மயிலாடுதுறையில் கடைமுக உற்சவம்

ThulaUtsavam_Mayuram_Nov09 053”  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேச்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  ” ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” எனப்பட்டது. சுவாமிக்கே கௌரிமாயூர நாதர் என்று பெயர் வரும்படி அரும்தவம் செய்தபடியால் ஊரின் பெயரும் மயிலாடுதுறை ஆயிற்று.

காசிக்கு நிகரான தலங்களாக, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, திருவிடைமருதூர்,மயிலாடுதுறை, சாயாவனம் ஆகிய சிவஸ்தலங்களைக் குறிப்பார்கள். அதிலும் மயிலாடுதுறையில் பல இடங்களில் காசி விஸ்வநாதர் ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். காவிரிக் கரையில் காசியைப்போலவே டுண்டி கணபதிக்கும் கால பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. உத்தர மாயூரத்தில் வதான்யேச்வரர்  கோவிலில் உள்ள மேதா தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரசித்தி பெற்றது. ஐப்பசி அமாவாசை அன்று கைலாச வாகனத்தில் மேதா தக்ஷிணாமூர்த்தியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் காவிரிக்கு எழுந்தருளித் தீர்த்தம் தருகிறார்கள். அன்று காவிரியே கங்கை ஆகிவிடுகிறது. வரங்களை வாரிவழங்கும் வள்ளலாராக மூலவர் மேற்குப் பார்த்த சன்னதியில் காட்சி அளிக்கிறார். அம்பிகையும் ஞானத்தை வழங்கும் ஞானாம்பிகையாகத் தரிசனம் தருகிறாள்.

மாயூர நாதருக்கு நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்களில் வள்ளலாராக சிவ  பெருமான் கோயில் கொண்டுள்ளார். கிழக்கே விளநகரில் துறைகாடும் வள்ளல் , மேற்கில் மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், தெற்கில் வாக்கு வழங்கும் வாகீஸ்வர வள்ளல், வடக்கில் வதான்யேச்வர வள்ளல் ஆகிய நாற்றிசை வள்ளல்களுக்கு மத்தியில் கௌரி மாயூர நாதர் பெரிய கோவிலில் அபயாம்பிகையுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இப்பகுதியில் உள்ள உயர்ந்த ராஜ கோபு ரங்களில் இந்த ஆலயத்தின் கோபுரமும் ஒன்று.

DSC01540இவ்வளவு பெருமைகளுக்கும் மேலாக, ஐப்பசி முப்பது தினங்களும் காவிரியின் இரு கரைகளிலும் அமைந்துள்ள பெரிய கோவிலில் இருந்தும், வள்ளலார் கோவிலில் இருந்தும் சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் தரும் தனிச் சிறப்பு உடையது இந்த ஊர். கடைசி நாள் அன்று பெரியகோவிலில் இருந்து மட்டும் அல்லாமல், ஐயாறப்பர் கோயில், பாலக்கரை விஸ்வநாதர் கோயில், கடைத் தெரு விச்வநாதர் கோயில், வடகரையில் உள்ள துலாக்கட்ட விஸ்வநாதர் கோயில், வதான்யேச்வர சுவாமி கோயில் ஆகிய கோயில்களிருந்தும் வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளுவர். இந்த உற்சவத்தை முன்னிட்டுப் பல வீடுகளில் வேத பாராயணங்கள் நடத்துகிறார்கள். தங்கள் வீட்டு வைபவமாகக் கருதி, வீதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று இறையருள் பெறுகிறார்கள்.

DSC01530தஞ்சை மாவட்டத்தில் ஆலயத் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் பல தவில் வித்வான்களோடு இணைந்து ராஜ கோபுரத்தருகில் மல்லாரி வாசிப்பதைக் கேட்கப் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம். கடைமுக உற்சவத்திலும் இப்படித்தான்.மழை விடாது பொழிந்தாலும்  இசைமழை நிற்காது. குடையைப் பிடித்தவாறே வாசிப்பார்கள். அவர்களது இந்த ஈடுபாட்டுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும்.

DSC01526சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளுவதற்கு முன்பாகவே, மக்கள் கூட்டம் காவிரியில் இறங்கி ஆவலோடு பஞ்சமூர்த்திகள் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். சிறுவர்கள் உற்சாகத்துடன் நீச்சல் அடித்த வண்ணம் இருப்பர் . நிறைவாக இருகரைகளிலும் தமது வாகனங்களோடு பஞ்ச மூர்த்திகள் நிற்பதைக் காண இரண்டு கண்கள் போதாது. தீர்த்தவாரி முடிந்து சுவாமி மண்டபத்தில் தங்கிவிட்டு இரவு ஒன்பது மணி அளவில் கோயிலுக்குத் திரும்புகிறார்.

வழி நெடுகிலும் பட்டு சார்த்தித் தீபாராதனைத் தட்டு சமர்ப்பிப்போர் பலர். சுவாமியும் அம்பாளும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு ரிஷப வாகனங்களில் எழுந்தருளுவதை எவ்வாறு வருணிக்க முடியும்? சுவாமிக்கு வெட்டி வேர் ஜடை சார்த்தியும், அம்பிகைக்குக் கல் இழைத்த ராக் கோடி சார்த்தியும் பின் அலங்காரங்கள் செய்யப்பட்டு நம் கண்களை விட்டு அகலாமல் நிற்கின்றன. இந்த தம்பதியரை தரிசிக்க என்ன தவம் செய்தோமோ என்று கண்ணீர் மல்க நெகிழ்கிறோம்.

இத்திருவிழாவைத் தரிசிக்க ஒரு முடவன் வடதிசையிலிருந்து இங்கு வந்து  சேர்ந்தபோது, ஐப்பசி மாதம் முடிந்து  கார்த்திகை மாதம் பிறந்து விட்டதால் தமக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லையே என்று மனம் உடைந்தபோது, அவனுக்கு இரங்கிய பெருமான், இன்றும் உனக்காகக் காவிரியில் தீர்த்தம் தருகிறோம். அதில் மூழ்கினால் ஐப்பசி முப்பது நாளும் மூழ்கிய பலன்களைப் பெறுவாயாக என்று அருள் செய்தார் அக் கருணாமூர்த்தி. இப்போதும் அதுபோலவே கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் முழுக்கை,  முடவன் முழுக்கு என்று அழைக்கிறார்கள்.

This entry was posted in TEMPLE NEWS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.