திருச்செங்காட்டங்குடியில் அமுது படையல் உற்சவம்

 IMG_1720

திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள்.

கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்குவதற்காக விநாயகப் பெருமான் சிவபூஜை செய்ததால் சுவாமிக்குக் கணபதீஸ்வரர் என்றும் ஆலயத்திற்குக் கணபதீச்வரம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அசுரனுடைய இரத்தம் பெருகி ஆறாக ஓடியபடியால், இத்தலம் செங்காட்டங்குடி எனப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி, திருமருகலில் இறங்கி அங்கிருந்து சுமார் மூன்று கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். ரயிலில் வருபவர்கள் நன்னிலத்தில்     இறங்கிக்  காரைக்கால் ,நாகை செல்லும் பேருந்துகள்  மூலம் திருமருகலை அடையலாம். திருவாரூரிலிருந்தும்  பேருந்து மூலம் திருச்செங்காட்டங்குடியை வந்து  அடையலாம்.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் நந்தி,கொடிமரம்,அலங்கார மண்டபம் அம்பாள் சன்னதி ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, உள்ளே நுழைகிறோம். அடுத்த பிராகாரத்தில் அமைந்துள்ள திருமாளிகைப்பத்தியில்  சிறுத்தொண்ட நாயனார்  தனது குடும்பத்தினருடன் உத்திராபதீஸ்வரர் சன்னதியை நோக்கி அஞ்சலி செய்தவராகக் காட்சி தருகிறார். எதிரில் மிகப்பழமையான ஆத்தி மரம் இருக்கிறது. மூல சன்னதியில் கணபதியால் வழிபடப்பெற்ற கணபதீஸ்வரர் தரிசனம் தருகிறார். பிராகாரத்தில் வாதாபி கணபதியின் சன்னதி இருக்கிறது.

சிவனடியார்க்கு நாள் தோறும் அமுதளிப்பதை நியமமாகக்கொண்ட சிறுத்தொண்டரைச்  சோதிக்க ,பைரவக் கோலத்தோடு உத்திராபதியாராக வந்த சிவபெருமானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற சிறுத்தொண்டர், வந்தவர் கேட்டபடியே, மனமுவந்து, தனது ஒரே மகனான சீராளனைத் தன் மனைவியார் பிடிக்கத்,  தானே அரிந்து அமுதாக்கி , அடியவர்க்குப் படைத்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இறைவன் திருவருளால் அக்குழந்தை உயிர்பெற்றதோடு, அவனது பெற்றோரும்,தாதியாரும் காணும்படியாக, உமையும் கந்தனும் தன்னோடு ரிஷப வாகனத்தில் வர, அவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.

காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள்  பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார். வழி நெடுகிலும் சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.

நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான். சிவனடியாரைத்தேடிக்கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்ட படியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள். ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.

சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது  மனைக்கு அழைக்கிறார். தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர் , பெருமானைத் தன்  மனைக்கு வர அழைக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணிக்குச்  சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பாடுகிறார்கள். இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார் , சிறுத்தொண்டர்  மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமுது படைக்கும் பொது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.

உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி,தாதி ஆகியோருடனும்  கோயிலை  நோக்கி வரும்போது,தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில்  அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது. பாடல்கள் இசைக்கப்படுகின்றன. தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது. நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார்.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள். தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவபுண்ணியம் தான்! ” சிறுத்தொண்டன் பணி செய்ய” அதனைப் பெருமான் அன்று ஏற்று அருளியவாறு, இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.   கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் அமுது படையல் உற்சவத்தில் காணலாம். எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் “செங்காட்டங்குடியதனுள்  கண்டேன் நானே”  என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.

This entry was posted in TEMPLE NEWS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.