ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்
மதுரையம்பதிக்கு அருகிலுள்ள திருவாதவூர் என்ற சிவத்தலத்தில் அமாத்திய அந்தணர் குலத்தில் சம்பு பாதாச்ருதர் – சிவஞானவதி என்ற புண்ணிய தம்பதிகளின் தவப்பயனாகத் திரு அவதாரம் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அவரது பிள்ளைப்பருவ நாமம் திருவாதவூரார் என்பது. இளம்வயதிலேயே, கலைஞானம் முற்றும் கைவரப்பெற்று , அரிமர்த்தன பாண்டியனது அமைச்சராகத் “தென்னவன் பிரமராயன்” என்ற பட்டத்துடன் விளங்கினார் வாதவூரர். இளமையிலிருந்தே சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.
பாண்டியனது குதிரைபடைகளுக்குக் குதிரைகள் வாங்குவதற்காக அரசனிடம் கருவூலத்திலிருந்து வேண்டிய பொருளைப் பெற்று, பல ஊர்களைக் கடந்து திருப்பெருந்துறை என்ற தலத்தை அடைந்தார். அங்கு ஓர் குருந்த மர நீழலில் சீடர்களோடு பரம குருநாதனான சிவபெருமானே எழுந்தருளி இருந்தார்.நாம் இதுவரை நாடிய குரு நாதர் இவரே எனத் தெளிந்தார்.இறைவனும் அவருக்குத் தீக்ஷைகள் தந்தருளி, உபதேசம் செய்தருளினார். தன்னை ஆட்கொண்ட குருநாதரைத் துதிக்கு முகமாகத் திருவாசகப்பாடல்கள் பாடலாயினர் வாதவூரர். இதைக்கேட்டு மகிழ்ந்த பரமன், அவருக்கு மாணிக்க வாசகன் என தீக்ஷா நாமம் வழங்கினான்.
பாண்டியன் குதிரை வாங்குவதற்காகத் தந்த பொருளைக் கொண்டு திருப்பெருந்துறையில் திருக்கோயிலைக் கட்டினார் . இச்செய்தி பாண்டியனுக்குத் தெரிந்தவுடன் குதிரைகளுடன் உடனே புறப்பட்டு வருமாறு ஓலை அனுப்பினான். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று சொல்லி அனுப்புமாறு குருநாதர் அருளவே, மணி வாசகரும் அவ்வாறே தெரிவித்தார். உண்மையில் குதிரைகள் வாங்கப்பெறவில்லை என்பதை அறிந்த பாண்டியன் அவரைப் பலவாறும் துன்புறுத்தினான். வாதவூரரின் துன்பத்தைத் தீர்க்க வேண்டிப் பெருமானே, வேதக்குதிரையின் மீது அழகனாக எழுந்தருளினான். நரிகளைக் குதிரைகளாக்கிப் பின் வரச்செய்தான்.
பாண்டியன் அதிசயிக்குமாறு குதிரைப்படைகளை நடத்திக் காட்டினான் படைத்தலைவனாக வந்த பரமன். பாண்டியன் தந்த பட்டாடையைத் தன செண்டால் ஏற்றுக்கொண்டான். இதனால் வெகுண்ட மன்னன் சினம் கொள்ள, அதனை மாற்றினார் மணிவாசகர். குதிரைகளைக் கயிறு மாற்றிக் கொடுத்தபின்னர் , இறைவன் மறைந்தான். அன்று இரவு, குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறின. அரசனும் சினம் கொண்டு, வாதவூரது தலை மீது கல்லை ஏற்றி வைகைச் சுடு மணலில் நிற்கச் செய்தான். துன்பம் கெடுத்து இன்பம் அருளும் பெருமான், வைகையில் வெள்ளம் வரச் செய்தான். நகரவாசிகள் மன்னன் ஆணைப் படி மண் கொண்டு வைகைக் கரையை அடைக்கலாயினர். வந்தி என்ற பிட்டு விற்கும் மூதாட்டிக்கு உதவ யாரும் இல்லாததால் இறைவனே கூலியாளாக வந்து அவளிடம் பிட்டைப் பெற்று உண்டு மகிழ்ந்தான். ஆனால் அவன் வேலை செய்யவில்லை என்று பணியாட்கள் மூலம் அறிந்த பாண்டியன், தனது பிரம்பால் பெருமானின் முதுகில் அடிக்கவே, அகில உலகில் உள்ள உயிர்கள் மீது அந்த அடி விழுந்தது. கூடையில் இருந்த மண்ணை ஆற்றில் கொட்டிவிட்டுப் பெருமான் மறைந்ததும் ஆற்று வெள்ளம் நின்றது. பிழை உணர்ந்த பாண்டியனும் வாதவூராரிடம் மன்னிப்பு வேண்டினான். வாதவூரடிகள் தனது அரச பதவியைத் துறந்து, சிவத் தொண்டாற்ற விரும்பவே, அரசனும் இது இறைவனது திருவுள்ளம் எனத் தெளிந்து அவருக்கு விடை கொடுத்தான்.
மீண்டும் தன் குருநாதரை அடைந்து திருவாசகப் பாமாலை சூட்டி மகிழ்ந்திருந்த வேளையில் , பல தலங்களையும் தரிசித்துவிட்டுத் தில்லைக்கு வருவாயாக என்று அருளியபின் பெருமான் மறையவே , பிரிவால் துன்புற்றார் மணிவாசகர்.
உத்தரகோசமங்கை,திருவிடைமருதூர்,திருவாரூர்,சீர்காழி, ஆகிய தலங்களை வணங்கித் திருவண்ணாமலையை அடைந்து திருவெம்பாவைப் பாடல்களை அருளினார். பின்னர் தில்லையை அடைந்து, பொன்னம்பலைக்கூத்தனைத் தரிசித்துப் பல பாடல்கள் பாடியருளினார் அடிகள். அப்போது ஈழ நாட்டரசனது பெண்ணின் ஊமைத்தன்மை நீங்குமாறு திருச் சாழல் பாடினார். புத்தர்களை வாதில் வென்றார். இறைவனே அந்தணனாக எழுந்தருளி அவர் பாடிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் தனது திருக் கரங்களால் எழுதிக் கையொப்பமிட்டு, தில்லைச் சிற்றம்பலத்தின் பஞ்சாக்ஷரப் படியில் வைத்து மறைந்தான்.
மறுநாள் காலை அவ்வோலைச்சுவடிகளைக் கண்ட தில்லை வாழந்தணர்கள் , இறைவனது கட்டளைப்படி மாணிக்கவாசகரைத் தில்லை அம்பலவனின் திருச்சன்னதிக்கு அழைத்து வந்து அத் தெய்வீக நூல்களின் பொருளை விளக்கியருளுமாறு வேண்ட, அடிகளும் எல்லோரும் காணுமாறு அதன் பொருள் அம்பலவனே என்று கூறி, குஞ்சித பாத கமலங்களில் இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைப் பெற்றார்.