ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் கொழுக்கட்டை முக்கியமானது.
வெல்லக்கொழுக்கட்டையும்,உப்புக் கொழுக்கட்டையும் செய்யும் முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வெல்லக்கொழுக்கட்டை:
தேவையான பொருள்கள்:
- பச்சரிசி : ஒரு டம்ளர்
- தேங்காய்: ஒன்று
- வெல்லம்: 100 கிராம்
- ஏலக்காய் பொடி: 1/2 டீஸ்பூன்
பச்சரிசியை 45 நிமிடங்கள் ஊற வைத்து, நன்றாகக் களைந்து, வடிகட்டவும். அதை மிக்ஸியில் மாவாக அரைத்து, சலிக்கவும்.
1/2 டம்ளர் தண்ணீரை அடுப்பில் நன்றாகக் கொதிக்க வைத்து ,அதில் அரைத்து வைத்த மாவைக் கொட்டி மூன்று நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைக்கவும்.
பூரணம்: தேங்காயைத்துருவி, அதில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, இரண்டும் நன்றாகச் சேரும்படிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும். பூரணம் சூடு ஆறியவுடன், சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
மேற்படி தயாரித்த பச்சரிசி மாவை நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக ஆக்கி, அதை சிறிய கிண்ணம் போன்று (சொப்பு) செய்து ஒவ்வொன்றிலும், மேற்சொன்ன தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
இவ்வாறு செய்யப்பட கொழுக்கட்டைகளை அடுப்பில் இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
உப்பு கொழுக்கட்டை:
தேவையான பொருள்கள்:
- உளுத்தம் பருப்பு: 1/2 டம்ளர்
- காய்ந்த மிளகாய் வற்றல்: ஒன்று
- உப்பு: தேவையான அளவு.
உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, நன்றாகக் களைந்து அத்துடன் மிளகாய் வற்றல் -உப்பு சேர்த்து, மிக்ஸி -யில் கெட்டியாக (கொரகொரப்பாக) அரைக்கவும். பிறகு அதை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக விடவும். பின்பு அதை எடுத்து, நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
மேற்படி செய்த அரிசிமாவில் கிண்ணம் போன்ற சொப்பு செய்து, அதில் உளுத்தம் பூரணத்தை வைத்து அடுப்பில் வைத்து , பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கும், ஆடி-ஆவணியில் வரும் வரலக்ஷ்மிக்கும் செய்யப்படும் பூஜைகளில் அர்ப்பணிக்கப்படும் பலவகையான நைவைத்தியங்களில் ஒன்றான அப்பம் செய்யும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பம் :
தேவையான பொருள்கள்:
- கோதுமை மாவு : ஒரு டம்ளர்
- அரிசி மாவு : இரண்டு ஸ்பூன்
- பொடித்த வெல்லம்: 3/4 டம்ளர்
- ரிபைண்டு ஆயில் : 200 மி.லீ
- ஏலக்காய் பொடி: சிறிதளவு
கோதுமை மாவு,அரிசிமாவு மற்றும் பொடித்த வெல்லம் ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான சூட்டில் ஒரு சிறிய கரண்டி அளவு மேற்படி கரைத்த மாவை எடுத்து எண்ணையில் ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தை சுவாமிக்கு அர்ப்பணிக்க வேண்டும்.