உருத்திர பசுபதி நாயனார்

“உருத்திர பசுபதிக்கும் அடியேன் ” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்றவர்   தலையூர் என்ற தலத்தில் தோன்றிய ருத்திர பசுபதி நாயனார். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில்  உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளது. குருபூஜை இந்த இரண்டு இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பசுபதி என்ற இயற்பெயரோடு விளங்கிய நாயனார், அனுதினமும் கழுத்தளவு நீரில் நின்று ,இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து வந்ததைப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மறையின் பயனாக ருத்ர மந்திரம் திகழ்வதைச்  சேக்கிழார் பெருமான்,

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை

வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே  திருமலர்

பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்

ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

இவ்வாறு இரவும் பகலும் முறை வழுவாது ருத்ர பாராயணம் செய்தமையால் உலகத்தோர் அவரை ருத்ர பசுபதியார் என்று அழைக்கலாயினர்.

பாராயணம் செய்வோரது கவனத்திற்குப்  பெரியபுராணத்திலிருந்து உணரப்படும் கருத்துக்களைக் காண்போம். பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை ,

” தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி  நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்.”

என்ற வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

அவரது பாராயணம் அரும் தவமாகிறது. கழுத்தளவு நீரில் அத்தவச்சுடர் நிற்பதை ,

” நீரிடை நெருப்பு எழுந்தனைய ” என்று காட்டுவார்  தெய்வச் சேக்கிழார். பிரமதேவனைப்போல் ஜொலிக்கிறார் நாயனார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது  ” ஆடு சேவடி அருகுற அணைந்தனர்.”  என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

இது எவ்வாறு நிகழ்ந்தது? ஸ்ரீ ருத்ர பாராயணத்தை உள்ளன்போடு இடையறாது நாயனார் செய்து வந்ததால்  ஸ்ரீ பரமேச்வரனை மகிழ்வித்தது.. அதைத்தான் சேக்கிழாரும், ” உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.” என்கிறார்.

புரட்டாசி மாத அச்வினி நன்னாள், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ பரமேச்வரனது குஞ்சித பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில்  அவரது குருபூஜை  பலதலங்களில் நடைபெறுகிறது.

நாம் அனு  தினமும் பாவங்களைச் செய்கிறோம். அதற்குப் ப்ராயச்சித்தமாகச் சொல்லப்படுவது ருத்ர பாராயணம். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் எல்லாப் பாவமும் நீங்குவர். பிணிகளிலிருந்து விடுபடுவர். நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வம் பெறுவர். இவ்வாறு அதன் பலன் அளவிடமுடியாததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருளுமாறு இறைவனை ருத்ர மந்திரம் வேண்டுகிறது. நம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறது.

ருத்ர பகவானே! எங்களது பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தவேண்டாம்   (மாநோ மஹாந்த முத மாநோ அர்ப்பகம் மாந உக்ஷந்த முதமான உக்ஷிதம் ) யௌவனர்களையும் ,   கருவிலுள்ள சிசுக்களையும் துன்புறுத்தவேண்டாம்.மேலும் எமது தாய் தந்தையரையும் , பிரியமானவர்களையும் துன்புறுத்தவேண்டாம்.( மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ் தனுவோ ருத்ர ரீரிஷா:) உமது மங்கள உருவத்துடன் எங்களிடம் காக்க வேண்டி வருவீராக.இந்த அழியும் சரீரத்தில் அழியாத சுகத்தை அளிப்பீராக. உமது கணங்கள் சத்ருக்களை அழிக்கட்டும்.  (ம்ருடா ஜரித்ரே ருத்ரஸ்தவா நோ அன்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேனா: ) இப்படி பினாகபாணியும், நீலக்ரீவனும் , ஸஹஸ்ராக்ஷனும், கபர்தியும் ,பசுபதியும் ஆகிய பரமேச்வரனை வேதம் துதிக்கிறது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாக பஞ்சாக்ஷர மஹா மந்திரம் நடுநாயகமாகத் திகழ்வது இதன் ஒப்பற்ற பெருமையைக் காட்டுகிறது. எனவே ஸ்ரீ ருத்ரத்தின் பெருமைகளை அறிந்து  அதனை ஜபித்து, ஆத்ம பூஜையும், ஆலய பூஜையும் நடைபெற்றால் வீடு மட்டுமல்ல. நாடே நலம் பெறும்.

This entry was posted in Nayanmars. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.