திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா

DSC00661இதுவரை  எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை    பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , ” பெருங்கடல்” என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. நடுக்கடலுள் அகப்பட்டவன் சாதாரணத் துடுப்பைக் கொண்டு எப்படிக் கரை சேர முடியும். அதனால் தான், பஞ்சாக்ஷரமாகிய துடுப்பைக் கொண்டு கரை சேரும் வழியை அருளுவாய் எனத் திருவாசகம் வேண்டுகிறது.

சத்குருநாதனது அருளால் பிறவிக்கடலைத் தாண்டி இறைவனை அடைவது சுலபமாகிவிடுகிறது. பிறவியாகிய பெரிய கடலைத் தாண்டுவதற்குத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை ஒதிவந்தாலே போதுமானது என்கிறார் நம்பியாண்டார் நம்பிகள். ஏனென்றால் அப்பதிகங்களே  தோணியாக ஆகி, நம்மை ஏற்றிக்கொண்டு கரை சேர்ப்பன என்று அவர் அருளினார்.  அவை ஞானத் தமிழ்ப் பனுவல்கள் என்பதால் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகின்றன.

சம்பந்தப்பெருமான் தல யாத்திரையாக சோழ நாட்டுத் தலங்களைத் தரிசித்து வந்தபோது, காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் மறுகரையில் இருந்து பஞ்சாரண்யங்களுள் ஒன்றான வில்வாரண்யம்  தெரிவதைக்  கண்டார். அந்த ஆறு,  முள்ளியாறு என்றும் வழங்கப்படும்.   வில்வாரண்யத்தின் மற்றொரு பெயர் திருக் கொள்ளம் பூதூர்  என்பதாகும். கூவிளம் பூதூர் என்பது இவ்வாறு மாறிற்று என்பர். கூவிளம் என்பது வில்வத்தைக் குறிக்கும்.

வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது.   எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது. தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.

பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது. அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது. கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு  இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான். இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.

முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்)   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள வலங்கைமானிலிருந்து , குடவாசல் செல்லும் பாதையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செல்லூர் நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 1 கி.மீ. தொலைவு நடந்து வந்து கோவிலை அடையலாம்.   கும்பகோணத்திலிருந்து குடவாசல்,ஓகை வழியாகக் கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கியும் வரலாம். குடவாசலில் இருந்து செல்லூர் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

Kollambudur (3)செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம் தொன்மையானதும் தரிசிக்க வேண்டுவதும் ஆகும். பிராகாரத்தில் எங்கு நோக்கினாலும் நந்தியாவட்டை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக்  காணலாம். தனது கலைகளை இழந்த சந்திரன்  இங்கு வழிபட்டு, மீண்டும் அக்கலைகளைப் பெற்றான்.சந்திரனும் சூரியனும் வழிபட்ட புவன பைரவ மூர்த்தி  சக்தி வாய்ந்தவர். வேண்டிய வரம் யாவும் தருபவர். நாகநாதர், சட்டைநாதர் ஆகிய லிங்கமூர்த்திகளின் சன்னதிகள், மூலஸ்தானத்தின் இருபுறமும் அமைந்துள்ளன. இடைவிடாது சித்தர்கள் வழிபடும் புண்ணிய மூர்த்தியாகக் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியவளாகக்  குணா ம்பிகையும் அருட்காட்சி வழங்குகின்றனர். இந்த ஆலயம் திருப்பணி பெற்று, 2.5.2013 அன்று  கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுப் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

செல்லூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது அபிவிருத்தீச்வரத்தில் உள்ள அபிமுக்தீச்வரர்  ஆலயம். இந்த ஆலயம் மேற்கு நோக்கியது. திருப்பணி செய்யப் பெற்று  வண்ணப்பூச்சுடன்  அழகுற  விளங்குகிறது.

திருக்கொள்ளம்பூதூர் சிவாலயத்தை முழுதும் கருங் கல்லால் அமைத்து மகத்தான சிவபுண்ணியச்  செயலைச் செய்துள்ளவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். நச்சாந்துப்பட்டி பெ. ராமன் செட்டியாரும்,பெ.லட்சுமணன் செட்டியாரும் 1930 ல்  இக்கருங்கல் திருப்பணியைத் தொடங்கி,  ஈசுவர ஆண்டு ஆனி 14 ம் தேதி ஞாயிறன்று ( 27.6.1937 ) பெரும் பொருட் செலவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இவர்களது  உருவச்சிலைகள் அம்பாள் (சௌந்தர நாயகி ) சன்னதியின் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. வீதியில் சத்திரம் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.

கோயிலுக்கு முன் புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.கோவிலின் முன் வாயிலில் கோபுரம் இல்லை. ரிஷப வாகன சுதை காணப்படுகிறது , வாயிற் சுவரில் சம்பந்தர்  ஆற்றில் நாவன்மையால் ஓடம் செலுத்திய அற்புதத்தைச்  சுதை வடிவில் வண்ணப் பூச்சோடு அமைத்துள்ளார்கள். இருபுறமும் விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.சலவைக் கல்லில் தலத்  திருப்பதிகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டினால் வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. இதை ஒட்டி மஹா லக்ஷ்மியின் சன்னதி உள்ளது.இரண்டாம் பிராகாரத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. அடுத்த வாயிலில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. இருபுறமும் பொய்யாக் கணபதி,தண்டபாணி திருவுருவங்கள் உள்ளன.

உட்பிராகாரத்தில் மடைப்பள்ளியும், நால்வர், ஆதி வில்வமரம், வலம்புரி விநாயகர், சோமாஸ்-கந்தர்  ஷண்முகர், மகாலக்ஷ்மி ,பள்ளியறை, பைரவர்,நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். கோஷ்டங்களில்  கணபதி,தக்ஷிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகிய மூர்த்திகளைத்தரிசனம் செய்கிறோம். அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியது. அழகியத் திருவுருவக் காட்சியை நமக்கு அருளுகிறாள் அன்னை.  மூலவரான  வில்வாரண்ய மூர்த்தியின் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் பிறவி பெற்ற பயனை அடைகிறோம்.

Kollambudur odam festival (10)திருக்கொள்ளம்பூதூரைத் தரிசிக்கத் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் எழுந்தருளியபோது வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மறுகரையில் உள்ள ஆலயத்தை அடையப் பரிசில் மூலமாகவே செல்ல வேண்டியிருந்தது. வெள்ளத்தால், படகு விடுவோரும் அப்போது இல்லாததால் , சம்பந்தர், அடியார்களோடு பரிசிலில் ஏறித் தனது நாவன்மையே கோலாகக் கொண்டு ” கொட்டமே  கமழும்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் துவங்கியதும், ஓடம் தானாகவே அந்த ஆற்றில் செல்லத் துவங்கியது. ” ஓடம் வந்து அணையும் ” என்ற பாடலை அருளும் போது பரிசில்  மறுகரையை வந்து அடைந்தது, இந்த அற்புதத்தைச்  செய்தவாறு அப்பதிகத்தை நிறைவு  செய்தபடி, ஆலயத்தை வந்தடைந்து பெருமானைத் தரிசித்தார் சம்பந்தர் என்று பெரிய புராணம் கூறுகிறது.

இவ்வாறு வெட்டாற்றில் ஓடம் செலுத்தி ஞான சம்பந்தர் அற்புதம் செய்ததை ஆண்டு தோறும் ஐதீக விழாவாக நடத்தி வருகிறார்கள். ஐப்பசி அமாவாசையைத் தொடரும் பிரதமை அன்று, இவ் விழா நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் பலர் இதனைத் தரிசிக்க வருகின்றனர். இரவு சுமார் 10 மணி அளவில் திருஞான சம்பந்தர் , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். திரு வீதி எங்கும் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் பெருமானுக்கு உற்சாக வரவேற்பு. வெடி மற்றும் வாண வேடிக்கை முழக்கம் ஒருபுறம். இரவு சுமார்  1 மணிக்கு ஆற்றங்கரையை அடைகிறது பல்லக்கு.

விழாக்காண வந்தவர்கள் படகில் ஏறிக்கொண்டு மறு கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார்கள். நிறைவாக ஞானசம்பந்தப்பெருமான் பரிசிலில் எழுந்தருளுகிறார். அக்கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார். அங்கு ஒரு சிறிய  சிவாலயம் உள்ளது. அங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முடிந்தவுடன், மறு நாள் விடியற்காலை சுமார் 5 மணிக்குத் திருப்  பதிகம் பாடியவாறே ஒடமேறி த் திருக் கொள்ளம்பூதூர் வந்தடைகிறார் சம்பந்தர்.

Kollambudur odam festival (17)இதே சமயத்தில் கோயிலில் இருந்து சுவாமி அம்பிகையோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியில் சம்பந்தப்பெருமானுக்கு சுமார் 6 மணி அளவில் எதிர் காட்சி அளித்தருளுகிறார். இந்த அருட் காட்சியை நாமும் கண்டு நெகிழ்கிறோம். கண் பெற்ற பயன் பெறுகிறோம். சம்பந்தர் பதிகத்தை நாமும் பாடுகிறோம். நதி வெள்ளத்தைத் தாண்டும் அற்புதம் செய்த அப்பதிகத்தை ஓதியதால் பிறவிப் பெருங்கடலையும் நிச்சயமாக நீந்தி வீடு பெறுவோம் என்ற நிறைவுடன் ரிஷப வாகன தரிசனம் கண்ட கண்கள் வேறொன்றையும் காண வேண்டுமோ என்ற பேரின்பத்தில் திளைத்துக்   கண்கள் நீர்மல்க அவ்விடத்தை நீங்க மனமில்லாமல் நிற்கிறோம்.

This entry was posted in TEMPLE NEWS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.