தைகளாக உடன்வர, எழுந்தருளினார்கள். இதனைக் கண்ட யாகம் செய்விக்கும் அந்தணர்கள் யாகசாலையை விட்டு அகன்ற போதிலும் , சோமாசி மாறரும்,சுந்தரரும் மட்டும் அகலாது அங்கேயே இருந்து, சிவபெரு மானின் திருவருளைச் சிந்தித்தபடி இருந்தனர். பெருமானும் தனது உண்மை வடிவை அவர்களுக்குக் காட்டினார்.
சோமாசிமாறருக்கும் அவரது மனைவியாருக்கும் சிவலோகமும் காட்டியருளினார்.
மேற்கண்ட வரலாற்றை ஒட்டி இத்தலத்தில் வைகாசி ஆயில்யத்தன்று யாகம் நடைபெறுகிறது. சுவாமியும் அம்பிகையும் பறை வடிவில் யாகசாலைக்கு எழுந்தருளி , இரு நாயன்மார்களுக்கும் தரிசனம் தரும் இந்த ஐதீகம், விழாவாக மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.